இதழ் 52

முன்னுதாரணமாகும் சமுதாயச் சமயலறை

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கடந்த மூன்று மாதங்களாக அதன் மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தி செயற்படுத்திவரும் “சமுதாயச் சமையலறை” பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

பல்கலைக் கழகத்துக்கு வருகின்ற மாணவர்கள் பலர் ஆகக் குறைந்தது ஒரு நேர ஆகாரத்தையேனும் பெற்றுக் கொள்வதற்கு சிரமப் படுகிறார்கள் என்பதை அறிந்த விரிவுரையாளர்கள் சிலர், தமக்கிடையே பங்களிப்பைச் செய்து, ஒரு சில மாணவர்களுக்குப் பசியாறச் செய்த கைங்கரியம் இன்று தினமும் சுமார் 1200 மாணவர்கள் வயிறாறச் சாப்பிடுவதற்கு வழிசெய்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஓரிண்டு விரிவுரையாளர்கள் தங்கள் பணத்தை வழங்கி, தாமே நின்று சமைத்து, மாணவர்களின் உதவியுடன் அவற்றை இன – சமய வேறுபாடின்றி பகிர்ந்து பங்கிட்டு வழங்கி வந்தனர். தங்கள் கண் முன்னே நூற்றுக் கணக்கான மாணவர்கள் பசியாறுவதைக் கண்ட ஏனைய பலர் தாமும் இணைந்து கொண்டதன் விளைவாக இன்று வரை தடையின்றி சுமார் 1200 மாணவர்கள் மதிய உணவைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தினமும் சமையலுக்குத் தேவையான செலவீனத்தை பல்கலைக்கழக சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகவும், சிலர் தனியாளாகவும் வழங்கி வருகின்றனர். அரச நிதியில் எந்தச் செலவுமில்லாமல் கூட்டுப் பொறுப்புடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

என்று கோபக்கனலை பசிக்கொடுமைக்கு எதிராக வெளிப்படுத்துகிறான் பாரதி

பொருளாதார நெருக்கடிக்குள் பல குடும்பங்கள் சிக்கித் தவித்துவரும் நிலையில் மாணவரின் அறிவுப்பசி தீர்வதற்கு வயிற்றுப்பசி தடையாக இருந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கும் யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் செயற்பாடு சிறந்த முன்னுதாரணமாகும். இதற்குக் காரணமானவர்களுக்கு துமியின் முதல் வணக்கங்கள். இவ்வாறு இருப்பவர்கள் எல்லோரும் தம்மாலான பணிகளை இந்த நெருக்கடி காலத்தில் செய்ய வேண்டுமென்பதே துமியின் பணிவான விண்ணப்பம்.

“யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி”

Related posts

டெனிஸ் உலகின் சக்கரவர்த்தி ரோஜர் பெடெரெர்

Thumi202121

சித்திராங்கதா – 50

Thumi202121

தப்போவ – ஒரு அய்யனார் தேசம்

Thumi202121

Leave a Comment