பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் எம் தேசத்தின் சமகால பத்திரிகைகளின் முன்பக்க செய்திகளை பார்த்தால் நாட்டின் நிகழ்கால நிலையிலும் எதிர்கால நிலைமை மிக மோசமாகிப் போய்விடுமோ என்கிற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. வயது, பால் வேறுபாடு இன்றி சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை ஆண் பெண் என சகலரையும் தன் மாய வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது போதைப் பொருள்.
திரைப்படங்களும், திரை நாடகங்களும், பத்திரிகைகளும், இணையமும் போதைப் பொருட்களுக்கான ஒருவித விளம்பரத்தையே வழங்குகின்றன. இதனால் அந்த பொருள் முதன்முறையாக ஒருவருக்கு அறிமுகமாகும் போது அதன் தீமைகள் தெரியாமல் இன்பமளிக்கும் ஒரு பொருளாகவே அறிமுகமாகிறது. முக்கியமாக பாடசாலை மாணவர்களின் நட்பு வட்டங்களுக்குள் இந்த போதைப்பொருள் இலகுவாக ஊடுருவி பல்கிப் பெருகி வருகிறது.
நண்பர்கள் மத்தியில் போதைப் பொருள் தரும் இன்பங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால் அந்தப் பழக்கமில்லாதவர்களுக்கும் அதில் ஒரு நாட்டம் ஏற்பட வாய்ப்பாகிறது. ஆனால்…..
எத்தனை பெற்றவர்கள் பாடசாலை செல்லும் தமது பிள்ளைகளோடு போதைப்பொருளின் பாதகங்கள் பற்றி மனம் திறந்து கதைக்கிறோம்? எத்தனை ஆசிரியர்கள் இது சம்பந்தமாக மாணவர்களோடு வெளிப்படையாக உரையாடுகிறோம்?
வளரும் குழந்தைகளோடு கதைக்கவே கூடாத விசயங்களாக நாங்கள் போதைப்பொருள், உடலுறவு போன்ற குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கின்ற விடயங்களை வைத்திருக்கும் வரை குழந்தைகள் அதை நாடித் தவறாக பயணப்படுவதை எம்மால் தடுக்கவே முடியாது. போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களில் எண்பது வீதத்திற்கும் அதிகமானோர் அதன் உண்மையான பாதகங்களை அறியாதோர் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
எனவே, ஒரு பொருள்ஃநபர் பற்றிய முதல் அறிமுகம்தான் அந்த பொருள் மீதான நாட்டத்தை தீர்மானிக்கும். ஆகவே,போதைப்பொருளுக்கு அடிமையான சமுதாயம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் வீட்டில் இருந்து உங்கள் குழந்தைகளை சமூகத்திற்கு அனுப்ப முதல் போதைப் பொருட்களின் தீமைகளை வெளிப்படையாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். நீங்கள் தாமதித்தால் இணையமோ, திரைப்படமோ, கூடாநட்போ முந்திக்கொள்வார்கள்.
வெண்ணெய் உங்கள்
கைகளிலேயே இருக்கிறது!