இருபத்து நான்கு வருடங்களாக, ATP டென்னிஸ் போட்டிகளில் கலக்கி வந்த முன்னணி நட்ச்சத்திர வீரரான ரோஜர் பெடெரெர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 15ம் திகதி, லவர் கப் (Laver Cup) தொடருடன் ATP டென்னிஸ் போட்டிகளிலிருந்து விடைபெறவுள்ளதாக கூறியிருந்தார். இருந்தும் 41 வயதான பெடெரெர், லவர் கப் தொடரில் ஆடுவாரா இல்லையா என்ற சந்தேகம், அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் கொடுத்த சிக்கலால் இருந்தது. காயம் காரணமாக 2021ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதி தோல்விக்கு பின்னர், பெடெரெர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த மாதம் 24ம் திகதி, லவர் கப் தொடரில் நடந்த இரட்டடையர் ஆட்டத்தில் முன்னணி வீரர் ரபேல் நடால் உடன் சேர்ந்து ஒரு அணியாக பங்கேற்றார்; வெற்றிகளை குவித்து டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வந்த பெடெரெர், தன் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று கண்ணீர் மல்க விடைபெற்றார். இதன் போது பெடெரெர்க்கு டென்னிஸ் களத்தில் பலம் வாய்ந்த எதிராளியாகவும் களத்திற்கு வெளியே மிகசிறந்த கூட்டாளியாகவும் இருந்த ரபேல் நடால் உம் கண்கலங்கியது ஓர் உணர்பூர்வ நிகழ்வானது. இந்த கட்டுரை பெடெரரின் டென்னிஸ் வாழ்க்கை தொடர்பாக இயம்பவுள்ளது.
1981, ஆகஸ்ட் 8ம் திகதி சுவிஸ்சர்லாந்தின் பசேலில் பிறந்த ரோஜர் பெடெரெர், தன் எட்டாவது வயதிலே டென்னிஸ் ஆட ஆரம்பித்தார். இவரின் தாய், லினெட்டே; தந்தை, ராபர்ட் மற்றும் ஒரு சகோதரி, டயானா உண்டு. 2000 இல் ஒலிம்பிக் கிராமத்தில் சந்தித்த டென்னிஸ் வீராங்கனையான மிர்கா வாவ்ரினெக் என்பவரை 2009 இல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு இரட்டையர்களாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். ரோஜர் க்கு இங்கிலீஸ், ஜேர்மன், சுவிஸ் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் பேச தெரியும்.
1995 இல் பதின் நான்கு வயதான ரோஜர், சுவிஸ் டென்னிஸின் தேசிய மேம்பாட்டுத் திட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1996 இல், இளம் ரோஜர் தொடர்ந்து முன்னேறி இரண்டு தேசிய இளையோர் பட்டங்களை வென்றார். 1997 லும், மேலும் இரண்டு தேசிய இளையோர் பட்டங்களை வென்றதோடு, இத்தாலியில் ஒரு பெரிய சர்வதேச இளையோர் போட்டிதொடரை முதன்முறையாக வென்றார் ரோஜர்.
1998 இல் இளையோரில் முதலிடத்திற்கு முன்னேறி விம்பிள்டனில் இளையோர் போட்டிதொடரை வென்ற ரோஜர் பெடெரெர், வைல்டு கார்டு நுழைவாக (wildcard entry) தன் ATP சுற்றுலாவை சுவிஸ் பகிரங்க தொடரில் ஆரம்பித்தார்; ATP Tour /Event என்பது The Association of Tennis Professionals (ATP) அமைப்பினால் நடத்தப்படும் உலகளாவிய உயர்மட்ட டென்னிஸ் சுற்றுத் தொடர்கள் ஆகும், இதில் தற்போது கிரண்ட்ஸ்லாம்ஸ் (2000 புள்ளிகள்) ATP மாஸ்டேர்ஸ் 1000, ATP 500, மற்றும் ATP 250 என்று நான்கு வித புள்ளிகள் அடிப்படையான பிரிவுகள் உள்ளன.
1999, ரோஜர் மொத்தம் எட்டு வைல்ட் கார்டுகளைப் பெற்று, பாரிஸ் மற்றும் விம்பிள்டன் ஆகிய இரண்டின் கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களிலும் அறிமுகமானார்; அத்தோடு உலக சுற்றுப்பயணத்தில் தனது முதல் அரையிறுதியை அடைந்தார். புதிய தொழில்முறை வீரராக உலக தரவரிசையில் 301வது இடத்தில் ஆண்டை தொடங்கி, 64வது இடத்தில் பருவத்தை முடித்தார்.
2000, சிட்னியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பெரும் வெற்றியை தந்தது; ஒரு கடினமான மைதானத்தில் அரையிறுதியை அடைந்து இருந்தார். அத்துடன் ரோஜர் இதுவரை பயிற்சியாளராக இருந்த தனது இளைஞர் பயிற்றுனர் பீட்டர் கார்ட்டர் இனை விடுத்து ஸ்விடிஸ் பயிற்சியாளர் பீட்டர் லண்ட்கிரெனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
2001, ரோஜர் தனது ATP பயணத்தில் முதல் தொடர் வெற்றியை மிலனில் பெற்றதுடன் விம்பிள்டனில் பீட் சாம்ப்ராஸின் தொடர்ச்சியான வெற்றியை முடிவுக்குக் கொண்டு வந்தார். முதல் முறையாக காயம் காரணமாக நீண்ட இடைவெளியை கோடையில் எடுத்ததினால், பருவ முடிவில் மாஸ்டேர்ஸ் விளையாடும் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் வருட முடிவில் உலக தரவரிசையில் 13வது இடத்தைப் பிடித்திருந்தமை குடிப்பிடத்தக்கது.
2002 ம் ஆண்டு, மூன்று ATP தொடர்களில் வெற்றி பெற்ற ரோஜர் பெடெரெர்க்கு ஹம்பேர்க் மாஸ்டர்ஸ் தொடர், அவரது முதல் வெற்றியாகும். இருப்பினும், பாரிஸ் மற்றும் லண்டனில் நடைபெற்ற பிரெஞ்சு மற்றும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் முதல் சுற்றுகளிலேயே வெளியேறினார். ஆயினும்கூட, அவர் ஹூஸ்டன் மாஸ்டர்ஸ் கோப்பைக்கு தகுதி பெற்றிந்ததுடன் உலக தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறி ஆண்டை முடித்தார். இருப்பினும் ரோஜர் மிகவும் அதிர்ச்சியடையும் வகையில் அவரது இளைஞர் பயிற்றுநர், பீட்டர் கார்ட்டர், ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒரு விபத்தில் துரதிஸ்டவசமாக இறந்து போனார்.
2003 இல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜரின் சிறுவயது கனவு நனவானது. ரோஜருக்குப் பிடித்த டென்னிஸின் மெக்காவான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கிடைத்த முதல் வெற்றியானது, அவரை ஒரு நட்சத்திரமாக மாற்றுகிறது. அவர் ஹூஸ்டனில் மாஸ்டர்ஸ் இனை பருவ இறுதியில் வெற்றி பெற்று உலகின் இரெண்டாம் வீரராக மிளிர்ந்தார். மேலும் டிசம்பரில் ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளையை நிறுவினார்.
2004 ரோஜருக்கு ஒரு அற்புதம் ஆனதாக விளங்கியது. மெல்போர்ன், லண்டன் மற்றும் நியூயார்க்கில் நடந்த ஆஸ்திரேலியன் பகிரங்க, விம்பிள்டன், மற்றும் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றார். இதன்மூலம் மட்ஸ் விலண்டர் (1988) க்குப் பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் மூன்றை வென்ற முதல் வீரருமானார். அதோடு ரோஜர் டென்னிஸில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்தார்; தொடர்ந்து 237 வாரங்களிற்கு (2008 வரை) அவரே முதலிடத்தில் நீடித்தது சிறப்பம்சமாகும்.
பயிற்சியாளர் இல்லாத ஒரு வருடத்திற்குப் பிறகு, 2005 இல் ரோஜர் ஆஸ்திரேலியாவின் டோனி ரோச் உடன் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். அத்துடன் தனது விம்பிள்டன் மற்றும் அமெரிக்க பகிரங்க தொடர் பட்டங்களை தக்கவைத்து தந்து நீண்ட தொடர் வெற்றிகளுக்கு வித்திட்டார். மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் IMBEWU திட்டத்தை பார்வையிட்டு, அதனை தன் அறக்கட்டளை மூலம் ஆதரித்தார்.
ரோஜர் பெடெரரின் டென்னிஸ் பயணம் தொடரும்…….