இதழ் 53

உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக மென்அதிகாரத்தின் பரிணாமம்!

சர்வதேச அரசியலின் ஆதாரமாக அதிகாரம் என்பதுவே காணப்படுகின்றது. குறித்த அதிகாரம் அரசுகளுக்கிடையிலான உறவில் பல பரிணாமங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. அதிகாரத்தின் பரிணாமங்களில் முதன்மையானதாகவும், அரசியல் ஆதிக்கத்தின் மையமாகவும் கடந்த காலங்களில் வன்அதிகாரமே கோலோச்சி வந்துள்ளது. உலக ஒழுங்கின் தீர்மான சக்தியாகவும் அதுவே முதன்மை பெற்றது. எனினும், வன்அதிகாரத்தின் மாற்றம் பற்றிய உரையாடல்கள் பனிப்போருக்கு பின்னரான உலக அரசியலில் வியாபித்தது.

குறிப்பாக, பனிப்போர் முடிவில், அமெரிக்கர்கள் சோவியத் அச்சுறுத்தல் இல்லாத உலகில் தங்கள் இடத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தனர். நாடு வீழ்ச்சியடைந்து வருவதாக கிட்டத்தட்ட பாதிப் பொதுமக்கள் நம்புவதாகவும், சரிவை நம்புபவர்கள் பாதுகாப்பு வாதத்தை ஆதரிப்பதாகவும், அதிகப்படியான சர்வதேச கடப்பாடுகள் என்று அவர்கள் கருதும் விஷயங்களில் இருந்து விலக ஆலோசனை வழங்குவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. எனினும் வளர்ந்து வரும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகில், இத்தகைய அறிவுரைகள் எதிர்மறையானவை மற்றும் அது தவிர்க்கப்பட வேண்டிய சரிவைக் கொண்டு வரலாம்; ஏனெனில் மிகவும் சக்திவாய்ந்த நாடு வழிநடத்தத் தவறினால், சர்வதேச ஸ்திரத்தன்மைக்கான விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்ற உரையாடல்களும் சர்வதேச அரசியலில் முதன்மை பெற்றது. வரலாறு முழுவதும், சரிவு மற்றும் அதிகார சமநிலையை மாற்றுவது பற்றிய கவலை பதற்றம் மற்றும் தவறான கணக்கீடுகளுடன் சேர்ந்துள்ளது. சோவியத் சக்தி வீழ்ச்சியடைந்து, ஜப்பானிய சக்தி உயர்ந்தமை, அமெரிக்க சரிவு பற்றிய தவறான கோட்பாடுகள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பொருத்தமற்ற ஒப்புமைகள் ஆகியவை உண்மையான பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பியிருந்தது. இவ்வாறான பின்னணியில் அமெரிக்க களத்தை ஆதாரமான கொண்டு சர்வதேச அரசியல் உரையாடலில் வெளிக்கிளம்பிய அதிகார பரிமாணமாகவே மென் அதிகாரம் காணப்படுகின்றது.

இவ்உரையாடலின் வளர்ச்சி, 21ஆம் நூற்றாண்டு அரசியலில் மென் அதிகாரத்தை முதன்மை கோட்பாடாக்கி உள்ளது. மென் அதிகாரம் பற்றிய தேடல்களை அடையாளப்படுத்தியவர்களாக அமெரிக்க அரசறிவியலாளர்களே முதன்மை பெறுகின்றனர். குறிப்பாக அமெரிக்க அரசறிவியலாளர் ஜோசப் நை 1980களில் மென் அதிகார கோட்பாட்டை அமெரிக்க கொள்கை வகுப்புக்குள் உள்வாங்க வேண்டியதன் தேவையை அடையாளப்படுத்தினார். ஜோசப் நை அதிகாரக் கோட்பாட்பாட்டின் பரிணாமத்தை பின்வருமாறு விளக்குகின்றார்.
“சர்வதேச விவகாரங்களின் பாரம்பரிய யதார்த்தவாத பார்வையில், சர்வதேச அரசியலின் இறுதி விளையாட்டாக போர் இருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளாக, தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்ததால், போருக்கான வலிமையின் ஆதாரங்கள் அடிக்கடி மாறின. மேலும், 21ஆம் நூற்றாண்டில் அதிகரித்து வரும் பிரச்சினைகளில், போர் இறுதியான நடுவர் அல்ல. காலநிலை மாற்றம் அல்லது தொற்றுநோய்களுக்கு இராணுவ வளங்கள் தீர்வு அல்ல, ஆனால் தேசிய பாதுகாப்பு உத்திகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் பொது சுகாதார வளங்களை விட இராணுவ வளங்களுக்கு விகிதாசார கவனம் செலுத்துகின்றன. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் 1945 முதல் நமது அனைத்து போர்களையும் விட அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றது. முதலாம் உலகப் போரின் நான்கு ஆண்டுகளில் இறந்தவர்களை விட அதிகமான மக்களைக் கொன்றது.”


என்பதனூடாக வன் அதிகாரம் முழுமையான தீர்வாக அமையவில்லை என்பதையும் அதிகாரத்தின் மாறுபட்ட வடிவங்களின் தேவையையும் அடையாளப்படுத்துகின்றார். அவ்வாறான மாற்;று அடையாளமாகவே மென் அதிகாரத்தையும் முதன்மைப்படுத்துகின்றார். மென் அதிகாரம் என்பது, ஒருவரின் சில மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ள மற்றவர்களுடன் இணைந்து செல்வாக்கு செலுத்தும் திறன் மற்றும் அதன் விளைவாக, சர்வதேச ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கான ஒருவரின் நிகழ்ச்சி நிரலில் சில முக்கிய கூறுகளைப் பகிர்ந்து கொள்வது ஆகும்.

மென் அதிகாரத்தை முதன்மைப்படும் நை, அதனை அதிகாரத்தின் இரண்டாவது முகமாக குறிப்பிடுகின்றார். மேலும் குறிப்பிடுகையில்,
“ஒரு நாடு உலக அரசியலில் அது விரும்பும் விளைவுகளைப் பெறலாம். ஏனென்றால் மற்ற நாடுகள் அதன் மதிப்புகளைப் போற்றுகின்றன. அதன் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றன. அதன் செழிப்பு மற்றும் திறந்த தன்மைக்கு ஆசைப்படுகின்றன. அதைப் பின்பற்ற விரும்புகின்றன. இந்த அர்த்தத்தில், நிகழ்ச்சி நிரலை அமைப்பதும், உலக அரசியலில் மற்றவர்களை ஈர்ப்பதும் முக்கியம். மேலும் இராணுவ அதிகாரம் அல்லது பொருளாதாரத் தடைகளை அச்சுறுத்துவதன் மூலம் அவர்களை மாற்றும்படி கட்டாயப்படுத்துவது மட்டுமல்ல. இந்த மென்மையான சக்தி, நீங்கள் விரும்பும் விளைவுகளை மற்றவர்கள் விரும்புவதைப் பெறுவது மக்களை வற்புறுத்துவதற்குப் பதிலாக அவர்களை ஒன்றிணைக்கிறது” என்கின்றார்.

மென்அதிகாரத்தின் ஆரம்ப உரையாடல்கள் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைக்கான வழிகாட்டலுக்கானதாக அமைந்தாலும், அதனை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தி வெற்றிகரமான விளைவுகளை பெற்றுள்ள நாடாக சீனாவே காணப்படுகின்றது. 2007இல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது காங்கிரஸில் சீன ஜனாதிபதி ஹ_ ஜின்டாவோ மென் அதிகாரத்தை சீன வெளியுறவுக்கொள்கையில் முதன்மைப்படுத்த வேண்டியதன் தேவையை பிரதானப்படுத்தினார். அதனை சீனாவின் தற்போதைய ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெற்றிகரமாக கையாள்வதுடன் சிறந்த அறுவடையை பெற்று வருகின்றார். சீனா தனது மென்மையான சக்தி மூலோபாயத்தால் கலவையான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், சீனாவின் கருத்தாக்கத்தின் விதியால் தான் மிகவும் ஆச்சரியப்பட்டதகவும் ஜோசப் நை தனது மென் அதிகாரம் தொடர்பான கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்றரை தசாப்தங்களாக, வளர்ச்சி முயற்சிகளில் சீனாவின் விரைவான முன்னேற்றம், பொருளாதாரத்தில் தன்னை ஒரு முக்கிய முன்னோடியாக முன்னிறுத்தும் ஒரு நனவான முயற்சியுடன் சேர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அறிவிப்பு, நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் வலையமைப்பை மேம்படுத்துவதில் சீனாவின் ஆர்வம் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி என்பது உலகில் சீனாவின் மென் அதிகார இருப்பை நிறுவனமயமாக்குவதற்கும் உலகின் பிற பகுதிகளுடன் இணக்கத்தை உருவாக்குவதற்கும் முன்வைக்கப்பட்ட ஒரு வளர்ச்சியாகும். இந்த முன்முயற்சியானது, அமைதிக்கான பாதை என்று திட்டத்திற்கு சமிக்ஞை செய்யும் நட்புரீதியான ஒத்துழைப்பின் வழிக்கு ஒத்ததாக வைக்கப்பட்டுள்ளது. சீனா தனது கவர்ச்சியான தாக்குதல் அணுகுமுறைக்கு மிகப்பெரிய அளவிலான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன் உலகளாவிய மென் அதிகார இருப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

ஆமெரிக்காவை வளப்படுத்த திட்டமிட்டமிடப்பட்ட பொறிமுறையூடாக சீனா இன்று உலகாளும் வல்லமையில் உயர்ந்துள்ளது. அத்துடன் மென்அதிகாரத்தை தனது வடிவமாக உலகிற்கான புதியதொரு அதிகார பரிமாணமாகவும் நிலைநிறுத்தியுள்ளது. எதிர்கால உலக ஒழுங்கில் மென்அதிகாரமே சர்வதேச அரசுகளுக்கிடையிலான உறவின் ஆதாரமாகும் என்பதுவே அரசறிவியலாளர்களது ஆய்வு முடிவுகளும் உறுதி செய்கிறது.

Related posts

வினோத உலகம் – 18

Thumi202121

காலமே கதை சொல்லடா

Thumi202121

அதிசய மீன்களின் இறுதி யாத்திரை

Thumi202121

Leave a Comment