தமிழ் நாட்டின் ஆரம்ப வீரரான ஜெகதீசன், லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். இது தொடர்பான பதிவு வருமாறு.
“நான் விரும்பியதெல்லாம் தற்போது நடைபெறுவதை கவனித்து எனது வழக்கத்தைப் பின்பற்றி அடிப்படைகளுக்குத் திரும்புவது தான்” – நாராயணன் ஜெகதீசன்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கழற்றி விடப்பட்ட ஜெகதீசன், கடந்த மாதம் 21ம் திகதி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக தமிழ் நாடு அணி சார்பாக களமிறங்கி 277 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் உலக சாதனைகளான லிஸ்ட் ஏ 50 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சதங்கள், மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக தனிநபர் ஓட்டங்கள் என்பவற்றை படைத்தார். இதற்கு முன்னர் மூன்று வீரர்கள் (2015 உலக கிண்ணத்தில் இலங்கையின் குமார் சங்கக்காரா, 2015 இல் தென்னாப்பிரிக்கா உள்ளுர் போட்டிகளில் அல்வீரே பிற்டர்சன் மற்றும் இந்திய உள்ளூர் போட்டிகளில் கர்நாடகவின் தேவ்டூட் பட்டிகல்) நான்கு சதங்களை தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள்.

இதுவரை ஆண்கள் லிஸ்ட் ஏ போட்டிகளில் அலிஸ்டயர் புறவுன் 268 ஓட்டங்களையும் பெண்கள் லிஸ்ட் ஏ போட்டிகளில் இலங்கையின் சிறிபாளி வீரக்கொடி 271 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தார்கள். இதன் போது ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் 416 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக புரிந்து முதல் முறையாக 400 ஓட்டங்களை எந்தவொரு விக்கெட்டுக்காகவும் எடுத்த ஜோடி ஆனார்கள். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் மற்றும் மார்லன் சாமுவேல் 372 ஓட்டங்களை 2வது விக்கெட்டுக்காக எடுத்ததே அதிககூடிய இணைப்பாட்டமாக இருந்தது.
“அந்த ஓட்டப்பெறுதி (277) கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய சதமும் சாதனையும் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் முன்பு கூறியது போல், நான் செயல்முறையைப் பின்பற்றி எனது விளையாட்டை அனுபவிக்க முயற்சிக்கிறேன். நான் ரன்களை மனதில் வைத்து விளையாடுவதில்லை. எல்லா ஆட்டங்களிலும் உத்வேகத்தை என்னால் தொடர்ந்து கொண்டுசென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, களத்தில் எனது இருப்பை அனுபவிப்பது மிகவும் முக்கியமானது.” என்று ஜெகதீசன் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருமான மைக்கேல் ஹசியிடம் இருந்து ஜெகதீசனுக்கு வாழ்த்துச் செய்தி வாட்சப்பில் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
114 பந்துகளில் ஜெகதீசன் அருணாச்சலத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் குயின்ஸ்லாந்துக்கு எதிராக டிராவிஸ் ஹெட் 114 பந்துகளில் இரட்டை சதத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெகதீசனின் 196.45 ஸ்ட்ரைக் ரேட் ஆனது (141 பந்துகளில் 277) ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்த இரட்டை சதத்திற்கும் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும். 2021ல் டிராவிஸ் ஹெட் குயின்ஸ்லாந்திற்கு எதிராக 127 பந்துகளில் 230 ரன்கள் எடுத்த போது கொண்டிருந்த 181.1 ஸ்ட்ரைக் ரேட் தான் இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது. மீதமுள்ள 36 இரட்டை சதங்களில் எதிலும் துடுப்பாட்ட வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் 175க்கு மேல் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது அருணாச்சலத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுக்கு 506 ரன் எடுத்த தமிழ் நாடு, ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500-க்கும் அதிகமான ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பெற்ற வெற்றியானது, ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஓட்டங்களின் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியும் ஆகும். இதற்கு முன்பு 1990 ஆம் ஆண்டு சோமர்செட் அணிக்கு 346 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்திருந்தது.
ஜெகதீசனின் ஐந்து தொடர்ச்சியான சதங்களில் மற்றைய நான்கும் முறையே
ஆந்திராக்கெதிராக 114*, சத்தீஸ்கர்க்கெதிராக 107, கோவாக்கெதிராக 168 மற்றும் ஹரியானாக்கெதிராக 128 ஓட்டங்கள் ஆகும்.