இதழ் 53

டெனிஸ் உலகின் சக்கரவர்த்தி ரோஜர் பெடெரெர் – 02

இதுவரை ஒரு ஆண்டில் பெற்ற அதிக தொடர் வெற்றிகளின் எண்ணிக்கை அடிப்படையில், ரோஜரின் மிகவும் வெற்றிகரமான 2006ம் ஆண்டில், அவர் ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது தனது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். தன்னுடைய சொந்த ஊரான பாஸேலில் முதல்முறையாக வெற்றி பெற்றது சிறப்பம்சமாகும், அங்கு அவரது ரசிகர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் தூதரர் ஆகி களத்துக்கு வெளியேயும் பெருமை சேர்த்தார், பெடெரெர்.

கடந்த ஆண்டைப் போலவே, 2007 இலும் ரோஜர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி, பிரெஞ்ச் பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். தொடர்ந்து நான்காவது ஆண்டாக (160 கிழமைகள்) உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரோஜர், ஜிம்மி கானர்ஸின் சாதனையை முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் உலக சாதனையாளரான பீட் சாம்ப்ராஸுக்கு எதிராக கண்காட்சிகளில் விளையாடிய ரோஜர், “மேற்பரப்புகளின் போர்” இல் நடாலுடன் மோதினர்: மேற்பரப்புகளின் போர் (Battle of Surfaces) என்பது நடால் விரும்புகிற களிமண் தரை ஒரு புறம், மற்றும் பெடெரெர் விரும்பிய புல் தரை மறு புறம்.

ஒப்பீட்டளவில் மோசமான பருவத்தின் தொடக்கமாக அமைந்த 2008ம் ஆண்டில், ரோஜருக்கு சுரப்பி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. ஆயினும்கூட, அவர் பாரிஸ் மற்றும் விம்பிள்டனில் இறுதிப் போட்டிக்கு வந்தவர் தொடர்ந்து நான்காவது முறையாக அமெரிக்க ஓபனை வென்று சாதனை படைத்தார். பெய்ஜிங்கில் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் இணைந்து ரோஜர், இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது ஒரு உணர்ச்சிபூர்வமான சிறப்பம்சமாகும்.

2009 ம் ஆண்டு ரோஜருக்கு ஒரு புகழ்பெற்ற ஆண்டாக மாறியது. தனது நீண்டகால காதலியான மிர்காவை ஏப்ரல் மாதம் திருமணம் செய்த ரோஜர், பாரிஸில் நடந்த பிரெஞ்ச் பகிரங்க தொடரை வென்றார். இது அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பதின் நான்காக உயர்த்தியதோடு மட்டுமில்லாமல் பீட் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனையையும் சமன் செய்ய வழிவகுத்தது. சில வாரங்களுக்குப் பிறகு அவரது ஆறாவது விம்பிள்டன் பட்டத்துடன், ரோஜர் பெடெரெர் ஒரே ஒரு சாதனை நாயகனானார். ஜூலை 23 அன்று மைலா ரோஸ் அண்ட் சார்லின் ரிவா என்ற இரட்டையர்கள் பிறந்ததன் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சந்தோசம் கூடியது.

2010 சனவரியில், ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் தனது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். பாரிஸ் மற்றும் விம்பிள்டனில் காலிறுதி தோல்விகளுடன் கூடிய கோடைக்காலம் ஆனது. உலக சுற்றுப்பயணத்தின் இறுதிப் போட்டியில் ரோஜர் வெற்றியை பெற்றது பருவத்தின் அற்புதமான முடிவாகியது. தனது அறக்கட்டளையின் ஆதரவுடன் எத்தியோப்பியாவில் ஒரு திட்டத்தைப் பார்வையிட்டதுடன், மேலும் 2010ம் ஆண்டை நடாலுக்கு எதிராக இரண்டு தொண்டு-கண்காட்சி ஆட்டங்களில் விளையாடி முடித்தார்.

கத்தார் ஓபனை வென்ற ரோஜர், மேலும் கடந்த வருட போட்டிகளின் உத்வேகத்தை 2011 இலும் தொடர்வார் போல் இருந்தது. இருப்பினும், இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓபனின் வெற்றி பெறாததால் பட்டத்தை தக்க வைக்க முடியவில்லை மற்றும் அதனால் நீண்ட வெற்றியில்லா வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக ரோஜர் ஏடிபி உலக தரவரிசையில் கீழ் இறங்கி, 2011 இல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியாமல் போன போதிலும், சீசனின் முடிவில் அவர் ஒரு அற்புதமான மீள்எழுச்சியை காட்டினார். முந்தைய ஆண்டைப் போலவே, லண்டனில் நடந்த ATP உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றார்.

ரோஜர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மற்றொரு சாதனை ஆண்டாக மாறியது 2012. விம்பிள்டனில் தனது 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடெரெர், உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். மற்றும் மொத்தமாக 302 வாரங்களுக்கு உலக தரவரிசையில் முதலிடம் வகித்து பீட் சாம்ப்ராஸின் சாதனையை தகர்த்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றமை அவரது வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. ரோஜர், மேலும் நான்கு பட்டங்களை வென்றார். நம்பமுடியாத 71 போட்டி வெற்றிகளின் (86%) மூலம், 2006 ஆம் ஆண்டிற்கு பின் அவரது மிகவும் வெற்றிகரமான டென்னிஸ் ஆண்டுகளில் ஒன்றாக மாறியது 2012.

ரோஜரின் டென்னிஸ் வாழ்க்கையில், இந்த 2013ம் ஆண்டு அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பல ஏமாற்றங்களைக் கொடுத்தது. முதுகுவலி பிரச்சனைகள் மற்றும் சில வழக்கத்திற்கு மாறான ஆரம்ப தோல்விகள் அவரது நம்பிக்கையை குறைந்ததால், பெரிய போட்டிகளில் சிலவற்றை மட்டுமே அவரால் சாதிக்க முடிந்தது. பதினோரு ஆண்டுகளில் முதல் முறையாக, உலக தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2013 இல் ஒரே ஒரு பட்டத்தை வென்றிருந்தாலும் – ஜெர்ரி வெபர் ஓபனில் – அவரது விளையாட்டுத் திறமைகள் பளிச்சிட்டன, குறிப்பாக சீசனின் இறுதியில் பேசல், பாரிஸ் மற்றும் லண்டனில் நடந்த போட்டிகளில், அவரது செயல்திறன் மேம்பட்டிருந்தது.

கடினமான முந்தைய பருவத்திற்க்குப் பிறகு, 2014 இல் தனது வழமைக்கு மீண்டும் திரும்பிய ரோஜர், ஏடிபி தரவரிசையில் ஆறாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். இந்த பருவத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரரும் ஆனார் ரோஜர் பெடெரெர். இந்த வெற்றிகரமான ஆண்டு, ஐந்து பட்டங்கள், டேவிஸ் கோப்பை வெற்றி மற்றும் ஜோகோவிச்சிற்கு எதிரான கண்கவர் விம்பிள்டன் இறுதிப் போட்டி ஆகியவற்றால் சிறப்புற்றது. அவரது வாழ்க்கையில் முதல்முறையாக, ரோஜர் சற்றே பெரிய ராக்கெட் (Racket) உடன் விளையாடி இருந்தார், இது அவரது serve க்கு பயனளித்ததுடன் நீண்ட நேர ஆட்டங்களின் போது அதிக அழுத்தத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில், ரோஜர் மீண்டுமொரு தொடர் வெற்றிகளைப் பெற்றார். பிரிஸ்பேனில், அவர் தனது தொழில் வாழ்க்கையின் 1000வது ஏடிபி போட்டியில் வெற்றி பெற்றார், மேலும் துபாயில் அவர் தனது 9000வது செட்க்கு serve செய்தார். இஸ்தான்புல்லில், ரோஜர் தொடக்க களிமண் போட்டி தொடரை வெற்றி பெற்றார். விம்பிள்டன் மற்றும் நியூயார்க் இல், இரண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் போதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த வருடத்தில் தான் ரோஜர் தனது புதிய யுக்தியான ‘SABR’ (ரோஜரின் ஸ்னீக்கி அட்டாக்), ஒரு அரை-வலி ரிட்டர்ன் பயன்படுத்துகிறார், இது அவரை வலைக்கு அருகில் வேகமாகச் சென்று எதிராளியின் இரண்டாவது serve வை தாக்க அனுமதித்தது. ஆயினும்கூட, 6 பட்டங்கள் மற்றும் 11 இறுதிப் போட்டிகள் இருந்தபோதிலும், ரோஜர் ATP தரவரிசையில் தனது நிலையை தக்க வைக்க முடியவில்லை மற்றும் இந்த ஆண்டை தரவரிசையில் மூன்றாம் நிலையில் நிறைவு செய்தார்.

2016 ஆம் ஆண்டு ரோஜருக்கு காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டாகும். வெறும் 7 ஏடிபி தொடர்கள் மற்றும் 2 கிராண்ட்ஸ்லாம்களில் விளையாடிய ரோஜர், டொமினிக் தீம், மிலோஸ் ராவ்னிக், நோவக் ஜோகோவிச், ஜோ வில்பிரைட் சோங்கா மற்றும் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் போன்ற சில கடுமையான எதிரிகளுக்கு எதிராக களம் கண்டார். தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒன்றல்ல, இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்களில் களம் காண முடியாமல் போனது. விம்பிள்டனுக்குப் பிறகு சீசனில் முடித்த ரோஜர், மேலும் இந்த ஆண்டு முழுவதும் குணமடைந்து மீண்டும் வலிமையாக வருவதில் முனைப்பு காட்டினார்.

அது போல் 2017 இல் திரும்பி வந்த ரோஜர் பெடெரெர், ஆஸ்திரேலியான் ஓபன், விம்பிள்டன் மற்றும் லவர் கப் என்பவற்றை வென்றார். அத்தோடு, இந்த ஆண்டு, 2012 க்கு பின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகள், 2007 க்கு பின் முதல் அதிக பட்டங்கள் மற்றும் 2006 க்குப் பிறகு அதிக வெற்றி சதவீதம் என்பவற்றை தந்தது. புள்ளியியல்படி, இந்த சீசன் 2007 க்குப் பிறகு ரோஜரின் சிறந்த ஆண்டாக திகழ்ந்தது. பெடரர் முதன்முறையாக நீண்டநாள் போட்டியாளரான நடாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் லவர் கப் தொடரில் ஐரோப்பா சார்பாக விளையாடியமை உற்று நோக்கப்பட்டது.

2018 இல் தனது இருபதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஆஸ்திரேலியான் ஓபன் இல் வென்ற ரோஜர், அதிக வயதில் உலக தரவரிசையில் முதல் இடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அத்தோடு ஹோப்மான் கப் மற்றும் லவர் கப் களில் சாம்பியன் ஆனார்.

2019 இல் ஹாப்மேன் கோப்பையை தக்கவைத்துக்கொண்டதன் மூலம் பெடரர், கலப்பு-பாலின போட்டியில் மூன்று முறை வென்ற முதல் வீரரானார். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பெடரர் தனது 100வது தொழில் ஒற்றையர் பட்டத்தை வென்றார். பெடரர் 2019 மாட்ரிட் ஓபனில் மூன்று ஆண்டுகளின் பின் தனது முதல் களிமண் தரை போட்டியில் விளையாடி தனது 1200வது தொழில் டென்னிஸ் வெற்றியைப் பெற்றார். ரோஜர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரெஞ்சு ஓபனில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில், ரோஜர் ஃபெடரர் அரையிறுதியில் நான்கு செட்களில் ரஃபேல் நடாலை வெளியேற்றிய பின்னர், தனது 12வது இறுதிப் போட்டியை எட்டி சாதனை படைத்தார்; 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குப் பிறகு பெடரர்-நடால் விம்பிள்டனில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும், இது டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டியாக கருதப்படுகிறது. ரோஜர் பின்னர் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார், அவருக்கு எதிராக 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நீடித்த ஐந்து செட் த்ரில்லில் தோல்வியடைந்தார்.

2020 இல் காயத்துடன் ஆஸ்திரேலியான் ஓபன் ஆடிய ரோஜர் அதில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

வலது முழங்காலில் சத்திர சிகிக்சை செய்து கொண்ட ரோஜர், 2021 இல் கத்தார் ஓபன் இல் தான் மீண்டும் களம் கண்டார். விம்பிள்டனில், 39 வயதான ரோஜர் காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம், ஓபன் சகாப்தத்தில் விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் ஆடிய அதிக வயதுடையவர் ஆனார். அத்துடன் 19 ஆண்டுகளில் விம்பிள்டனில் அவர் நேர் செட்களில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும், மேலும் 21வது நூற்றாண்டில் அவர் 6-0 என்ற செட்டை இழந்தது இரண்டாவது முறையாகும் (முந்தைய சந்தர்ப்பம் 2008 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நடாலுக்கு எதிராக ஆகும்).

இதற்க்கு பின், மீண்டுமொரு முழங்கால் சத்திர சிகிக்சை செய்து கொண்ட ரோஜர் 2022 இல் தான் இறுதி ஆட்டத்திற்காக லவர் கப் இல் மீள்வருகை புரிந்தார்.

ரோஜர் பெடெரரின் ஓய்வுக் காலம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய துமியின் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

மேற்கோள்: https://www.rogerfederer.com

Related posts

வினோத உலகம் – 18

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 02

Thumi202121

மலையகத்தின் முகவரி தெளிவத்தை யோசப்

Thumi202121

1 comment

Leave a Comment