இதழ் 53

ஈழச்சூழலியல் 39

அல்கா மலர்ச்சி – தொடர்ச்சியான கண்காணிப்பின் அவசியம்

அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இலட்சக்கணக்கான நீர்நிலைகள் மீன் பிடிக்கவோ அல்லது நீந்தவோ முடியாத அளவிற்கு மாசடைந்துள்ளன. இங்கு இலங்கையிலும் அண்மைக் காலம் வரை சுத்தமான நீரைக் கொண்டிருந்த பேர வாவி, கண்டி வாவி, பொல்கொட வாவி, மற்றும் அதிகளவான நீரோடைகள் தற்போது மாசடைந்துள்ளன. இவற்றிற் சில நற்போசணையடைந்துள்ளன. அத்துடன் அவற்றில் அல்காகக்களின் மலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பேர வாவியை சீர்திருத்தம் செய்வதற்கு பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்பட்டள்ளன. எனினும், அவை அனைத்தும் விழலிற்கிறைத்த நீராகி விட்டது.

இன்றும் கூட பேர வாவியில் அல்காக்கள் நிரம்பியுள்ளதோடு, துர்மணம் வீசிக்கொண்டேயிருக்கின்றது. குறிப்பிட்டதொரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகளிலுள்ள நீரை மாசுபடுத்தும் பொருட்களிற்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை பெரும்பாலான நாடுகள் விதிமுறைகளாக கொண்டுள்ளன. உதாரணமாக இலங்கையைக் கருத்திற் கொள்ளும் போது இறப்பர், புடவைக் கைத்தொழில், தோல் கைத்தொழில் என்பனவற்றிற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. இதனைத் தவிர உள்ளுர் மேற்பரப்பு நீர்நிலைகள், நீர்ப்பாசனத்திற்கும், கடலோரங்கள் என்பனவற்றில் விடுவிக்கப்படும் தொழிற்சாலை திரவக் கழிவுகளிற்கும் பொதுவான நியமங்களையும் வகுத்துள்ளது. நீர்நிலைகளை மாசடையச் செய்யும் கழிவுகள் சுற்றாடலில் விடுவிக்கப்படுவதைத் தடுப்பதை உறுதி செய்வதற்கு வசதியாக தொழிற்சாலைகளிற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அத் தொழிற்சாலைகளைப் பரிசோதிப்பதற்கான முறையொன்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபை கொண்டுள்ளது. எனினும், வர்த்தமானி அறிவித்தல் நீர் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதில் எந்தளவிற்கு வினைத்திறனாக விளங்குகின்றது என்பதை கொழும்பில் சில நீர்நிலைகளில் உயிரின வாழ்க்கை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றாடல் ; என்பனவற்றில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய நீரின் தரங்களிற்கு ஏற்பட்டு வரும் அதிகரித்த அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உலகெங்கிலுமள்ள அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. விசேடமாக இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

நீரின் தரம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்

நீரின் தரம் தொடர்பான பல முக்கிய அம்சங்களை கணிசமான இலங்கையர்கள் போதியளவில் அறிந்து வைத்திருக்கவில்லை. குறிப்பிடத்தக்களவான மக்கள் தொடர்ந்தும் மேற்பரப்பு நீர்நிலைகளிலிருந்து பெறும் நீரை கொதிக்க வைக்காமலே அருந்துவதால், இறுதியில் நோய்களினால் வாடுகின்றனர். தெளிவான, ஓடும் நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானதென சிலர் அனுமானிக்கினறனர். அத்துடன் ஆபத்தான பக்றீரியாக்கள் அல்லது வைரசுக்கள் தொற்றிய நீர் பொதுவாக நிறமில்லாது, மணமற்று, சுவையற்று காணப்படும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருபப்தில்லை. இதேபோன்று, பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் தாமறியாமலே, தமது பண்ணை வளவில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து அதிகளவான நைட்ரேட்டைக் கொண்ட நீரை அருந்துகின்றன. நைட்ரேட்டும் நிறம், மணம், சுவை எதனையும் நீரிற்கு வழங்குவதில்லை. அண்மையில் ஏற்பட்ட சுனாமியால் கடல்நீரில் மூழ்கிய ஆழமற்ற கிணறுகளிலிருந்து அளவிற்கதிகமாக நீரை இறைத்தமைக்கான காரணம் அவ்வாறு இறைப்பதிலுள்ள ஆபத்துக்கள் தொடர்பான அடிப்படை அறிவு இல்லாமையே ஆகும். பல இடங்களில் இதற்கு அதிக செலவேற்பட்டுள்ளதையும் நிரூபித்துள்ளது. அளவிற்கதிகமாக நீரை இறைத்தமையினால் பாரமான உவர்நீர் படையின் மீது மிதக்கும் இயற்கையான நன்னீர் வில்லை குழப்பப்பட்டது. இதன் விளைவாக சுனாமி புனரமைப்பின் போது அடியிலுள்ள உவர்நீர் வீட்டுக் கிணறுகளிலுள்ள நன்னீரில் உட்புகுந்தது. இறுதியாக சுனாமி ஏற்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் அளவிற்கதிகமாக நீரை இறைப்பதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் தொடர்பானதொரு துண்டுப்பிரசுரம் தயாரிக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் வாழ்வோரிடையேயும், அலுவலர்களிடையேயும் விநியோகிக்கப்பட்டது.

சில ஆழமான கிணறுகளிலுள்ள நீர் அதிகளவான பார உலோகங்களைக் கொண்டுள்ளது. இவை ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியனவாகும். இதேபோன்று சில கிணறுகளில் உள்ள புளோரைட்டின் அளவு பற்சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியளவிற்கு மிக அதிகளவானதாகவோ அல்லது மிகக் குறைவாகவோ கொண்டுள்ளது. ஆனால் இந்நீரை அருந்தும் மக்கள் இதனை எப்போதும் அறிந்து வைத்திருப்பதில்லை.

நீர் அனைத்து உயிர்களிற்கும் சொந்தமானதாகும், மனிதர்கள் அதன் பாதுகாப்பாளர்களே என்பதையும் பொதுமக்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை. துண்டுப்பிரசுரங்கள், செய்திப் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடல், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் போன்ற நிகழ்வுகளை கிரமமாக மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களிடையே தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும். அத்துடன் ஏனைய வழிமுறைகள் மூலம் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றாடல் என்பனவற்றிற்கு நீர் அத்தியாவசியமானது என்பது தொடர்பாக பொதுமக்களிற்கு அறிவூட்டல் வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், தனிப்பட்டோர், குழுக்கள், சங்கங்கள், ஏனையோரிற்கும் இது தொடர்பாக அளப்பறிய பங்களிப்பினைச் செய்யும் ஏனையோரிற்கும் பரிசில்களை வழங்கி, அவர்களை அங்கீகரித்தல் வேண்டும்.

பொதுமக்களின் சுகாதார, ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்தல்

உள்ளுர் கிணறுகள் உட்பட பல நீர்நிலைகளின் மேற்பரப்பு ஈ கோலி (E.Coli) இனால் அசுத்தமடைந்துள்ளது. பெரும்பாலும் இவை மனிதக் கழிவுகளுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது. வீட்டுக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் நிலத்தில் கட்டுப்பாடின்றி வீசப்படுதிறது. இதுவும் நீர் மாசடைவதற்கு ஒர் காரணமாகும். வெள்ளத்தை தடுப்பதற்கான சுற்று சுவர் பல உள்ளுர் கிணறுகளில் இல்லை. நீர் தொடர்பான நோய்களில் முக்கியமாக உள்ளுர் சிறுவர்கள் பாதிகப்படுவதாக மருத்துவ மனை புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பல வறிய மக்களுக்கு நீரை கொதிக்க வைப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கக் கூடியதாக இல்லை அல்லது அவர்களுக்கு கட்டுபடியாகாது. குறிப்பாக பொது நீர் வழங்கல் மிகக் குறைவாக உள்ள கிராமப் புறங்களில் பொதுஜன சுகாதார நிகழ்ச்சிகள் பலப்படுத்தப்பட வேண்டும். தனிநபர் மற்றும் உணவு சுகாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். வழங்கப்படும் குடி நீரில் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உள்ளதா என பொது சுகாதார அதிகாரிகள் கிரமமாக பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆராய்வோம்………

Related posts

உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக மென்அதிகாரத்தின் பரிணாமம்!

Thumi202121

காலமே கதை சொல்லடா

Thumi202121

டெனிஸ் உலகின் சக்கரவர்த்தி ரோஜர் பெடெரெர் – 02

Thumi202121

Leave a Comment