இதழ் 50

அரங்கு மறுக்கப்பட்டவள் துமியில் காவியமானாள்

இத்தனை காலம் துமியோடு உறவாடி வரும் உறவுகளோடு உரையாட
சில வரிகளாய் அளித்த வாய்ப்புக்கு நன்றி.

சித்திராங்கதா என்கிற வரலாற்றுப் புதினம் – எங்களை செதுக்கிய பல்கலை வாழ்வில் நாம் செதுக்கிய ஒரு சிற்பம்.

சங்கத்தமிழ் மேடையில் முழங்க ஒரு நாடகம் வேண்டும் என்றனர் ஒருநாள். தொனிப்பொருள் போர்க்களம். அரச குல நாடகமே அவசியம் வேண்டுமென்றனர். ஒன்றாய் கூடியிருந்து வேறு வேறு கதைகள் முன்மொழிந்தோம்.
முன்மொழிவில் ஒன்றை முடிவாய் வழிமொழிவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்றைய கூட்டத்தின் முடிவில் தான் அந்த கேள்வி பிறந்தது.

முன்மொழிவுகள் முழுதும் தென்னிந்திய தமிழ்மன்னர் காலக்கதைகள். ஈழத்து அரசில் கதைகள் ஏன் இல்லை? கலிங்கத்துப்பரணி தொட்டு புறத்திணையில் எத்தனை போர்க்கள இலக்கியங்கள் தென்னிந்தியாவில். ஈழத்தில் மன்னர்கள் ஆளவில்லையா? ஆண்ட போது புலவர்கள் இல்லையா? இலக்கியங்கள் பிறக்கவில்லையா? பிறந்த இலக்கியங்கள் புதைக்கப்பட்டனவா? எரிக்கப்பட்டனவா? கேள்விகள் எம்முன் எழுந்து நின்றன அன்று.

எப்படியும் ஒரு ஈழ அரச வரலாற்றுக்கதையே நாடகமாக்கப்பட வேண்டும் என்று துணிந்தோம். தேடினோம்.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுடைய ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்கிற நாடகம் கைவசப்பட்டது. பரவசத்தோடு வாசித்தோம். அந்தப்பரவசம் சங்கத்தமிழ் அவையில் கூடும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முடிவானோம். கனகச்சிதமாய் தெரிவு செய்யப்பட்ட கதாபாத்திரங்களோடு ஒத்திகை முன்னேறிக்கொண்டிருக்க நாடகத்தின் நீட்சி மக்கள் மனதில் சலிப்பாய் முடியும் என்றனர் ஒரு குழுவினர்.

நீட்சியை குறைப்பதற்காய் முயற்சி செய்தோம். முயற்சி மட்டுந்தான் செய்தோம். முடியவில்லை. எந்தப்பாகவும் வெட்டி நீக்கப்படமுடியாத எழுத்து அது.

அந்த நாடகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பாத்திரமே சித்திராங்கதா. அவள் பேரழகில் மயங்கி அவளையே கதாநாயகியாக்கி வேறொரு குறுநாடகத்தை உருவாக்குவோம் என்று தொடங்கினோம். எம் தீராத்தேடலில் சித்திராங்கதா வரலாற்று நாடகம் அதியற்புதமாய் தயாரானது. நிகழ்ச்சி ஒத்திகையோடு நின்று போனது.

எம்மை நாமே மாறி மாறி தேற்றிவிட்டு கல்லூரி தேர்வுகளிற்கு தயாராக தொடங்கிவிட்டோம்.

ஆண்டுகள் கழிந்த பின்னும் சித்திராங்கதா பேரழகி உள்ளத்தை விட்டு அகலவில்லை. ஒரு நாளில் துமியாய் நின்ற குழுமம் மின்னிதழாய் புதுப் பிறப்பெடுக்க துணிகையில் வரலாற்று புதினம் எழுத வேண்டும் என்றனர். மீண்டும் அந்த ஆடலரசியை அழைத்து வந்து தோற்கடிக்க முடியாது என்று மனம் பின்னின்றது. இம்முறை அப்படி நிகழாது என்று துமி அன்று வார்த்தையாய் சொல்லவில்லை. ஆனால் உணர்ந்தேன்.

ஒரு நாடகத்தை நாவலாய் உருமாற்றுவது அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை. நாடகம் மேடையில் நடப்பது. நாவல் அந்த யுகத்தில் நடப்பது. தேடல் பன்மடங்கானது. வரலாறு என்கிற வரண்ட ஆற்றை கிழித்து பின்னோக்கி அதி வேகமாக பயணிக்க வேண்டியிருந்தது. வரலாறு கூறியோரின் கோணங்கள் வெவ்வேறாக இருந்தன. போர்த்துக்கேய பாதிரியார்களின் நூல்களில் பல புதிய கோணங்கள் தென்பட்டன. வரலாற்றாசிரியர் கருத்துக்களோடு தினமும் முரண்பாடாய் இருந்தது. தேடல் பெரிதாகும் போது தெளிவு கிடைக்கும் என்று நினைத்தேன்.ஆனால் முடிவாய் ‘முடியாது’ என்ற முடிவிற்கே வந்தேன். வரலாற்றுக்குழப்பத்தில் சிக்குப்பட்டு மீளமுடியவில்லை என்று துமியிடம் தெரிவித்துவிட்டேன்.

புகழ் பாதி, புனைவு மீதி, இடையில் எங்கோ சில உண்மைகள் இதுவே வரலாற்றுப் புதினத்திற்கான வழிமுறை. முடிந்த கதையில் எடுத்த முடிவுகளை ஊகங்களாக்கி முன்னேறினால் உண்மை தானாய் வெளிப்படும் என்று துமியோர் எனக்கு மீண்டும் தொல்லை கொடுத்தனர்.

தொடர்ச்சியான தொல்லையாலே- தொல்லையாய் தந்த துணிவாலே கதையின் முதல் அத்தியாயத்தை தொடங்கினோம். வந்து சேர்ந்த வாசகர் எண்ணிக்கை எம்மை பின்வாங்க விடவில்லை. விமர்சனங்களால் மேலும் வளமானோம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் இத்தனை அத்தியாயங்கள் தாண்டியும் சித்திராங்கதா முன்னோக்கி சென்று வெற்றி கொண்டாடுவது இன்று எம் அனைவருக்கும் பெருமகிழ்வு.

இந்த மகிழ்விற்கான வாய்ப்பளித்து இன்று ஐம்பதாய் நிமிர்ந்து நிற்கும் துமிக்கும், அதை தூக்கி நிறுத்திய இளைய துமியோர்க்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

எங்கள் பெரிய வெற்றிகளை எப்போதும் இன்துமி வாசகர்களிற்கே சமர்ப்பிக்கின்றோம்.

துமியின் ஆயிரமாவது மின்னிதழ் எம் அடுத்த தமிழ்த் தலைமுறையின் கரங்களில் அன்றைய அறிவியலின் புதியவடிவில் வலம்வர வேண்டும் என்ற நல்ல ஆசைக்கு வாசக நல் உள்ளங்களின் நல்லாசி வேண்டி

காவ்யமோகன்

Related posts

வினோத உலகம் – 15

Thumi202121

வர்ணப் படைப்புகளின் சங்கமம் துமி!

Thumi202121

துமியின் வாசகி

Thumi202121

Leave a Comment