மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் 21.10.2022 காலமானார்.

ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் மலையகத்தின் முகவரியாக இருந்தவர். இலங்கையின் அதியுயர் விருதான சாகித்யரத்னா விருதுக்கு சொந்தக்காரரான இவர் தனது படைப்புகளை மட்டுமல்ல தான் சார்ந்தவர்தம் படைப்புகள் வெளிவருவதற்கும் பெரும் துணை நின்றவர்.

சந்தனசாமி ஜோசப், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.

தெளிவத்தை ஜோசப் தமிழ்நாட்டில் கும்பகோணத்தின் உயர்நிலைப் பள்ளியில் கற்றதன் பின்னர், இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.

அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். அத்துடன் இலங்கை தமிழ் ஊடகங்களால் பல்வேறு ஆக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதேபோல் இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமது படைப்புக்களுக்காக அவருக்கு சாகித்திய விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013) சாகித்திய ரத்னா (2014) போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளன.


தன் எழுத்துக்களால் மலையகத்தின் வாழ்வியலை அடையாளப்படுத்திய தெளிவத்தை யோசப் அவர்களின் இழப்பு தமிழ் எழுத்துலகத்திற்கு பிரதியீடு செய்யப்பட முடியாத பேரிழப்பு என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. தன் படைப்புக்கள் வழியாக காலம் உள்ளவரை அந்த உன்னத ஆத்மா எம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவருக்கு துமியின் புகழ் வணக்கங்கள்.

(நன்றி-இணையம்)