போர்க்களத்துப் பூக்கள்
போர்க்களத்திலும் பூக்கள் பூக்கின்றன. இந்தப்பூமி எத்தனைதான் இரத்தம் சிந்தினாலும் காதல் என்ற ஒன்று இருப்பதாலே உலகம் அழியாமல் இன்னும் இயக்கம் கொள்கிறது. காதல் அப்படிப்பட்டதுதான். அது எந்தப் போர்க்களத்திலும் ஒரு பூவை மலரச் செய்யும் சக்தி வாய்ந்தது.
புரவியில் சென்று கொண்டிருக்கும் இரு உள்ளங்களிற்குள்ளும் இரு வேறு போர்க்களங்கள். ராஜகாமினி மாமன்னர் சங்கிலியரை பற்றி கூறியதன் உண்மைத்தன்மையை எப்படி அறிந்து கொள்வது என்கிற குழப்பம் வருணகுலத்தானிற்கு. காதல் கொண்டு ஏமாற்றப்பட்டு நிற்கும் ராஜகாமினியை பற்றி நினைக்கையில் தன் காதல் மீதான பயமும் பரிதவிப்பும் இணைந்த குழப்பம் சித்திராங்கதாவிற்கு. ஆனால் இந்தக் குழப்பங்களை பற்றி ஏதுமறியாமல் அஸ்வதமங்கலம் ஒரு காதல் ஜோடியை தன் மீது ஏற்றிச் செல்கிற பூரிப்பில் துள்ளிக் குதித்து விரைந்து கொண்டிருந்தது.
எத்தனை குழப்பம் இருந்தாலும் காதல் பூ பூப்பதை நிறுத்திவிடுமா? அந்தக் காதல் பூவின் வாசம் மேலெழ தன் இடது கரத்தினால் சித்திராங்கதாவின் இடையை சுற்றிப்பிடித்துக் கொண்டான் வருணகுலத்தான்.
அந்தப் பற்றுதலை மறுதலிக்காமல் வார்த்தைகளில் மட்டும் பொய்க்கோபம் காட்டினாள் சித்திராங்கதா.
‘நான் ஒன்றும் தவறி விழுந்து விடப்போவதில்லை. என் மேனி பத்திரமாக தான் இருக்கிறது. உள்ளம்தான் எப்போதாவது தவறி விழுந்துவிடுவேனோ என்கிற பதற்றத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.’
‘ஆடலரசி அப்படிப் பதற்றங் கொள்ள வேண்டிய காரணம் என்னவோ?’
‘நான் வெறுமனே ஆடல் அரசிதான். அதுவும் அரங்கேற்றமறியாத ஆடல் அரசி. ஆனால் தேவி இராஜகாமினி நல்லை அரண்மனையில் இளவரசியாகவே வளர்ந்தவர். இந்த நாட்டிற்கே இன்று மகாராணியாக இருக்க வேண்டியவர். ஆனால் அவருடைய நிகழ்காலம் எத்தனை வேதனையாக இருக்கிறது பாருங்கள். காதலினால் தன் வாழ்விலிருந்தே தொலைந்து நிற்கும் மகாராணியை பார்த்த நொடி முதல் என் உள்ளம் பதற்றத்திலே இருக்கிறது. ஒரு மகாராணிக்கே இந்த நிலை என்றால் என் நிலையை எண்ணுகையில் உள்ளம் முழுதும் பயமே வியாபித்திருக்கிறது’ என்றாள் சித்திராங்கதா.
‘அப்படியென்றால் அந்த உள்ளத்திலே நிறைந்திருப்பது மாவீரன் வருணகுலத்தான் இல்லையா? அப்படி அந்த மாவீரன் இருந்திருந்தால் அங்கு பயம் எங்ஙனம் நிலைகொள்ளும் தேவி..’ என்று ஒரு புன்முறுவலோடே கேட்டான் வருணகுலத்தான்.
‘அந்த மாவீரனை நினைத்திருப்பதால் தான் என் அச்சம் எல்லை மீறி என்னை துன்புறுத்துகிறது.’
‘ அப்படி அச்சம் கொள்வது அநாவசியமாகும் தேவி. தம் உள்ளத்தில் இருக்கும் அந்த மாவீரன் எக்காலத்திலும் ராஜகாமினி ராணிக்கு ஏற்பட்ட அவலத்தை தன் காதலால் ஆராதித்து வைத்திருக்கும் சித்திராங்கதா தேவிக்கு வழங்கிவிடமாட்டான் என்கிற உண்மை தாங்கள் அறியமாட்டீர்களா தேவி?’
இப்படி வருணகுலத்தான் கூறுகையில் அவனது உதடு சித்திராங்கதாவின் காதுகளிற்கு மிக அருகில் இருந்தது.
‘அந்த மாவீரனின் உள்ளம் அப்படியொரு அவச்செயலை எனக்கு ஆற்றாது என்று நான் நன்கறிவேன் தளபதி. ஆனால் தன் உள்ளம் கூறுவதை விடவும் நல்லை அரசு கூறுவதற்கே ஆணையாய் அடிபணிபவரல்லோ அந்த மாவீரன். நல்லை அரசவையில் ஒரு பேரழகியை அழைத்து வந்து நிறுத்தி இவளையே மணக்க வேண்டும் என்று ஆணையிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் அந்த மாவீரர் என்ன செய்வார் என்று எண்ணுகையில் தான் என் மனம் அத்தனை பதற்றம் கொள்கிறது’ என்றாள் சித்திராங்கதா.
‘அப்படி எப்படி நிகழ முடியும் தேவி, அந்த மாவீரனுக்கு சித்திராங்கதாவை விட ஒரு பேரழகி கண்களில் அழகாய் தெரிவாளா? அரசவையில் இல்லை, இந்த பூமியிலே கூட அப்படி ஒருத்தி இருக்க முடியாதே தேவி..’
‘அந்த மாவீரன் உள்ளத்தில் என்ன இருக்கும் என்று யார் அறிவார்கள் தளபதி. அரசவையில் தேவி மாருதவல்லி கூட அந்த மாவீரனுக்கு மிகவும் நெருக்கமாம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். நாம் இப்போதே எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.’
இதைக்கேட்டதும் வருணகுலத்தானிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓங்காரமாய்ச் சிரித்தான். பின் மெல்லிய குரலில் சித்திராங்கதாவிற்கு மிக அருகில் நெருங்கி அவள் காதோரமாக சொன்னான்
‘தேவி…. மாருதவல்லி ஈழ நாட்டில் எனக்கு கிடைத்த நல்லதொரு தோழி. நம் இன்றைய இந்த இனிய பயணத்திற்கு நல்வழி காட்டியவரும் அவரே. மாருதவல்லியை நான் மணப்பேன் என்கிற தங்கள் கற்பனை எனக்கு உண்மையிலேயே வேடிக்கையாகத்தான் தெரிகிறது’ என்று கூறி மீண்டும் ஓங்காரமாய்ச் சிரித்தான்.
‘தமக்கு எல்லாமே வேடிக்கை தான். ஈழம் வந்த இடத்தில் இங்கே இப்படி நான் ஒரு வேடிக்கை. இப்படி சென்ற இடங்களில் என்னைப்போல் எத்தனை வேடிக்கைகளை கடந்து வந்தீரோ….’
அச்சம் மேலெழ அவள் அறிவுக் கண்கள் மூடிக்கொண்டன.
வருணகுலத்தான் அமைதியானான். அவள் இடையை பற்றியிருந்த கையை விலக்கிக் கொண்டான். சித்திராங்கதா தான் எல்லை மீறி பேசிவிட்டதாய் உணர்ந்தாள். செய்வதறியாது திகைத்தாள்.
அந்த நீண்ட அமைதியை வருணகுலத்தானே கலைத்தான்.
‘தேவி…. எதன் மீது ஆணையிடுவது என்று கூட நான் அறியேன். என் தொழில், என் கடமை, என் வீரம் எல்லாவற்றையும் விட என் உள்ளம் பெரிதாய் நினைப்பது ஈழ நாட்டில் நான் கண்ட ஓர் ஆடலரசியைத்தான். அவளது காதல் தான் எனக்கு எல்லாவற்றையும் விட பெரியது. அந்தக் காதல் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன், என் மனம் இதுவரை இந்த உலகில் எந்த மங்கை பின்னும் சென்றதில்லை. அந்த ஆடலரசியை விட வேறெந்த மங்கையையும் தோழியாய் சகோதரியாய் அன்றி என் கண்கள் பார்த்ததில்லை. உள்ளம் முழுதும் இன்ப வெள்ளமாய் நடனம் புரிகின்ற என் ஆடலரசி என் மீது இங்ஙனம் ஒரு ஐயம் கொண்டாள் என்பதுதான் உண்மையிலே இந்த நொடி வேதனை அளிக்கிறது தேவி..’
என்று கூறி அமைதியானான் வருணகுலத்தான்.
வருணகுலத்தான் இவ்வாறு கூறியதும் சித்திராங்கதா திரும்பி வருணகுலத்தானை நோக்கினான். அவனது கண்கள் நனைந்திருந்தன. அவளது கண்களும் குளமானது.
‘ஆத்திரத்தில் அறிவிழந்து பேசி விட்டேன்…’
எனக் கூறியவள் மேலும் பேச முடியாமல் வருணகுலத்தான் மார்பில் விழுந்து அழுதாள். தன் இரு கரங்களினாலும் சித்திராங்கதாவை வாரி அணைத்துக் கொண்டான் வருணகுலத்தான்.
நடப்பது எதுவென்று புரியாமல் அஸ்வதமங்கலமும் அப்படியே நின்று விட்டது.
‘மகாராணி ராஜகாமினியை பார்த்தது முதல் அவர்கள் என்னிடம் கூறியவற்றை கேட்டது முதல் எனக்குள் எழுந்த அச்சம் என்னை மறக்கச் செய்துவிட்டது தளபதி.. பேசுவது எது என்று புரியாமலே பேசிக் கொண்டிருக்கிறேன். மாருதவல்லியின் தந்தை மாருதவல்லியை மணந்தாகவேண்டும் என்று ஒரு ஆணையை தங்களிற்கு இட்டு விட்டால் தாமும் அந்த ஆணையை ஏற்றுத்தானே ஆகவேண்டும் என்று கூறிவிட்டால்… என்றவாறெல்லாம் ராணியின் கூற்றுக்கள் என் சிந்தனையில் விரிந்து என்னை துன்புறுத்துகின்றன தளபதி.. அதுதான் என்னவோ எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறேன்…’ என்று விம்மிக் கொண்டே கூறினாள் சித்திராங்கதா.
‘மாருதவல்லியின் தந்தையா? யார் ராஜமந்திரியாரா? அவர் எதற்கு அப்படி ஆணையிட வேண்டும்? ராணி ராஜகாமினி அங்ஙனம் ஏதும் தம்மிடம் கூறினார்களா?’
‘ராணி என்னவோ எல்லாம் கூறினார். அந்த சிந்தனைகளே நமக்கு இனி வேண்டாம்..’ என்று அவசரமாக மறுத்தாள் சித்திராங்கதா.
மகாராணி ராஜகாமினி மேலும் ஏதோ இரகசியங்களை சித்திராங்கதாவிடம் கூறியுள்ளார் என வருணகுலத்தானிற்கு புரிந்தது. ஆனால் ஏதோ அச்ச மிகுதியில் சித்திராங்கதா அவற்றை தன்னிடம் மறைப்பதையும் வருணகுலத்தான் உணர்ந்து கொண்டான்.
அது பற்றி மேலும் வினவி அவள் அச்சத்தை அதிகரிக்காமல் தன் மார்போடு அணைத்திருந்த சித்தாராங்கதாவின் சிரத்தினை தடவியவாறே
‘தேவி சித்திராங்கதா… இப்போது கூறுகிறேன்.. இது எக்காலமும் சத்தியம். தாங்கள் அச்சம்படும்படி அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் என் ஆசைநாயகியை விடுத்து இன்னொரு பெண்ணை இப்பிறவியில் இந்த வருணகுலத்தான் உள்ளத்தில் ஏற்கமாட்டேன் என்று எச்சபையிலும் உறுதியுரைப்பேன். இதற்காக யார் எனக்கு எதிரியானாலும் எதிர்த்து நிற்பேன். இது தங்கள் மேல் ஆணை தேவி…’
சித்திராங்கதா அவன் அணைப்பில் இருந்து விலக மனம் இல்லாதவளாய் அப்படியே இருந்தாள்.
இத்தனை நெருக்கமான இந்தப்பயணம் இதன் பிறகு எத்தனை நாட்கள் தொடருமோ என தெரியாது. இவர்கள் இணைந்து செல்கிற இறுதி பயணமாக கூட இது இருக்கலாம்.
ஆதலால் நாம் அவர்களை இதற்கு மேல் தொந்தரவு செய்யாமல் விலகிச் செல்வோம். அவர்கள் தன்னந்தனியாக கொஞ்ச தூரம் இன்ப வெள்ளத்தில் போகட்டும்.
நாம் அப்படியே நல்லூர்க்கோட்டைக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பார்ப்போம். கோட்டையில் மந்திரிமனையில் ராஜமந்திராயாருடன் யாரோ ஒருவன் சைகையில் அவசரமாக ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான். உற்றுப் பார்த்தால் அவன் ஊமைக்காத்தவராயனே தான்.
காத்தவராயன் சொல்லிக்கொண்டிருக்கும் கருத்தை உணர்ந்த ராஜமந்திரியாரது முகத்தில் எதிர்பாராத ஒரு புதிய ஆச்சரியம் தெரிகிறது. அந்தச் செய்தியை உடனடியாக மன்னரிடம் தெரிவிப்பதற்காக அரண்மனையை நோக்கி அவசரமாக விரைகிறார் ராஜமந்திரியார்.
பின்னர் சில நொடிகளில் மந்திரியாரும் சங்கலிய மகாராஜாவும் இரதத்திலே ஏறி அதி வேகமாக கோட்டையை விட்டு புறப்படுகிறார்கள்.
அவர்கள் எங்கு புறப்படுகிறார்கள்? கோட்டையில் என்னதான் நடக்கிறது?
பயணம் தொடரும்….
1 comment