இதழ் 50

ஈழச்சூழலியல்

நீர்நிலைகளில் ஒட்சிசன் அற்றுப் போதல்

நீரில்  சேதனப் பொருட்கள் மற்றும் ஒட்சியேற்றம் அடையும்  பதார்த்தங்கள் சிதைவடையும் போது நீரில் கரைந்துள்ள ஒட்சிசன் பயன் படுத்தப் படுவதால் நீரில் ஒட்சிசன் அளவு குறைவடையும். அமோனியம் அயன் ஒட்சியேற்றம் அடைவதைக் கொண்டு இது இருபடிமுறைகளில் நடைபெறுகிறது என்பதனைக் காட்டலாம். முதலில் நைத்திரோசோமோனஸ் பக்ரீரியாவால் அமோனியம் நைதிரைட்டு ஆக ஒட்சியேற்றமடையும். இதனையடுத்து நைத்ரோபக்டர் பக்டீரியாவினால் நைத்ரைட்டானது நைத்திரேற்றாக ஒட்சியேற்றம் அடையும். இவ்விரண்டு படிகளும் ஒன்று சேர்க்கப்பட்டு

பின்வரும் சமன்பாட்டால் காட்டப்படும்.

NH4+ + 202 = NO3+ H2O + H+

இதன்படி ஒரு மூல் அமோனியம் – நைதரசனை ஒட்சியேற்ற 4 மூல் ஒட்சிசன் (அனுக்கள்) தேவைப்படுகின்றன. ஒட்சிசனின் பாவனையானது 64/14 = 457 g/g நைதரசன் ஆகும். எனவே நீரில் சேர்க்கப்படும் அசேதன, சேதன பதார்த்தங்களால் நீரின் ஒட்சிசன் குறைவடைகிறது. நீரில் வீசப்படும் ஒவ்வொரு வாழைத்தோலும் சிதைவடையும் போது நீரில் கரைந்துள்ள ஒட்சிசனையே பயன்படுத்தும்.

நீரில் கரையும் ஒட்சிசனின் அளவு அதன் வெப்ப நிலையிலும் தங்கியுள்ளது. நீர்குறைந்த வெப்பநிலையில் இருக்கும் போது கூடுதலான ஒட்சிசனையும், கூடிய வெப்ப நிலையில் குறைந்த ஒட்சிசனையும் கொண்டிருக்கும். மாசடையாத ஒரு நீர் நிலையில் 25 பாகை வெப்பநிலையில் ஒட்சிசனின் அளவு 8 – 9 mg/L ஆகும்.

நீரில் அல்கா மலர்ச்சியின் சிதைவின் போது ஒட்சிசனின் அளவு 3 mg/L யை விடக் குறைவடையும். பக்டீரியாக்கள், பங்கசு, புரோடாசோவா போன்றவற்றின் தொகை அதிகரிக்கும் போதும் ஒட்சிசனின் அளவு குறைவடையும். மீன் விரைவாக சுவாசிக்குமாதலால்  நீரில் ஒட்சிசன் குறைவடையும் போது வெகுவாகப் பாதிக்கப்படும். மீன் பூக்களுக்குச் செல்லும் ஒட்சிசன் தடைப்படும் போது மீனின் சதைத்தொகுதியின் தொழிற்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும். குறைந்த ஒட்சிசன் நிலையில் அமானியாவின் செறிவு அதிகரிப்பது நன்னீர் மீன் இனங்களுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

மீன்கள் இறத்தல்

அதிக எண்ணிக்கையான மீன்கள் ஒரே நேரத்தில் திடீரென இறத்தலை மீன் “இறத்தல்” எனப் பொதுவாகக் கூறப்படும். கடந்த பல வருடங்களாக இலங்கையின் பல நீர்த்தேக்கங்களில் மீன் இறத்தல் ஏற்பட்டுள்ளது. பராக்கிரம சமுத்திரம், திஸ்ஸாவெவா, பேரகுளம் போன்றவற்றில் மீன் இறத்தல் நடந்துள்ளது. 2007 மார்ச் மாதம் 3 தொன் மீன்கள் றெகவ காயலில் இறந்தன. அதிகளவு திண்மக்கழிவுகள் இக்குடாவில் இடப்பட்டதே இதற்குக் காரணமாகும். இக்கழிவுகளில் இருந்து போசனைப் பதார்த்தங்கள் நீரை அடைந்து அதன் மூலம் அல்கா வளர்ச்சியடைந்து நிரில் ஒட்சிசனைக் குறைவடையச் செய்ததே இதற்குக் காரணமாக் காட்டப்பட்டது.2011-2012 இல் நடை பெற்ற மீன் இறத்தல் நிகழ்வுகளை ஆராய நீர்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் பேரேகுளம், தியவன்னாஓய, சியாம்பலாகமுவ குளம், தலான் குடா பமுனுவில கால்வாய் களனி போன்றவற்றில் ஆராய்ந்தது. பேரே ஆற்றிலும், பமுனுவில கால்வாயிலும் இக்காலப்பகுதியில் காணப்பட்ட பொசுப்பேற்றின் அளவு முறையே 0.65 mg/L 0.97 mg/L ஆகும். இந் நீர் நிலைகள்  ஐரோப்பிய சங்க வகைப்படுத்தலின் படி மிதமிஞ்சிய போசனைக்குள்ளாகி இருப்பதெனக் கூறலாம். எனவே மீன் இறத்தலுக்கு பிரதான காரணம் மனிதனின் நடவடிக்கைகளால் நீர் நிலை மாசுபடுத்தப்படுதலேயாகும்.

நற்போசனைக்குள்ளான நீர் நிலைகளைத்திருத்தல்

நற்போசனையடைந்த பல நீர் நிலைகளை கணிசமான அளவில் செலவீனங்கள் செய்து திருத்தப் பட்ட சரித்திரங்கள் உள்ளன. நீர் நிலையை சரியான நிலைக்குக் கொண்டுவர இரண்டு அடிப்படை படி முறைகளைப் பேணுதல் அவசியம்.

1. நீர் நிலைக்குச் சேரும் போசணைப் பதார்த்தங்களைக் குறைத்தல்.

2. நீர் நிலையில் உள்ள போசணையின் செறிவைக்குறைத்தல்.

இவற்றை செய்வதற்கு போசணைப் பதார்த்தங்களின் மூலங்கள், தொடர்பான பாதிப்பு, செலவு குறைந்த, தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த கூடிய முறைகள் பற்றிய தகவல்கள் முக்கியமானதால் அவற்றைத் திரட்டுவதற்கு ஆரம்பத் தகவல் திரட்டும் ஆய்வொன்றும் செய்வது அவசியமாகும். நீர் நிலையின் சீர் திருத்தத்துக்காக பணம், நேரம், விஞ்ஞானரீதியான முறைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.குளங்களில் அல்காவின் அதிகரிப்பு இடம்பெற பிரதான காரணம் இக்குளங்களுக்குச் சேரும் N, P என்பதனால் குளங்ளைத் திருத்தலுக்கான வழிமுறை இப் போசணைப் பதார்த்தங்கள் நீர் நிலைகளைச் சென்றடைவதை குறைப்பதையே நோக்கமாகக்கொண்டுள்ளது. சில அபிவிருத்தியடைந்த நாடுகளில் பொசுபரசை நீக்கும் நீர் சுத்திகரிப்பு செயன்முறை மூலம் வீட்டுக் கழிவுகளில் இருக்கும் பொசுபரசை கணிசமான அளவு குறைவடையச் செய்துள்ளது.இதே போன்று புதிய சட்டங்களை ஏற்படுத்தி அதனை சரியாக அமுல்செய்வதன் மூலம், தொழிற்சாலை கழிவுகளை சூழலுக்கு விடுவிக்க முன்பாக அவற்றிலுள்ள சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்களை நீக்க உதவி செய்துள்ளன.

நீரேந்து பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளிலிருந்து வெளியேறும் N மற்றும் Pயினைக் கட்டுப்படுத்தல் கடினமானதாகும். பயிர்களின் சரியான தெரிவு, போசணை கரைந்து செல்வதை குறைக்கும் சரியான விவசாய முறைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்தலை ஊக்குவிக்க வேண்டும். சமூக நலனுக்காக செய்யப் படும் இவ் ஊக்குவிப்பானது பணமாகவும் இருக்கலாம். இதனால் உணவு உற்பத்தியும், சூழல் பாதுகாப்பும் ஒரே நேரத்தில் இடம் பெற முடியும். இயற்கையான சதுப்பு நிலங்களைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து வரும் N மற்றும் P யை அகற்றுவது இன்னுமொரு முறையாகும். போசனைப் பதார்த்தங்கள் குளங்களுக்கு அல்லது நீர்நிலைகளை சென்றடைய முன்  இயற்கையான அல்லது செயற்கையாக சதுப்பு நிலங்களை ஏற்படுத்தி அதில் தாவரங்களின் வளர்ச்சியைத் தூண்டி போசணைகளை நீக்கலாம். பொசுபரசு கொண்டுள்ள நீரை ஐதாக்கி வெளியேற்றல், பேரிக் மற்றும் அலுமினியம் சல்பேற்றைப் பயன்படுத்தி பொசுபரசை வீழ் படியச் செய்தல் போன்ற முறைகளும்  நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

ஆராய்வோம்……..

Related posts

இலக்கங்ளை அடைகிறோம்! இலக்குகளை அடைவோம்!

Thumi202121

ஒரு நடுவரின் வாக்குமூலம் -2

Thumi202121

மூச்சுக் குழாய் ஆஸ்த்துமா (Bronchial Asthma)

Thumi202121

Leave a Comment