இதழ் 52

அடுத்த வருசமும் சூரன் வருவானா?

“அப்பா… போன வருசம் தானே இதே சூரனை முருகன் வேலால் இங்க வைச்சு அழிச்சார். இப்ப எப்படி திருப்பி சூரன் வந்தவர்? அப்ப முருகன் சூரனை ஒழுங்கா அழிக்கலையா அப்பா?”

சூரசம்ஹாரம் காண தந்தையுடன் சென்ற குழந்தை ஒன்றின் கேள்வி இது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அந்த தந்தை முழித்தார். குழந்தை விடவே இல்லை. சூரன் போரை பார்ப்பதை விட இப்போது இந்தக் கேள்விக்கான விடை அந்தக் குழந்தைக்கு தெரிந்தாக வேண்டும்.

“போன வருசம் சூரனை அழிக்கத்தான் போனார். பிறகு பாவம் பார்த்து மயிலாயும் சேவலாயும் மாற்றி தன்னோடே வைத்துக் கொண்டார். சூரன் திருப்பி புத்தி கெட்டு இந்த வருசமும் சண்டைக்கு வந்து நிக்கிறான்.”

அந்த நேரக் கேள்வியில் இருந்து தானும் தப்பி முருகனின் மானத்தையும் காத்துவிட்ட பெருமிதத்தில் தந்தை மகிழ்ந்திருக்க நெடுநேரம் அந்தக்குழந்தை விடவில்லை.

“இந்த வருசமாவது ஒழுங்கா அழிப்பரா? இல்லை அடுத்த வருசமும் சூரன் வருவானா அப்பா?”

சூரன்போரில் முருகனை சூழ்ந்து வரும் வீரவாகுதேவர் போல குழந்தையின் கேள்விகள் தந்தையை சூழ்ந்து நின்றன. எப்படியாவது சமாளித்து விட முயன்றார்.

“சண்டை முடியத்தான் தெரியும். சத்தம் போடாம சூரன்போரை பாரம்மா!”

சூரன் போர் நடந்தது. மீண்டும் மயிலாகவும் சேவலாகவும் மாறினான் சூரன்.

“என்ன முட்டாள் முருகனா இருக்கிறாரேப்பா. போனமுறை பட்டும் அறிவு வரலயே இந்த முருகனுக்கு.”

கோபத்தோடு வெளிப்பட்டதால் குழந்தையின் வார்த்தைகளில் சத்தம் அதிகமாக இருந்ததால் நாதஸ்வர மேள கானங்களைத் தாண்டியும் அந்தக்கேள்வி சிலரது காதுகளை எட்டியது. கேட்டவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.

குழந்தையின் வாயை தன் கைகளால் மூடிய தந்தை,
“சாமியை அப்படியெல்லாம் பேசக்கூடாதம்மா! தண்டிச்சுப்போடுவார்.”

“மிஞ்சி மிஞ்சிப்போனா மயிலா இல்லடாட்டி சேவலாத்தானே மாத்துவார் அந்த சாமி.”

தந்தையால் பதிலேதும் பேசமுடியவில்லை. இந்த தந்தை மட்டுமல்ல இங்கே பல தந்தை தாய்க்கு தங்கள் சின்னக் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதேயில்லை.

ஆசிரியரோ அல்லது உயரதிகாரியோ அல்லது வேறு யாரோ கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது கூறி சமாளிக்கலாம். ஏனென்றால் அந்த கேள்விகள் தம் திறமையையும் எம் திறமையையும் சோதிக்கும் நோக்கில் கேட்கப்படுபவை.

வேலைக்கான நேர்காணலில் கேட்கப்படும் வினாக்களில் சரியான விடையை விட அந்த சூழலை எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம். பயமும் பதற்றமும் இல்லாமல் சாதுரியமாக அந்தக் கேள்விக்கான பதிலை சொன்னாலே அங்கு போதுமானது.

ஆனால் குழந்தைகள் கேட்கும் கேள்விகளை இந்தப் பார்வை கொண்டு பார்க்க கூடாது. எந்த தந்தையையும் சோதிக்க குழந்தை கேள்வி கேட்பதில்லை. குழந்தைகள் இந்த உலகத்திற்கு புதியவை. அவர்கள் இவ்வுலகை அறியவே கேள்வி கேட்கிறார்கள். இந்தக் கேள்விகள் தேடல்கள் நிறைந்தவை. இதற்கு தவறாக பதில் சொன்னால் அவர்கள் இந்த உலகை தவறாக புரிந்து கொள்ள நிறையவே வாய்ப்பிருக்கிறது.

இங்கே பார்த்தீர்கள் என்றால் அந்த தந்தை சொன்ன பதில்களால் அந்தக்குழந்தைக்கு தெய்வத்தின் மீதான நம்பிக்கை குறைந்துதான் போயிருக்கிறது. சிறுவயதில் ஏற்ப்ட்ட இந்த சம்பவம் அந்தக் குழந்தை மனதில் கடவுள் பற்றிய ஒரு தவறான விம்பத்தை ஆழமாக ஏற்படுத்திவிட அதிக வாய்ப்பு உள்ளது.

சூரன் போர் சம்ப்ந்தமான இந்த குழந்தையின் கேள்விக்கு எங்களில் எத்தனை பேருக்கு ஒழுங்காக பதில் சொல்லத்தெரியும்? சூரன் போரின் உண்மையான விளக்கம் எங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

வாருங்கள் முதலில் அதைப்பற்றி அறிவோம்.

புராணங்களை கதைகளாக கேட்பது முதல்நிலை. அந்தக் கதைகளுக்குள் இருக்கும் அர்த்தங்களையும் தத்துவங்களையும் உணரத்தொடங்குவது இரண்டாவது நிலை. முதல் நிலையோடே நிறுத்திக்கொண்டவர்கள் சமய தத்துவங்களை ஏளனமாகப் பார்க்கும் நாத்தீகர்களாகி விட அதிக வாய்ப்பு இருக்கிறது. இரண்டாம் நிலைக்குள் நுழையும் போதுதான் மெஞ்ஞான அறிவை சுவைக்கத் தொடங்கலாம்.

புராணம் சொல்லும் சூரன் ஒரு அரக்கன். எல்லோரையும் துன்பப்படுத்தியவன். இறைவனாலன்றி அழிக்க முடியாத வரம் பெற்றவன். அப்படி உண்மையில் இருப்பது யார்? நான், எனது என்கிற ஆணவமும் அகங்காரமும் தான். இந்த அகங்காரத்தை அழிக்க முடியாது. நான் என்கிற அடையாளத்திற்கும் நான் என்கிற அகங்காரத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அகங்காரத்தை அழிக்க நினைத்து அடையாளம் அற்றுப் போனவர்களும் உண்டு. அடையாளத்தை காக்க நினைத்து அகங்காரத்தோடு வாழ்ந்தவர்களும் உண்டு.

சூரனை ஒவ்வொரு வருடமும் அழித்தும் சூரன்போர் ஒவ்வொரு வருடமுமா நடக்கிறது?

சூரன் போர் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஒவ்வொரு கணமும் நடக்கிறது. என்னால்த்தான் நடக்கிறது, நான்தான் செய்கிறேன் போன்ற எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான போர் எங்களுக்குள் ஒவ்வொரு கணமும் நடக்கிறது. சூரன் போரில் யானைத்தலையை அழிக்க சிங்கத்தை தலையோடு வருவான். இறுதியில் மாமரமாகி பின் சேவலாயும் மயிலாயும் முருகனை சரணடைவான். எனவே சூரன் தன் வடிவங்களை மாற்றி போர் புரிவது போல் ஆணவமும் வெவ்வேறு வடிவங்களில் எங்கள் அன்றாட வாழ்வில் எங்களோடு போர் புரிந்து கொண்டே இருக்கும். ஞானத்தெளிவை அடையும் போது அந்த ஆணவம் தன் தீமைத் தன்மை கெட்டு சேவலும் மயிலும் போல் இறையடியில் சமர்ப்பணமாகும். ஆனாலும் அது எம்கூடவே உறங்கு நிலையில் இருக்கும். அடுத்த வருடம் மீண்டும் போருக்கு வரும் சூரன் போல ஆணவம் எந்த நேரமும் மீண்டும் எங்களோடு மீண்டும் சண்டைக்கு வர சந்தர்ப்பம் பார்த்து இருக்கும். காலம் உள்ள வரை எங்களுக்குள்ளும் சரி ஆலயங்களிலும் சரி சூரன்போர் நடந்துகொண்டுதான் இருக்கும்.

இது போன்ற தத்துவங்களை குழந்தைகளின் வயசுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக புரியவைக்க வேண்டும். அதுதான் குழந்தை வளர்ப்பின் முக்கிய நிலையாக பார்க்கப்படுகிறது.

லகரத்திற்கும் ழகரத்திற்கும் வித்தியாசம் தெரியாத பெற்றவர்களின் பிள்ளையின் தமிழ் உச்சரிப்பில் தவறுகள் இருக்கத்தான் செய்யும். ஆக, பெற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்று கூறவில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளக்கூடாது என்கிறேன். அறிவு பூர்வமான குழந்தைகளின் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் தைரியமாக உங்கள் இயலாமையை ஒத்துக்கொள்வதோடு குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாராட்டத் தவறாதீர்கள்.

” அடடே என்ட குட்டி பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்கிறா. கெட்டிக்காரி. விக்கி மாமாக்கு இத பற்றி நல்லாத்தெரியும். அவரிட்ட போய் நாளைக்கு கேப்பம்.”

இப்படி அந்த கேள்வி சார்ந்தவர்களிடம் அழைத்துச்சென்று அந்தக் கேள்விக்கான பூரண விளக்கத்தை குழந்தை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு அறிந்து கொள்ள உதவ வேண்டும். அதற்காக எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உங்கள் இயலாமையை வெளிக்காட்டுவீர்களாக இருந்தால் குழந்தை மனதில் நீங்கள் ஒரு முட்டாளாக உருவகப்படுத்தப்படும் ஆபத்தும் இருக்கிறது. எனவே இயன்றவரை உங்கள் சமய, பொது, தமிழ் அறிவையும் வளர்ப்பது நல்லது.

குழந்தையின் கேள்விக்கு பக்திமயமாக பதில் சொன்னால் பக்தனாகும். அறிவுபூர்வமாக பதில் சொன்னால் புத்திமானாகும். சமாளித்து விட்டால் சாமானியனாகும்.நக்கலடித்தால் முட்டாளாகும்.

எனவே, எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைதான். அது நல்லவராவதும், தீயவராவதும் பெற்றவர் வளர்ப்பில் என்பதை உணர்ந்து, அந்த குழந்தைகளுக்கு இந்த உலகை ஆரோக்கியமான முறையில் அறிமுகம் செய்து வைக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை என்பதை உணர்த்தும் தினமாக இந்த சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவோம்.

பிரகலாதர்கள் இங்கே குறைவு.

எனவே இரண்யகசிபுக்காளாக இருப்பதை இயன்றவரை குறைப்போம்.

Related posts

வினோத உலகம் – 17

Thumi202121

முன்னுதாரணமாகும் சமுதாயச் சமயலறை

Thumi202121

ஈழச்சூழலியல் 38

Thumi202121

Leave a Comment