இதழ் 54

பரியாரியார் Vs அய்யர் – 03

தனது ஆச்சிக்கு உடல்நிலை மோசம் என்று பார்க்கவருமாறு ஐயர் ஆள் அனுப்பியும் தான் வராமல் தன் மகன் பரதனை அனுப்பி வைத்த பரியாரியார் மீது பயங்கர கோபம் கொண்டு பரியாரியார் வீட்டை நோக்கி பொங்கி வந்த ஆத்திரத்தோடு வந்த ஐயரை தடுத்து நிறுத்தியது முறிந்து விழுந்த மகிழ மரக் கொப்பு. அபாயங்களை இயற்கை முன் கூட்டியே அறிவிக்கத் தவறுவதுமில்லை. அதை மனிதன் உணர்ந்துகொண்டதாயுமில்லை. இங்கும் அப்படித்தான். மரக்கொப்பை ஏறி மிதித்து அப்பால் கடந்து வாசலைக் கடந்து உள்ளே போனார் அய்யர்.

இருமிக்கொண்டே வாங்கில் கிடந்த பரியாரியார் அய்யரின் வரவை உணர்ந்து கொண்டு எழும்ப முயன்று முடியாமல்ப் போய் மீள எழும்பி உட்கார்ந்து கொண்டார்.

வீட்டிலிருந்து பரியாரியாரை விழுங்கிவிடும் வேகத்தில் வந்த அய்யர் பரியாரியாரைக் கண்டதும் அசைவற்று நின்றார். ஏதோ ஒன்று அவரை பேச விடாமல் தடுத்தது. பேச மட்டுமா? பரியாரியார் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தடுத்தது. எங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். வந்தவரை எழும்பி வரவேற்க முடியாத தன் இயலாமையை வெளிப்படுத்த பாரியார் அதீத பிரயத்தனம் செய்தார். ஆனால் அய்யர் அதை உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை.

“ஆச்சிக்கு கடுமை என்டுதானே ஆளை அனுப்பின்னாங்க. அதுக்கும் வராட்டி என்னன்னு நினைக்கிறதாம்!”

“அதுதான் பெடியனை அனுப்பின்னாங்க தானே!” இருமிக்கொண்டே பரியாரியார் சொன்னார்.

“அவனுக்கென்ன தெரியும்? கைப்பக்குவமும் இல்லை! தலைப்பக்குவமும் இல்லை!”

“சாஸ்வதன் கோயில்ல பூசை செய்யலாம் என்றால் பரதனும் வைத்தியம் பார்க்கலாம்தானே?”

சாஸ்வதன் அய்யரின் ஒரே மகன். அய்யர் அயலூர்க் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் என்டு போனால் சாஸ்வதன் தான் அங்க கோயில்ல பூசை! ஆனால் அவனுக்கு ஒரு மந்திரமும் ஒழுங்கா தெரியாது! இது பரியாரியாருக்கு நல்லாவே தெரியும். அய்யரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக ஆகமங்கள் தெரியாத சாஸ்வதன் ஆலயத்தில் பூசை செய்வதில் பரியாரியாருக்கு துமியளவும் உடன்பாடில்லை. இதை காலம் வரும்போது அய்யருக்கு உணர்த்த வேணும் என்டு காத்திருந்தார் பரியாரியார். இந்த சந்தர்ப்பத்தை இதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அய்யரின் கோபம் மேலும் அதிகமானது.

“அஸ்வதன் என்ட மகன். அவன் செய்யாமல் வேற யார் செய்யுற?”

“அது மாதிரித்தான் பரதன் என்ட மகன். அது போதாதா?”

“அது மட்டும் போதுமா?”

“வேற என்ன வேணும்?”

“பரியாரியார் மகன் என்டாப் போல வைத்தியம் தெரியணுமே!”

“ஐயான்ட மகனுக்கு மட்டும் மந்திரம் தெரிஞ்சா பூசை நடக்குது?” மேற்கொண்டு கதைக்க முடியாமல் இருமினார் பரியாரியார்.

“ஓகோ… அதுவா பிரச்சினை. அவனை இப்படி கொஞ்சம் கொஞ்சமா பழக்கினாத்தானே அவனும் படிப்பான்.”

“பரதனும் வைத்தியம் படிக்க வேணாமா? அதுதான் பழகட்டுமென்டு அனுப்பி வைச்சன்.”

பரியாரியார் எங்க சுத்தி எங்க வாறார் என்டு ஐயருக்கு நல்லாவே விளங்கியது. கோபமும் இன்னும் அதிகமானது.

“ஓ… அதுவும் இதுவும் ஒன்னா? ஆச்சியைப் படுக்கப் போட்டுட்டு இப்படி கதைக்கிறது கொஞ்சமும் நல்லாயில்லை.” திரும்பி ஐயரின் முகத்தை பார்த்து சுட்டு விரலை நீட்டி அய்யர் சொல்வதற்கும் பரியாரியார் மனைவி பரமேஸ்வரி வருவதற்கும் சரியாக இருந்தது.

“வாங்கோ.. ஐயா.. வாங்கோ..
என்ன அப்பா…? ஐயாவை நிக்க வைச்சா கதைக்கிறது? மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஐயா! முதல்ல இந்த கதிரைல இருங்கோ… இந்தாங்கோ!”

“அம்மா பரமு! நான் இங்க இருக்க வரேல்ல கண்டீயோ! “

” கோபப்படாதீங்கோ ஐயா.. முதல்ல இருங்கோ.. ஆச்சிக்கு என்ன மாதிரி இப்ப..?”

“அதுதான் உன்ட பெடியனை விட்டு சோலிய முடிக்கப் பாத்தீங்களே! இப்ப என்ன அக்கறையா குசலம் விசாறிக்கிறா?”

“ஐயோ… ஐயா.. என்ன இப்படிச் சொல்றியள்? அவ எங்களுக்கும் ஆச்சி போலத்தான்! இவருக்கு ரண்டு நாளா உடம்பே சரியில்லை. கண்ணே திறக்கேலாம கஷ்டப்படுறார். இன்டைக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமா கதைக்க தொடங்கி இருக்கிறார். அதால தான் ஐயா இவர் வரேல.”

“ஓ… அதுக்கான்டி ஒன்னும் தெரியாத பரதனை அனுப்பிவிங்களா?”

“யாருக்கு ஒன்னும் தெரியாது. ரண்டு வருசமா எனக்கு வைத்தியத்துக்கு உதவிக்கு நின்டு எல்லாமே நல்லா தெரிஞ்சிருக்கான் பரதன்.” அய்யருக்கும் பரமுவுக்குமான உரையாடலுக்கிடையில் தொண்டையை செருமிக்கொண்டே பரியாரியார் சொல்லி முடித்தார்.

“ஓம் அய்யா! இவரோட நின்டு நிறையவே தெரிஞ்சிருக்கு அவனுக்கு. அதோட நீங்கள் அனுப்பின ஆள் சொன்ன ஆச்சியின் நோய் அறிகளை வைச்சு இவரும் சில விசயங்கள் சொல்லித்தான் அனுப்பி வைச்சவர். பிரச்சனை வராது.” பக்குவமா பரமு சொன்னதைக் கேட்ட அய்யருக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நம்பிக்கை இல்லாததால் பரதன் கொடுத்த மருந்துகளை இன்னும் ஆச்சிக்கு கொடுக்காமல் நேரே இங்கே அய்யர் வந்துவிட்டார்.

“இதை இப்படி விளக்கமா சொல்லாமல் விசர்க்கதைகள் சொல்லிக்கொண்டிருந்தால் மனுசனுக்கு கோபம் வருமா? வராதா? ஆச்சி இப்படி படுத்து நான் பார்த்ததேயில்லை. வீட்டில எல்லாரும் பயந்து போய் இருக்கிறம்.”

“பயப்பிடாதீங்க ஐயா.. ஆச்சிக்கு எல்லாம் குணமாகிடும். அவர் எழும்பி நடக்கத் தொடங்கீட்டால் உடன ஒருக்கா கூட்டிட்டு வாறன். “

“சரி சரி.. அப்படி வாறென்டா சொல்லு என்ட ஓட்டோவ அனுப்பி வைக்கிறன்.”

“கட்டாயம் ஐயா.. ஏதும் அவசரம் என்டா ஆள அனுப்புங்கோ. நான் உடனை இவரை கூட்டிட்டு வாறன்.”

“சரி பிள்ளை நான் போட்டு வாறன்.”
என்று போட்டு விறு விறென நடந்து போனார் அய்யர். இப்பதான் அந்த மகிழ மர கொப்பு விழுந்து கிடப்பதை கவனித்திருக்க வேண்டும். திரும்பித் திரும்பி அந்த முறிந்த கிளையையே பார்த்த படி போய்க் கொண்டிருந்தார் அய்யர்.

பரியாரியார் நீண்ட நேரமாக எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்ததால் வெளியுலக சம்பாசணைகள் அவர் காதுக்குள் நுழையவும் இல்லை. அனேகமாக அய்யர் புறப்பட்டதைக் கூட அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கவனித்தீர்களா? பரியாரியார் கண்கள் நனைந்திருக்கின்றன. இன்னொன்றையும் கவனித்தீர்களா? அய்யரும் பரியாரியாரும் நேரடியாக பேசிக்கொள்ளவேயில்லை. அப்படியென்றால் அவர்களுக்குள் இன்னும் எதேதோ இருக்க வேண்டும். அவர்களுக்குள் இன்னும் நிறைய இரகசியங்கள் புதைந்திருக்க வேண்டும்.

அய்யரை வழியனுப்பிவிட்டு பரியாரியார் படுத்திருந்த வாங்கிற்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு பரமு பேச்சுக் கொடுத்தாள்.

“பரதனை நீங்கள் அனுப்பினது ஐயாக்கு சுத்தமா பிடிக்கேல.”

“என்னால உண்மைல ஏலாது. ஆனா ஏலும் என்டாலும் நான் போயிருக்க மாட்டன்.”

“குட்டி ஐயா சாஸ்வதன் பூசை செய்ததில அவ்வளவு கோபமா உங்களுக்கு?”

“நீயுமாடி…? எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரிக் கதைக்கிறாய்?” என்டு பரியாரியார் கேட்டதும் தான் தாமதம் பரமுவின் முகம் மாறிவிட்டது. பரியாரியார் தொடர்ந்தார்.

“எல்லாம் பரதனுக்காகத்தான். ஆச்சியின்ட வருத்தத்திற்கு மருந்து போட மட்டும் நான் பரதனை அனுப்பல. அவன் தன்ட வருத்தத்திற்கும் மருந்து போடட்டும் என்டு தான் அனுப்பின்னான்.” சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார் பரியாரியார்.

” கௌசல்யா இப்ப வந்து நிக்கிறாளா என்ன?”

பரமேஸ்வரி கேட்டுக் கொண்டிருக்கும் போது படலையைத் திறந்து பரதன் வருவதை கண்டாள். பரியாரியாருக்கும் சமிக்ஞை காட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

வந்து கொண்டிருந்த பரதன் கண்களும் கலங்கியிருந்தன.

வைத்தியம் தொடரும்….

Related posts

ஈழச்சூழலியல் 40

Thumi202121

விடியலில் ஓர் கனவு

Thumi202121

கட்டிளமைப்பருவம் கவனம்! கவனம்!

Thumi202121

Leave a Comment