இதழ் 51

2022 இல் ஆன்மீகம்

ஈழ நிலப்பரப்பெங்கும் சமகாலத்தில் ஆலயங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதேநேரத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களின் சதவீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பசியே இல்லாத ஊரில் உணவகங்களால் பயன் இல்லை. படிப்பறிவே இல்லாத இடத்தில் நூறு நூலகங்கள் இருந்தும் பயனில்லை. அது போலத்தான் பக்தி என்பது உள் மனதில் எள்ளளவும் இல்லாமல் ஆலயங்கள் ஆயிரம் அமைத்தும் என்ன பயன்?

பக்தி என்பது பகல் வேசமாக மாறிக் கொண்டிருக்கிறதென்பதே கசப்பான உண்மை. உணர்வு பூர்வமாக இறைவனுக்கு செய்கிறோம் என்கிற நிலை மாறி ஏட்டிக்கு போட்டியாக திருவிழாக்கள் செய்கின்ற நிலை அதிகரித்து வருகிறது. விரலுக்கேற்றது போலத்தான் வீக்கம் இருக்க வேண்டும் என்பதை மறத்தலாகாது.

பல்லவ அரசன் பல லட்சம் செலவழித்து, தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு கலைநயம் ததும்ப பார்த்து பார்த்து ஒரு கோயிலை கட்டுகிறான். அதே நேரத்தில் பூசலார் என்கிற ஒரு ஏழை பக்தன் எந்தவித செலவுமின்றி தன் பக்தியின் அதியுச்ச வெளிப்பாட்டால் தன் கற்பனைகளையும் எண்ணங்களையும் இறை பக்தியையும் ஒன்றாக்கி உள்ளத்திலேயே ஒரு கோயிலை கட்டிக்கொண்டு இருக்கிறார். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே நாளில் ஒரே சுப முகூர்த்தத்தில் கும்பாபிசேகம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. வேதாகங்களும் மங்கல வாத்தியங்களும் ஒலிக்க, யாகங்களும் சடங்குகளும் நடக்க, அந்தண சிரேஷ்டர்களும் அயல் தேசங்களின் அரசர்களும் அணிதிரள, அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தின் அரோகரா முழக்கத்துடன் அரசன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த முனைந்த வேளை, கண்களை மூடி தியானத்தில் இருந்த பூசலாரின் உள்ளத்தில் எண்ணங்களின் விம்பமாக மிக மிக எளிமையாக அவரது ஆலய கும்பாபிஷேகமும் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இரு கும்பாபிசேக நிகழ்வுகள். ஒரே இறைவன். எங்கே சென்றிருப்பார் கடவுள்?

அரசனின் ஆலயத்தில் நைவேத்தியங்கள் அதிகம், அலங்காரங்கள் அதிகம், அபிஷேகங்கள் அதிகம், பக்தர்களும் அதிகம். ஆனால் ஆண்டவன் அங்கே செல்லவில்லை. மன்னனின் கனவில் கும்பாபிஷேக திகதியை மாற்றுமாறு கூறிவிட்டு எங்கே அன்பு அதிகமோ? எங்கே பக்தி அதிகமோ? அங்கே அதாவது பூசலாரின் ஆலயத்திற்கே இறைவன் சென்றதாக அந்த புராணக்கதை முடிகிறது.

இந்த புராணக்கதை உண்மையா பொய்யா என்கிற ஆராய்ச்சிகளுக்கு அப்பால் இது எங்கே காணப்படுகிறது என்பதுதான் முக்கியம்? எந்த ஆன்மீகத்திற்காக நாங்கள் ஆடம்பரமாக செலவழித்துக் கொண்டிருக்கிறோமோ அதே ஆன்மீகம் தான் இந்த கதையை சொல்கிறது. உள்ளத்தில் கோயில் கட்டிய பூசலாரை இறைவனின் மெய்யடியார்கள் என்கிற பெருமையைப் பெறும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக வைத்து பெருமை சேர்த்ததும் அதே ஆன்மீகம் தான். இந்த கதையை கொண்ட பெரிய புராணத்தை பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக்கி தினமும் ஆலயம் தோறும் இறை முன்னிலையில் பாட வைத்ததும் அதே ஆன்மீகம் தான். எனவே ஆடம்பரத்திற்கோ, அலங்காரத்திற்கோ ஆன்மீகம் முக்கியத்துவம் தரவில்லை என்பதும் உண்மையான அன்பிற்கும் பக்திக்குமே ஆன்மீகம் முதன்மையளிக்கிறது என்பதும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது. இதனேயே கண்ணதாசன் எல்லோருக்கும் புரியுமாறு எளிமையாக சொல்லி வைத்தார்.

“ஆடை அணிகலன் ஆபரணங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை.
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை!”

அரச மரத்திலும் ஆலமரத்திலும் குளக்கரைகளிலும் இருந்த இறைவனை அந்த இயற்கையோடு இயைந்த சூழலிலேயே வழிபடுவதுதான் பொருத்தமானது என்பதை என்று உணர்வோம் என்று தெரியவில்லை. அரசடி விநாயகர், ஆலடி விநாயகர் என்றெல்லாம் ஆலயங்களுக்கு பெயர் இருக்கும். ஆனால் அங்கே அரச மரமோ ஆல மரமோ இருக்காது. அவற்றை வெட்டி வீழ்த்தி விட்டு பெரிய கட்டுமானங்களோடு ஒரு கோயில் இருக்கும். ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கிவிட்ட காரியம் இது! அருகிவரும் மரங்களையும் அதியுச்ச பயன்தரு மரங்களையும் ஆலயங்களின் தலவிருட்சங்களாக்கி, அந்த மரங்களின் நீட்சியை ஆன்மீகத்தின் ஊடாக நிலைநிறுத்தும் தார்ப்பரியத்தை கொண்ட பண்பாட்டுப் பெருமை எம்முடையது என்பதை என்றும் மறத்தலாகாது. இயற்கையும் இறையும் ஒன்றாகவே இருந்தது. அதை ஒன்றாகவே தொடர்ந்து இருக்கச் செய்யவேண்டும். அதுவே இயற்கைக்கும் நல்லது.

ஆன்மீகம் சார்ந்த செலவுகளே வேண்டாமென்பதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். இங்கே தவறான புரிதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உலக கட்டிடக்கலைஞர்களே வியந்து போற்றும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் ஆன்மீகத்தின் ஒரு ஆடம்பரம் தான். ஆனால் அது ஆன்மீகத்தின் தொடர்ச்சியான நிலைபேறுகைக்கு அவசியம். இராஜ இராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் தேவைதான். ஆனால் தஞ்சையில் இன்னொரு பெரிய கோயில் தேவையில்லை என்பது தான் என் நிலைப்பாடு. புரியுமாறு சொல்வதென்றால் என் காதலின் சிறப்பை காட்டுகிறேனென எல்லா காதலர்களும் தாஜ்மஹால் கட்ட முடியுமா என்ன? தலைமுறைகள் கடந்தும் ஆன்மீகத்தின் மகிமைகளை கடத்த இது போன்ற சில கோயில்கள் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் நாற்றிசை கோபுரங்களோடு தலைவாசல் கோபுரமும் சேர கம்பீரமாக காட்சியளிக்கிறதென்பதற்காக மற்ற ஆலயங்களும் பஞ்ச கோபுரங்களோடு இருக்க முனைவது சரியா? ஆன்மீகம் பணிகளுக்கு சரிநிகராக அறப்பணிகளையும் செய்வதனால் உருவான மகாபுண்ணியம் அந்த ஆலயத்தின் சூழலையும் அழகாக்கிறது. ஆனால் எமது மண்ணில் பெரிய கட்டுமானங்களோடு காணப்படும் ஆலயங்களில் ஒரு வேளைப்பூசை கூட ஒழுங்காக நடக்காத ஆலயங்களும் உள்ளன. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை வரும் கும்பாபிசேகங்களையும், பன்னிரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மகோற்சவத்தையும் விட முக்கியமானது நித்திய பூசை. அந்த பூசை அதற்குரிய காலக்கிரமத்தில் நடக்கும் போது தான் அந்த தெய்வம் குளிர்ச்சியடைகிறது. இதற்கு தேவை அர்ச்சகர்களதும் பக்தர்களதும் அர்ப்பணிப்பும் பக்தியும் மட்டுமே தவிர வேறெந்த செல்வமும் அல்ல. ஆனால் இதற்குத்தான் பல ஆலயங்களில் பற்றாக்குறை இருக்கிறது.

சாதி மத வேற்றுமைகள் இன்றும் ஆலயங்களூடாக சமூகப் பரப்பில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. ஆனால் சாதியைக் காரணம் காட்டி ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நந்தனாருக்காக நந்தியே விலகி சிவதரிசனத்திற்கு வழிவகை செய்தாக ஆன்மீகம் சொல்கிறது. இந்த நந்தனார் சரிதம் ஊடாக ஆன்மீகம் என்ன சொல்கிறது தெரியுமா? இறைவன், எந்த பிறப்பிலும் பேதம் பார்ப்பதில்லை. உருவத்திலும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்கள் மனித இனத்திலேயே வேறுபாடு வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை ஆண்டவன் மீது போடுகிறார்கள். நந்தனாரை ஆலயத்திற்குள் வைத்து இன்றும் வழிபடுகிறோம். ஆனால் அவர்சார்ந்த சாதியினருக்கு இன்றும் பல ஆலயங்களில் அனுமதி இல்லை. அதே போலத்தான் கண்ணப்பரும். எனவே ஆன்மீகத்தின் அடிப்படையை உணர்ந்து அனைவருக்கும் சமத்துவத்தை ஆலயங்களூடாக ஆன்மீகத்தில் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஆன்மீகத்தை கடத்தும் முக்கிய இடமாக ஆலயங்களே இருக்கின்றன. முதியவர்களிடமிருந்து இளையவர்கள் ஆன்மீகத்தின் அடிப்படைகளை அறிந்துகொள்ள ஆலயங்களே உதவுகின்றன.

யார் இளைஞர்கள்?

ஒரு மனிதனின் இளமைப்பருவமானது 13 வயது தொடக்கம் சுமார் 30 வயது வரையான காலகட்டத்தை உள்ளடக்கி இருக்கும் என வரையறை செய்யலாம். இந்த வயது வரையறை தொடர்பில் உளவியலாளர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் உண்டு. இருந்தாலும் இந்த இளமைப்பருவத்திற்குள் ஒரு மனிதனின் பதின்ம பருவமும் கட்டிளமைப்பருவமும் உள்ளடங்கி காணப்படும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டிற்குள் வரமுடியும்.

இளமைப் பருவம் என்பது முதிர்ச்சிக்கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடையிலான நிலைமாறும் பருவம் ஆகும். அதாவது முதிர்ச்சியின் அடையாளங்களும் பிள்ளைத்தனத்தின் தன்மைகளும் கலந்திருக்கும் பருவம். ஒரு மனிதனின் வாழ்வில் புயலடிக்கும் பருவம், உள்ளகக் குழப்பம் நிறைந்த பருவம், புரட்சிகரமான பருவம், கட்டுக்கடங்காத பருவம் என இப்பருவத்தினை வர்ணிப்பர். ஒருவனது இளமைப் பருவம் சீரிய முறையில் கட்டமைக்கப்பட்டு விட்டால் அவனது எதிர்காலம் என்பது மிகச்சிறப்பாக இருக்கும் என்பது நாம் அனுபவ ரீதியாக கண்ட உண்மையாகும்.

இளைஞர் பருவத்தில் ஏற்படும் கோளாறுகளையும் பிறழ்வுகளையும் எதிர்கொண்டு, அதனை ஒரு ஆரோக்கியமான முறையில் பக்குவப்படுத்துகின்ற வழிப்படுத்துகின்ற சக்தி ஆன்மீகத்திற்கு உண்டு. அந்தவகையில், சமயங்கள் போதிக்கின்ற ஆன்மீகக் கடமைகளில், வழிபாடுகளில் இளைஞர்கள் தங்களை முற்றாக ஈடுபடுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று ஆன்மீகத்தை விட்டும் தூரமான, ஆன்மீக வறுமையுடன் வாழுகின்ற இளைஞர்களே உள நோய்களுடன் காணப்படுகின்றனர். ஒரு மனிதனுடைய உள்ளத்தை வளப்படுத்துவதிலும், அதன் நோய்களைக் குணப்படுத்துவதிலும், அதில் அமைதியை ஏற்படுத்துவதிலும் ஆன்மீகத்திற்கு நிகரானதொன்று கிடையவே கிடையாது.

எனவே, மாறிக்கொண்டு செல்கின்ற இன்றைய உலகில், சமூகத்தின் முதுகெலும்பாகவுள்ள இளஞ்சமுதாயத்தை, அது எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்து, உள ஆரோக்கிமுள்ள நல்ல வளமான சமூகமாக உருவாக்கி எடுக்க ஆன்மீக நாட்டத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இளைஞர்களுக்கு எவ்வாறு ஆன்மீகத்தின் தேவை உள்ளதோ அதுபோல ஆன்மீகத்திற்கும் இளைஞர்களின் தேவை உள்ளது. ஆலய சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், பூக்கள் கொய்யவும், மாலைகள் கட்டவும், சுவாமியை திருவீதியுலா வரச்செய்வதும் என்று சரியைத் தொண்டுகள் செய்வதற்கு இளைஞர்களும் யுவதிகளும் தேவை. அதை அவர்கள் வேலையாக செய்யாமல் பணியாக செய்கின்ற போது அந்த ஆலய சூழல் மகத்துவம் பெறுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட தெய்வங்களை விட குலதெய்வங்களும் கிராமியத்தெய்வங்களுமே எமது பண்பாட்டினதும் வரலாற்றினதும் தொடர்ச்சிக்கும் மேன்மைக்கும் உதவும். வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் அந்த கிராமியத் தெய்வ மற்றும் குல தெய்வ வழிபாடுகளை மீளப் புதுப்பிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

எமது மண்ணில் இன்றைய நாட்களில் சிறியேன் அவதானித்த சில விடயங்களின் தொகுப்பே இந்த கட்டுரை. இங்கு யாரையும் குற்றம் சுமத்துவதோ, குறை காண்பதோ நோக்கமல்ல. கந்தபுராண கலாச்சாரத்தை கொண்ட எமது மண்ணின் ஆன்மீக பலத்தை மீள அதிகப்படுத்த வேண்டும் என்பதே எனது பணிவான விண்ணப்பம்.

“அவனருளாலே அவன்தாழ் வணங்கி”

Related posts

சிக்கலில் பிக்பாஸ் தொடர்

Thumi202121

வினோத உலகம் – 16

Thumi202121

ஈழச்சூழலியல்

Thumi202121

Leave a Comment