திரு.இராமச்சந்திரன் இரமணன்
B.Sc. in Agric (Hons), PGDE (Col) M.Sc. in Science Education, MBA.
அவர்கள் 27.06.1976 கோப்பாயில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னம்பலம் இராமச்சந்திரன். தாயின் பெயர் நகுலேஸ்வரன் மீனாம்பாள்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் இடை நிலைக்கல்வி, உயர்கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.
இவர் நாவலடி, கோப்பாய் மத்தி, கோப்பாயில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். மனைவி யோகலஷ்மி இரமணன். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவி. யாழ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பட்டதாரி. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார். இவருடைய மூன்று பிள்ளைகளில் முதலாமவர் மகன் செல்வன் இரமணன் காருண்யன். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04ல் கல்வி கற்கின்றார். இரட்டைப் பெண்குழந்தைகள் வருணி, வர்தனி 04 வயது உடையவர்கள்.
பல்கலைக்கழக கல்வி
2004ஆம் ஆண்டில் விவசாய விஞ்ஞானமானி பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
பட்டப்பின் மேற்படிப்புக்களின் விபரம்
2020ஆம் ஆண்டில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினை (Post Graduate Diploma in Education) கொழும்பு பல்கலைக்கழகத்திலும் 2022ஆம் ஆண்டில் விஞ்ஞான கல்வியல் முதுவிஞ்ஞானமானி (M.Sc. in Science Education) பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்திலும் 2015ம் ஆண்டில் முதுவணிக நிர்வாகமானி (MBA) பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டார்.
கடமையாற்றிய/ சுடமையாற்றுகின்ற இடங்கள்
2005இல் பயிரியல் துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக விவசாயபீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடமையாற்றினார்.
சமூகம் சார் செயற்பாடுகளில் ஆர்வம் காரணமாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் 2006- 2009 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலும் இறுதிப் போர்ச் சூழலில் வவுனியாவிலும் இடர்கால பணியையும் புனரமைப்பு பணிகளையும் ஆற்றியனார்.
2009 பிற்பகுதியிலிருந்து இன்று வரை ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
2009 ஆண்டில் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று 2010 ஆண்டில் கண்டி அல்மனார் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து 2013 ஆண்டில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடமையாற்றி 2020 ஆண்டிலிருந்து இன்றுவரை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
கற்பித்த பாடங்களில் குறிப்பாக உயர்தர இரசாயனவியல் மற்றும் வணிகத்துறையில் உயர்தர வணிகக் கல்வியினையும் கற்பித்தார். இதன் மூலம் மூவினத்து பல் கலாசாராங் கொண்ட ஆசிரியர் தொடர்பு மற்றும் மாணவர்களைக் கையாளும் அனுபவம் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை பாடசாலைகளில் 2018 ஆண்டில் தொழில் முறைக்கல்வியினை அறிமுகம் செய்த போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரில் பகுதித்தலைவராக தொழிற்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தினார்.
மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்பித்தலுக்கு அப்பால் அவர்களது தேவைகள் மற்றும் இடரினை இனங்கண்டு அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் தொழிற்கல்விப் பாடத்திட்ட மொடியூல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வளவாளராகவும் ஆசிரியர்களுக்கு நவீன கற்றல் சாதனங்களைக் கையாளும் பயிற்சி வளவாளராகவும் தொழிற்படுகின்றார்.
யாழ்ப்பாண மாவட்ட தெங்கு செய்கையாளர்களுக்கான விவசாயச்சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கருத்தரங்குகளை நடாத்துகிறார். வீட்டிலேயே திறன் டிஜிற்றல் படலினை பாவித்து கற்றலில் இடருறும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி வகுப்புக்கள் நடத்துகிறார்.
ஆய்வுத்துறைகள்
பயிரியலில் சூழலினைக் கட்டுப்படுத்திய மண்ணின்றிய பயிர்ச் செய்கையில் வெவ்வேறு வர்க்கத்தக்காளிப் பயிரின் மதிப்பீட்டாய்வு.
முகாமைத்துவம்
- உள்ளூர் தன்னார்வ தொண்டுகளில் ஈடுபடுபவர்களின் சமூக முயற்சியாண்மை செயற்பாடுகளின் விடய ஆய்வுகள்,
2.கல்வி நிர்வாகத்தில் விஞ்ஞான கல்வியினை மேம்படுத்துவதற்கு பாடசாலை மட்ட முகாமையாளர்களின் சமூக முயற்சியாண்மைச் செயற்பாடுகளில் பங்கு பற்றிய ஆய்வு.
விருதுகள்
2021ம் ஆண்டு கோவிட்19 தொற்றுத் தடுப்பு நடைமுறைகளினால் ஏற்பட்ட கல்விப் பாதிப்பினை நிவர்த்தி செய்ய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபரின் தலைமையில் நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி பாரியளவில் நடைபெற்ற கற்பித்தல் நுட்பங்கள் இலங்கை பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது. இணையவழி மூலமாகவும் காணொளிகள் மூலமாகவும் பாடப்பரப்புகளை கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இலங்கையிலுள்ள சகல மாணவர்களும் இலகுவாக இணையும் பொருட்டு வைபர், வட்சப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி அனைவருக்கும் இலகுவாக இணையவழிக்கல்வியில் இணைய வசதியேற்படுத்தப்பட்டது. செயலட்டைகள் அச்சிடப்பட்டு pendrive ல் காணொளிகள் சேமிக்கப்பட்டு வீடு வீடாக வழங்கப்பட்டதன் மூலம் இணையவழிக் கல்வி இலகுவாக்கப்பட்டது.
இதனால் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட BIC என்ற பல் தேசியக் கூட்டு நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கிறிஸ்ரல் பேனா விருது (BIC Cristal Pen Award) 2021 கிடைக்கப் பெற்றது. விருதுடன் 5000 யூரோ டொலர்கள் பணப்பரிசு கிடைக்கப்பெற்றது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த விருது 2025 இற் கிடையில் உலகிலுள்ள 250 மில்லியன் சிறுவர்களின் கல்வியை உயர்த்துவதற்கான ஊக்குவிப்பாகும். நூற்றுக்கு மேற்பட்ட முயற்சிகளில் 10 சிறப்பான கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு விருது பெறும் கல்வியாளரும் அடுத்த சந்ததியை கல்வியில் முன்னேற்ற மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களாக உள்ளனர் என கூறும் BIC நிறுவனம் ஆசியா பசுபிக்கிலிருந்து திரு. இ. இரமணனை பரிந்துரைத்து விருது வழங்கி அவரையும் பாடசாலையையும் கௌரவித்திருக்கின்றது. எதிர்கால சந்ததியினரின் கல்வி மேம்பாட்டிற்கு உழைத்த, உழைக்கின்ற திரு. இ.இரமணன் அவர்களை வாழ்த்துகின்றோம்.
இவர் மென்மேலும் பல விருதுகள் பெற்று சமூகத்திற்கும் கல்விக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல ஸ்ரீ துர்க்காதேவியை வணங்கி வாழ்த்துகின்றோம்.
செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிறந்தநாள் அறநிதியச்சபை,
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.