இதழ் 51

வரலாறு என்ன சொல்கிறதென்றால்….

“எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி! அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்த டொலர் இல்லை…”

“இலங்கையில் டொலர் இல்லை என்பதால், சீனியை வழங்க மறுக்கும் இந்திய விநியோகஸ்தர்கள்”

டொலர் இல்லை… நீண்ட வரிசை… தட்டுப்பாடு…. கப்பல் வருதாம்… பௌசர் வருதாம்….

அண்மைக்காலமாக அதிகமாய்க் கேட்டும் அடுத்தவர்களிற்கு சொல்லியும் பழகிப்போன – சலித்துப்போன கூற்றுக்களே இவை.

இது நமது தலைமுறை மட்டும் கண்ட ஒரு புதிய பிரச்சனை அல்ல. முன்னரும் இதைப்போல் பலமுறை கடந்து வந்திருக்கிறது இந்த நாடு.

1970ற்கு பின்பு அரிசி, மா, சீனி, பாண், பால்மா, பருப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மற்றும் வரிசைகளை பற்றி இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கூறுவோம். அது கொடுமையான காலம் என தமிழ் நடுத்தரவர்க்க நுகர்வாளர் கூட்டம் அன்று அழுது கொட்டியது. மிளகாய், வெங்காயம், உருளைக்கிழக்கு, பருப்பு போன்றவைகளின் இறக்குமதிக்கு வருடாவருடம் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உப உணவுப்பொருட்களின் இறக்குமதிக்கு முற்றாக தடை விதித்தது அரசு.

இதுவே தமிழ் விவசாயிகளிற்கு ஆதாயமாக மாறியது. இறக்குமதி தடை விதிக்கப்பட்டவை சிங்கள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படாத பொருட்களாகும். ஆதலால் அன்று யாழ்ப்பாணம், வன்னிப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட செத்தல் மிளகாயை சிங்கள மக்கள் 40 ரூபாய்க்கு வாங்கினார்கள். வெங்காயம் 25 ரூபாய் வரை விலைபோனது.

வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட காலத்தில் 1.50 சதத்திற்கு விற்கப்பட்டது. இறக்குமதித் தடையின் பின் 25 ரூபா வரை ஏறியபோது தமிழரின் உற்பத்தி பெருகத்தொடங்கியது. மூன்று வருடங்களின் பின்தான் விலை குறையத் தொடங்கியது. பழைய விலைக்கு ஏறக்குறையச் சமமான விலை இறங்கியது.

ஆனால் பாண், அரிசி, மா, பால்மா, பருப்பு, சீனி ஆகியனவற்றிற்கு தொடர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நீண்ட வரிசைகள் தொடர்ந்தன. இது தனியே இறக்கமதித்தடையால் நிகழ்ந்துவிடவில்லை. இதற்கு பெருமளவு கறுப்புச்சந்தையும் காரணமாகும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட தனியார் வர்த்தகர்கள் இறக்குமதித்தடையால் பாதிப்புற்றனர். இவர்கள் அரசுக்கு தமது வன்மமான எதிர்ப்பைக் காட்டினார்கள். பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை அவர்களே ஏற்படுத்தினார்கள்.

1972-1973 களில் அரசி விலை கொத்துக்கு 8-10 ரூபாய்கள் வரை ஏறியது. என்றபோதும் 1974 களில் அது 4.75 வரையாகி பின்பு 1.20க்கு வந்துவிட்டது. உபஉணவு தாராளமாக உற்பத்தியாகி சந்தைக்கு வரத்தொடங்கியபோது விலைகள் இறங்கத்தொடங்கின. சுயசார்புப் பொருளாதாரம் வளர்ந்தது. இறக்குமதியால் சீவித்தநாடு தன்னிறைவை நோக்கி நகர்ந்தது. ப.நோ.கூ. சங்கங்களை அரசு ஊக்கி வளர்த்தது. அவை முதலாளித்துவத்தின் ஊழல்கள், முறைகேடுகளுடனும் வளரத்தொடங்கியது. முதலாளித்துவ சந்தை முன்பும், வர்த்தகர்கள் முன்பும் அவை திணறியபோதும் அவை முன்னேறிக் கொண்டே இருந்தன.

1973களில் பெருமளவு விவசாயத் தொழிலாளர்கள் உருவாகினர். நெல்வயல், மிளகாய், வெங்காயம், புகையிலைத் தோட்டம்களிலேயே உழைக்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பெருமளவு உருவாக்கப்பட்டனர். மலையகத்திலிருந்தும் வன்னிப்பகுதிக்கு வேலை தேடி மக்கள் வந்தனர்.

வீழ்ந்துபோன அன்றைய பொருளாதாரம் தற்சார்பு முறையால் மெல்லத் தலைநிமிரத் தொடங்கியது.

ஒரு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் இன்னும் முக்கியபங்காற்றுவது எது என்று நினைக்கிறீர்கள்?

குடிகாரன் தள்ளாடினால்தான் பொருளாதாரம் தள்ளாடாது. குடிகாரன் நிதானமாக இருந்தால் பொருளாதாரம் தள்ளாடும் என்பது உலக நாடுகளிற்கும் பொது விதியாகிவிட்டது.  

அன்று மூத்த கிழவன் போதையில் சொன்ன புத்தி ஒன்று ஞாபகம்
வருகிறது .

”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” 

உண்மையும்தான்.
கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். 

அன்றைய கள்ளுச்சீவும் தொழிலாளர்களிற்கும் தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுத்த பெருமையில் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஒரு திறமான சீவல் தொழிலாளி சாதாரணமாக 35-40 பனை மரங்களில் கள்ளு சீவுவான். உயிரை மதியாமல் 40-50 பனைகளில்கூட ஏறி சீவும் கடின உழைப்புத் தொழிலாளர்கள் அன்று இருந்தனர். பனை மரங்கள் சில 80 அடி உயரம் வரையில் இருக்கும். உயர ஏறும் போதும் வட்டுக்களைப் பிடிக்கும்போது விழுந்தும் வழுக்கியும் பெருமளவு தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். சிலர் உயிர்தப்பி கால், கை முறிந்தது, முதுகெலும்பு உடைந்து உழைப்பில் ஈடுபட முடியாஉ குடும்பங்கட்கு பாரமான மனிதர்களாக மாறினார்கள். இந்தத் தொழிலில் காப்புறுதி கிடையாது. சனங்கள் தம்மிடையே சண்டையிடும்போதும், திட்டும்போதும் “பனையாலே விழுவான்” , “துலாவாலை பொறிவான்” என்று சாபமிடுவது அக்கால இத்தகைய விபத்துகளின் கொடுமையைக் காண உதவும்.

கள்ளுச்சீவும் தொழிலாளர்கள் சீவிய கள்ளை விற்பனை செய்ய கள்ளுத்தவறணை முறை அன்று அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் கள்ளு விற்பனை மேலும் பெருகியது.

கள்ளுத்தவறணை முறை வருமுன்பு சீவிய கள்ளை மாலை நேரங்களில் தம் வீடுகளில் வைத்தே விற்பனை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இரவு நேரங்களில் சிறு குப்பி விளக்குகள், தகர விளக்குகள் தரும் வெளிச்சத்தில் இவை விற்பனை செய்யப்பட்டன. இப்படி சீவல் தொழிலாளியின் குடிசைகளிற்கு சென்று குடிக்கும் குடிகாரர்கள் குடித்துவிட்டு உடன் போகமாட்டர்கள். மணித்தியாலக் கணக்கில் குந்தியிருப்பர்கள். சீவல் தொழிலாளியின் குடிசை சிறிதாக இருக்கும். குடும்பம் சமையல் படுக்கை அதனுள்தான் நடக்கும். அனேகமாக ஒரே ஒரு குப்பி விளக்கு இருக்கும். இரவு நேரங்களில் சீவல் தொழிலாளியின் பிள்ளைகள் பள்ளிபோவதாக இருந்தால், படிக்க முடியாது. அனேகமாக இருக்கும் ஒரே ஒரு குப்பி விளக்கு கள்ளுக்குடிப்பவர்களின் சுருட்டு பீடி பற்ற வைக்க அடிக்கடி வெளியே எடுத்து வரப்படும். எனவே பிள்ளைகள் படிக்கமுடியாது. கல்வியறிவு பெற்றிராத தாய், தந்தைக்குப் பிறந்த அக்குழந்தைகளின் கல்வி சாதகமற்ற சூழலால் இன்னமும் பாதிப்படையும். கள்ளுக் குடிப்பவர்கள் சத்தம் போடுவார்கள். தூசணம் பேசுவார்கள். கதை வழிப்படுவார்கள். சில சமயம் அடிபிடிப்படுவார்கள். கள்ளுச்சரியில்லை. பழங்பள்ளு, புளிச்சகள்ளு என்று சீவல் தொழிலாளியை அடிப்பார்கள். 4-5 சீவல் தொழிலாளர்களை வைத்து கள்ளுச் சீவி வித்து தம் சொந்த சாதிக்தொழிலாளிகளைக் கூடச்சுரண்டும் முறையும் பரவலாக இருந்தது. அத்துடன் உயிராபத்தான கள்ளுச் சீவும் தொழிலைவிட்டு ஏராளமான குடும்பங்கள் விலகியும் உள்ளன. உயிராபத்து மட்டுமல்ல கள்ளுச் சீவுதல் சமூக அந்தஸ்து குறைந்த தொழிலென பார்க்கப்படுவதால் கைவிட்டோரும் அதிகம். 

இத்தகைய பிரச்சனைகள் யாவும் தவறணைமுறை வந்தபின்னரே நின்றது. தவறணைகளில் கள்ளு விற்பனை செய்யப்பட்ட போது அவர்களது வாழ்க்கைத்தரம் பலமடங்கு உயர்ந்தது.

கள்ளுடன் பதநீர்வடிப்பதும் வளர்ந்தது. சீனிக்கு இறக்குமதித்தடை இருந்தமையால் சீனிக்குப் பதில் பனங்கட்டி, பனம் சீனி, பனம் கற்கண்டு, பனம் பாணி என்பனவற்றின் உற்பத்தியும், தேவையும் அதிகரித்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் குடும்பங்களாக இத்தொழிலில் ஈடுபட்டனர். விதவிதமான வடிவங்கள், நிறைகளில் பனங்கட்டிக்குட்டான்களில் வார்க்கப்பட்ட பனங்கட்டிகள் சந்தைக்கு வந்தன. பதநீர் போத்தல் கள்ளு, பனங்சீனி என்பன ப.நோ.கூ சங்கங்களாலும், உற்பத்தி செய்யப்பட்டு பாவனையாளர்களிடம் சென்றது.

சீவல் தொழிலாளிகளை “ஏறுதழையென்ன பட்டி நாரென்ன” என்று மேல்சாதி வெறியர்கள் இழிதொழிலாய் எண்ணிப் பழிந்தபோதும், அதுவும் ஏனைய தொழில்கள்போல் தொழிலாளர்களின் உழைப்புச்சிறப்புக்குரிய தொழிலாகும் என்று வளர்ந்து வந்தனர்.

கள்ளுசீவல் என்பது உண்மையில் ஒரு கலையாகும். பனைகளில் ஆண்பனை, பெண்பனை என்ற வித்தியாசமான சீவல் முறைகள் உண்டு. நுணுக்கமான அனுபவம் நிறைந்த சீவல் முறை அதற்குச் தெரியவேண்டும். கேக்போடுவதுபோல் பதம் தெரியவேண்டும். சீவல் தொழிலாளியின் அறிவு அனுபவம் என்பன எந்த சமூக மதிப்பையும் பெறுவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்பனை நீளமானது, ஆண்பனை மற்றை பனைகட்கு முன்பே தை, மாசி மாதங்களிலேயே வந்துவிடும். மற்றைய பனைகள் சாதாரணமாக பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் அருகத் தொங்கவிடும். பனங்கள்ளு இல்லாத காலம்களில் ஆண் பனையின் பாளைகளில் இருந்து மூன்றுவித தொழல்நுட்பத்தைப் பாவித்து கள் எடுப்பார்கள். ஆண்பனையின் பாளையின் வட்டை வெட்டி அடியில் பாளை சீவுதல், சிக்காயை வெட்டி பனம் பழமாக விடாமல் செய்து கள்ளு எடுத்தல், பங்குனி மாதத்தில் பாளையை வெட்டி ஒக்டோபர் மாதத்தில் திரும்ப வரப்பண்ணுதல் இதையே “வம்புப் பாளை” என்று அழைப்பார்கள்.

பாளையைத்தட்டி காயப்படாமலும் பாளை வெம்பல் குரும்பெட்டி வராமலும் செய்ய அந்தத் தொழில்முறை தெரியவேண்டும். எல்லாக்கள்ளுச் சீவும் தொழிலாளிகளினாலும் இதைச் செய்யமுடியாது. அதற்குரிய அனுபவம் கொண்ட தொழிலாளியைக் கொண்டு சீவிய பின்பே மற்றைய தொழிலாளிகள் கள் எடுப்பார்கள். பனைகளில் ஆண்பனை, பெண்பனை. மலட்டுப்பனை என்ற பகுப்புகள் உண்டு. ஆண்பனைக்கே விசேடமாக வழு இழுப்பார்கள். அதன் மூலம் கள்ளுப் பெறப்படும். ஆண்பனையில் காலையில் சீவும் புதுக்கள்ளு விரும்பிக் குடிப்பதற்கு மட்டமல்ல அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்துவுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 1970களின் இடதுசாரிக் கூட்டரசுகாலத்தில் பனம் பொருள் அபிவிருத்திச் சபை நிறுவப்பட்டு பனை ஓலைப் பொருட்களோடு ஏனைய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதுடன், பனம் பினாட்டு, பனங்கட்டி உற்பத்தியுடன் பனம் பழத்தில் இருந்து சொக்கலேட் உற்பத்தி திட்டமும் பரிசோதிக்கப்பட்டது.

அக் காலத்தில் கள்ளுத்தவறணை வளாகத்தில் ரேஸ்ட் கடையென ஒரு பெட்டிக்கடையும் இருக்கும்.  அங்கு ஆடு அல்லது மாட்டின் இரத்தவறை,மீன்பொரியல், இறால்பொரியல், தட்டைவடை, மரவள்ளிக் கிழங்கு அவியல், பொரியல், கடலை,பிலாக்கொட்டைப் பொரியல் போன்றவை விற்கப்படும்.   கள்ளுக் குடிப்பவர்கள் அவற்றை விரும்பி வாங்கி உண்பார்கள். இந்த ரேஸ்ற் கடை வியாபாரத்தை நம்பி ஒவ்வொரு ஊர்களிலும் நாலைந்து குடும்பங்கள் இருந்தார்கள்.  
அவர்கள் சிறப்பான வருமானத்தைப் பெற்றுச் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தார்கள்.  

இந்த ரேஸ்ற் கடைகளில் விற்கப்பட்ட சிற்றுண்டிகள் இயற்கையில் கிடைத்த உணவுப் பொருள்களாகவும் போசாக்காகவும் இருந்தன.

1990களின் முற்பகுதியில்  வடபிரதேசத்தில் தென்பகுதியிலிருந்து மதுபானம் எடுத்துவருவது முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் கள் இறக்கும் சீவல் தொழிலாளர்கள் உயர் வருமானம் பெற்று நல்லதொரு வாழ்க்கைத் தரத்தில் இருந்தார்கள்.  

அக் காலத்திலே விகார் எனும் பெயரில் பனஞ்சாராயமும் உற்பத்தி  செய்யப்பட்டது. இயற்கையான சாராயம் என்றால் அது பனஞ் சாராயம்தான்.  வடமராட்சி திக்கத்தில் வடிக்கும் பனஞ்சாராயத்திற்குச் சிங்கள மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இங்கு குறிப்பிடத்தக்கது. 

குடி என்றால் எல்லாம் குடிதானே? மதுவே உடல் நலத்தற்கு கேடு என்கிற போது கள்ளில் அப்படி என்ன பெருமை என்று கேட்கிறீர்களா?

வெற்றிகரமாக மதுவை ஒழித்த ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தையாவது உங்களால் காட்ட முடியுமா??

மதுவை உலகிலிருந்து அறவே ஒழிக்க முடியாது. அதற்குரிய சாத்தியக்கூறுகளும் இல்லை.

மது அருந்துவோரில் 20 சதவீதமானோரே அதற்கு அடிமையாகின்றனர் என்கிறது புள்ளிவிபரவியல். உலகத்திலேயே மற்ற வியாதிகளை விட நீரிழிவு நோயால் தான் அதிகமானோர் இறக்கின்றனர். அதற்காக இருக்கின்ற அனைத்து சீனி ஆலைகளையும் மூடி விட முடியுமா? அது நியாயமாகுமா?

இன்பங்களை தேடி அனுபவிப்பது மனிதனின் பிறவி இயல்பு. மது குடிப்பது என்பது மனிதனின் உயிரியல் கூறோடு சம்பந்தப்பட்ட ஒன்று. இதற்கு ஒரு வரலாற்று மரபும், தொடர்ச்சியும் உண்டு. நாம் அதிகபட்சம் இந்த பழக்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பற்றி சொல்லிக் கொடுக்கலாம். அவ்வளவு தான். அதுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. மதுவை தடை செய்தால் பல கள்ளச்சந்தைகள் தான்
முளைக்கும். ஆதலாலே கள்ளு உற்பத்தியை பெருக்குவதன் மூலம் எம்மவர்களின் பொருளாதாரத்தை அதிகளவு மேம்படுத்தலாம் என்பது எமது சாரம்.

புலம்பெயர் தேசங்களிலிருந்து வகை வகையான சாராயப் போத்தல்கள் வருடா வருடம் ஆடி, ஆவணி மாதங்களில் தாயகத்திற்கு வரும். 
”நாங்கள் என்ன லோக்கல் கள்ளுச்சாராயமோ குடிக்கிறது. பொறின் சரக்கெல்லோ குடிக்கிறம் ”  என்கிற பீத்தல் பெருமையும் கள் உற்பத்திக்கு வில்லத்தனமாக நிற்கிறது. 
எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள  வேண்டுமென்ற அரசாங்கங்களின் கொள்கைகள் காரணமாக  உள்நாட்டவரின் திறமை மதிக்கப்படாமல் போவது-இது  வரலாற்றின் துயரமாகவே முடியும் என்பது நாம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

திட்டமிட்ட அரச சதிகள் பனைமரங்களில் கள்ளுச் சீவுவதை தடைசெய்து தமிழரின் பொருளாதர பலத்தை தலைநிமிர விடாமல் செய்ய எத்தணிக்கலாம்.

ஆனால் தமிழர் தாயகத்தின் தனிப்பெரும் அடையாளமாக பன்நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றிருக்கும் பனை மரமானது, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றில் ஆழமாக இழையோடி தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த ஒன்றாகும்.

உலகில் எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருந்தாலும் ஒரு இனத்தின் அடையாளமாக பனை மரம் அடையாளப் படுத்தப்படுகின்றதொன்றால் அது தமிழினத்தின் சார்பாக மட்டுமே.

தமிழின அழிப்பு யுத்தம் நடந்தேறிய காலகட்டத்தில் பல இலட்சம் பனை, தென்னை மரங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் தொன்மத்தின் அடையாளமாக தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பெங்கும் நிமிர்ந்தோங்கி வளர்ந்து முரசறைந்து நிற்கும் பனை வளங்களில் இருந்து பெறும் உற்பத்திகளை பாதுகாப்பதன் மூலமே எமது இருப்பினையும் பொருன்மிய பலத்தினையும் தக்கவைக்க முடியும்.

கற்பகதருவை கையில் வைத்துக்கொண்டு கடன் கேட்டு அலையும் மூடர் வாழ்விலிருந்து விடுதலை அடைவோம். எம்மை நாமே சார்ந்து வளரும் பொருளாதாரத்தால் மீண்டும் தலைநிமிர்வோம்.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 46

Thumi202121

ஒரு சின்னஞ் சிறுகதை

Thumi202121

வினோத உலகம் – 16

Thumi202121

1 comment

Leave a Comment