‘துமி” இந்தப் பெயரை சில காணொளிகளைப் பார்த்த போதுதான் முதன்முதலாக அறிந்ததாக என் நினைவிலிருக்கிறது. சமய தத்துவங்களையும் தொன்மங்களையும் எடுத்துக் காட்டிய அக்காணொளிகள் சில இளைஞர்களின் ஆக்கங்கள் என்பதை அறிந்தபோது வியந்து நின்றேன். வீரியமாக வீழ்ந்த துமிகள் நாளை நாட்டை வளமாக்கும் நதியாக மாறுவது நிச்சயம் என்ற நம்பிக்கை அவ்வேளையில் என்னுள் தோன்றியது.
தொடர்ந்து ‘துமி” குழுமத்தின் செயற்பாடுகள் சில சிற்றோடைகளாக சலசலத்தோடின. அவற்றுள் ஒன்றான ‘துமி” மின் சஞ்சிகை சிற்றோடை என்றாலும் பல்வேறு வகைப்பட்டனவாக வெவ்வேறு இடங்களில் உருவாகிய சிறுசிறு கிளைகள் ஓடி வந்து ஒருங்கிணைந்து நல்லதொரு நதியாகப் போகிறேன் என்று குறிப்புணர்த்தி அழகு நடை நடந்தது.
முத்தாக ஒளிர்ந்த முதலாவது இதழ் என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அதன் தொடர் வாசகியானேன். சகலவிதமான வாசகர்களுக்கும் ஏற்றதாக வெளிவரும் சஞ்சிகை இது என்பதை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியம். இதைக் கூறியே பலருக்;கு இச்சஞ்சிகையை அறிமுகஞ் செய்து வைத்துள்ளேன். உண்மையிலே இது மெச்சவேண்டிய தகுதி என்பது எனது கருத்து..
சஞ்சிகை என்றதும் இலக்கியமே நினைவிலே மேலெழுவது வழமை. சிறுகதை, கவிதை, சமூகநாவல், வரலாற்று நாவல் முதலிய எல்லா அம்சங்களையும் துமி தாங்கி வருகிறது. ‘இவற்றில் எனக்கு நாட்டம் கிடையாது. சினிமாதான் பிடிக்கும்.” என்பவருக்கு அதுவும் உண்டு. ‘விளையாட்டில்தான் ஈடுபாடு” என்பவர் வாசிக்கவும் பக்கங்கள் உள்ளன. காலங்காலமாக வெளிவரும் விடயங்கள்தானா இதிலும்” என்று சலித்துக்கொள்வோர் எம் பிரதேசங்களின் சூழலை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், இங்கு சுற்றுலாத்துறையை எப்படி எப்படியெல்லாம் முன்னேற்றலாம் முதலான விரிவாக பல கருத்துகளை எடுத்துக் கூறும் கட்டுரைகளை படித்துப் பயன்பெறலாம். இவ்வாறு மருத்துவம், சட்டம், முதலாய சகல விடயப் பரப்புகள் சார் ஆக்கங்களும் துமியில் இடம் பிடித்துக் கொள்கின்றன. எத்துறை சார் ஆக்கங்கள் இதில் வரத் தவறியுள்ளன என்பதை கண்டுபிடிப்பது கடினம்.
இவற்றை எழுதுவோர் பெரும்பாலும் இளைஞர்களே. தாம் மேற் கல்வி பயின்ற அல்லது பயில்கின்ற, மற்றும் ஆய்வுகள் மேற்கொண்ட துறைகள் குறித்து இவர்கள் எழுதுவதால் அவை சிறப்பானவையாக அமைகின்றன. புதிய தூர நோக்குடனான கருத்துகளை உள்ளடக்கியனவாக இருப்பது இதற்கொரு காரணம் எனலாம்.
இளைஞர்களின் ஆக்கங்களை பெருமளவு கொண்டதாக இளையவர்களால் நடத்தப்படும்; மின்சஞ்சிகை என்றாலும் பழமையையும் பேணுவதால் என் போன்ற முதியோரும் விரும்பி வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது என்பதையும் மன நிறைவுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஐம்பதை அடைந்து அழகு நடைபயில ஆரம்பித்துள்ள துமி மேலும் மேலும் வளர்ச்சி கண்டு நாட்டையே வளப்படுத்தும் பெரு நதியாக வளர்ச்சிபெற வேண்டும் என சித்தத்துள் ஒளிரும் ஞான ஒளியாம் இறைவனை வேண்டியமைகி;றேன்.