உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது. ஃப்ளோஸியின் உரிமையாளர் விக்கி க்ரீன் கூறும்போது, “ஃப்ளோஸி ஒரு மாற்றுத்திறன் பூனை. ஃப்ளோஸிக்கு காது கேட்காது. கண்பார்வை குறைபாடு உள்ளது. ஆனால், மிகவும் அன்பான பூனை. விளையாட்டுத்தனமான பூனை.
தற்போது கின்னஸ் உலக சாதனை புரிந்த ஒருவருடன் நான் இப்போது என் இல்லத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்மால் முடியவில்லை” என்று தெரிவித்தார்.
உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே அமைவதை நாமும் பார்த்திருப்போம். அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் ருமேசா கெல்கி. உலகின் உயரமான பெண்ணாக அறியப்படுகிறார் துருக்கியின் ருமேசா கெல்கி . இவரது உயரம் 7 அடி 7 அங்குலம். தனது உயரம் காரணமாக ருமேசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று ருமேசா கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது. இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு ருமேசா கெல்கி சென்றடைந்திருக்கிறார்.
தான்சானியாவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு எலிகளை பயன்படுத்தும் நோக்கில், அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது பெல்ஜியத்தை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் ஒன்று. இந்தப் பயிற்சி அந்த நாட்டில் உள்ள மோரோகோரோ பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எலியின் முதுகில் ஹை-டெக் பை ஒன்று கட்டப்படுகிறது. அதில் இருப்பிடத்தை அறிந்துகொள்ள உதவும் சாதனம், வீடியோ கேமரா மற்றும் இரு தரப்பு ரேடியோ தொடர்பு சாதானமும் இருக்கும். இந்த ரேடியோ சாதனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பேச முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களை போல எலிகளுக்கும் பயிற்சி கொடுக்கலாம் என பயிற்சியாளர்கள் சொல்கின்றனர். எலிகளுக்கு உள்ள நுகரும் திறன் இதற்கு பெரிதும் உதவும் என நம்புகின்றனர். தற்போது ஆப்பிரிக்க ஜெயண்ட் பவுன்ச் எலிகளை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாழ்நாள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது.
இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ராயல் மின்ட் ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50p (pence) நாணயங்களை வெளியிட உள்ளது. இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனம், “ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்லாது, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய மன்னர் சார்லஸ்-III ஆகியோரின் உருவப்படங்களும் இருக்கும்.
மேலும் ஹாரிபாட்டர் தொடரில் இடம்பிடித்து மக்களை வெகுவாக கவர்ந்த டம்பில்டோர், ஹாக்வார்ட்ஸ் பள்ளி மற்றும் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் உருவப்படங்களும் இருக்கும். நாணயங்களில் உள்ள வடிவமைப்பை, முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க சிறப்பு லேசர்களைப் பயன்படுத்தி நாணயங்களை வடிவமைத்துள்ளோம். இந்த நாணயங்கள் ஒரு பிரகாசமான ஒளியின் கீழ் வைக்கப்படும் போது ’25’ என்ற எண் பொறிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் என்றும், இந்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் இந்த நாணயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.