இதழ் 53

பரியாரியார் Vs அய்யர் – 02

இளமையை எல்லோரும் விரும்பக் காரணம் இளமை அழகானது என்பது மட்டுமல்ல இளமை ஆரோக்கியமானது என்பதும் தான். அப்படி நினைத்தவர்கள் எல்லோரும் அய்யரின் ஆச்சியை வந்து பார்த்திருக்க வேண்டும். முதுமையையும் விரும்பத்தொடங்கி இருப்பார்கள். தேகமெங்கும் ரேகைகள், வற்றிய சதைகள், சுருக்கங்களின் சருக்கங்கள், வெளிப்படும் என்புகள் என்று முதுமையின் அடையாளங்கள் ஆச்சிக்கு மட்டும் ஆபரணங்களாகத் தெரிந்த விந்தையை என்னவென்று சொல்வது? முத்துக்கள் அற்ற சிப்பியின் அழகை என்றாவது கவனித்திருக்கிறீர்களா? ஆச்சியின் பொக்கைவாயைப் பாருங்கள். இருண்ட குகைகளுக்குள்தானே விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் ஒளிந்திருக்கும். ஆச்சியின் வாயிலிருந்து வெளிப்படும் பற்கள் அற்ற சொற்கள் அத்தனையும் அனுபவங்கள். பல்லுப்போனால் சொல்லுப் போகாதென்று சொல்வதற்கென்றே ஒருத்தி வாழ்ந்து கொண்டிருந்தாள்.

தன் ஆச்சிக்கு மூன்றுநாளாக உடம்பு சரியில்லை என்பதால் பரியாரியாரை ஐய்யர் அழைத்திருந்தார். ஆனால் ஐயர் அனுப்பிய ஆளோடு பரியாரியார் மகன் பரதன்தான் வந்துகொண்டிருந்தான்.

பரியாரியாரின் வரவை எதிர்பார்த்திருந்த ஐயருக்கு பரதனின் வரவு ஏமாற்றத்தை அளித்ததாக தெரியவில்லை. அதையும் அவர் எதிர்பார்த்ததாகவே தெரிந்தது.

ஆச்சியின் நாடி பிடித்தென்ன ஆச்சியை ஏறெடுத்தும் பார்க்காமல் பரதன் மருத்துவம் செய்ய தொடங்கினான். கொண்டுவந்த இலைகளை அரைத்து சாறாக்கினான். அய்யரின் தங்கை சரோஜாவின் மகள் கௌசல்யா அந்த சாற்றை பாலில் கலந்து குடிக்க கொடுத்தாள். நாளைக்குள் முன்னேற்றம் தெரியாவிட்டால் மீள வந்து கூப்பிடுமாறு கூறிவிட்டு பரதன் விடை பெற்றான்.
ஆதங்கத்தில் இருந்த ஐயருக்கு ஆத்திரம் தான் வந்தது. ஏ. எல் இல் ஒரு பாடம் கூட சித்தியடையாத இவனெல்லாம் ஒரு வைத்தியரா? இவனது மருத்துவத்தில் சிறிதும் நம்பிக்கை இல்லாத அய்யருக்கு மூக்குக்கு மேல் கோவம் வந்தது. வம்புக்கு வராமல் நிக்கும் பரியாரியாருடன் வம்பு இழுப்பதுதான் சரி என்று முடிவெடுத்தார். ஆத்திரத்தில் அரைகுறையாக குடும்பியை முடிந்தவாறே அய்யர் வீட்டை நோக்கி கிளம்பினார்.

இதுவரை இவர்களுக்கிடையில் நிறையத் தகராறுகள் நடந்ததுண்டு. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் தன் தொழில் சார்ந்து மற்றவரை எதிர்த்ததில்லை. அந்த ஊரில் இருக்கும் ஒரே ஒரு நாட்டு வைத்தியர் எங்கட பரியாரியார்தான். அதனால் வைத்தியரா பரியாரியாரை அய்யர் அணுகும் போதெல்லாம் பரியாரியார் பழசு எல்லாத்தையும் மறந்திட்டு புது மனுசனா அய்யரை அணுகுவார். அதேபோலத்தான் அய்யரும். அந்த ஊரிலேயே எல்லோருக்கும் புரோகித அய்யர் அவர்தான். அவரும் புரோகித அலுவலாயும், பூசை புனஸ்காரங்கள் சம்பந்தமாயும் பரியாரியாரின் தேவைகளை பூர்த்தி செய்தே வந்திருக்கிறார். வைத்தி லிங்கத்திற்கும் அம்பலவாணருக்கும் பிரச்சனைகள் நிறையவே இருந்தன. ஆனால் பரியாரியாருக்கும் அய்யருக்கும் எந்த மனக்கிலேசமும் இருந்ததேயில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஊரில் அனைவரையுமே ஆச்சரியப்படுத்திய விடயம் தான் இது.
செய்யும் தொழிலை இருவருமே நேசித்தார்கள். இயன்றவரை தம் தொழில் சார்ந்து நேர்மையாக இருந்தார்கள். தம் தனிப்பட்ட கோபதாபங்களை அவர்கள் தம் தொழிலில் காட்டியதேயில்லை. ஊர் கண்ணே பட்டதாலோ என்னவோ இன்று தொழில் சார்ந்து முதல் தடவையாக மோதப் போகிறார்கள்.

இயல்பாக நடக்காத காரியங்கள் நடக்கும் போது இயற்கை முன்கூட்டியதாக சில சமிக்ஞைகள் காட்டும் என்பார்கள். அன்றும் அப்படித்தான் சில அறிகுறிகளை அரங்கேற்றியது இயற்கை. பரியாரியார் வீட்டின் முன் நிற்கும் மகிழமரமும் அந்த அரகேற்றத்தில் தன்பங்கை தீர்த்து வைத்தது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக எத்தனையோ புயல்களையும், சூறாவளிகளையும் கண்டும் அசராமல் இருந்த அந்த மகிழ மரம் தன் கிளைகளில் சற்றே பெரியதொன்றை ஒரு சிறு காற்றுக்கே காவு கொடுத்துவிட்டது. மகிழ மரக் கொப்பு பரியாரியார் படலையில் விழுந்து வாசலை மறித்து நின்றது.

காற்றே விழுத்திவிட்ட கொப்பு கோபச் சூறாவளிக்கு தாக்கு பிடிக்குமா?
பாதையை மறைத்து பயணத்தை தடுக்கலாமா?
பிரளயத்தை தடுக்க இயற்கை எடுத்த முயற்சி கைகூடுமா?

விடை தேடுவோம்.

Related posts

அதிசய மீன்களின் இறுதி யாத்திரை

Thumi202121

மழலைகளுடன் மனம் விட்டு பேசுங்கள்

Thumi202121

டெனிஸ் உலகின் சக்கரவர்த்தி ரோஜர் பெடெரெர் – 02

Thumi202121

Leave a Comment