நமது ஆற்றல் வாய்ந்த இளைஞர் பலர் ஒன்றிணைந்து, ‘துமி” மின்னிதழ் நடத்தி வருவது, மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
துமி இதழில் வெளிவரும் படைப்புகள், பன்முகத் தன்மை வாய்ந்தவை. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளின் துணுக்குகள் எனப் பல்வகையான் செய்திகள் துமி இதழில் வெளியாகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருப்பது மிக அழகு.
இளைஞர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் களமாகவும் துமி இதழ் செயல் பட்டுவருகிறது. படைப்புகளுக்குப் பொருத்தமாக வெளியாகும் சிறந்த படங்களே அதற்கு சாட்சி.
இலங்கையில் வாழும் மக்கள் சொல்லவொணா சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். நமது இளைஞர்களும் இவற்றுக்கு விதிவிலக்கல்ல.
அத்துணை சிக்கல்களுக்கு மத்தியிலும் நமது திறமைமிகு இளைஞர்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இதோ, துமியின் 50ஆம் இதழ் உங்கள் கைகளில்…
இதனைச் சாத்தியமாக்கிய நமது அனைத்து இளைஞர்களின் கரங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
‘கடலில் விழ நேர்ந்தாலும், திறமையானவன் கைகளில் முத்துகளை அள்ளிக்கொண்டு வெளிவருவான்..”
என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு.
அதற்கு உதாரணமாகத் திகழும் அனைவரையும் வணங்குகிறேன்…
இன்னும் பல்லாண்டுகள் துமி இதழ் சிறப்புடன் வெளிவர வாழ்த்துகிறேன்.
1 comment