இதழ் 49

நிலவின் விலை ஏன் கூடவில்லை?

எரிபொருள் இல்லாமல் இரவில் நிலா மட்டும் எப்படி இலவசமாக வெளிச்சத்தை தர முடியும்? நிலவின் விலையும் இனி கூட வாய்ப்புண்டா? அல்லது நிலவொளியை பங்கிட்டு வழங்கமுடியுமா? முழுமையாக நிலவை அனுபவிக்க பயமாக இருக்கிறது. பிறகு நிலவிற்கும் தட்டுப்பாடு வந்தால் யாரிடம் போய் பிச்சை கேட்பது?

ஆகையால் நிலவையும் இப்போதிருந்தே சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். தேய்ந்து செல்கின்ற நிலா மீண்டும் வளராமல் போய்விடுகின்ற அதிசயமும் இங்கு நடக்கலாம். அப்படி நடந்தால் என்ன செய்வது?

நிலவு ஏன் எல்லாருக்கும் சமனாக ஒளி வழங்குகிறது. நிலவுக்கு தெரிந்தவர்கள் என்று இங்கு யாரும் இல்லையா?

நிலவு நீண்ட தொலைவில் இருப்பதால்தான் அது வரும் வழியை யாரும் வழி மறிக்க முடியவில்லையோ?

இன்றைய நீண்ட இரவுகளில் வரிசைகளில் காத்திருக்கும் ஒருவனிற்கு இப்படியான சந்தேகங்கள் வந்தன.
நிமிர்ந்து நிலவைப்பார்த்தான். தேய்ந்து தேய்ந்து ஒரு சொட்டு தான் மிச்சம் இருந்தது. ஒரு வளைந்த கோடு மட்டும் தான் தெரிந்தது. நாளைக்கு இந்த கோடும் இல்லாமல் போகலாம்.

நிலவிற்கு தட்டுப்பாடு வந்தால் என்ன செய்வது? ஒரே வழி .. இப்போதே முடிந்தவரை நிலவை பதுக்கியாக வேண்டும். வரிசையில் வாகனத்தை நிறுத்திவிட்டு கால்நடையாக வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டின் ஓடுகளை அவசரமாக கழட்டினான். நிலவொளியை முடிந்தவரை பதுக்கி வைக்க வழி செய்தான்.

நீங்கள் அட்டையில் பார்க்கும் இந்தக் காட்சியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அயல்வீட்டார் ஒருவர் சிரித்தார்.

‘என்ன தம்பி முட்டாள் தனமா வேலை செய்யிறா?” என்றார்.

‘ஓமோம்.. இப்ப எல்லாம் முட்டாள் தனமா தான் தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல விளங்கும்.” என்றான் அவன்.

அயல்வீட்டுக்காரருக்கும் ஏதோ ஒரு ஐமிச்சம் வந்தது.

எதுக்கும் செய்து வைப்போம் என்று தன் வீட்டு ஓட்டையும் அவசரமாக மேலேறி கழட்டி வைத்தார்.

இந்த சம்பவம் வேடிக்கையாக தெரிகிறதா? அல்லது நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் விம்பமாக தெரிகிறதா?

நிலவிற்கு உண்மையிலேயே தட்டுப்பாடு வருமா?

எரிவதால் தான் வெளிச்சத்தை உருவாக்க முடியும். கதிரவன் தொடக்கம் மெழுகுதிரி வரை தன்னை எரித்துத்தான் எமக்கு வெளிச்சத்தை தருகின்றனர்.

ஆனால் இந்த நிலவு மட்டும் தன்னை எரித்து வருத்திக் கொள்ளாமல் ஒளியை கடன் வாங்கி எமக்கு தருகிறது.

நிலா இரவில் வருவதாய் நினைத்தோம். இல்லை அது இரவலில் தான் வருகிறது.

இரவல் வாழ்வின் படிமம் நிலவில் பார்த்தால் தெரியும். வளர்கிறது. தேய்கிறது. ஒருநாள் இல்லாமலே போய் விடுகிறது. பின் மீண்டும் வளரத் தொடங்குகிறது. வளர்ந்த பின் தேய தொடங்கிறது. நிலவால் இதற்கு மேல் இனி வளரவும் முடியாது. வளர்ந்த பின் தேயாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில் நிலவின் வாழ்வு நிலவின் கைகளில் இல்லை. ஒளி கொடுக்கின்ற கதிரவன் கைகளிலும் ஈர்த்து வைத்துள்ள பூமியின் கைகளிலும் தான் இருக்கிறது.

நிலவின் இரவல் வாழ்க்கை தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது… அதிலும் இது தேய்பிறைக்காலம். இதற்கு மேலும் தேய்பிறைக்காலம் நீளும். ஆனால் என்ன ஒரு ஆறுதல் என்றால் அதுவும் நிரந்தரமானதல்ல. வளர்பிறைக்காலம் என்ற ஒன்று நிச்சயம் வரும். ஆனால் இரவல் வாழ்வு தொடரும் வரை தேய்பிறைக்காலம் மீண்டும் வருவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. சொன்னாலும் இனி ஒருவர் கூட இங்கு நம்பமாட்டார்கள்.

‘அப்படியென்றால் இந்த இரவல் வாழ்வின் மீட்சிக்காலம் எப்போதுதான் வரும்?” இந்தக் கேள்வி தான் எல்லோருக்கும் உள்ளது. இந்த கேள்விக்கான பதில் தேய்பிறைக்காலத்திலும் சொகுசு வாழ்வு வாழும் தலைவர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் என்று இன்னும் நம்புவதே எம் முட்டாள் தனமாகும். இந்த பேரல்லலில் சிக்குண்டு தவிக்கும் உங்களைப்போல் என்னைப்போல் ஒரு சாதாரண குடிமகனாலே இந்த கேள்விக்கான பதில் உருவாக முடியும்.

‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?”

என்கிற தேசபக்திப்பாடல் இப்போது தேசவிரோதப்பாடல் ஆகிவிட்டது. கையேந்தினால் மட்டுமே வாழ்வு என்கிற அவலநிலையில் வந்து நிற்கிறது நாடு.
முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என சிறு தீவிற்குள்ளே அனைத்தையும் அள்ளித் தந்திருக்கிறது இயற்கை. ஆனால் வைத்து வாழும் வழி அறியாமல் இன்னும் நாம் கையேந்தி நிற்கிறோம்.

‘இந்து சமுத்திரத்தின் முத்து” என்று செல்வப்பெயர் சூட்டி அழைக்கப்பட்ட தீவின் இன்றைய நிலை ஏன் இப்படி ஆகவேண்டும்?

இத்தனை ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட நாட்டில் மக்களை இங்ஙனம் பொருளாதாரம் நெருக்கியதாய் அறிந்தோமோ? அப்படி இதுவரை நடக்காத நாட்டில் இப்போது பொருளும் இல்லாமல் அதற்கான ஆதாரமும் இல்லாமல் பொருளாதாரம் இப்படி சீர்கெட்டுப் போக காரணம் என்ன?

ஆட்சியாளர்களை குற்றம் சொல்வீர்கள். உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் முன் சொன்னது போல் மாற்றம் என்பது அவர்களிடமிருந்து கிடையாது. அது நம்மில் தான் முளைக்க வேண்டும்.

இந்த நிலை மாற வேண்டின் என்ன செய்ய வேண்டும்? நீர் வளம், நில வளம் மிக்க இந்த நாட்டில் முறையான கல்வியில் தெளிவான வல்லுனர்கள் முளைத்தெழ வேண்டும். கற்றறிந்த மேதாவிகளில் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அனுபவத்தால் வென்றவர்களை நாடு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆள்பவர்களை நம்பாது தன் சார்ந்து வாழும் தலைமுறை உருவாக வேண்டும். உழைத்து சேர்த்த மூலதனங்கள் நாட்டிற்குள்ளே பயிரிடப்பட வேண்டும். மண்ணை நம்பிய வாழ்வில் ஒரு பசுமைப்புரட்சி வேண்டும். கடலை நம்பிய வாழ்வில் ஒரு நீலப்புரட்சி வேண்டும். கால் நடைப்பண்ணைகளின் பாலில் ஒரு வெண்மைப்புரட்சி வேண்டும்.

மேற்கத்தைய நாடுகள் முன்னர் இந்த சவாலை முட்டி மோதி துரத்தியது போல் பாரிய அளவில் கைத்தொழில் புரட்சிகள் இந்தச் சிறுதீவிலும் உண்டாகவேண்டும். அது ஒன்றே இந்த இரவல் வாழ்வின் விடுதலைக்கான நிரந்தர வழியாகும்.

கேட்கிறது. உங்கள் உள்ளக்குமுறல் கேட்கிறது. வீட்டை காக்கவே பெருந்திண்டாட்மான இந்த சமயம் நாட்டை காக்கும் எண்ணம் யாருக்கு வரும் என்கிறீர்களா? உண்மைதான். இரவல் வாழ்விலிருந்து ஒரு நிரந்தர தீர்வை நோக்கி முன்னோர தற்சமயம் எம்மால் இயலாது என்பது சத்தியமே.

ஆனால் இந்த தேய்பிறைக்கால முடிவில் மீண்டும் ஒரு வளர்பிறைத் தோற்றப்பொலிவு தென்படுமே. அந்த சமயம் புதிதாய் முளைத்தெழ தயாராக இருங்கள் என்கிறேன். அன்றி அந்தத் தோற்றப் பொலிவில் மயங்கி இரவல் வாழ்வின் எதார்த்தங்களை மீண்டும் மறக்க தொடங்கி விடுவோமாயின் எம் சந்ததிக்கான தேய்பிறைக்காலம் இன்னும் அதிக ரணமானது என்பதை நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

Related posts

ஈழச்சூழலியல் 35

Thumi202121

முகக்கவசம் அணிந்த மோனாலிசா

Thumi202121

வினோத உலகம் – 14

Thumi202121

1 comment

Leave a Comment