இலக்கியத்தின் அடிப்படையே பிறரின் நோய் தன் நோய் போல தோன்றுதல்தான் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அழுகை வரும் போது பேனா வழியாக அழுதுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதுபோல்தான் கோபம், சிரிப்பு, மகிழ்ச்சி எல்லாமே. அதற்கு உரிய களம் இன்றி கடதாசிகளில் கிடந்த என் எழுத்துக்களை இணைய வெளி எங்கும் வியாபிக்கச் செய்த துமி மின்னிதழிற்கு என்றும் நன்றியுடையேன்.
எந்த ஒரு பிரச்சனையையும் அந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட எல்லோரது நிலைமையிலும் இருந்து பார்த்தால் அந்த பிரச்சினையையில் எங்களுடைய வகிபாகம் என்னவென்பது தெரியும். இராமாயணப் போரை இராமனின் மனநிலையில் இருந்து பார்ப்பதற்கும் சீதையின் மனநிலையிலிருந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதனை வாழ்க்கையிலும் பிரயோகித்தால் பல பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்துவிடும்.
அந்த அடிப்படையில் எழுதத் தொடங்கியதுதான் கப்பச்சினோகதைகள். கிரமமாக வெளிவந்த தொடர் என் தனிப்பட்ட காரணங்களால் நின்று போனதற்கு வருந்துகிறேன். என் எழுத்துக்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள் என்பதை கப்பச்சினோ கதைகள் உணர்த்தியது. காலம் கைகூடினால் மீண்டும் அதன்வழி சந்திக்கிறேன். அல்லாவிடினும் ஏதும் வழிகளில் என் எழுதுகோல் உயிர் கொண்டிருக்கும்.
50 காணும் துமி 5000 காணும் நாளில் நான் இருக்காவிட்டாலும் அதற்கும் சேர்த்து என் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.