இதழ் 49

சித்திராங்கதா – 47

நல்லை இளவரசி

ஒரு மாளிகை அழகாகத் தெரிகிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அந்த மாளிகை உண்மையிலேயே அழகாக கட்டப்பட்டிருக்கலாம். அல்லது அழகை ஆராதிக்கக்கூடிய யாரோ ஒருவர் அந்த மாளிகையில் வசிக்கலாம். அப்படி அழகை பெரிய விடயமாக கொண்டாடுகிற ஒரு மாதரசியின் மாளிகைக்குத்தான் வன்னியத்தேவன் வருணகுலத் தானையும் சித்திராங்கதாவையும் அழைத்து வந்தான்.

அந்த மாளிகையின் நடுப்பீடத்தில் மகாராணி போல் ஒருத்தி காலின் மேல் மறுகால் ஏற்றி கம்பீரமாக அமர்ந்திருந்தாள். அவளது நேர் வகிட்டில் இழையோடி இருந்த ஓரிரு வெள்ளை முடிகள் அவளது பிராயத்தை சொன்னது. ஆனால் கண்கள் அவள் இந்த பிராயத்திலும் இளமையானவளே என்று சொன்னது. காண்பவர்கள் எல்லோரும் அவள் காலடிக்கு கீழ்தான். அப்படித்தான் இருந்தது அவள் கம்பீரம்.

இவர்கள் மூவரும் தன்னை நோக்கி வருகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் அவள் கம்பீரம் சிறிதும் சலனம் கொள்ளவில்லை. நெருங்கி வந்த மூவரையும் நோக்கி அமர்ந்தபடியே தன் வணக்கத்தை தெரிவித்தாள் அந்த கம்பீர அழகி.

திமிரான அவளது வணக்கம் வருணகுலத்தானிற்கு புதிதாக தெரிந்தது. தலைவிரித்து படமெடுத்து நிற்கின்ற ராஜநாகம் ஒன்றின் உருவம் வருணகுலத்திற்கு ஏனோ நினைவு வந்தது. அதை இரசித்தபடியே வருணகுலத்தான் பதில் வணக்கம் கூறினான். சித்திராங்கதாவும் அந்த திமிரின் அழகில் மிரண்டவளாகவே பதில் வணக்கம் கூறினாள்.

வன்னியத்தேவன் வருணகுலத்தானை நோக்கி

‘தஞ்சை தளபதியாரே, தங்கள் சங்கிலிய மகாராஜா எங்ஙனம் அதர்மம் இளைத்து இவ்வாட்சி பீடத்தை அபகரித்துக் கொண்டார் என்று நான் கூறிய சம்பவத்தை கட்டுக்கதை என்றீர்களே, அது கட்டுக்கதை அல்ல என்பதற்கு நிகழ்கால சாட்சியாக இந்த மகாராணியை உங்களிற்கு அறிமுகப்படுத்துகிறேன். மேற்படி விடயங்களை நீங்கள் ராணியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.” என்று கூறி அமைதியாக ஒதுங்கி நின்றான்.

வருணகுலத்தானிற்கு நிகழ்வது என்ன என்று புரியவில்லை. யார் இந்த ராணி? இந்த ராணியிடம் என்ன ஆதாரத்தை கேட்பது? கேட்க வேண்டியதன் அவசியம் தான் என்ன? என்ற குழப்பத்தில் மௌனம் கலையாமல் அவன் நின்று கொண்டிருந்தான்.

ஆனால் சித்திராங்கதாவிற்கு அந்த ராணியிடம் ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது.

‘மகாராணி என்று தங்களை வன்னியத்தேவர் கூறுகிறார். தங்களை பார்க்கையில் என் கண்களும் அதையே சொல்கிறது. ஆதலால் நானும் தங்களை மகாராணி என்றே அழைக்கிறேன்”.

‘தாராளமாக அழைக்கலாம் சித்திராங்கதா. நான் மகாராணியே ஆவேன். தங்கள் முடிக்குரிய வேந்தர் என்று கொண்டாடுகிறீர்களே சங்கிலிய மகாராஜா….”

என்று கூறி தன் பார்வை நின்ற இடத்திலே குத்தி நிற்க சிந்தனையில் எங்கோ மூழ்கி சென்றாள் மகாராணி. அந்த சிந்தனையில் தெரிந்த சோகத்தை கலைக்க விரும்பாதவளாய் அமைதியாக காத்திருந்தாள் சித்திராங்கதா.

‘மகாராணி கூற வந்ததை முழுமையாக கூறாமல் எம்மை இங்ஙனம் காக்க வைப்பது எதனால் என்று தெரியவில்லையே”
பொறுமை தவறி கேட்டான் வருணகுலத்தான்.

வருணகுலத்தான் குரலால் சிந்தை திரும்பிய ராணி அந்த அழகிய சோக முகத்தை புன்னகை முலாமிட்டு மறைக்கத் தொடங்கினாள்.

‘மன்னிக்க வேண்டும் தஞ்சை மாவீரரே! தங்களை காக்கவைக்கும் நோக்கம் எனக்கல்ல. காத்திருப்பின் வலியே வாழ்வின் சாரம் என்று ஆனவள் நான். பல ஆண்டுகளாக, பல யுகங்களாக காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்தையே வரமாக பெற்ற இந்த மகாராணி இன்னொருவரை காக்க வைக்க எக்காலத்திலும் துணியேன்”.

‘புரியவில்லை மகாராணி! மகாராணியான தாங்கள் யாரால் எங்ஙனம் ஏமாற்றப்பட்டீர்கள்?” பெருங்குழப்பத்துடன் கேட்டான் வருணகுலத்தான்.

‘வேறு யாரால்?
யாரை நீங்கள் இன்று மகாராஜா என்று கொண்டாடுகிறீர்களோ? அந்த சங்கிலியனால் தான் ஏமாற்றப்பட்டேன் இந்த மகாராணி”

‘சங்கிலிய மகாராஜா தங்களை ஏமாற்றினாரா? என்ன கூறுகிறீர்கள் மகாராணி. தாங்கள் யார் என்று கூட இதுவரை நான் அறியவில்லையே?”

‘அறிந்திருக்க மாட்டீர்கள் தளபதி. நல்லை அரண்மனை அந்த கசப்பான உண்மைகளை உங்களிடம் எப்படியும் மறைத்திருக்கும் என்று நான் நன்கறிவேன். நானே கூறுகிறேன். இராஜகாமினி என் பெயர். முன்னை வேந்தர் எதிர்மன்ன சிங்க மகாராஜா என் தந்தையாவார்.”

இராஜகாமினி அவ்வாறு கூறியதும் சித்திராங்கதாவும் வருணகுலத்தானும் ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். ஆச்சர்யத்தில் விரிந்த அவர்கள் கண்கள் வன்னியத்தேவனை பார்த்தபோது ‘ஆமாம்.” என்று தலையசைத்தான் வன்னியத்தேவன்.

‘தேவி! தாங்கள் எதிர்மன்ன சிங்க மகாராஜாவின் மகளா?”

‘ஆம் தளபதியாரே. நல்லை அரண்மனையில் இளவரசியாக வளர்ந்த இராஜகாமினி நான் ஆவேன். பிறப்பில் எனக்கு முறையில் உரித்தானவன் தான் சங்கிலியன். சிறுபிராயந் தொட்டே சங்கிலியனே என் துணைவன் என்று அந்தப்புரம் எனக்கு சொல்லிவந்தது. மலராத வயது தொட்டு மலர்ந்திருந்தது என்னுள் காதல். வளர வளர அந்தக் காதல் பெருகியது. அனைத்தையும் இறுதியில் பொய்யாக்கிப் போனான் உங்கள் மகாராஜா சங்கிலியன்.”

இராஜகாமினி கூறுவதை பொய் என்று முழுவதுமாய் மறுக்கமுடியவில்லை வருணகுலத்தானால். அவள் வார்த்தைகள், உணர்வுகள் முழுதிலும் உண்மை ஒன்று வெளிப்படுவது வெளிப்படையாகவே அவனிற்கு தெரிந்தது.

தன் காதல் ஏமாற்றமடைந்த துயரத்தை இராஜகாமினி கூறுகையில் சித்திராங்கதாவின் கண்கள் குளமாகி இருந்தன. இராஜகாமினியின் சோகமே தன் எதிர்காலமாய் ஆகிவிடுமோ என்ற அவளது உள்ளத்து அச்சம் இப்போது அவளை நிலைகுலைய வைத்திருந்தது.

‘அழகு என்ற சொல்லிற்கே அர்த்தம் போல் இருக்கும் தங்களையா மன்னர் ஏமாற்றினார். எதற்காக மகாராணி?..” தழுதழுத்த குரலில் கேட்டாள் சித்திராங்கதா.

‘ஒரு காதலை ஏமாற்ற இன்னொரு காதலை காரணம் காட்டினான். திருமலை வன்னியரது புதல்வி கல்யாணி தேவி. அவளையே கரம் பற்றிக் கொண்டான் சங்கிலியன். பாவம் அவளது ஆயுளும் சங்கிலியனாலே பறிபோனது. அரசியல் அவாவில் அவன் ஆற்றிய சூழ்ச்சிகளால் கொதித்தெழுந்த கலகக்காரர்கள் சங்கிலியனை கொன்றே தீரவேண்டும் என்று திரிந்தார்கள். சங்கிலியன் தலைமறைவானதால் எல்லை மீறிப்போன கலகக்காரர்களின் கோபத்தில் கல்யாணிதேவி கொல்லப்பட்டாள். சங்கிலியனால் வாழ்வு பெற்று உயிரை இழந்தாள் கல்யாணி தேவி. வாழ்வை இழந்து உயிர் சுமந்து நிற்கிறேன் நான். ஆனால் தங்கள் மகாராஜா மஞ்சரி தேவியை மணந்து கொண்டு இப்போது முடியரசராய் கொடி கட்டி ஆள்கிறார்.”

என்று கூறி விரக்தியில் புன்னகைத்தாள் இராஜகாமினி.

அவள் சொல்வதை யாராலும் நம்பாமல் இருக்க முடியாது. ஆனால் முழுவதுமாய் அவள் கூறுவதை நம்பவும் வருணகுலத்தானால் முடியவில்லை. அதேவேளை இராஜகாமினியை எதிர்த்து வாதிட அவன் பரிவு இடந்தரவில்லை.

‘தேவி தாம் கூறுவது எல்லாம் உண்மை என்றால் தாம் எங்ஙனம் இங்கு வந்தீர்கள்? முன்னை வேந்தரின் மூன்று வயது பாலகனை அரசர் கொன்று ஆட்சிபீடம் ஏறியதாய் வன்னியத்தேவர் சொன்ன கதைகளும் உண்மைதானா மகாராணி?” என்று குழப்பத்துடனே கேட்டான் வருணகுலத்தான்.

‘தாம் இன்னும் அவற்றை நம்பவில்லை என்பதால் தங்களிற்கு அவை கதைகள். எனக்கு அவை மனதை விட்டகலா கடந்தகாலச் சுவடுகள். என் தந்தைக்கு நீண்டநாளாய் ஆண்வாரிசு வாய்க்கவில்லை. ஆகையால் சங்கிலியனே அடுத்த முடிக்குரிய வேந்தன் என்று ஆட்சியிலிருந்த என் தந்தை முன்னர் சொல்லியிருந்தது உண்மைதான். இளவரசியான என்னை மணந்து முடிக்குரிய மன்னனாக வேண்டுமென்று என் தந்தை சங்கிலியனிற்கு ஆணையிட்டார். ஆனால் அதை மறுத்து எப்போது அவன் கல்யாணி தேவியை மணந்து கொண்டானோ? அன்றே என் தந்தை சங்கிலியன் ஆட்சி பீடமேறுவதை இனி எக்காலத்திலும் அனுமதியேன் என்று சபதமுரைத்தார்.

பின் நெடுநாள் கழித்து என் சிற்றன்னை மூலம் என் தந்தைக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அவனிற்கு மூன்று வயது எட்டும்போது தீராத நோய் என் தந்தையை பற்றிக் கொண்டது. ஆதலால் மூன்றே வயதான என் சகோதரனே நல்லையின் அடுத்த வேந்தன் என்றும் அதுவரை அரசை என் சிற்றப்பன் அரசகேசரி பார்த்துக் கொள்வார் என்றும் அரசவையில் அறிவித்தார். அங்ஙனம் அறிவித்து சில நாட்களிலே அவரை பற்றிக் கொண்டிருந்த நோய் அவரது இன்னுயிரை பறித்து சென்றுவிட்டது.”

இராஜகாமினியின் திமிரான அந்த கண்களில் கண்ணீர் சொட்டத் தொடங்கியது.

‘என் தந்தை இறந்து சில நாட்களிலே அரண்மனையில் சங்கிலியனை அடுத்த வேந்தனாக்கும் இரகசிய பணிகள் மெல்ல மெல்ல அரங்கேறத்தொடங்கின. ஆட்சி வேட்கையில் என் பச்சிளம் சகோதரனை கருணையேயில்லாமல் கொன்றுவிட்டான் சங்கிலியன். அந்த அநியாயத்தை எதிர்த்து கேட்ட என் சிற்றப்பனையும் கொன்றான். இப்படி அவன் அக்கிரமங்கள் மேலெழ சங்கிலியனே அடுத்த வேந்தன் என்ற முழக்கம் அரசவையில் ஓங்கத் தொடங்கியது. அதற்கு மேல் அங்கிருக்க என் மனம் இடந்தரவில்லை. புறப்பட்டு வந்தேன்.

வன்னி மாளிகையில் எனக்கொரு அடைக்கலம் கிடைத்தது. சங்கிலியனின் வக்கிர புத்தியை உணர்ந்த வன்னி வேந்தர் தயவால் இன்று இங்ஙனம் உயிர் பிழைத்து இருக்கிறேன். தாங்கள் மகாராஜா என்று கொண்டாடித் தீர்க்கிறீர்களே அந்த பாதகனால் வாழ்விழந்து நிற்கும் இந்த மகாராணி இராஜகாமினி நான் என்று தங்களிற்கு இப்போது புரிகிறதா வருணகுலத்தாரே?”

அந்த கம்பீர அழகியின் கண்கள் முழுவதுமாய் நனைந்திருந்தன. பேசுவது என்னவென்று தெரியாமல் மௌனமாகவே நின்று கொண்டிருந்தனர் சித்திராங்கதாவும் வருணகுலத்தானும்.

வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே திமிரின் உச்ச தொனியில் ராஜகாமினி மீண்டும் பேச தொடங்கினாள்.

‘ஆனால் தளபதியாரே, என் வாழ்வு உள்ளவரை என் உள்ளத்தில் பற்றி எரிகிற தணல் அணையாது. என் வாழ்வை நிர்க்கதியாக்கியாக்கிவனை சிம்மாசனத்தில் இருந்து விரட்டி என் தந்தை விட்டுச் சென்ற பொறுப்பில் ஒரு முறையான வேந்தனை முடியரசனாய் அமர்த்தும்வரை என் உள்ளத்து தணல் அணையாது… அணையவே அணையாது”

ராஜகாமினி கூறிய தொனி அங்கிருந்த அனைவருக்கும் மிகவும் பயங்கரமானதாக தெரிந்தது.

‘என் நெஞ்சு கனமாக இருக்கிறது மகாராணி. மற்று ஏது கூறுவதென்றும் எனக்கும் தெரியவில்லை.”

பரிவு மிகுந்த பார்வையோடு ராஜகாமினியை பார்த்து கூறினான் வருணகுலத்தான்.

‘தாம் படைத்தளபதியாவீர்கள். தமக்கு அறிவுரை கூறுவது என் நோக்கமல்ல. தாமே யாவும் அறிவீர்கள். சிறிது சிந்தியுங்கள். தங்கள் வீரமும் விவேகமும் இந்த ஈழமண்ணில் முறையற்றவர்களுக்காக வீணாகிவிடக் கூடாது என்பதே இந்த ராஜகாமினியின் வேண்டுகோள். அதற்காகவே தங்களை சந்திக்க விரும்பினேன். சிறிது சிந்தியுங்கள். பின் தெளிவாய் முடிவெடுங்கள்.”

‘நன்றி மகாராணி.
நான் விடை பெறுகிறேன்.”

அந்த மண்டபத்திலிருந்து விரைந்து விலக வேண்டும் போல் இருந்தது வருணகுலத்தானிற்கு.
சித்திராங்கதாவை பார்த்தான். அவள் இமை மூடாது ராஜகாமினியினை ஏதோ ஒரு பாசம் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதை அவதானித்த வன்னியத்தேவன்

‘தளபதியாரே , ஆடலரசி சித்திராங்கதா மகாராணியிடம் ஏதோ பேச நினைக்கிறார் போல் இருக்கிறது. நாம் சென்று அரசவையில் காத்திருப்போம். ஆடலரசி ராணியிடம் சிறிது பேசிவிட்டு வரட்டும்.” என்றான்.

வருணகுலத்தான் மீண்டும் சித்திராங்கதாவை பார்த்தான். அவளும் அதற்கு தாங்கள் உடன்படவேண்டும் என்பதுபோல் பார்த்தாள்.

அவள் கேட்டால் மறுக்கப்படுமா என்ன? வன்னி அரண்மனைக்கு சென்று காத்திருந்தான் வருணகுலத்தான். நல்லை அரசவையின் இதுவரை அறியப்படாத இன்னும் பல இரகசியங்களை இராஜகாமினி மூலம் அறிந்து கொண்டிருந்தாள் சித்திராங்கதா.

தொடர்வாள்…

Related posts

கனகராயன் ஆறே பாய்ந்திடு

Thumi202121

அடங்காப் பறவை

Thumi202121

ஈழச்சூழலியல் 35

Thumi202121

1 comment

Leave a Comment