இதழ் 52

பரியாரியார் Vs அய்யர்

வழமையாக ஆட்களுக்கு குறைவில்லாமல் இருக்கும் வைத்தியலிங்கப் பரியாரியார் வீடு அன்று ஆளரவம் இன்றி அமைதியாக இருந்தது. இணுவிலிலேயே படித்த மட்டுமல்ல கைராசி மிக்க ஆயுர்வேத மருத்துவர் என்றால் அது வைத்தியலிங்கப் பரியாரியார் தான். கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டுமல்ல மன்னார் திருகோணமலையில் இருந்தெல்லாம் சனம் பலமணி நேரம் காத்திருந்து மருந்து வாங்கிப் போவது வழமை. பாலாடை வீதி என்றால் தெரியாத சனத்துக்கும் பரியாரியார் தெரு என்றால் தெரியும். காடுகளில் இல்லாத மூலிகைகள் கூட பரியாரியாரின் வீட்டு வளவில் இருக்கும் என்பார்கள். கோயில் மரங்கள் என்று வீடுகளில் வளர்க்காமல் ஒதுக்கி வைத்து விட்ட மகிழ மரம், செண்பக மரம் என பல வித்தியாசமான மரங்கள் நிறைந்த வீடு அவருடையது. அவரை பார்க்கத் தேவையில்லை, அந்த வீட்டுக் காற்றே எந்த நோயையும் குணப்படுத்தும் என்பார்கள்.

அவசர அவசரமாக யாரோ மகிழ மரத்தடி வாசலில் நின்று பரியாரியார் பெயரை ஏலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த தெரு கற்பகப்பிள்ளையார் கோயிலில் போடப்பட்டிருந்த கந்தசஷ்டி கவசத்தின் சத்தத்தால் அந்த சத்தம் போட்டவனின் சத்தம் பரியாரியார் வீட்டுக்குள் கேட்கவில்லை. இது இங்கு புதுமையல்ல, வழமை! பரியாரியாரே இதைப் பலதடவை எதிர்த்திருக்கிறார். பரியாரியாரின் மகன் ஏ எல் பரீட்சை எடுத்த காலத்தில் அம்பலவாண ஐயருக்கும் வைத்திலிங்கப் பரியாரியாருக்கும் பலத்த சண்டை.

“மனமுருகிப் பாடுங்கள் என்று முன்னோர்கள் எழுதி வைத்ததை ஒலிபெருக்கியில் அலற வைத்தால் அதற்குப் பெயர் பக்தியா?”

என்று ஆட்களை சேர்த்து பரியாரியார் போராடியும் அம்பலவாண ஐயர் அசறவில்லை. சாமி சமாச்சாரம் என்பதால் எதிர்ப்புக் குரல்களை ஐயரால் இலகுவாக அடக்க முடிந்தது.

பரியாரியார் மகன் பரதன் பலரும் எதிர்பார்த்த படி ஏ எல் பரீட்சையில் பல்ப்பு வாங்கியது தான் மிச்சம்.

“கோயிலில் பூட்டிய ஒலிபெருக்கியால்த்தான் அவன் படிப்பு குழம்பினது ” இது பரியாரியார் வாதம்!

“சாமிப் பாட்டை நிப்பாட்டச்சொல்லி சண்டைக்கு வந்த தகப்பன் பாவம் தான் மகன் படிப்பை பாழாக்கிப் போட்டுது” எது அம்பலவாண அய்யரின் எதிர்வாதம்!

“அவனுக்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு வாராது. அதுக்கு சாமி என்ன செய்யும்? ஒலிபெருக்கி என்ன செய்யும்?” என்றது ஊரில் சில பேரின் ரகசிய வாதம்.

இப்படி பரியாரியாருக்கும் அய்யருக்கும் பல உட்பூசல்கள் இருந்து கொண்டு தான் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் என்னதான் சண்டை பிடித்தாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யத் தவறுவதில்லை. பரியாரியார் வீட்டு புரோகிதம் தொடக்கம் கிரியைகள் வரை அம்பலவாண அய்யர் தான் செய்வார். அதே போல அய்யர் வீட்டில் யாருக்கு என்ன வருத்தம் என்றாலும் பரியாரியாரின் வைத்தியம்தான் குணமாக்கும்.

அன்றும் அப்படித்தான்…
அய்யரின் ஆச்சிக்கு மூன்றுநாளாக சோறு இறங்கவில்லை. தண்ணீர்ச் சாப்பாடு மட்டும் தான். வயசு என்னதான் நூற்றி ஆறில் நடந்தாலும் வாழும் வயசுதான் என்பது அய்யர் எண்ணம்.

“அந்தக் காலத்தில அதிகாரிமார் பிறப்புச் சான்றிதழ்ல ஏதோ பிழையாய் எழுதிப் போட்டினம். குறைஞ்சது முப்பது வருசமாவது குறைச்சு எழுதிப் போட்டாங்கள்.” என்று அய்யர் தன் எண்ணத்திற்கு திண்ணம் சேர்க்க சில கதைகள் கைவசம் வைத்திருக்கிறார்.

ஆச்சியும் அப்படித்தான். இளந்தாரிப் பெண்களே மூட்டு நோ, முள்ளந்தண்டு நோ என்று சொல்லும் ஊரில் திடகாத்திரமாக திரிந்த மனுசி. அய்யர் வீட்டில் முதல் ஆளாய் எழும்புவதும் இறுதி ஆளாய் படுப்பதும் இன்றுவரை ஆச்சிதான்!

இப்படிப்பட்ட ஆச்சி படுத்த படுக்கையாப் போனதால எல்லாருக்கும் அதிர்ச்சி! அய்யருக்கு பேரதிர்ச்சி! இரண்டு நாள் பார்த்தார். சரி வரவில்லை. ஆளை அனுப்பி பரியாரியாரை கையோடு கூட்டி வரச் சொன்னார்.

அந்த ஆள்த்தான் இங்க வந்து படலையைத் தட்டிக் கொண்டு நிக்கிறான். என்ன பயன்? கந்தசஷ்டி கவசத்தை மிஞ்சி அவனால் கத்த முடியவில்லை.

“சண்முகா சரணம்” என்று கவசம் முடிந்த பின்னர் தான் அவன் சத்தம் மெல்ல மெல்ல மகிழம் பூவின் வாசத்தோடு சேர்ந்து வீட்டிற்குள்ளே போனது.

“ஐயா… பரியாரியார் ஐயா… ஐயா…..”

வாங்கில் படுத்திருந்த பரியாரியாரின் மூக்குத்தான் அடைத்திருந்ததே தவிர காது அல்ல. சத்தம் கேட்டு மெல்ல மெல்ல எழும்பி தோலில் துண்டைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார்.

“யாரப்பா அது…?”

“ஐயா.. நான் கந்தசாமி வந்திருக்கன்..”

“அட நீயாப்பா… உள்ளவாப்பா.. உள்ள வா.. என் சங்கதி? காலங்காத்தால வந்திருக்காய்”

“அம்பலவாண ஐயா அனுப்பி விட்டார். ஆச்சிக்கு மூன்டு நாளா சோறு இறங்கலை. அது தான் உங்கள கூட்டிட்டு வரச் சொன்னார்.”

“அட.. அவங்களுக்குமா? “

“என்னங்கய்யா?”

“கொஞ்சம் பொறுப்பா.. வாறன்..” இருமிக்கொண்டே உள்ளே போனார் பரியாரியார்.

சிறிது நேரத்தில் கையில் ஒரு பையுடன் அவர் மகன் பரதன் வந்தான்.

“வாங்க கந்தசாமியண்ணை… போவம்.”

“அப்பா வாறன் என்டார். அது தான் பார்த்திட்டு இருக்கிறன்?”

“அவர் வரமாட்டார். நான் தான் வாறன். வாங்க போவம்.”

“இல்லைத் தம்பி! அப்பாவத்தான் ஐயா கூட்டிட்டு வரச் சொன்னார். “

” அதுதான் நான் வாறன் என்றன் அல்லோ.. பிறகு என்ன?”

பரதன் தொனி கடுமையாக கந்தசாமி அமைதியானார்.

அழைத்தது பரியாரியாரை!
வருவது மகன் பரதன்!
பகையை மறக்கவில்லையா? பரியாரியார்!
என்ன செய்யப் போகிறார் அய்யர்?

அடுத்த இதழில்….

Related posts

வினோத உலகம் – 17

Thumi202121

குறுக்கெழுத்துப்போட்டி – 47

Thumi202121

அடுத்த வருசமும் சூரன் வருவானா?

Thumi202121

1 comment

Leave a Comment