இதழ் 54

உலகப் பொது மரம்

‘காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்’

என்று சொன்ன கவியரசு கண்ணதாசன்,
               ‘மாதங்களில் அவள் மார்கழி
               மலர்களிலே அவள் மல்லிகை’

என்று மார்கழி மாதத்தையே பாராட்டுகின்றார்.
அப்படி என்ன மார்கழி மாதத்திற்கு மட்டும் தனிப்பெருமை?

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று மாதவக் கிருஷ்ணனே சொல்வதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா?

இம்மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே நாம் எழுந்துவிடுகிறோம். நாம்  மட்டுமல்ல!  தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்களாம்.

எப்படி என்கிறீர்களா? தை  முதல் நாள் முதல் உத்ராயணம் என்கிற பகல்பொழுது தேவர்களுக்கு. அப்படியானால் அதற்குமுன் வருகிற இம்மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம் தானே!

அதனால்தான் தேவர்கள் துயில் எழும் காலமாகவும், இறைவனைத் துயில் எழுப்பும் காலமாகவும் (திருப்பள்ளி எழுச்சி) கொண்டு, வீட்டில் உள்ள பெண்கள் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே திறந்தவெளியில் கோலமிடச் செல்ல வேண்டும் என்றும், ஆண்கள் ஊர் வீதிகளில்‘திருப்பாவை’, ‘திருவெம்பாவை’ப் பாடல்களைப் பாடிக்கொண்டு உலா வருதல் வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ….’ என்று பாசுரம் பாடிய ஆண்டாள் கூட மார்கழி மாதத்தில் தான் அந்த பரந்தாமனை கரம்பற்றிக் கொண்டாளாம். மார்கழித்திங்களின் மகத்துவங்கள் சொல்லச் சொல்ல நீளும்.

பொதுவாக திங்கள் என்ற சொல்லிற்குத் தமிழில் இருபொருள் உண்டு. ஒன்று : சந்திரன் இன்னொன்று : மாதம். ஏன்? சந்திரனையும், மாதத்தையும் ஒரே சொல்லில் குறித்தார்கள் என்றால் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசும் நாளுக்குரிய நட்சத்திரம்தான் மாதங்களுக்குப் பெயராகவே அமைந்தது.சித்திரை விண்மீனில் முழுநிலா வரும் மாதம் சித்திரை  மாதம். விசாக  நட்சத்திரத்தில் வெண்ணிலா வரும்  மாதம் வைகாசி மாதம். இம்முறையில் பௌர்ணமியும் மிருக  சீர்ஷமும் சேர்ந்தது மார்கழி! வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்குக் குளிர்ந்த பனியைத்  தருகிற இம்மாதம்
ஒரு ‘விழா மாதம்’ என்றால் அதில் வியப்பென்ன இருக்கிறது?

குளிரை நாம் கொண்டாடுவதில் வியப்பில்லை தான்.
ஆனால் குளிரிலே திளைக்கும் மேலைத்தேயர்கள் கூட இந்த மார்கழிப்பெருங்குளிரை கொண்டாட்ட காலமாக கொள்கிறார்களே, அது வியப்புத்தானே?

இந்தப்பூமி, தோன்றிய காலத்திலிருந்தே ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது. காலம் காட்டும் கடிகாரமும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனிதனும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறான். பூமியை சிறிது நேரம் சுழலாமல் இருக்க செய்ய முடியுமா? அந்த சக்தி எம்மிடம் இல்லை. கடிகாரம் காட்டும் காலத்தை நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. ஓடிக்கொண்டிருக்கும் மனிதனை கொஞ்சமாவது ஓய்வு கொள்ளச் செய்யலாமா? முடியும்.

உலகெங்குமுள்ள உழைத்துக் களைத்த மக்களை ஓய்வாய் இன்பமயாய் உல்லாசமாய் களிக்க வைக்க ஒரு காலம் என்றால் அது மார்கழித்திங்கள் தானே.

உலகத்தின் பொது மொழி ஆங்கிலம் என்றால் உலகத்தின் பொது இன்பம் எது? பொதுக் கொண்டாட்டம் எது? பொது விடுமுறைதான் எது?

புத்தாண்டு கூட நாட்டுக்கொரு நாளாய் கொண்டாடுகையில் ஒரு பண்டிகை மட்டுமே உலகமெங்கும் ஒரே நாளாய் எல்லோராலும் பெரும்பரவசத்தோடு கொண்டாடப்படுகிறது. அதுதான் யேசுபாலன் பிறந்த தினம். நத்தார் பண்டிகை.

ஆனால் உலகின் ஒற்றுமைப் பெருவிழாவான இந்த நத்தார் பண்டிகையை நாம் அனைவரும் கொண்டாடுகிற முறை பற்றியும் சிந்தித்துப்பாருங்கள் … இந்த ஒற்றுமையில் கூட எத்தனை வேற்றுமைகள்… நத்தார் கொண்டாட்ட நாளில் ஒவ்வொரு நாட்டவரும் விரும்பியுண்ணும் உணவுகள் வேறு வேறு… ஆசை கொண்டு அணிகின்ற ஆடைகள் வேறு வேறு… வாழ்த்துகள் சொல்லிக்கொள்கின்ற பாஷனைகள் வேறு வேறு…. வாழ்வியல் முறையே வேறு வேறு… இப்படி எல்லாம் வேறுபட்டிருக்க நத்தார் பண்டிகையின் ஓரம்சம் மட்டும் உலகம் முழுதும் ஒன்றாய் உயர்ந்து நிற்கிறதே அது எப்படி?

எதைச் சொல்கிறோம் என்று நீங்கள் நிச்சயம் ஊகித்திருப்பீர்கள். அப்படியில்லையென்றால் அட்டைப்படத்தை பாருங்கள்.. புரியும்…

கிறிஸ்மஸ் மரம்.. ஒரு மரத்தை எடுத்து வந்து அழகூட்டி இந்த நத்தார் பண்டிகையை- இயேசு பாலன் பிறப்பை உலகமெங்குமுள்ள மக்கள் ஏகோபித்த முறையில் கொண்டாடுவது நாம் சொல்லி வியக்க வேண்டிய ஒரு பேராச்சரியம் தானே.

உலகமெங்கும் வாழும் பல வல்லரசு நாட்டினர் எப்படி ஒரு விடயத்தை ஏகோபித்த விதமாக ஏற்றுக் கொண்டனர்? அது சாத்தியமில்லாத ஒன்றல்லவா?

முதன்முதலில் எங்கு தோன்றி இருக்கும் இந்த முறை? அது எப்படி உலகம் முழுதும் வியாபித்தது ?

பல மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும் என்று படையெடுத்த சென்ற மதம் இந்த ஒரு மரம் சார்ந்த அலங்காரத்தின் மீது மட்டும் இப்படி பெருநம்பிக்கை கொண்டிருப்பது எதனால்?

எல்லா ஆழமான நம்பிக்கைகளும் ஒரு அவநம்பிக்கையில் இருந்து தானே தொடங்குகின்றன.

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டார்கள். அப்படிச் செய்தால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை அவர்களிடத்தில் ஆழமாக இருந்தது.

கிறிதஸ்தவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பாகன் இன மக்கள் வனத்தை வணங்கியமையால் காடுகளில் இருக்கும் பைன் அல்லது ஓக் மர வகைகளை எடுத்து வந்து ஊரில் வைத்தும் வழிபட்டனர்.

ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்ற பாதிரியார் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் இப்படி பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். உர் ஊராகச் சென்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டு கடுங்கோபம் கொண்டிருந்தார்.

ஒருமுறை அவர் வீதியில் செல்லும் போது ஓர் ஓர்க் மரத்தைக் கண்டார். அந்த மரத்தை உடனே வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.

ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றது.

பாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டார். வியந்தார். அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். அதை அன்றுமுதல் இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினார்.

அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்புபடுத்தி தன்னுடைய கிறிஸ்தவ போதனையை அன்றிலிருந்து மும்முரப்படுத்தினார் பாதிரியார் போனிபேஸ்.

அன்றிலிருந்து கிறிஸ்தவ மரத்தின் ஒரு புனிதப்பொருளாக கிறிஸ்மஸ் மரம் பார்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மரம் அப்போதும் கூட ஓர் அலங்காரப் பொருளாக கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படவில்லை.இயேசு கிறிஸ்து பிறந்தபின் முதன்முதலில் கிறிஸ்துமஸ் தினம் கிபி 336 ல் தான் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து கிபி 1510 வரை கிறிஸ்துமஸ் மரத்தின் விதை அக்கொண்டாட்டத்தில் விதைக்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

1510ஆம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில் பனி படர்ந்த சாலை வழியாக நடந்து சென்றார். அங்கிருந்த சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனியில் அழகு அவரை ஈர்த்தது. அந்தப் பனிகளில் வெளிச்சம் பட்ட உடன் அவை தகதகவென மின்னி பிரமிக்கவைக்கும் அழகுடன் ஒளிர்வதை கண்டு வியந்து இரசித்தார். அந்த அழகை தன் மாளிகைக்குள்ளேயும் உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஒரு ஃபிர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து கிறிஸ்து பிறப்பு விழாவில் முதன்முதலில் பயன்படுத்தினார் மார்ட்டின் லூத்தர் கிங் . கிறிஸ்மஸ் மரம் அலங்காரங்களுடன், கிறிஸ்மஸ் விழாக்களில் நுழைந்தது அப்போதுதான் என்பதே அறியப்படும் செய்தியாகும். அன்றிலிருந்து ஜெர்மனிய மக்களால் கிறஸ்மஸ்மர அலங்காரம் விரும்பப்பட்ட ஒன்றாக மாறிப் போனது.

1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டுவந்து கோலகலமாக விழா கொண்டாடினார். பிரான்ஸில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக வரலாறு இதனையே குறித்து வைத்திருக்கிறது.

அவ்வாறே பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.

இதேபோல் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் நுழைய இங்கிலாந்து ராணியே முக்கிய பங்கு வகிக்கிறார். இங்கிலாந்துக்குள் இந்த கிறிஸ்மஸ் மரம் வந்த விதம் சுவாரஸ்யமானது.

இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட பயணங்கள் அவருக்கு ஜெர்மனிநாட்டு இளைஞர் இளவரசர் ஆல்பர்ட்டுடன் காதலை வளர்த்தன. திருமணம் செய்துகொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள்.

1841ல் அரசர் ஆல்பர்ட் ஜேர்மனிய வழக்கப்படி ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம்.அந்த கிறிஸ்மஸ் மரம் அழகிய பொம்மைகளாலும், சிறுசிறு கைவினைப் பொருட்களாலும், நகைகளாலும், சிறு சிறு இசைக்கருவி வடிவங்களாலும், பழங்களாலும், மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசி அந்த மரத்தின் அழகில் மயங்கினார்.

இனி மாளிகை விழாக் கொண்டாட்டத்தில் நிச்சயம் அந்த மர அலங்காரம் வேண்டும் என்று சேர்த்துக் கொண்டார். இங்கிலாந்து மக்களும் அதை ஆமோதிக்க, இங்கிலாந்து தேசத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் அலங்காரங் கொள்ளத் தொடங்கியது.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ்மரத்தின் நுழைவிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. முதன் முதலில்
1747 களில் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் ஜெர்மனியிலிருந்து குடியேறிய மக்களால் கிறிஸ்மஸ் மரம் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அது பிரபலமடையவில்லை. ஐரோப்பிய வழக்கத்தை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ன!

பின் 1830ல் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் மரம் அமெரிக்க மக்களை வெகுவாக ஈர்த்தது. அதன் பின் சுமார் இருபது ஆண்டுகள் கடந்தபின் கிறிஸ்மஸ் மரம் ஒரு ஆலயத்தின் வெளியே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்காக வைக்கப்பட்டது. அந்த நிகழ்வே கிறிஸ்மஸ் மரம் அமெரிக்காவில் பரவ முக்கிய காரணியாயிற்று. அந்த நூற்றாண்டின் இறுதியில் பரவலாக அமெரிக்கா முழுவதும் இந்த கிறிஸ்மஸ் மரம் அறியப்பட்ட ஒன்றாகிவிட்டிருந்தது.

இங்கிலாந்தில்கூட சுமார் நான்கடி உயரமான கிறிஸ்மஸ் மரங்களைப் பயன்படுத்துவதே வழக்கமாய் இருந்தது. எல்லா விஷயங்களிலும் ஐரோப்பியர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்று விரும்பும் அமெரிக்கர்கள் தங்கள் கிறிஸ்மஸ் மரத்தை வீட்டுக் கூரை வரை உயரமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் இந்த கிறிஸ்மஸ் மர விழா பரவுவதற்கு முன்பாகவே கனடாவில் அது நுழைந்துவிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கனடா மக்கள் கிறிஸ்மஸ் மரத்தை வண்ண வண்ண பொருட்களாலும், கைவினைப் பொருட்களாலும் அலங்கரித்து அழகுபார்த்தார்கள் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவமர அலங்காரத்தை மின் விளக்குகளை கொண்டு முதன் முதலில் அலங்கரித்தது யாராக இருக்கும் என்று ஊகிப்பீர்களா? இருண்டு கிடந்த உலகிற்கு மின்னால் ஒளி வீசச் செய்தவர் தோமஸ் ஆல்வா எடிசனல்லவா! அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் தான் கிறிஸ்துமஸ் மரத்தை விளக்குகளால் அலங்கரிக்கும் வழக்கம் ஏற்பட்டது. எடிசனின் மாபெரும் கண்டுபிடிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காக அம்மரத்தைச் சுற்றி மின்விளக்குகளை எரியவிட்டராம் அந்த நண்பர்.

இப்படி நம்பிக்கை, காதல், நட்பு, அழகியல், அதிகாரம், போட்டி என எல்லாவற்றையும் குறித்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாய் கிறிஸ்மஸ் மரம் ஒளிவீசிக் கொண்டிருப்பதை அது உலகெங்கும் வியாபித்து வளர்ந்த கதைகளினூடு நாம் உணரமுடிகிறது.

சர்வ உலகமும் ஏற்றுக்கொண்டு அலங்கரிக்கின்ற கிறிஸ்மஸ் மரம் என்பது வெறும் அழகுப் பொருள் மட்டுமல்ல என்பதை நாமும் உளமாற உணர்ந்து கொண்டால் நம் வீடுகளில் ஒளி வீசும் கிறி்ஸ்மஸ் மரம் அர்த்தமுள்ள ஓர் அழகியலில் அடையாளமாய் அனைவர் கண்களிற்கும் விருந்தாக ஆரம்பிக்கும் என்பதில் ஐயங் கொள்ள வேண்டியதில்லை.

மார்கழி குளிரில் அலங்கார அணிவகுத்து
மரகத ஒளியில் விளக்குகள் மின்ன
மாட்டுத்தொழுவ நாயகனை யாவரும் வாழ்த்திடுவோம்… வணங்கிடுவோம்….

அனைத்து நெஞ்சங்களிற்கும் நத்தார் கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள்!

கண்ணாதசனின் இனிய வரிகளோடு ஆரம்பித்த இந்த கட்டுரையை கவியரசரின் இயேசுகாவிய வரிகளோடு நிறைவு செய்வதில் நிறைவாய் மகிழ்வடைகிறோம்.

‘தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

Related posts

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

போதைப்பொருட்களுக்கெதிரான போரின் அவசியம்

Thumi202121

குறை ஒன்றும் இல்லை…!

Thumi202121

1 comment

Leave a Comment