இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. இது என்றோ ஆரம்பித்து விட்ட ஒன்று என்றாலும் இன்றுவரை இதற்கான தீர்வொன்றைக் கண்டோமா என்றால் இல்லை என்பதே பதிலாகிறது.
இந்த நிலமைக்கு காரணம் என்ன?
கண்டபடி கடன் வாங்கியது. அந்த தவறை மறந்து, இன்றும் இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக கடன்களை மேலும் பெறுவதற்காக ஓடித்திரிகிறோமே தவிர வேறு எதையுமே நாம் செய்ததாக தெரியவில்லை.
வருமானம் குறைந்த வீட்டில் செலவுகள் குறைத்து கடுமையாக உழைத்துத்தான் முன்னறுவார்கள். ஆனால் இங்கே எவரையும் கடுமையாக உழையுங்கள் என்று சொல்வதாய் தெரியவில்லை. அலுவலகம் வந்தால் செலவு. ஆக, வீட்டிலேயே இருங்கள் என்கிறோம்.
எரிபொருட்கள் இல்லாமல் போய்விட்டது. இந்த நேரத்தில் துவிச்சக்கர வண்டி இறக்குமதியிலும் பல தடைகள் விதிக்கப்பட்டு துவிச்சக்கர வண்டிக்கும் பயங்கர தட்டுப்பாடு. விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. துவிச்சக்கர வண்டிகள் நியாயமான விலைக்கு கிடைப்பதையாவது அரசுகள் உறுதி செய்தால் எரிபொருளுக்கான வரிசை குறையாமலா போகும்?
பாலைவன தேசங்களும், பாறைகளின் தேசங்களும், பனி படரும் தேசங்களும் தன்னிறைவு கண்ட நேரத்தில் இயற்கை ஆசீர்வதித்து வைத்துள்ள இந்த தீவில் வளமான மண்ணும், அதற்கேற்ற பருவநிலையும் கொண்ட சூழல் உள்ளது. மீன்பிடியில் உச்சம் காண நான்கு புறமும் கடல் உள்ளது. இருந்தும் விவசாய மீன்பிடியை மறந்து அவற்றை முன்னேற்ற எதுவித நடவடிக்கைகளும் இன்றுவரை இல்லை. அவர்களுக்கான எரிபொருளையாவது கிடைக்கச்செய்ய வேண்டாமா? முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளும் உரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு எஞ்சியதே அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பஞ்சத்தினால் வரும் பசி அதனிலும் பயங்கரமானது என்பதை பட்டுத்தான் உணரப்போகிறோமா?
நாளை என்றொன்று வருவதற்கு விவசாயிகள் முக்கியமானவர்கள். எனவே, தாமதிக்கும் கணமெல்லாம் பெரும் பஞ்சம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது துமி!