இதழ் 52

தப்போவ – ஒரு அய்யனார் தேசம்

A-12 வீதியினூடாக தப்போவ குளத்தைக்கடந்து வேகமாக வந்து கொண்டிருந்த என்னை இந்தக்கோவில் திடீர் என்று நிற்க வைத்தது.

“தப்போவ குளக்கரையோரம் ஒரு அய்யனார் கோவில்” என்று எப்போதோ வாசித்த பழைய சில ஞாபகங்கள் வர பல குழப்பகரமான சிந்தனைகளோடு திரும்பிச்சென்று கிட்டப்போய் கோவிலை அண்மித்தேன்.

என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

இது தானா நான் வாசித்தறிந்த , காணத்துடித்த , தேடித்திரிந்த அந்தப் புதையல்….

ஆம்.. இதே தான்..

❤

நிற்க..

Covid – 19 அச்சம் உச்சமடைந்த இந்த வருடத்தின் மார்ச் , ஏப்ரல் காலத்தில் இலங்கையில் நாடளாவிய ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதை நாங்கள் யாரும் வாழ்வில் மறக்கப்போவதில்லை. அப்போது பொதுப்போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டிருந்து. ஊரடங்கு தளர்த்தும் நேரத்தில் கூட மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டம் செல்வதும் முழுவதுமாக தடைசெய்யப்பட்டது. வீதிகளிற்கு இறங்கினாலே கைது செய்யப்படுவது முகநூலில் செய்தியானது.

ஆனால் அரச சுகாதாரத் துறையில் பணியாற்றியவர்களுக்கு தொடர்ச்சியாக வைத்திய சாலைகளில் பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதோடு பணிச்சுமையும் கொறோனா தொற்றுப்பயமும் அதிகரித்திருந்தது.

நான் தொழில்முறையில் ஒரு இயன் மருத்துவர். கடந்த இரண்டு வருடங்களாக பொரளையில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆக வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வைத்தியசாலைகளில் பணிபுரிகிற உத்தியோகத்தர்களிற்கு அந்நேரத்தில் நேர்ந்ததை போலவே தங்குமிடமும் எனக்கு பிரச்சினையாகிப்போனது. வீட்டு உரிமையாளர்கள் எங்களைக் கொறோனா காவிகளாக எண்ணிவிட்டார்கள . இவை தவிர ஹொட்டேல் ரெஸ்ரோரண்ட்கள் மூடப்படவே நானும் ஒரு 90s kids என்ற வகையில் சிங்கிள் வாழ்க்கையில் நாளாந்த உணவும் பிரச்சினையானது.

அந்த pandemic நேரத்தில் விசேட சுற்றறிக்கையின் படி நான்கு நாள் விடுமுறை , பின்னர் ஆறு நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து வேலை என்ற ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. ஆகவே இந்த விடுமுறை நாட்களில் உணவு தங்குமிடச்சிக்கலோடு கொழும்பிலும் நிற்க முடியாது என்ற வகையில் வவுனியாவில் உள்ள என் வீட்டிற்கு சென்று வரத்தொடங்கினேன்.

பொதுப்போக்குவரத்துச்சேவைகள் முடங்கிய நிலையில் என் மோட்டார் சைக்கிள் கொழும்பு – வவுனியா பயணத்திற்கு கைதந்தது. வாரத்திற்கு இரண்டு தடவைகள் கொழும்பு கம்பஹா புத்தளம் அநுராதபுரம் வவுனியா என்று மாவட்டங்கள் கடந்து A3 , A12 , A 9 பாதைகளில் தான் பயணப்பட வேண்டியிருந்தது . ஏறத்தாழ மூன்று மாதங்கள் இது தான் நிலைமை.

இந்தப்பயணத்தில் எனக்கு சோதனைச்சாவடிகளோ இராணுவ பொலிஸோ எனக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தில் சென்று அனுமதி பெற்று விசேட pass நடைமுறையோடு பயணிக்க வேண்டிய நிலையில் எங்களுக்கு Medical council பதிவு அட்டையையோ அல்லது வைத்தியசாலை பணியாளர் அட்டையையோ காட்டினால் போதும் என்ற ஏற்பாடு இருந்தது.

என்றாலும் எனக்கு பயணம் முழுவதும் பிரச்சினையாக மனதில் உறுத்திக்கொண்டே இருப்பது அநுராதபுரம் – புத்தளம் A12 நெடுஞ்சாலை தான். எப்படியாவது A12ஐ கடக்கும் வரையில் இனம்புரியாத பதற்றத்தோடு மனம் இருக்கும்.

அநுராதபுர நகரில் இருந்து நான்கு கி.மீ வந்தால் A12 நெடுஞ்சாலை ஆரம்பமாகும். இடையில் சிறு சிறு கிராமங்களோடு பாதை 76 கிலோமீட்டர்களிற்கு வளர்கின்றது. பெரும்பாலும் இந்த வீதியின் இரண்டு பக்கங்களும் காடுகள் தான்.

பொதுப்போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட பெருவாகனங்களின் இரைச்சலும் தூசுமண்டலங்களும் இல்லாத காலம் அது என்பதால் காட்டின் எல்லை வீதிகளுக்கும் நீளத்தொடங்கியது. காட்டு மான்களும் , மயில்களும் , சிறு பறவைகளுமாக நிரம்பத்தொடங்கிய அந்த வீதியும் மெல்ல மெல்ல காடாகிக்கொண்டிருத்தது. அதிகாலையில் வண்ணத்திப்பூச்சிகள் முகத்தில் அடிக்க , பறவைகள் கீச்சுக்களுடன் மிக அழகான பயணங்கள் தான். என்றாலும் வன்னியாகம , நொச்சியாகம , வீரக்கொடிச்சோலை , விலபத்து போன்ற பல காடுகளை ஊடறுத்துப்போன அந்தப்பாதையில் தான் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் இடம்மாறும் இடங்கள் இருக்கின்றன. இந்த கொறோனாவால் பயணிகள் பஸ்கள் பார ஊர்திகள் என்று எதுவுமே இல்லாத வெற்று வீதிகளில் எப்படியும் வீதிகளை நோக்கி காட்டு மிருகங்கள் படையைடுக்கும். இப்படியாக யானைகளை நான் எதிர்கொள்ள நேரிட்டால்….!!!

இது தான் எனக்கிருந்த பெரிய பிரச்சினை.

அந்த பாதை 76கிலோமீட்டர்கள் நீண்டு புத்தளத்தை அடைவதற்கு முன்னர் கடைசியாக இருக்கின்ற பிரதேசம் தான் கருவலகஸ்வவ. தமிழில் சொன்னால் கருவேல மரக்குளம் .

இந்த கருவெலகஸ்வெவ இலும் , ஏனைய கிராமங்களிலும் விவசாயக்குடும்பங்கள் பல வாழ்கின்றன. காடுகளை அழித்து சேனைச்செய்கை , தோட்டங்கள் , வயல்கள் என மக்களின் விவசாய செயற்பாடுகளிற்கு இங்கேயுள்ள சிறிதும் பெரிதுமான பல குளங்கள் நீராதாரத்தை வழங்குகின்றன. அதில் பிரதானமானது தப்போவ குளம். இந்த நீராதாரங்கள் தான் காட்டு மிருகங்களுக்கும் பயன்படுகின்றன. ஆகவே குளங்களைத் தேடி வருகின்ற யானைகள் வயல்களையும் சிதைத்து விட்டுச்செல்கின்றன.

ஆக யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வீதிகள் தோறும் பல மக்களின் கிராமத்து வழிபாட்டிடங்களை காணமுடியும். சிறு குடில்களில் உள்ள அந்த கோயில்களை இறங்கிப்பார்த்தால் அங்கே யானையோடு நிற்கிற ஒரு ஆண் தெய்வத்தின் உருவம் வழிபடப்பட்டதை கண்டேன். ஏறத்தாழ இருபது வரையில் அந்த ஆண்தெய்வத்தின் வழிபாட்டிடங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு முறை போலவும் இம்முறையும் பாதுகாப்புக்காக உடலை மறைக்கும் ஜக்கட்டும் , தலைக்கவசங்களோடும் , ஹெட்செட்டில் சந்தோஷ் நாராயணன் பாடல்களை ஒலிக்க மோட்டார் சைக்கிளில் கொழும்பு நோக்கிய ஒரு பயணத்தின் இடையில் வந்து கொண்டிருக்கிற போது தான் இந்த அதிர்ச்சி என்னை எதிர்ப்பட்டிருந்தது.

மிக அழகான அந்த தப்போவ குளத்தின் ஓரங்களில் தாவுகின்ற மந்திக்கூட்டங்கள் மலிந்திருந்தன. குளக்கட்டில் மயில்கள் மீன்கொத்திகள் புளினிகளோடு நானும் பறவையாகி பறந்து வந்து கொண்டிருந்த எனக்கு அது ஒரு sudden break.

❤

“தப்போவ குளக்கரையோரம் ஒரு அய்யனார் கோவில்” என்று எப்போதோ வாசித்த பழைய சில ஞாபகங்கள் வர பல குழப்பகரமான சிந்தனைகளோடு திரும்பிச்சென்று கிட்டப்போய் கோவிலை அண்மித்தேன்.

என் கண்கள் இப்போது பனிக்கின்றன..

ஆம்..

இது தானா நான் வாசித்தறிந்த , காணத்துடித்த அந்த புதையல்….

❤

சிறு மடம் போல கட்டப்பட்டிருக்கிற கோயிலின் முகப்பில் ” அய்யநாயக்க தேவாலய , தப்போவ ” என வட்ட வட்ட எழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

யோசிப்பதற்கு இனி எதுவுமில்லை.

இதுவே தான் அது.

எம்பிரான் அய்யனார் எங்கள் பகுதியில் சிவனாகவும் ஐயப்பனாகவும் மாறிவருவதை போல வடமேற்கில் அய்யனாரின் இன்னொரு வேர்சன் தான் இந்த தப்போவயில் உள்ள அய்யநாயக்க தெவியன். எங்கள் அய்யனார் !!!

கோவிலுக்கு முன்னால் ஒரு பெரிய மரம்…

அடடே…

இருநூறுவருசத்துக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் நூல்களிலும் குறிப்புக்களிலும் சொன்ன அதே மரம் அல்லவா இது..

அக்காலத்தில் புத்தளத்தை அடைபவர்கள் அநுராதபுரம் செல்வதானால் தப்போவ சரணாலயம் , வன்னியாகம , வீரக்கொடிச்சோலை ( பெயரை கவனித்தீர்களா? அடர் காட்டுக்கு என்ன அழகான தமிழ்ப்பெயர் வீரக்கொடிச்சோலை ), ஆனைமடுவின் வடபகுதி போன்ற அடர்காடுகளின் யானைகள் கடக்கும் பகுதிகளை கடந்து செல்லவேண்டும்.

இந்தப்பயணங்களின் போது யானைகளிடம் இருந்தும் வேறு இடையூறுகளிடம் இருந்தும் தாங்கள் பாதுகாப்பாக சென்று சேர வேண்டும்.

இதற்காக தப்போவ அய்யனார் கோவிலைத்தாண்டி காட்டுப்பாதைக்கு செல்பவர்கள் தங்களை பாதுகாக்கும் படி இந்தக்காவற்தெய்வம் அய்யனாரை வேண்டிக்கொள்வதோடு பயணத்தை ஆரம்பிக்க முன்னர் படத்தில் இருக்கிஎன்ற இந்த மரத்தில் ஒரு துணியை அல்லது கயிற்றை கட்டிவிட்டு அய்யனாரை வழிபட்டுச்செல்வார்களாம்.

இந்தக்கோயிலைப்பற்றி அந்தப்பகுதியினை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சொன்னவைகள் பலவாறான சுவாரசியமான விடயங்களை கொண்டிருக்கின்றன.

இது பொதுவெளி என்பதால் சிலவற்றை மட்டும் பதிவில் சேர்க்கிறேன்.

நேரடியாக பழைய புத்தகங்களில் தேடி நானாகவே சேர்த்த தகவல்கள் இவைகள் என்பதால் 100% உண்மையான தகவல்கள் என்பதை பொறுப்போடு சொல்லிக்கொள்ளுகின்றேன்.

தகவல்களை பார்த்து விட்டு நண்பர்கள் வடமேற்கையும் அய்யனாரையும் வைத்து சில அனுமானங்களுக்கு வரமுடியும்.

R.L Brohier தன்னுடைய History of Irrigation and Colonisation in Ceylon நூலில் தப்போவவை பற்றி சில குறிப்புக்களை ஆய்வாளர் தந்திருக்கிறார். அதில் ஒரு குடியிருப்பின் எச்சங்களுக்கு ஆதாரங்கள் இருந்ததாக சொல்கின்றார்.

இந்த தப்போவ குளத்தைச்சுற்றி 32 கோவில்களின் சிதைவுகளும் நீரேந்து பகுதியில் 18 சிற்றூர்களும் , இதையண்டி 108 கைவிடப்பட்ட கிராமங்களும் இருந்ததற்கான சிதைவுகளை தான் அவதானித்ததாக குறிப்பிட்டிருக்கின்றார் R.L. Brohier .

அவரின் புத்தகத்தின் படி இதன் நீரேந்து பகுதியை நன்னேரிக்குளம் என்ற பெயரில் அப்போது வழங்கியிருக்கிறார்கள்.

இந்த அய்யனார் கோவில்களை பற்றிசொல்கிற போது Frank Modder என்பவர் தன்னுடைய Gazzter of the puttalam district நூலில் ” Every traveller who passes this way hangs a piece of rag or colth on a branch of the tree which stands there to propriete the favor of ayyanar , a god who presides our forests ” என்று நான் ஆரம்பத்தில் சொன்ன காவல் தெய்வம் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்.

அது என்ன பெயர் தப்போவ என்ற கேள்வி மனதில் எழலாம்..

இதற்காக தப்போவவிற்கு சில கி்லோமீட்டர் தொலைவிலுள்ள ஆனைமடு பரமகந்த , தோணிகல கல்வெட்டுக்களை இணைத்துப்பார்க்க வேண்டும் என்கிறார் வரலாற்றாசிரியர் Nevil .

Nevil அவர்களின் Taprobanian நூல் 1885 இல் வெளியிடப்பட்டது இதில் தப்போவ என்ற பெயர் எப்படி வந்திருக்கலாம் என்று சில ஊகங்களை தருகின்றார்.

தப்போவ ” தவக்கிரியை நகர் ” என்றழைக்கப்பட்டிருப்பதற்கு இவர் தோணிகல கல்வெட்டோடு பிணைத்து ஆதாரம் தருகிறார். தவக்கிரி என்பதில் தவ என்பது tapas என்பதன் தமிழ் வேர்ச்சொல். Penance அல்லது prayer ஐ குறிக்கின்றது. கிரி என்பது rock என்பதை குறிக்கின்றது. தவக்கிரி – தவரிக்கி – தபரக்கி – தபோவிய – தப்போவ என்று மருவிவந்ததாக கூறுகிறார். துறவிகள் தவமியற்றுபவர்கள் வாழ்ந்த சூழல் என்பதாற்போல அவரின் விளக்கங்கள் அமைந்திருக்கும்.

தவக்கிரி என்ற சொல் குறிப்பிடப்படுகின்ற கல்வெட்டு “கோயிலாண்டி கம” என்ற இடத்தில் “பரமகந்த” என்கிற குன்றில் கிடைக்கின்றது.

Frank modder என்பவர் 1921 இல் எழுதிய Manual of the Puttalam district என்ற நூலில் “பரமேஸ்வர குமாரயா ” என்ற இளவரசன் ஆண்ட பிரதேசம் என்று உள்ளூரில் மக்கள் நம்புவதாக எழுதியிருக்கிறார்.

பரமகட்டு பகுதியை பற்றிய குறிப்பில் Modder இதன் பெயர் 1891 குறிப்புக்களில் பெருமக்கட்டு அல்லது பெருமாள் கட்டுவ என்று காணப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

Simon Casie chetty அவர்களின் Ceylon Gazetteer நூலின் படி தப்போவ உள்ளிட்ட பரமகந்தவிற்கும் குதிரைமலைக்கும் கலா ஓயாவிற்கும் திவுறும்கலவிற்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் புத்தளம் நாவற்காடு சித்திராவெளி கிராமங்களோடு ஒரு தமிழ் குறுநிலத்தலைவனுக்கு வழங்கப்பட்டிருந்தன என்கிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டிலேயே மாதம்பை அரண்மனையில் வைத்து ” இராஜவன்னியன்” என்பவனுக்கு முப்பது சோடி தந்தங்கள் அரசவாள் இராசமுத்திரையுடன் தப்போவ உள்ளிட்ட மேற்சொன்ன பிரதேசங்கள் தனிவல்லபாகு மன்னனால் உடைமையாக அளிக்கப்பட்டதாக செப்புச்சாசனங்களை Simon Casie Chetty அவர்கள் தன் Ceylon Gazzeter இல் மேற்கோள் காட்டியிருப்பார் .

1867இன் Administration report of the Puttalam district இந்த தெய்வத்தை அய்யனா பண்டார என்கிறது. இந்த அய்யனா பண்டார தெய்வத்திற்கு பல ஏக்கர் நிலங்கள் நிவந்தங்களாக கோவிலின் கீழ் இருந்த்தாகவும் அதே Administration reportஇன் குறிப்புக்கள் சொல்கின்றன.

இப்படி பல தகவல்கள் இந்த தப்போவ அய்யனாரை பற்றிய குறிப்புக்களில் கிடைக்கின்றன.

இந்த அய்யனார் கோவிலை தமிழ் மக்கள் இந்தப்பகுதியின் சிங்கள மக்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களும் வழிபட்டதான குறிப்புக்கள் 1911 இன் இலங்கை அதிகாரபூர்வமான சனத்தொகை கணக்கெடுப்பான THE REVIEW OF THE RESULTS OF THE CENSUS OF 1911 என்ற நூலில் நிர்வாகசேவை அதிகாரி E. B. DENHAM குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூலின்படி தப்போவ , வெல்லஸ்ஸ மட்டுமில்லாமல் இன்னும் பல புனித மரங்களின் கீழ் உள்ள அய்யனாரை புத்தளத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் வழிபட்டதாகவும் Denham குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து வந்து தப்போவவை தாண்டி புத்தளம் அடைந்து அங்கிருந்து சிலாபம் வரையில் A12 மற்றும் A3 வீதிகளில் பிரதான வீதியில் மட்டும் ஏறத்தாழ இருபதுவரை அய்யனார் அய்யநாயக்க தெய்வத்தின் கோவில்களை சிறு குடில்களாகவும் கட்டடங்களாகவும் அவதானிக்க முடியும்.

அவைகளில் பல ஆலயங்கள் பல நூறாண்டுகள் பழைமையானவை என்பதே இவைகள் தருகின்ற ஆய்வு முடிவுகள் எனலாம்.

இருந்த போதும் அய்யனாரை பொதுவான வடிவத்தில் அல்லாது பல வேறு வடிவங்களில் பெயர்களில் விதம் விதமான உருவ அமைப்பு வாகனம் கோவில் வழிபாட்டு முறைகளில் வழிபடுவதையும் வடமேற்கு முழுவதும் அவதானிக்க முடியும்.

அந்த அய்யனார் வழிபாட்டிடங்களையும் படங்களாக இணைத்திருக்கின்றேன்.

படங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் பலதரப்பட்ட விளக்கங்கள் விபரணங்கள் இருக்கின்றன. அவைகளை விரைவில் எழுதவிருக்கிறேன்.

அதுவரையில் அய்யனாரின் பாதுகாப்பில் அமைதியாக இருக்கட்டும் வடமேல் இலங்கை.

Related posts

நாலடி நதி இசை

Thumi202121

பரியாரியார் Vs அய்யர்

Thumi202121

அடுத்த வருசமும் சூரன் வருவானா?

Thumi202121

Leave a Comment