என் மொத்த உலகின்
ஒற்றைக் கடல் நீ!
சிறு பிள்ளையாகி நதியின்
ஊற்றுக் கண்களிலிருந்து
உனக்கான காகிதக் கப்பல்களை
வேட்கையுடன் அனுப்புகிறேன்
அவை வெறும் காகிதக் கப்பல்களல்ல
அவை வார்த்தைகள்
உனக்கானவை!
உன்னைச்சேர அனுப்பி வைக்கின்றேன்
உன்னை அவை வந்து சேர்ந்ததற்கான
எந்தத் தடயமுமில்லை
மீன் குஞ்சிகளிடம் சேதி
கேட்கிறேன் – பதிலில்லை
நானே மீனாகின்றேன் – நீந்தி உன்னை
அடைய முடியாது திரும்புகிறேன்
நீரிலே மிதந்து செல்லும் இலையிடம்
வினவுகிறேன் – பதிலில்லை
இலையாகின்றேன் நான்- உன்னைச் சேருமுன்பே
இல்லாது போகின்றேன்
கண்ணீரில் மூழ்கிக் கரைகின்றேன்
உயிரின் சாயம் நதியோடு கலக்க என்
உயிர்க்கால்கள் உன்னை நோக்கி நகர்கின்றது
கடும் மேடு பள்ளம் தாண்டி ஓடிவருகின்றேன்
காயம் கொள்கிறது ஆன்மா
பல்லாயிரம் கற்கள்
தடைக்கற்களாகின்றன
வலிமையோடு கடக்கின்றேன்
இறுதியில்
உன்னோடு கலக்கின்றேன்
உன்னால் என் இயல்பு துறக்கின்றேன்