இதழ் 54

சித்திராங்கதா

மாருதவல்லியின் உண்மை

பெண்களின் பார்வைக்கு ஒரு சக்தி உண்டு என்பது நிஜந்தான். ஆனால் அது ஆக்கும் சக்தியா, அழிக்கும் சக்தியா என்பது ஆண்களின் கரங்களில் தான் இருக்கின்றது.

இராஜகாமினியின் அந்தக் கரிசனப்பார்வை வருணகுலத்தானை ஓர் அழிக்கும் சக்தியாக உருமாற்ற எத்தணித்தது. ஆனால் எது எவர் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் கண்டறியும் அறிவு கொண்டவன் வருணகுலத்தான். ராஜகாமினியின் அந்தப்பார்வை அவனிடத்தில் அர்த்தமற்றுப் போய்விட்டது.

கல்யாணிதேவியின் மறைவிற்குப் பின் கூட இராஜகாமினியை சங்கிலியமகாராஜா மணந்திருக்கலாம். அப்படி மணந்திருந்தால் இந்த அரியணை சங்கிலிய மகாராஜாவிற்கு பரிசாகவே கிடைத்திருக்கும். இது தெரிந்தும் கூட இராஜகாமினியை மணக்க எண்ணாத சங்கிலிய மகாராஜாவின் உள்ளத்தை வருணகுலத்தான் தெளிவாக உணர்ந்து கொண்டான். இராஜகாமினியை பற்றியும் அவன் இப்போது புரிந்து கொண்டான்.

அதேசமயம் கல்யாணிதேவி மீது மன்னர் கொண்ட காதலின் ஆழம் அவனை அதிகளவில் ஆச்சரியப்படுத்தியது. ஒரு நாட்டு மகாராஜாவின் வேண்டுகோளையே ஏற்க மறுத்து அரியணையில் ஏறி அரசாளும் வாய்ப்பை தட்டிக்கழித்து தன் காதலியை தேடிச்சென்று கரம்பிடித்த சங்கிலிய மகாராஜாவை எண்ணுகையில் வருணகுலத்தான் உள்ளம் முழுவதுமாய் குளிர்ந்திருந்தது. தன் காதல்ராணி சித்திராங்கதாவை அவன் வாஞ்சையோடு நினைத்துக் கொண்டான்.


‘இப்படிப்பட்ட ஒருவரா எம் காதலை பிரித்துவிடுவார் என்று சித்திராங்கதா ஐயங் கொள்கிறாள்? அதிகாரம்… ஆட்சிபீடம் … என அனைத்தையும் உதறிவிட்டு தன் ஆதர்சநாயகியை தேடிச்சென்ற சங்கிலியமகாராஜாவைப் பற்றி அவள் அறிந்தால் அவள் மனதின் தேவையற்ற அச்சங்கள் தானாய் அகன்றுவிடுமல்லவா… அரச ஆணையை மீற முடியாமல் நான் மாருதவல்லியை மணந்து கொள்ளும் அபாயசங்கடம் நேர்ந்துவிடுமோ என்று இராஜகாமினி ஏதேதோ சொன்னதைக் கேட்டு அச்சங்கொள்கின்ற அவள் மனம் தெளிவடையுமல்லவா? … சித்திராங்கதாவிற்கு ஏன் அங்ஙனம் ஒரு ஐயம் உருவானது என்று இதுவரை தெரியவில்லையே. அன்று இராஜகாமினி தனியாக சித்திராங்கதாவிடம் அப்படி என்ன கூறியிருப்பார்…..? எதுவாயிருந்தாலும் அது அபத்தமாகத்தான் இருக்கும் என்று சித்திராங்கதாவிடம் தெரிவிப்பது எப்படி..? போரிற்குச் செல்லமுன் மீண்டும் சித்திராங்கதாவை சந்திக்கும் வாய்ப்பு அமையுமா? ..’
வருணகுலத்தான் உள்ளம் சித்திராங்கதாவிடம் நிறைய பேசுவதற்கு ஆசை கொண்டிருந்தது. அவளது உள்ளத்து அச்சம் அநாவசியம் என்பதை அவளிடம் எப்படியாவது கூறிவிட வேண்டும் என்று எத்தணித்தது.

அதேவேளை இந்த நல்லை இராட்சியம் இன்றுவரை சரிந்துவிடாமல் பெருந்தூணாய் நின்றுவந்த இராஜமந்திரி ஏகாம்பரம் தொண்டமனாரையும் உடன் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்றும் அவன் எண்ணங் கொண்டான்.அவனது உள்ளத்தில் இராஜமந்திரியாரது உருவம் பெருமலைக்கு நிகராக பதிந்து விட்டது.

தெளிவும், புன்னகையும் நிறைந்த முகத்தோடு , இத்தனை பெருமைமிக்க இந்த நல்லைமண்ணிற்காக தான் போர்புரியப்போகின்ற பூரிப்பில் அவன் மந்திரிமனை நோக்கி நடக்கையில் எங்கிருந்தோ அந்த ஏகாந்த இரவில் ஒரு வீணைநாதம் அவன் செவிகளை வந்தடைந்தது.

நல்லைக்கோட்டை முழுதும் சூழ்ந்திருந்த அந்தப் போருக்கு முன்னான நிசப்தத்தை அந்த வீணைநாதம் தன் இசையால் இட்டு நிரப்பிக்கொண்டிருந்தது.

வீணை நரம்புகளோடு விளையாடி யாருடைய விரல்கள் அந்த நாதத்தை பிரசவிக்கின்றன என்று ஊகித்தீர்களா?

வீணையோடு வீற்றிருக்கும் மாதரசி நல்லைக்கோட்டையில் மகாராணியாக அல்லவா இருக்கிறார். மகாராணி மஞ்சரிதேவி தான்…. தன் காதல் மனைவி கல்யாணிதேவியின் நினைவுகளால் நிரம்பியிருந்த சங்கிலிய மகாராஜாவின் உள்ளத்தை தன் இனிய நாதத்தினால் அமைதி கொள்ளச் செய்ய முயற்சிக்கின்றார் மஞ்சரிதேவி.

மனக்கலக்கத்துடன் இருந்த மகாராஜாவை கண்டதும் தன் வீணையை எடுத்து மீட்கத் தொடங்கினார் மஞ்சரிதேவி. எவ்வித மறுப்பும் கூறாமல் அந்த நாதத்தை இரசிக்கத் தொடங்கினார் சங்கிலிய மகாராஜா. ஏனெனில்….

மஞ்சரி தேவி மீட்டிக்கொண்டிருக்கும் இசையின் இராகம் உங்களிற்கு கேட்கின்றதா? அது கல்யாணிராகம்….

சிந்தனையை வேறெங்கும் செல்லவிடாது உள்ளத்தின் ஆழம் வரை சென்று வருடவல்லது அந்தக்கல்யாணிராகம். சங்கிலியமகாராஜாவை பொறுத்தமட்டில் கல்யாணி தேவியும் கல்யாணிராகமும் ஒன்றுதான்.

செவிகளில் விழுந்த கல்யாணிராகம் நல்லைக்கோட்டைக்குள்ளே சங்கிலிய மகாராஜாவை விட வேறு இரண்டு கண்களையும் நனைத்துக் கொண்டிருந்தது. அது கல்யாணிதேவியின் தந்தை திருமலை தனியுண்ணாப்பூபால வன்னியரது கண்களேயாகும். தன் நண்பரான மந்திரி ஏகாம்பரனாரை சந்திக்க அச்சமயம் நல்லைக்கோட்டைக்கு வந்திருந்தார் பூபால வன்னியர்.

இராஜமந்திரியாரை சந்திக்க வந்த வருணகுலத்தானிற்கு திருமலை வன்னியரையும் உடன் கண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது.

இருவர் பாதங்களிலும் முழுமனதாய் வீழ்ந்து வணங்கினான் வருணகுலத்தான்.

‘இந்த நல்லைமண் நிமிர்ந்து நிற்க காரணமான பெருந்தூண்கள் நீங்கள் இருவரும் என்று இன்று தான் நான் அறிந்து கொண்டேன். ஈடில்லா வேந்தர் சங்கிலிய மகாராஜாவை இந்த மண்ணிற்கு முடியரசராக்க நீங்கள் இருவரும் ஆற்றிய இணையற்ற தியாகங்களை எண்ணுகையில் என் உள்ளம் சிலிர்க்கிறது. இந்த அடியேன் தங்களிருவரின் மனங்கோணும்படி எப்போதாவது நடந்திருந்தால் என்னை மன்னித்தருளுங்கள்’ என்று கைகூப்பி நின்றான் வருணகுலத்தான்.

கூப்பிய கரங்களை பற்றிக் கொண்டு புன்னகைத்தார் மந்திரி ஏகாம்பரம் தொண்டமனார்.
‘வருணகுலத்தாரே, தங்கள் முகத்தில் தெரிகின்ற தெளிவை நன்கறிகிறேன். மகாராஜா எல்லா உண்மைகளையும் தங்களிடம் கூறிவிட்டார் என்பது புரிகிறது. ஒன்று சொல்கிறேன் தளபதியாரே… நாமிருவரும் மகாராஜா மேல் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தோமோ அதேயளவு நம்பிக்கை தங்கள் மீதுங் கொண்டுள்ளோம்..’ என்று வருணகுலத்தான் கரங்களை பற்றியபடியே கூறினார் மந்திரி ஏகாம்பரனார்.

பூபால வன்னியரும் அதை அமோதிப்பவராய்
‘ஆம்.. உண்மைதான் தஞ்சைவீரரே.. மந்திரியார் சொன்னதைப்போல் எம்மைக்காக்க வந்த வரம் தாங்கள் என்பதில் மறுபேச்சு எம்மிடமில்லை. அந்நியர் எத்தனை சாணக்கியமாய் வலைவிரித்தாலும் அவற்றில் விழுந்துவிடும் சாமானியர் அல்ல தஞ்சைவீரர் என்பதில் எமக்கிருந்த நம்பிக்கை தான் இன்று வரை வெற்றிகண்டிருக்கிறது’ என்றார்.

‘இல்லை பூபால வன்னியரே… நான் தங்களை காக்க வந்த வரமல்ல. எண்ணற்ற தியாகங்கள் புரிந்து தாங்கள் காத்து நிற்கும் இந்த தமிழ்மண்ணை எதிரிகளால் எக்காலமும் தொட முடியாது. தங்கள் மதிநுட்பம் முன் அவர்கள் வீரத்திறம் யாவும் வீணாகிவிடும். என்னால் முடிந்தவரை என் உடற்பலத்தினால் தங்களிற்கு துணையாய் நிற்கவே நான்
வந்தேன். சங்கிலிய மகாராஜாவிற்கு தங்கள் இருவரையும் போல் பெரும்பலமாய் வேறு யாராலும் இருக்க முடியாது’ என்று பணிவோடு கூறினான் வருணகுலத்தான்.

ராஜமந்திரி ஏகாம்பரம் தொண்டமனார் ஒரு மெல்லிய புன்முறுவலோடு ‘வருணகுலத்தாரே.. நாங்கள் அப்படி ஒன்றும் அசாதாரண காரியங்கள் ஆற்றவில்லை. நாங்கள் இருவரும் கடந்து வந்த அனுபவங்களே எம்மை இப்பணி ஆற்ற வைத்தது. சுதந்திரமாய் இந்த தேசம் கொடிகட்டி ஆண்டதை எம் இரு கண்களாலும் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.. பறங்கியனிற்கு அடிபணிந்து வாழ்வதை எங்களால் ஒருகாலமும் ஏற்க இயலவில்லை. ஆதலாலே அதற்காக எதுவும் செய்யத்துணியும் திடம் எங்களிடம் இருந்தது. இன்றைய தலைமுறை வன்னியத்தேவன் முதலான வீரர்களிற்கு அடிமை வாழ்வு என்பது எப்படியோ பழகிவிட்டது போலும். அதுதான் அவர்களது எதிர்ப்புக்குரல் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. அடிமைக்குள்ளே ஒரு அதிகாரத்தை பெற்று வாழ்தல் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் எம்மால் அது இயலவில்லை. எம் உடலில் இன்னும் உயிர் இருக்கும் வரை அதற்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டோம். இதுவே எம் தலையிலும் பெரிய கடமை தஞ்சைவீரரே’
என்று முதிர்ச்சியின் கம்பீரத்தோடு இராஜமந்திரியார் கூறினார்.

‘அதை நானே உணர்கிறேன் ராஜமந்திரியரே, தன்னிலும் மிஞ்சிய தன் புதல்வியையே இந்த போராட்டத்தில் இழந்திருக்கின்றார் திருமலை வன்னியர். இந்த தியாகங்களிற்கு முன்னால் ஏதும் ஈடாகாது என்பதை நான் நன்கறிகிறேன்’ பணிவோடு கூறினான் வருணகுலத்தான்.

அதை அவசரமாக மறுப்பது போல் பேச எத்தணித்தார் பூபால வன்னியர் ‘இல்லை தஞ்சைவீரரே… இல்லை…
இன்று என் மகளை இழந்து நிற்கும் இந்த தியாகத்தை மட்டுமே தாங்கள் அறிகிறீர்கள்.. ஆனால் என் கல்யாணிதேவி பிறக்கமுன்னரே இந்த பூபாலவன்னியர்க்கு நல்லை அரசு ஆற்றிய பேருதவிகளை நான் மறக்கவியலாது வீரரே.. என் தந்தை இறந்தபோது எனக்கு வயது எட்டு. விபரம் ஏதும் அறியாத அந்த பிஞ்சுவயதிலேயே திருமலை வன்னியராக அரியணை ஏறினேன். அரியணையில் வெறுமனே இருந்தனே தவிர ஆட்சியலுவல்கள் என் சிற்றப்பன் ஆணைப்படிதான் நடந்தது. என் சிற்றப்பன் பேராசைக்காரன். ஆட்சி அவா எல்லை மீற தன்னிச்சையாக திருகோணமலையை ஆளப்போவதாக கூறி பறங்கியருடன் கூட்டுச் சேர்த்தான். கத்தோலிக்க மதத்தையும் தழுவிக் கொண்டான். ஒரு முறையற்ற இராச்சியத்தின் வேந்தனாக அரியணையில் அமர்ந்திருப்பது மட்டுமே என் பொறுப்பாக இருந்தது. அது தவறு என்பதைக்கூட புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு அப்போது இருக்கவில்லை. கத்தோலிக்க மதத்தை தழுவிய என் சிற்றப்பனின் அக்கிரமங்கள் எல்லை மீறியதால் முன்னை யாழ் வேந்தர் சங்கிலிய மகாராஜா பொறுமையிழந்து திருமலை நோக்கி படையெடுத்து வந்தார். என் சிற்றப்பன் என்னையும் அழைத்துக் கொண்டு தென்னிலங்கை சென்று தலைமறைவானான்.

தென்னிலங்கையில் இருந்தவேளைதான் என் சிற்றப்பனின் அக்கிரமங்கள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் தொடங்கியது. அப்போதுதான் தன்னிச்சையாக நான் தொழிற்படவேண்டும் என்று உணர்ந்தேன்.

எனக்கென்று அன்று துணையாய் நின்றவர் அன்றைய யாழ்வேந்தர் சங்கிலிய மகாராஜா தான். என் சிற்றப்பனின் அக்கிரமங்களிற்கு முடிவுகட்டி, கருணைகூர்ந்து என்னையே மீண்டும் திருமலை வன்னிவேந்தராக அறிவித்தார் சங்கிலிய மகாராஜா. வேந்தர் எனக்கிட்ட கடமையாகவே நான் திருமலை வன்னிமையை இதுவரை ஆண்டு வருகிறேன்.

அதே போல் எதிர்மன்னசிங்க மகாராஜா இறந்தபின் அவரது மூன்று வயது பாலகனை அரியணையில் ஏற்றி அரசகேசரி நாடாள போட்ட திட்டத்தின் விபரீத விளைவுகளை அன்று என்னால் தெளிவாகவே பார்க்கமுடிந்தது. சங்கடஞ்சூழ்ந்த அந்த சமயத்தில் முறையான வேந்தர் ஒருவர் அரியணையில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை அறிந்தேன். என் மண்ணை எனக்கு மீட்டுத்தந்த யாழ் இராட்சியத்திற்காக, யாழ் மண்ணைக் காக்க வேண்டியது என் கடமை என்று உணர்ந்திருந்தேன். அதனால் தான் என் மகள் கல்யாணிதேவியை கூட காக்க மறந்து சங்கிலியகுமாரரை பாதுகாக்க வேண்டும் என்பதில் அன்று உறுதியாய் இருந்தேன்.

இதில் என் தியாகம் என்று சொல்வதற்கு ஏதுமில்லை தஞ்சைவீரரே. என் கடமை அது. எனக்கும் மந்திரியாருக்கும் இந்த நல்லைமண் காக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். தங்களிடத்தில் நாம் விடுக்கும் ஒரே வேண்டுகோளும் அதுதான்’
என்று மூப்பின் நடுக்கக்குரலில் கூறி முடித்தார் பூபால வன்னியர்.

தனியுண்ணாப்பூபால வன்னியரது வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த வருணகுலத்தானிற்கு இந்த நல்லைமண் யாரிடத்தும் அடிமையாகாமல் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பது உறுதியாய்ப் புலப்பட்டது. அதுவே தன் பிறப்பின் கடமை என்பது போல் உணர்ந்தான் வருணகுலத்தான்.

ராஜமந்திரியார் வருணகுலத்தானை நோக்கி ‘தஞ்சை வீரரே, தாமிங்கு வந்த பின் எம்நம்பிக்கை அசைக்கமுடியாத ஒன்றாக வளரத்தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை. அன்று மாருதவல்லியை தாங்கள் மீட்டு வந்த நொடி இருக்கிறதே, இந்த நல்லை மண்ணின் பெருஞ்சொத்தையே தாங்கள் மீட்டுக் கொடுத்த நொடி… அன்றே தங்களை மலைபோல் நம்பத்தொடங்கிவிட்டது எம் உள்ளம்’ என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறிய மந்திரியார் ஒரு கணம் நிதானித்துக் கொண்டார்.

‘ஆம்… வருணகுலத்தாரே இந்த உண்மையையும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போரிற்குப் புறப்படமுன் இந்த நல்லைமண்ணின் பெருஞ்சொத்து இளவரசி மாருதவல்லி என்பதை தாங்கள் அறிந்தாக வேண்டும்…’

வருணகுலத்தானிற்கு எதுவோ புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

பூபால வன்னியர் தொடர்ந்தார்.
‘ஆம் தஞ்சைவீரரே, தள்ளாத வயதிலும் இந்தக் கிழவன் அடிக்கடி மந்திரிமனைக்கு வருவதற்கு ஒரே காரணம் மாருதவல்லி தான். மாருதவல்லி உண்மையில் மந்திரியாரது புதல்வியல்ல. எனது பேர்த்தியாவாள். என் கல்யாணிதேவியின் திருவயிற்றில் உதித்த ஏகபுத்திரியாவாள்.….’ கண்ணீர் மல்கி கலங்கி அழுதார் பூபால வன்னியர்.

கல்யாணிராகத்தில் இசைத்துக் கொண்டிருந்த அந்த வீணைநாதம் சட்டென்று நின்றது.

சங்கிலிய மகாராஜா இந்த உண்மையை இப்போதுதான் மஞ்சரிதேவியிடம் கூறுகிறார். மஞ்சரிதேவியின் விரல்களால் அதற்குபிறகு எப்படி வீணையின் நரம்புகளை மீட்டமுடியும்..?

Related posts

குறை ஒன்றும் இல்லை…!

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 03

Thumi202121

ஈழச்சூழலியல் 40

Thumi202121

Leave a Comment