இதழ் 51

சிக்கலில் பிக்பாஸ் தொடர்

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று ஒரு காலப்பகுதி இருக்கிறது; வருடம் முழுவதும் கிரிக்கெட் நடைபெறுவதில்லை. கிரிக்கெட் தவிர்ந்த மற்றைய விளையாட்டுக்களான ரக்பியின் NRL மற்றும் கால்பந்தின் AFL தொடர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடும். பிக்பாஸ் லீக் என்பது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நடாத்துகின்ற ரி20 பிரிமியர் லீக் தொடர். இத்தொடர் நடைபெறும் அதே காலத்தில் தான், அவுஸ்திரேலியாவின் சர்வதேச டெஸ்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்த மற்றைய சர்வதேச டெஸ்ட் அணிகள் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும். இதனால் அவுஸ்திரேலியாவின் பிரதான வீரர்களான டேவிட் வார்னர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்ரிபன் ஸ்மித் ஆகியோர் சொந்த ரி20 லீக்கான பிக்பாஸ் தொடரில் பங்கேற்பதில்லை.

கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் தொடரின் போட்டி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் இருப்பதால் பல சர்வதேச முன்னணி வீரர்கள் விளையாடுவதில்லை. இதனால் அதிக ரசிகர்களை ஈர்க்க முடியாமல் நஷ்டத்தில் தத்தளிக்கிறது. வெளிநாட்டு சர்வதேச வீரர்களுக்கு புதிதாக ஏல (Draft) முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது மூன்று வீரர்களை நான்கு நிலையில் (Platinum, Gold, Silver and Bronze) தேர்வு செய்யலாம். எதிர்பார்த்தது போலவே டுவைன் பிராவோ, கிரான் பொல்லார்ட், டூ பிளஸ்ஸிஸ் என்று பல வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஆனால் சிக்கல் டேவிட் வார்னர் மூலம் வந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் புதிதாக இந்திய பிரிமியர் லீக் உரிமையாளர்களின் அணிகள் இருப்பதால், அவர்கள் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தங்கள் அணிகளுக்கு விளையாட வைக்க அதிக சம்பளம் கொடுக்க தயார் நிலையில் இருக்கிறார்கள். இவ்விரு தொடர்களும் பிக் பாஸ் லீக் தொடரின் பின்னைய போட்டிகளின் காலப்பகுதியில் நடப்பதால், அவுஸ்திரேலியாவின் பிரதான வீரரான வார்னர் சொந்த நாட்டில் விளையாடாமல் வெளிநாட்டில் விளையாடும் சூழல் உருவாகும் போது அவுஸ்திரேலியாவின் பிக் பாஸ் லீக் க்கு பின்னடைவு ஏற்படும். இது தொடர்பாக ஒளிபரப்பு உரிமையாளர்களும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, மிகப் பெரிய தொகையை டேவிட் வார்னர்க்கு கொடுத்து வெறுமனே ஐந்து பிக்பாஸ் லீக் போட்டிகளில் சிட்னி தண்டேர்ஸ் அணி சார்பாக விளையாட வைத்துள்ளது. மேலும் வார்னர்க்கு, அவுஸ்திரேலியாவில் தலைமை தாங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படலாம் என்று கருத்தும் நிலவுகிறது. வார்னர் வழங்கப்படும் சம்பளம், 14 போட்டிகளில் விளையாட மேக்ஸ்வெல் போன்ற அவுஸ்திரேலியா வீரர்களுக்கு வழங்குவதை விட இருமடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டேவிட் வார்னர் பிக் பாஸ் லீக் தொடரில் விளையாடவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

ஆகஸ்ட் மாதம் 28ம் திகதியன்று நடைபெற்ற சர்வதேச வீரர்களுக்கான தெரிவின் போது முன்னணி டி20 வீரர்களான பொல்லார்ட், பிராவோ, டு பிளெஸ்ஸிஸ், ரஸ்ஸல் மற்றும் ஜேசன் றோய் ஆகியோர் தங்கள் பெயர்களை கொடுத்திருந்தும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணமாக பெரிதும் பார்க்கப்படுத்து இவர்கள் பிளாட்டினம் நிலையில் இருந்தாலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரு (அமீரகம் மற்றும் தென்னாபிரிக்கா) லீக்களில் விளையாடவுள்ளதால் முற்பகுதி ஆட்டங்களில் (பதின்நான்கில் எட்டில்) மட்டுமே பங்கெடுக்க முடியும். எனவே அணிகள் நட்சத்திர வீரர்களை விடுத்து முழுமையாக எல்லா ஆட்டங்களில் விளையாடிய கூடியவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. எனவே இந்த draft முறையும் பெரிதும் பயனளிக்கவில்லை. எனினும் ராஷித் கான் மற்றும் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் தேர்வு செய்த வீரர்கள் முற்பகுதி ஆட்டங்களில் மட்டுமே பங்கெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி தெரிவு செய்த நியூஸிலாந்தின் பிரபல இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரென்ட் போல்ட்க்கு, இது முதலாவது பிக்பாஸ் லீக் ஆகும்.

எட்டு அணிகளிலும் தேர்வு செய்யப்பட்ட சர்வதேச வெளிநாட்டு வீரர்கள் வருமாறு:


மெல்பேர்ன் ரெனேகட்ஸ் (Melbourne Renegades) –

லியாம் லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), அகில் ஹூசெய்ன் (மேற்கிந்தியதீவுகள்)


மெல்பேர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) –

ரென்ட் போல்ட் (நியூஸிலாந்து), ஜோ கிளார்க் (இங்கிலாந்து), லுக் வுட் (இங்கிலாந்து)

பிரிஸ்பேர்ண் ஹீட் (Brisbane Heat) –

சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து), கொலின் முன்ரோ (நியூஸிலாந்து), ரோஸ் வைட்லே (இங்கிலாந்து)

சிட்னி சிக்ஸர்ஸ் (Sydney Sixers) –

கிறிஸ் ஜோர்டான் (இங்கிலாந்து), ஜேம்ஸ் வின்ஸ் (இங்கிலாந்து), இசர்உல்ஹக் நவீட் (ஆப்கானிஸ்தான்)

அடிலெய்டு ஸ்ட்ரிக்கேர்ஸ் (Adelaide Strikers) –

ரஷீத் கான் (தக்கவைக்கப்பட்டவர், ஆப்கானிஸ்தான்), கொலின் டி கிராண்ட்ஹோம்மே (நியூஸிலாந்து), ஆடம் ஹோஸ் (இங்கிலாந்து)

Perth ஸ்கார்சேர்ஸ் (Perth Scorchers) –

லாரி எவன்ஸ் (தக்கவைக்கப்பட்டவர், இங்கிலாந்து), பில் சால்ட் (இங்கிலாந்து), டிமால் மில்ஸ் (இங்கிலாந்து)

சிட்னி தண்டர் (Sydney Thunder) –

டேவிட் வில்லேய் (இங்கிலாந்து), அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), ரிலீ றோஸ்சௌவ் (தென்னாபிரிக்கா)

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) –

ஷதாப் கான் (பாக்கிஸ்தான்), ஆசிப் அலி (பாக்கிஸ்தான்), பாஹீம் அஷ்ரப் (பாக்கிஸ்தான்)

Related posts

ஈழச்சூழலியல்

Thumi202121

படைத்தல் மட்டுமல்ல வரலாறு

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 46

Thumi202121

1 comment

Leave a Comment