இந்த பூமிப்பந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. அப்படிக் கிடைத்துவிட்டால் ஆச்சரியங்களுக்கும் அனுபவங்களுக்கும் இடமேயில்லாமல் போய்விடும். “எந்த சாமி சிலையையும் நான் ஊனமாக செய்ததில்லை” என்று ஒரு மாற்றுத்திறனாளியான சிற்பி சொல்லும் பிரபல வசனத்தை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அந்த வரியின் கனதி மிக அதிகமானது.
அண்மையில் ஆரம்பமான உலகக்கிண்ண காற்பந்துத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமேனோடு தோன்றிய 20 வயதேயான கானிம் அல்மிப்தாஹ் என்ற கத்தாரிய இளைஞரை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது.
பிறக்கும்போது அரைவாசி உடம்புடன் பிறந்த இவ்வாலிபர் நம்பிக்கை இழக்கவில்லை… சளைக்கவில்லை… கவலைப்படவில்லை… முடியாது என்றிருக்கவில்லை. தனது கைகளையும் சக்கர நாற்காலியையும் பயன்படுத்தி தனது வாழ்வில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்து வருகின்றார்.
கல்வி கற்றார்…முயற்சித்தார்… முன்னேறினார். கத்தாரில் மட்டுமல்ல உலகளவிலும் இன்று பிரபல்யமான ஒருவர். 2022 உலகக்கிண்ணப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ தூதுவராக நியமிக்கப்பட்டார். தனது தோற்றம் பற்றி ஒரு நேர்காணலில் அவர் பின்வருமாறு கூறுகிறார்.
“என்னை இறைவன் அழகிய தோற்றத்தில்தான் படைத்துள்ளான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். பொறுமை, பிரார்த்தனை, இறைவனைப் புகழ்தல் போன்றவையே எனது வலிகளுக்கான மருந்துகள்” என்கிறார். உண்மையில் பிரமிப்பாக உள்ளது. ஒரு விடயம் குறையா இல்லையா என்பது அதை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பதில்த்தான் உள்ளது. எங்கள் எண்ணங்கள் தான் எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. ” வேண்டிய யாவும் வாய்த்த ஒருவன் சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு.” என்கிற பாடல் வரிகளும் இதைத்தான் சொல்கின்றன.
எனவே எமக்குக் கிடைத்த ஆரோக்கியமான உடம்பையும் அழகான வாழ்க்கையையும் வீணான விடயங்களில் கழித்து குறிப்பாக போதைப்பொருள் போன்ற சமூக சீரழிவு விடயங்களின் மாய வலைகளுக்குள் சிக்காமல் இன்பமான வாழ்வை அனுபவித்து வாழ்வோமாக.
எண்ணம்போல் வாழ்க்கை