இதழ் 49

முகக்கவசம் அணிந்த மோனாலிசா

‘டேய்..”

“…”

“டேய் நிதன், பஸ்ல நேரத்தோட சீட்ட புக் பண்ணிட்டா தானே?”

“ஓம் மா.. பண்ணிட்டன்..”

“அப்பா மேசையில வச்ச காச எடுத்திட்டியா?”

‘…”

‘டேய்.. நான் கேக்குறது காதுல விழுதா இல்லையா..?”

‘ஐயோ அம்மா, ஓம் மா.. எடுத்துட்டன்”

‘சரி, இந்தாடா தண்ணி போத்தலயும் இந்த பிஸ்கட் பக்கட் சாமானுகளையும் பாக்குல எடுத்து வை, விடியச்சாமம் கொழும்புல போய் இறங்குனதும் பசிக்கும்..”

‘…”

‘நிதன்.. என்ன நினைப்புலடா இருக்கா.. நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கன்.. நீ பாட்டுக்கு என்னமோ யோசிச்சிட்டு இருக்க..!”

‘..ஐயோ ஐயோ அம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லமா..”

‘என்னமோ.. கொழும்பில போய் இறங்கின உடனே அம்மாக்கு கோல் ஒண்டு அடி சரியா..?”

தாயும் பிள்ளையும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கமலநாதனுக்கு மனதில் தோன்றியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

‘தேவி, அவன் என்ன கொழும்புக்கு முதல் தடைவையாவா போறான்! அந்த பாங்கு வேலைல சேந்ததுல இருந்து லீவுல வீட்டுக்கு வந்து பொயிட்டுதானே இருக்கான்! என்னமோ இன்னைக்குதான் புதுசா போற போல பேசிட்டு இருக்கா!”

‘என்னங்க இப்பிடி சொல்றீங்க? முதலாவது தடவையோ பத்தாவது தடவையோ நம்ம புள்ளைங்க..”

‘சரி சரி.. போதும் போதும்.. நிதன் பஸ் என்ன டைமுக்கு வரும்..?”

‘9.30 க்குப்பா..”

‘சரி அப்ப வெளிக்கிடு கொண்டுபோய் விட்றன்..”

கமலநாதன் வீட்டிற்கு வெளியே இருந்த தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்காக சாவியை எடுத்துச் சென்றார். நிதனும் தன் பையை எடுத்துக்கொண்டு அம்மாவுடன் வெளியே சென்றான்.

‘பாத்தியாடா நீ கொழும்புக்கு போறது ஒண்ணும் இது முதல் தடவ இல்லனு சொன்ன அப்பாவே இப்ப உன்ன கொண்டுபோய் விடுறன்னு சொல்றாரு. அவரு வீராப்புலாம் சும்மா, அவரு என்னவிட ரொம்ப பாசக்காரரு..”

‘ஐயோ அம்மா, அப்பாவ பத்தி எனக்கு தெரியாதா..?”

‘அது சரி.. சரிடா கண்ணா, பாத்து பத்திரமா பொயிட்டு வா, நாட்டு நிலம வேற சரியில்ல.. என்ன பெரிய பாங்கு வேலயோ!?”

‘அம்மா.. என்னம்மா..!”

“சரி சரி கவனமா பொயிட்டு வாடா..”

தேவியும் நிதனும் பேசிக்கொண்டு வெளியில் வர, கமலநாதனும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய நேரம் சரியாக இருந்தது.

‘போதும் போதும் அம்மா புள்ள பாசம்.. நாடு இருக்கிற நிலமைக்கு எப்ப ஊரடங்குச்சட்டத்த போடுவானுகள் எண்டு தெரியாது.. சீக்கிரம் வந்து பைக்குல ஏறுப்பா.. மாஸ்க்க எடுத்திட்டியா? எதுக்கும் போட்டுக்க.. இப்பலாம் மாஸ்க்க போட வேணாம்னு சொன்னாலும் எதுக்கும் போட்டுக்கிறது நல்லம், கொரானா மட்டும்தானா வியாதி, இன்னும் எத்தினையோ வியாதிகள் இருக்கு. இன்னைக்கு கூட ரெண்டு பேர் செத்திருக்கிறாங்கள். நாடு கிடக்கிற நிலமைக்குள அதெல்லாம் இப்ப எங்க டிவி ல காட்டுறான்..”

‘ஐயோ என்னங்க.. சரிங்க.. உங்க அரசியல் விஞ்ஞான பாடத்த இப்ப நடத்த வெளிக்கிட்டீங்களா? சீக்கிரம் வெளிக்கிடுங்க பாப்பம், இப்பவே நேரம் 9.25 ஆகிட்டு..”

நிதன் தந்தையின் வண்டியில் ஏறியமர்ந்தது தான் தாமதம் நாட்டு நடப்புக்களை பேசிக்கொண்டே வந்தார் கமலநாதன். ஓய்வுபெற்ற அரசியல் விஞ்ஞான ஆசிரியர் என்பதாலோ என்னமோ நாட்டின் மீதும் அரசியல் மீதும் அத்தனை ஈடுபாடு அவருக்கு. தேவியோ இல்லத்தரசி. இருவரும் சந்தித்து கொண்டது என்னமோ அரசியல் விஞ்ஞான வகுப்புகளில்தான். அதாவது கமலநாதன் ஆசிரியராக இருந்து நடத்திய வகுப்புகளில் தேவி மாணவியாக வந்த பொழுது சந்தித்து, கற்பித்து, கற்று, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி.. அது ஒரு பெரிய காதல் கதை. தேவிக்கு படிப்பு ஏறவில்லையென்றாலும் கணவனை வீட்டை புரிந்து ஏற்று நடக்கும் கண்ணியமான குடும்பப்பெண்ணாக இருந்தாள். இருவருக்கும் ஒரேயொரு ஆண்பிள்ளை, நிதன். உலகமே தாய் தந்தையர் தானென்று அவர்களை சுற்றிவந்து மாங்கனியை பெற்ற விநாயகரையே மிஞ்சிவிடுவான். அம்மா அப்பா என்றால் அத்தனை பிரியம் நிதனுக்கு. அவனும் பள்ளி, கல்லூரி முடித்து, போன வருடம் தான் கொழும்பிலுள்ள இலங்கை மக்கள் வங்கி கிளையொன்றில் பணிபுரிய தொடங்கியிருந்தான்.

என்னதான் நிதன் கல்யாண வயதை எட்டியிருந்தாலும் நாடு போகிற போக்கில், பெண் பார்க்கும் படலம் கொஞ்சம் தள்ளிப்போடப்பட்டிருந்தது. தேவியும் பட்டும் படாமல் அவ்வப்போது சொல்லிப்பார்ப்பார், பின்னர் விட்டுவிடுவார். ‘அம்மா, எனக்கு இப்பதான் 25 வயசு, நான் இப்பதான் வேலைக்கும் சேந்திருக்கன், ஒரு 2 வருஷம் போகட்டுமே” என்பான் நிதன். இதனாலோ என்னமோ தேவி கல்யாணத்தை பற்றி எதுவுமே பேசுவதில்லை. ஆசையாய் வளர்த்த மகனை சிறிது காலம் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.

நேரம் சரியாக பி.ப 9.30 ஆகியிருந்தது. தந்தையும் நிதனை மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்தில் இறக்கிவிட்டார்.

‘நிதன், சரி பாத்து பொயிட்டு வா”

‘சரிப்பா..”

ஏசி பஸ் ஒன்று தான் புக் செய்யப்பட்டிருந்தது. கண்டக்டருடன் ஏற்கனவே பழக்கம் என்பதால், ஒரு சிறு புன்னகையுடன்
பஸ்ஸில் ஏறினான். ஏறி அமர்ந்து ஐந்து நிமிடங்களில் பஸ் புறப்பட தயாரானது. ஆரம்பத்தில் பயணம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் ஒரு பஸ் தரிப்பிடத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பஸ்ஸில் ஒரு வயதான நபருக்கு சீட் இல்லாமல் போகவும், நிதன் தன்னுடைய சீட்டை அவருக்கு கொடுத்துவிட்டு எழுந்து நின்றான். ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறரை ஏழு மணிநேரப்பயணம். காதுகளில் இயர்போனை மாட்டிக்கொண்டு கைகள் இரண்டினாலும் மேலிருந்த பஸ் கம்பிகளை பிடித்த வண்ணம் நின்றிருந்தான்.

செவிகளில் அனிருத்தின் இசையில் ஒரு காதல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. புதிய பாடல்தான், இருந்தும் கேட்ட மறுகணமே நிதன் அந்த பாடலின் எங்கோ ஓர் மூலையில் தொலைந்துபோனான்.

‘..நான் பிழை நீ மழலை..
..எனக்குள் நீ இருந்தால்..
..அது தவறே இல்லை..”

நிதன் என்ன நினைத்தானோ என்னமோ, ஏசி குளிரில் உடல் சிலிர்த்துப்போக சுற்றும் முற்றும் தலையசைத்து பஸ்ஸிற்குள் இருக்கும் நபர்களை ஒருமுறை நோட்டமிட்டான். அப்பொழுதான் சிப்பிக்குள் முத்து மறைந்திருப்பதை போல, மாஸ்க்கிற்குள் பாதி முகம் மறைய, மறுபாதியை நெற்றி முடிகள் மறைக்க இரு காந்த கண்கள் இருப்பதை கண்டான். அந்த கண்களில் ஏதோ போதை இருந்தது எனலாம். ஒரு முறை பார்த்தால், மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலும். அத்தனை வசீகரம். கண்ணோரங்களில் கண்மை இல்லை. இருந்தும் அவை அந்த மெல்லிருள் சூழ்ந்த ஏசி பஸ்ஸிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவளுடைய கூந்தல் காட்டாற்றை போல சீட்டின் பின்புறம் எங்கிலும் பரவிக்கிடந்தது. பச்சைநிற உடையணிந்திருந்தாள். அங்குதான் அனிருத்தின் இசையும் நிதனை உண்டு இல்லையென்று பண்ணி அவனை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது.

‘..அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்..
அவள் நடைமுறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்..”

பாடலின் இசை நிதனை தான் பிடித்துக்கொண்டிருந்த பஸ் கம்பிகளில் விரல்களால் தாளம் போட வைத்தது. அந்த முகக்கவசம் அணிந்த மோனாலிசாவை கொஞ்சம் அருகில் நின்று பார்க்க எண்ணியதாலோ என்னமோ, பஸ்ஸின் நடுப்பகுதிக்கு மெதுவாக நகர்ந்துபோய் மீண்டும் அங்கிருந்த பஸ் கம்பிகளை பிடித்துக்கொண்டு நின்றான். அருகில் பார்க்கையிலும் அவள் அழகுதான். அவளும் காதுகளில் இயர்போன் மாட்டியிருந்தாள். பரவிக்கிடந்த கூந்தலுக்குள் மாட்டிய இயர்போன்
தூரத்திலிருந்து அவளை ரசிக்கையில் தெரியவில்லையே. அடடே, புத்தகம் ஒன்றும் அவளுடைய கையில் இருந்தது. மோனாலிசா இசையை ரசிப்பவள் மட்டுமல்ல, புத்தகங்களை விரும்பி படிப்பவளும் போலவே. தன்னைப்போலவே இருக்கிறாளென எண்ணிக்கொண்டான் நிதன். அப்பொழுதுதான் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, அவளுடைய அம்மாவாக இருக்க வேண்டும், ஏதோ அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
பஸ்ஸில் அநேகமானோர் தூங்கிக் கொண்டிருந்ததால், அவளுடைய அம்மா பேசுவது நிதனுக்கு நன்றாகவே கேட்டது.

‘வீனா, என்ன அது காதுல?
பஸ்ஸில ஏறின நேரத்தில இருந்து அத காதுல மாட்டிட்டு இருக்கிறா?”

‘ஐயோ அம்மா, எனக்கு நாளையண்டைக்கு எக்ஸாம் இருக்கிறதால, என் நோட்ட பாத்துட்டே ரெக்கோடிங் கேட்டுட்டு இருக்கன்.”

‘ஆ.. என்னவோ.. கன நேரத்துக்கு அத காதுல வச்சிட்டு இருக்காத, சூடு நல்லமில்ல..”

‘சரிம்மா.. பஸ்க்குள்ள ஆக்கள் இருக்காங்க, கத்தாதிங்க.. சரி சரி..”

அம்மாவிடம் சொல்லிக்கொண்டே ஒரேயொரு பார்வை நிதனை பார்த்தாள். அம்மா திட்டுவது அவனுக்கு கேட்கும் என்றுதான் அம்மாவை வைதிருக்கிறாள். நிதனுக்கு சிரிப்பு ஒருபக்கம். இவள் நன்றாக படிக்கிற பிள்ளை போல என்கிற எண்ணம் இன்னொரு பக்கம். அப்பொழுதுதான் அவளுடைய அம்மா இன்னொன்றும் சொன்னார்.

‘உண்ட வயசில இருக்கிற பிள்ளைகள் இப்ப படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு போகுதுகள்.. நீ யுஃடு அயே 3 தரம் எழுதிட்டு இருக்கா.. எனக்கெண்டா தெரியலடி உன்ன வச்சிட்டு என்ன பண்ணப்போறன் எண்டு..”

‘அம்மா.. வாயக்கொஞ்சம் மூட்றியா..?”

நிதனுக்கு குபீரென்று வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் எவ்வளவோ முயன்றும், கோவத்தில் சிவந்த அவளுடைய பாதி முகத்தை பார்த்ததுதான் தாமதம் சிரித்தே விட்டான். சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தார்கள் தாயும் மகளும்.

‘பின்ன என்ன தம்பி? நீங்களே பாருங்க.. இதுக்கு இப்ப 21 வயசாகுது. இப்பிடி யுஃடு அயே மூணுதரம் எழுதினா நான் எப்பிடி இவள கரசேக்கிறது..?!”

ஒருவாறாக அவளுடைய அம்மா தன் கவலையை நிதனிடம் சொல்லி, புலம்பிக்கொண்டிருந்தார். நிதனும் தானாய் வந்த இந்த அருமையான வாய்ப்பை எப்படி நழுவவிடுவான்? அதுவும் அவளுடைய அம்மாவே வந்து பேசுகின்ற பொழுது. ஒரு பக்க இயர்போனை மட்டும் கழற்றிவிட்டு, அவளுடைய அம்மாவின் பேச்சையே கூர்ந்துகேட்பது போல பாவனை செய்தான். உண்மையில் கேட்கத்தான் செய்தான், ஆனால் முழுமையாக அல்ல. நிதனுடைய எண்ணம் பூராகவும் மாஸ்க்கிற்குள் மறைந்திருந்த அவளுடைய பாதிமுகம் எப்படியிருக்கும் என்பதில்தான் இருந்தது. தன்னுடைய அம்மா தன்னைப்பற்றி ஒன்றுவிடாமல் நிதனிடம் சொல்வதை கேட்கையில் அவளுக்கு கோபம் தலைக்கேறிக்கொண்டு வந்தது.

‘அம்மா.. ஏன்மா இப்பிடி செய்ற? இதுக்குதான் நான் அப்பாவோட வர்றன்னு சொன்னன்.. இப்ப பஸ் முழுக்க எல்லார்க்கிட்டயும் என்னப்பத்தி சொல்லி சொல்லி வா..”

‘..நான் என்னடி பொய்யா சொன்னன்..?”

‘..இரு அப்பாக்கு கோல் பண்ணி சொல்றன்..”

தான் அம்மாச்செல்லம் போல, அவள் அப்பாச்செல்லம் என்று நினைத்துக்கொண்டான் நிதன். இருந்தாலும் சற்று யோசித்தான், இவளைப்பற்றி ஆரம்பத்திலிருந்து என்ன எண்ணினாலும் அது நேர்மாறாகவே இருக்கின்றதே. அதனால் சற்று பொறுத்திருந்தே பார்ப்போம், இல்லையென்றால் இவள் அம்மா அப்பாவிற்கு ஒற்றை பெண்பிள்ளை தான் என்று நாம் எண்ணுவதற்குள், திரைப்படங்களில் வருவதைப்போல நான்கு தடி அண்ணன்கள் வந்து நிற்பார்கள். என்னதான் ஜிம்மிற்கு போய் தேற்றிவைத்த உடம்பு என்றாலும், நிதன் வம்பு தும்புக்கு போகாத நல்ல பிள்ளையாகிற்றே, அதனால் மேற்படி ஒன்றும் யோசிக்காமல் நடப்பதை கவனித்துக்கொண்டு நின்றான்.

கோபத்தில் அவளுடைய நெற்றி உண்மையில் நன்கு சிவந்திருந்தது. மூக்கு மட்டும் சிறிய பழுத்த தக்காளிப்பழமாட்டம். அதை எங்கு ஒழுங்காக பார்க்க முடிந்தது!? இலங்கையில் மாஸ்க் கட்டாயமில்லையென்று செய்தியில் கூட சொல்லியிருந்தார்களே. இவள் ஏன் மாஸ்க் போட்டுக்கொண்டிருக்கிறாள்!? பின்புதான் தானும் மாஸ்க் அணிந்திருப்பதை உணர்ந்து, அதை மெதுவாக கழற்றி தன் பாக்கட்டிற்குள் வைத்துக்கொண்டான். ஒரு சில விநாடிகள் அந்த காந்த விழிகள் நிதனுடைய முகத்தை நோட்டமிடுவதை அவனும் கவனிக்காமலில்லை. இருந்தாலும் கண்டும் காணாதது போல் இருந்துகொண்டான். அழகாக பிறந்தது ஒன்றும் அவனுடைய தவறில்லையே!? ஹா..!

அவள் அவளுடைய அம்மாவை திட்டிக்கொண்டே, அவளுடைய அப்பாவை தொலைபேசியில் அழைக்க முயன்றுகொண்டிருந்தாள்.

‘..இரு அப்பாட்ட சொல்றன்..”

‘சொல்றனா சொல்லு.. நான் ஒண்ணும் பொய் சொல்லலயே..”

‘..ஆ.. அப்பா.. கேக்குதா..?”

‘…”

‘..அப்பா.. இப்ப கேக்குதா..? ஹலோ அப்பா?”

‘…”

‘..கொஞ்சம் இருங்க..”

அவள் பேசுவது அவளுடைய அப்பாவிற்கு கேட்கவில்லை போலும். அப்பொழுதுதான் அவள் அந்த மாஸ்க்கை கழற்றினாள்.

‘..அப்பா இப்ப கேக்குதா..? அப்பா இந்த அம்மா கூட முடியிலப்பா..”

அதன் பின் அவள் என்ன பேசினாள் ஏது பேசினாள் என்று நிதன் உண்மையில் கவனிக்கவில்லை. அவளுடைய அந்த அழகிய முகத்தை கண்டதும், நிதன் சாப விமோட்ஷனம் பெற்றதை போல் உணர்ந்தான் எனலாம். அழகிதான் அவள். உண்மையில் மோனாலிசா தான். உணர்ச்சி பொங்க அவள் அவளுடைய அப்பாவுடன் பேசுகையில், கூந்தல் அசைகிற அழகு, தக்காளிப்பழ மூக்கின் அழகு, குண்டுதோசை போன்ற சிறிய வெண் கன்னங்கள் இரண்டு என்று ரசித்துக்கொண்டே இருந்தான் நிதன். பின்புதான் ஏதோ ஞாபகம் வந்தவன் போல சுயநினைவுக்கு வந்தான். இயர்போனில் இன்னொரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

‘..அடக்காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை!
தேவையில்லை!
தேவையில்லை!”

‘உண்மையில் தேவையில்லைதான்..” தனக்குள் சிரித்துகொண்டே தன் கையால் தன் தலைமுடியை வாரிவிட்டான் நிதன். ஆறரை மணிநேர பஸ் பயணம் உண்மையில் எப்படிப்போனதென்று நிதனுக்கும் தெரியவில்லை.

Related posts

சித்திராங்கதா – 47

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121

ஈழச்சூழலியல் 35

Thumi202121

Leave a Comment