ஈழத்தின் இன்னல்களை பாடும் ஒப்பற்ற படைப்பு இதுவே!
புத்தக பட்சியாய் இருந்திடு
புத்தம் புது உலகை சிந்தையில் வரைந்திடுவாய்!
நேரமிருந்தால் பார்க்க
எத்தனையோ பனுவல்களை கடந்திருப்பேன்.
இது போல் ஒரு அடங்காப் பறவையை எளிதில் காணலாகா!!!
இவரை ஓர் ஆசிரியராக ஐந்தாறு வருடம் முதல் கண்ட பொழுது பேனாவும் பேப்பருமாக ஏதோ எழுதியபடி இருப்பார். அவரின் அன்றைய தனிமையும் மௌனமும்
அவரை ஆராய வேண்டி தூண்டும் பலர் மனங்களில். அவரின் உள்ளக்கிடக்கை சிறகாய் இன்று பறக்கும் என்று அன்றே கனவை விதைத்திருப்பார்..
கவிஞர் தவராசா செல்வா அவர்களின்
பத்து வருட கனவை நிறைவேற்றினாலும் ஓயமாட்டேன் என்ற உள்ளக் குரல் படைப்பாளியின் இப் புத்தகத்திலே காணலாம்.
தன் ஏழை நரம்பினாலும் புரட்சி வீணையாலும் என்னை அழகிய இசையாக்கியவள் என் தாய் என்றும்
தாய் நிலம் காணாமல் இன அழிப்பால் கரைந்தவர்கள் தன் உறவுகள் என்றும் தாயையும் தாய் மண்ணையும் நேசித்து அவர்களுக்கே சமர்ப்பணம் செய்த இவரின் படைப்பிலே உள்நுழைந்து முத்துக் குளித்தாலும் அடங்காது புரட்டினேன் வரிகளை.
74 கவிதைகளை கொண்ட இந்நூல்
அதிகமாய் பாடுகளை பாடுகிறது.
இன அழிப்பால் காணாமல் கரைந்த உறவுகளின் பிரிவு, சமூக சீர்திருத்தம், வலி மற்றும் வேதனை, காதல், தீரா விடுதலை, பெண்ணின் சுதந்திர வேட்கை, தாயின் மீதான அளவற்ற அன்பு, இயற்கையின் மீதான அளவற்ற காதல், தத்துவசிந்தை,
நிலையாமை கருத்து, புரட்சிகர ஆளுமை இப்படி பல பேசு பொருள்களை தாங்கிய ஓர் பல் உணர்வு படைப்பாக இதை பார்க்கிறேன்.
இவரின் கவிதைகள் பெரும்பாலும்
நதியென பாய்ந்து வாசகரை இழுத்துச் சென்று கட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்தது. வலிகள் நிறைந்த வரிகள் பெரும்பாலும் வலியின் உச்சத்திற்கு கொண்டு சென்றாலும் இறுதியில் ஓர் நம்பிக்கை பாய்ச்சும் புரட்சி வீணை பிறக்கும்.
‘நான் தூங்கப் போகிறேன் இரவே
உனது கரிய மலர்களைப்
போர்த்துகையில்
நிலவின் புன்னகை தெரிகிறது” என தொடங்கி
‘ஆற்றை போல் வருகிறது
கண்ணீர்
காணாமல் ஆக்கப்பட்ட என்
உறவுகளின் உறக்கமற்ற
இரவுகளை எண்ணி”
என முற்றுப் பெறும் இவ்வரிகள் வலிகளின் உச்சத்தை தொடுகிறது.
கிரேக்கத்தின் காதாசிஸ் இவ்வாறு உள்ளூறுவதை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை…..
கவிதைக்கு ஆடை தலைப்பை விட ஏது என்பேன்.
மிகவும் அழகியலும், அற்புதமும்,
தத்துவார்த்தமாகவும், புதியதாகவும்,
வித்தியாசமான கோணத்திலும் இவரின் தலைப்புக்கள் அமைகின்றன.
(ஓர் ஏழைத்தாயின் சிரிப்பு, இது சாத்தான் யுகம், குர்திஸ் முத்தக்கடிதம், நான் ஒரு பொறுக்கி, நிசப்த பூமி,புதுமை ஒரு மீள் நிரப்பி, அவள் ஒரு கவன இசை, ருத்ரன் என்கிறாய், சுமையீனும் எழுத்து, நேரமுகம், ஆழ்மை, குறி மீட்டும் நரர் இப்படி பல …….)
இவரின் கவிதைகள் பார்க்கையில்
படைப்பாளியின் உந்துதலில் விடுதலையைத்தான் வெளிப் படுத்துகிறது. முற்போக்கான சிந்தனையையும், நவீனத்துவ போக்கையும் கொண்ட ஓர் புரட்சிகர உலகையையே இவரின் மனத்துள்ளே சிற்றில் என்ன பெரும் கோபுரமே கட்டுகிறார்……..
இவரின் கவிதைகளில் காதலும் அதிகமாய் உலாவருகிறது…
தன் காதலியை பலவாறாக கற்பனை செய்து புதிய பரிணாம சிந்தையை கவிதைக்குள் கொண்டுவருகிறார்.
‘அங்கமெங்கும் பொங்கிவரும்
தங்கமேகமே
என் சொற்கள் ஒவ்வொன்றும்
நட்சத்திரங்களை பூக்கின்றன
நீ ஆராட்சிக்குரியவள்
ஆய்வு எத்தனை சுகமென
உன்னால் அறிந்து கொண்டேன்
ஏனெனில்
நீ ஓர் புரியாப் புதிர்
நானோர் ஓயா ஆய்வு”
உண்மையில் கற்பனைகள் சுகம் தான். பெண்ணின் ஆழத்தை அறியத்துடிக்கும் அவரின் உள்ளக்கிடக்கை சொல்லுவதை காணமுடிகிறது.
இப்படித்தான் குரல் என்ற கவிதை என்னை ஈர்த்தது.
‘ஒரு தடவை கேட்ப்பதற்காய் அழுகையில்
வழிகிறாய்
யாரிடமோ எல்லாம் அலைபேசிகளுக்காய்
இறைஞ்சுகிறாய்” என ஆத்மார்த்தமான காதலை சொல்லிவிடுகிறார்.
இது மட்டுமா
‘எனக்காக பிறந்த
தேவமாதுவாகி” என வரிகள் முற்றுப்பெற
இவரின் மனத்துள்ளே பெருகும் அற்புத புனிதமான காதல் அழகாய் வளைகிறது.
காதல் உணர்வுகளும் ,உணர்சிகளும் இணைய ஓர் இனிமைக்காதல் வரைகிறார்.
‘கனவின் கதிரில் கர்ப்பந் தரித்தாய்
பூவின் உடலை அணிந்து கொண்டாய்
ஆண்மை என்னை அதனில் கொண்டாய்
பவனம் எனதாய் பருகிக்கொண்டாய்”
இப்படி விரியும் இந்த அழகிய காதலை உணர்த்திவிடுகிறார்..
இப்படி ‘நீ எனதருகில் வருகையில் சக்தியேறுகிறது” என பெண்ணின் அத்தனை பங்கையும் அவளின் துணையான ஓர் நிலையையும் தன்னை ஆளவேண்டும் அதனை அனுபவிக்க வேண்டும் என்ற தீரா இச்சை கொண்ட பச்சை இதயமாக என் கண்ணிற்கு தெரிகிறார்.
இதனைத்தவிர அவள் ஒரு கவன இசை என்ற கவிதையில் குழந்தை போல ஏங்கி ‘கவனமாய் பாத்து போங்கோ” என்ற அவளின் வார்த்தையை அழகாய் வார்த்தெடுத்து அதற்கு உயிர் கொடுக்கிறார் அவளின் அன்பை பெறும் இவரும் ஓர் குழந்தை போல……….
பாரதியார் எப்படி கண்ணனை பல்வேறாய் பாவனை செய்கிறாரோ அது போல தன் காதலியை பலவாறாக கற்பனை செய்கிறார்.
இப்படித்தான் சொல்ல இயலும்.
மேலும் இக் கவிஞன் ஆண் தாயாகி விளக்கேற்றும் ‘விளக்கில் ஒளிர்ந்திருப்பவன்” என்ற கவிதையில் தற்கால நடப்பியலை அடித்துக் கூறுகிறார்.
‘இன்று வன்னியெங்கும்
மின்சாரமில்லை
இப்போதும் மின்சாரமில்லை
ஒரு கைப்பிடி விளக்கும்
நிலாவும் கலவி கொண்டன
அதையும் காண்கிறேன்.
இப்படி ஒட்டியே
அன்று எனதருகே விளக்கில படித்த தங்கையில்லையே”
என அவர் சார் கவலைகளை விரிந்தாலும் தற்கால நிலையை வடித்த தீர்க்கதரிசியாய் இவரை காணுகிறேன்.
இப்படி விரியும் இவரின் கவிதைகள்
தன் தாயை அதிகமாகவே பாடுகிறது.
‘அவள் சேலை முடிச்சுக்குள்
அவளுடனேயே
சில்லறைகள் உறங்கும்!” என்ற வரிகள் ஒரு கணம் மனதை உலுக்கியதை சொல்லாமல் இருக்கலாமா!
இந்த கவிதை மெற்றோ நீயூஸில் வெளியானது ( 2017.01.06)
இப்படி தன் தாயை நேசிக்கும் ஆத்மார்த்தமான கவிஞனாக இவரை காணலாம். இவரின் கவிதைகள் அதிகம் வலிமையும் பேசும்.
இக்கணத்தை வாழ், வெறுமை அழகானது, தெளிவு இப்படி பல…
அடங்காப் பறவை என்ற கவிதையில்
‘அது எப்படி அடங்கும்
அதன் இறக்கைகளை
பறித்து விட்டால்
இறந்து விடுமோ
இன்னும் காயவில்லை
குருதியின் ஈரம்” என்பதில் துளிர்விட்டுக்கொண்டே இருக்கும் இதன் சிறகு ஏனெனில் இங்கு வலிகளும் கற்பனைகளும் காயங்களும் நிகழ்வுகளும் இன்னும் அடங்கியபாடில்லை. இது அடங்காப்பறவை அதை எழுத துடிக்கும் பட்சி என்று தன் உள்ளத்திடத்தை பறைசாற்றிவிடுகிறார்.
இப்படி நீளும் இவரின் கவிதைகள்.
அதை பாட அதை பார்க்க ஏது சுகம்
அதை வாங்கி முழுமையாக ருசித்தலே அழகு!!!!!!
ஆக அடங்காப் பறவையை நுகரும் கணம் மனம் புரட்சியாய் பறக்கிறது.
தேடலும், அறிவும், கற்பனையும், உணர்வும், அனுபவமும் நிறைவாய் பெற்ற இவரின் வரமே அடங்காப்பறவையாய் பிறந்திருக்கிறது.
இவரின் கவிதை அரசியல் பாடும்
சில தத்துவம் பேசும் பல காதல் பேசும். அதன் ஏக்கம் பேசும். நிறைவாய் வலிமை நம்பிக்கை பேசும். பல யுத்தம் பேசும். அதன் இன்னல் பாடு பேசும். இப்படி பல வடிவம் பெறும் அற்புததேரில் உலா வருகிறார்……..
இவரின் அடங்காப் பறவை பல வரண்ட மனிதர்கள், துவண்ட உள்ளங்கள், இப்படி பலருக்கு புது ராகம் இசைக்கும்.
மனம் உவகை பெறும். சிறகு இரட்டிக்கும்.
பல வாசகர்களில் அதன் ரசிகர்களில்
இவளும் ஓர் ரசிகையாய் கொஞ்சமாய் புரட்ட மனம் இசைந்த கணம் மதிப்பீடு செய்தவை.
இவரின் கவிதைகள் ஆழம் நிறைந்தவை
முத்துக்குளிக்க நாள் போதா
தொட்டுவிட்டு செல்கிறேன்.
இலக்கிய பயணத்தில் என்றும் சிறகாய் வலம் வர என் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் மதிப்புடன்
ரசிகையாய்
இசை