இதழ் 54

போதைப்பொருட்களுக்கெதிரான போரின் அவசியம்

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும் அதுசார்ந்த தாக்கங்களும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையையே போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவே யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் செய்தி தலைப்புக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண பண்பாடு பாரம்பரியமாக கந்தபுராண கலாசார மரபுடையதென்ற உரையாடல் காலம் காலமாக தமிழ் மக்களிடையே ஆழமாக காணப்படுகின்றது. எனினும் போருக்கு பிந்தைய சூழலில் 2013ஆம் ஆண்டை அண்மித்த காலப்பகுதியில் வாள்வெட்டு கலாசாரம் தொடர்பான உரையாடல் யாழில் முதன்மை பெற்றது. தற்போது அதன் தன்மை குறைவடையவில்லையாயினும், அது பற்றிய உரையாடல் தளர்வுற்று, இளையோரிடையே வீரியத்தை பெற்றுள்ள போதைப்பாவனை அதிகமாக முதன்மை செய்திகளாக யாழ்ப்பாணத்து நாளிதழ்களில் இடம்பிடித்துள்ளது. எனினும் இதனைக்கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான செயற்பாடுகள் அத்தகையை முதன்மையை பெறத்தவறியுள்ளது. இக்கட்டுரை, வடக்கை அழிக்கும் போதையின் பாவனை தொடர்பிலும் அதன் எதிர்வினைவுகள் தொடர்பிலும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.


பேரழிவுக்குப் பிந்தைய சூழலில் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப கலாச்சாரம் முக்கியமானது. மோதல்கள் நகரின் அடையாளத்தை அழிக்கும் போது அல்லது மாற்றியமைக்கும் போது அது இன்னும் முக்கியமானதாகிறது. இப்பின்னணியில் போரின் வெற்றி பெற்ற தரப்பு தனது வெற்றியை நிலைப்படுத்தி கொள்ள தோற்கடிப்பட்ட சமூகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாடு மீதே பேரழிவுக்கு பிந்தைய சூழலில் புதிய போரை தொடுக்கும். இயல்பினில் பெரும் போரை சந்தித்து தோற்கடிப்பட்ட சமூகத்தின் போருக்கு பிந்தைய சூழலில் பண்பாடுகளும் மரபுகளும் அழிக்கப்படும் போர் மெல்ல மெல்ல நகர்த்தப்படும். அவ்வாறாதொரு போர்ச்சூழலுக்குள்ளேயே 2009களுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

போர் முடிவுற்று ஒரு தசாப்தங்கள் கடந்துள்ள சூழலிலும் ஈழத்தமிழர்கள் தங்களை நெறிப்படுத்த இயலாமைக்கு பிரதான காரணமும் இத்தகு மெல்ல நகரும் போரின் தாக்கங்களேயாகும். தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு குறிப்பபாக இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்களிடையே வீரியம் பெற்றுள்ள போதைப்பொருள் பயன்பாடு தமிழினத்தின் இருப்பு சார்ந்த எதிர்காலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனினும் வடக்கில் ஆரோக்கியமான எதிர்வினைவுகள் உரிய தரப்பினரால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதே மக்களிடையே பெரும் விசனமாக உள்ளது. இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகிறது.


முதலாவது, போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பானது தமிழ்த்தேசியத்தின் இருப்பையே பலவீனப்படுத்துகின்றது. தேசியம் என்பது மக்கள் திரளுடன் மட்டுப்படுத்தப்பட்டதில்லை. அரசறிவியல் உரையாடல்களில் முதன்மைப்படுவது போன்று தேசியம் என்பது மண், மக்கள் மற்றும் மாண்பு சார்ந்ததாகும். தமிழ் மக்களின் மண் மீதான போர் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசாங்கத்தால் கச்சிதமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. மக்கள் மீதான போரே 2009இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை கொண்டு செல்லப்பட்டிருந்தது. மாண்பு சார்ந்த போரே 2009களுக்கு பின்னர் இளையோர்களிடம் விரவியுள்ள வாள்வெட்டு கலாசாரம் மற்றும் போதை கலாசார ஊக்குவிப்புக்க;டாக நிகழ்த்தப்படுகின்றது. மரபுரீதியான பண்பாட்டை சிதைக்கும் போதைக்கலாசாரத்தின் அதிகரிப்பு தேசியத்தின் இருப்புக்கான நேரடியான சவாலாகும்
இரண்டாவது, வடக்கில் உள்ள அரச நிர்வாகத்தினர் தங்களது பணியை முழுமையாக நிறைவேற்ற தவறியுள்ளார்கள்.

போதைப்பொருள் வடக்கில் அதிகரித்து வரும் சூழலில் வடக்கின் பொதுத்துறை நிர்வாகத்தினர் வழமையான அரச செயற்பாட்டில் காட்டும் மெத்தனப்போக்குடனேயே போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் நெறிப்படுத்தலில் ஒவ்வொரு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிகளில் பாடசாலைகளில் போததைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கடமை நிமித்தம் பாடசாலைகளுக்கு செல்கின்ற போதிலும் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்காமையையே சமூகத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதேநேரம் உயர் அதிகாரிகளும் தொடர்ச்சியாக கண்காணிப்பதில் அக்கறையை வெளிப்படுத்த தவறுகின்றார். பொதுத்துறை பணியாளர்களின் மெத்தனப்போக்குக்கு சரியான வெளிப்பாடாக அமைவது ஒரு பிரபலமான சைவ பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்ட கிராமம் ஒன்றின் கிராம சேவையாளரின் செயற்பாடு அமைகின்றது. அக்குறித்த கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடம் சில இளைஞர்களால் அடையாளம் காணப்பட்டு குறித்த பிரிவுக்குரிய கிராம சேவையாளருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் கிராம சேவையாளர், போதைப்பொருள் விற்பனையாளர்களால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனக்கூறி இளைஞர்களின் முறைப்பாட்டை உதாசீனப்படுத்தியுள்ளார்.

மூன்றாவது, பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவே செய்திகள் வெளிப்படுத்துகின்றது. பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதில் ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களுடன் கொண்டுள்ள உறவின் விரிசல்களும் கல்வி முறைமையில் காணப்படும் இடைவெளிகளுமே பிரதானமா காரணமாகின்றது. தமிழர்களின் பண்பாட்டில் ஆசிரிய-மாணவ உறவு மிகவும் நெருக்கமானது. ஒவ்வொரு மாணவர்களின் நலன்களிலும் ஆசிரியர்கள் தனியான அக்கறையை காட்டி வந்துள்ளதுடன், ஒவ்வொரு மாணவனின் குடும்ப நிலைமை உட்பட அனைத்தையும் ஆசிரியர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். இவ்வாறானதொரு மரபே கடந்த காலங்களில் காணப்பட்டது. ஆயினும் தற்போது பல ஆசிரியர்களும் ஆசிரிய பணியை சேவை என்பதை மறந்து தொழிலாக மேற்கொள்ள தொடங்கிய சூழலில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாத ஆசிரியர்களாகவே பலரும் காணப்படுகின்றார்கள். மேலும் அதிபர்களும் தங்கள் பாடசாலையின் கௌரவத்தை பாதுகாப்பதாக கருதி பாடசாலையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்தாலும் அதனை பொருட்படுத்தாது செல்கின்றனர். அண்மையில் ஒரு பாடசாலையில் மாணவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆசிரியர் அதனை அதிபரிடம் முறைப்பாடு செய்கையில் அதிபர் தனது பாதுகாப்பையும் மற்றும் பாடசாலையின் கௌரவத்தையும் காரணங்காட்டி முறைப்பாடு செய்த ஆசிரியரையே கண்டித்துள்ளார். ஆசிரியர்கள் அதிபர்களே பாடாலை பருவ பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்கின்றார்கள். அத்துடன் பாடாலைகளினுள்ளேயே மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்களாயின் அது பாடசாலை நிர்வாகத்தின் பலவீனங்களையே அடையாளப்படுத்துகின்றது. மேலும் கொரோனா நெருக்கடிக்கு பின்னர் பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் கலை ஆர்வங்களை வெளிப்படுத்தி மகிழ்ந்திருப்பதற்கான நேரங்களை தவிர்த்து வருகின்றனர். மாணவர்கள் பாடசாலைகளில் ஒன்றுகூடி நண்பர்களுடன் ஆடி பாடி மகிழ்வதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்துவதும் பாடசாலை மாணவர்களை தங்கள் மகிழ்ச்சிக்காக வேறு வாய்ப்புக்களை தேட வழிசமைக்கின்றது. அவ்வாய்ப்பை போதைப்பொருள் விற்பனையாளர்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றார்கள். பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதானது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தைரியமான மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.
நான்காவது, தமிழ் மக்களின் சமுகமயமாக்கலின் பலவீனமுமே போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணங்களில் ஒன்றாகின்றது. வடக்கில் போதைப்பொருளின் பயன்பாடு அதிகரிப்பானது உயரளவில் காணப்படுவதென்பது போதைப்பொருள் பயன்பாடு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடேயாகும்.

பாடசாலை நிர்வாகத்தினராயினும், பொதுநிர்வாக உத்தியோகத்தராயினும் போதை பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்நிற்பதற்கு முதன்மையாக சொல்லும் காரணம் அச்சமாகவே காணப்படுகின்றது. இவ் அச்சம் அவர்கள் தாங்கள் தனியாக உணருவதன் வெளிப்பாடே ஆகும். மாறாக தமிழ் சமூகம் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் முழுவீச்சாக சமூகமயமாக்கலுடன் செயற்படுவதை வெளிப்படுத்தின் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் தற்துணிவுடன் செயற்பட பலமாக காணப்படும். கடந்த காலங்களில் சமூகமயமாக்கலூடாக செயற்பாட்டு வெற்றி தமிழர்களிடையே நிறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக 2010களில் வடக்கில் கிறிஸ் மனிதன் பிரச்சினை அதிகரித்த போது சமுகமயமாகி விழிப்புக்குழு செயற்பாட்டினூடாக கிறிஸ் மனிதன் பிரச்சினை தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆவ்வாறானதொரு சமுகமயமாக்கல் செயற்பாடு போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தமிழ் சமுகத்திடையே ஏற்பட வேண்டும்.
எனவே, அதிகரித்துவரும் போதைக்கலாச்சாரம் தமிழ்த்தேசத்தினை அழிக்கும் கரையானாகும். இதனை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு தமிழ்க்குடிமகனதும் பொறுப்புடமையாகும். தமிழ்த்தேசியத்தின் இருப்பை சிதைக்கும் செயற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகையில் அதனை எதிர்க்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு செல்ல தயாராக இல்லாத சமூகமாக தமிழர்கள் இருப்பது துயரமானதாகும். ஒரு சில தன்னார்வளர்களும் சிவில் சமுகத்தினரும் சுயாதீனமாக தமது இயலுமைக்கு ஏற்ற வகையில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், அவை போதுமானவையாகவும் மற்றும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் அமையவில்லை. குறிப்பாக இளைஞர்களே போதைக்குள் தறிகெட்டு போவதாக காணப்படும் சூழலில் ஆங்காங்கே நடைபெறும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் இளைஞர்களையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது. எனினும் இளைஞர்களின் இயலுமை எல்லை வீச்சாக விழிப்புணர்வு பிரச்சாரங்களே காணப்படுகின்றது. ஏதுமே இல்லை என்ற வகையில் இது ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும், வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசியல்வாதிகள், பொது நிர்வாகத்தினர், சிவில் சமுகத்தினர் மற்றும் மக்கள் என ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான கட்டமைப்பினூடாக போதைக்கு எதிரான போரை முன்னெடுக்க வேண்டியது நாளைய இருப்புக்கான சமகாலத்தின் அவசியமாகிறது.

Related posts

ஜெகஜோதியாக பிரிகாசிக்கும் ஜெகதீசன்

Thumi202121

குறை ஒன்றும் இல்லை…!

Thumi202121

விடியலில் ஓர் கனவு

Thumi202121

Leave a Comment