இருளில் ஒரு தீபம்
ஒரு சின்னப் பூத்திரியில் இருந்து சிந்துகின்ற ஒளித்துளியின் பேரழகிற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்? தொட்டுத் தூண்டிவிடப்பட்ட அந்தத் திரியா? பற்றி எரிய வைத்த எண்ணெயா? எண்ணெயை ஏந்திய விளக்கா? இல்லை . இவை எதுவுமே இல்லை. இருள்!
இந்த ஒளித்துளியை இத்தனை அழகாய் மின்னச் செய்தது அதை சுற்றிப் பற்றியிருந்த கரிய இருள் தானே என்பதை யாராலும் மறுக்கமுடியுமா?
சங்கிலிய மகாராஜாவின் காரிருளை ஒத்த கடந்தகால நினைவுகளில் ஒரு மின்னும் பூத்திரியாய் ஒளிர்வது அவரது புதல்வி மாருதவல்லிதான். தன் மகள் பிறக்கும் போதே இறந்துவிட்டாள் என்ற பொய்யை உண்மை என்று நம்பியே அன்று ஆட்சிபீடத்தில் ஏறினார் சங்கிலிய மகாராஜா.
அரசனான பின்தான் ராஜமந்திரியார் இந்த உண்மையை சங்கிலிய மன்னரிடம் கூறினார். முன்னரே தெரிந்திருந்தால் நிச்சயம் ஆட்சிபீடமேற சம்மதித்திருக்க மாட்டார். பின்னர் தெரிந்ததால் அதை யாரிடமும் அவரால் சொல்லவும் முடியவில்லை.
ஏன்? … மஞ்சரி தேவிக்கு கூட சொல்லவில்லையே. இப்போதுதான் என்ன எண்ணினாரோ தெரியாது- மஞ்சரிதேவியிடம் மாருதவல்லி பற்றிய உண்மையை சங்கிலிய மகாராஜா கூறினார்.
வீணை நரம்புகளோடு விளையாடிக் கொண்டிருந்த மஞ்சரிதேவியின் விரல்கள் அசைவற்று நின்று விட்டன. வீணையோடு சிலையாகிப்போனார் தேவியார். கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
‘ஏன் பிரபு…. இந்த உண்மையை தங்கள் மஞ்சரிதேவியிடம் இத்தனை நாளாய் தாங்கள் மறைக்க வேண்டி நேர்ந்தது ஏன் பிரபு….
தங்கள் புதல்வி மாருதவல்லியை இந்த மஞ்சரிதேவி தன் புதல்வியாய் நிச்சயமாய் எண்ணமாட்டாள் என்று அறுதியாய் நம்பிவிட்டீர்களா பிரபு….
இந்த அரசவையில் இளவரசியாய் வளர வேண்டியவளாயிற்றே மாருத வல்லி. அவளை இத்தனைகாலம் எதற்காக இங்ஙனம் அல்லலுக்கு ஆளாக்கினீர்கள் பிரபு…
நான்… இந்த அபலை மஞ்சரிதேவி… என் புதல்வியை என்னோடு பிரியாது வைத்து வளர்த்திருக்கமாட்டேனா….
ஏன் பிரபு… ஏன்…..?’
உதிரும் கண்ணீருடன் கேட்டுக் கொண்டே இருந்தார் மஞ்சரி தேவி.
‘இல்லை மஞ்சரி… அப்படியில்லை.. உன்னைப்பற்றி நான் நன்கறிவேன். மாருதவல்லி மீது என்னிலும் அதிக பாசம் கொண்டவள் நீ… உன்னுடனே அவள் வளர்ந்தாள். உன்னைப்போலவே அலங்காரங் கொண்டு ‘நானும் இந்த நாட்டின் மகாராணி’ என்று அவள் வேடிக்கையாய்ச் சொல்வதை பலமுறை நானே கண்டிருக்கிறேன். அதுவே உண்மை என்று எப்போதும் சொல்லமுடியாத ஊமையாய் நான் என்னுள்ளே புலம்பிய நாட்களே ஏராளம் தேவி. உன்னிடம் கூட இந்த உண்மையை மறைக்க வேண்டும் என்று நான் அறுதியாய் இருக்கவில்லை. இந்த உண்மை கடுகளவும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதிலே நான் உறுதியாய் இருந்தேன்….’
என்று கூறியபடி தன் கரங்களினால் மஞ்சரிதேவியின் கரங்களை பற்றிக் கொண்டார் சங்கிலியமகாராஜா.
‘ஆம் மஞ்சரி… கல்யாணிக்கும் எனக்கும் பிறந்த புதல்வி இறந்துவிட்டாள் என்பதையே நானும் முழுதாய் நம்பிக் கொண்டிருந்தேன். முடியரசன் ஆனபின் தான் அது பொய் என்று இராஜமந்திரியார் மூலம் அறிந்தேன். சதிகாரர்களால் எனக்கு பிறக்கப்போகின்ற உயிரிற்கு ஆபத்து வரப்போவதை முன்கூட்டியே அறிந்த திருமலை வன்னியர் யாரும் அறியா வண்ணம் எங்களிற்குப் பிறந்த புதல்வியை மந்திரியாரிடம் கொண்டுவந்து சேர்ப்பித்திருக்கிறார். இறந்தே பிறந்த குழந்தையை உடன் நல்லடக்கம் செய்துவிட்டதாய் என்னிடம் அன்று கூறினார்கள். என் கண்களில் கூட குழந்தையை காட்டவில்லை.
அச்சமயமே ராஜமந்திரியாரது துணைவியாரும் நீண்ட காலங் கடந்து கர்ப்பம் தரித்திருந்தார். துரதிஷ்டவசமாக இராஜமந்திரியாரிற்கு பிறந்த சிசு இறந்துவிட்டது. அச்சமயத்தில் தான் எங்கள் புதல்வியை திருமலை வன்னியர் இராஜமந்திரியாரிடம் சேர்ப்பித்தார். மேலும் எக்காலத்திலும் எங்கள் புத்திரிக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இராஜமந்திரியாரும் அவரது துணைவியாரும் எங்கள் புதல்வியையே தம் புதல்வியாக அனைவரும் அறியும்படி வளர்த்து வந்திருக்கின்றனர்.
எனக்கோ கல்யாணிதேவிக்கோ கூட இந்த உண்மை தெரியாது. மாருதவல்லியின் சிறுபிராயத்திலேயே இராஜமந்திரியாரது துணைவியார் இறந்துவிட்டார். அன்றிலிருந்து என் புதல்விக்கு தாயாகவும் தந்தையாகவும் இராஜமந்திரியாரே ஆகிப்போனார். முடிக்குரிய வேந்தனாய் என்னை அமர்த்தியபிறகுதான் இந்த உண்மையை எனக்கு தெரியப்படுத்தினார். அன்று நான் மட்டும் அரசனாய் ஆகியிருக்காவிடின் என் புதல்வியோடு கண்கணாத தொலைவிற்குச் சென்றிருப்பேன்.
ஆனால் அரசனான என்னால் அது முடியவில்லை. இந்த உண்மை வெளியில் தெரிந்தால் என் கல்யாணிக்கு நிகழ்ந்த அந்தக் கொடுமை என் புதல்வியையும் சூழ்ந்துவிட்டால் அதை இந்த வேந்தனால் நிச்சயம் தாங்கிக்கொள்ள இயலாது மஞ்சரி… அதனால்தான் இந்த உண்மையை என் மனதிற்குள்ளே புதைத்துக் கொண்டு என் புதல்வியை காண்கின்ற நொடிகளில் எல்லாம் ஒரு புழுவைப்போல் எனக்குள்ளே துடித்துக் கொண்டிருக்கிறேன் மஞ்சரி… ‘
சங்கிலியன் கண்கள் நிரம்பி வழிந்தன.
‘பிரபு….. மன்னியுங்கள் வேந்தே… தங்கள் வேதனை உணராமல் நான் ஏதேதோ பேசிவிட்டேன்… என்னை மன்னியுங்கள்….’
சங்கிலிய மகாராஜா பற்றியிருந்த தன் கரங்களின் மீது சிரங்குவித்து அழுதார் மஞ்சரி தேவி…
‘தேவி… உன் தவறு எதுவுமே இல்லை. இக்கட்டுகளிற்கு இடையில் சிக்கித் தவிக்கும் நான் தான் பெருந்தவறுகளை செய்து வருகிறேன். இப்போது கூட போரென்று புறப்படமுன் இந்த உண்மையை உன்னிடம் உரைக்க வேண்டும் என்று என் உள்மனம் உந்தியது. போரில் எதுவும் நிகழலாமல்லவா… எது நிகழ்ந்தாலும் ..’
‘பிரபு… !‘
அவசரமாக இடைமறித்தார் மஞ்சரி தேவி.
‘அப்படி ஒருபோதும் இனி கூறாதீர்கள் பிரபு… இந்த மஞ்சரி அதை தாங்கிக் கொள்ள மாட்டாள். ஆனால் உறுதியாய் சொல்கிறேன். இன்றுவரை நான் மாருதவல்லியை என் புதல்வியாகத்தான் பார்த்து வந்தேன். என்றும் அவள் என் புதல்விதான். நல்லை மண்ணின் இளவரசி எம் புதல்வி மாருதவல்லியாவாள் பிரபு…’
‘மஞ்சரி தேவி… உண்மையிலேயே நீ என் பாக்கியம். உனக்கு நினைவிருக்கிறதா மஞ்சரி … அன்று மாருதவல்லியை மிக்கபிள்ளை கடத்திச்சென்ற நாள். நான் சொல்ல முடியாத வேதனையில் துடித்துக் கொண்டிருந்தேன். அன்றும் நான் நம்பிக்கையோடிருக்க காரணமாயிருந்தவள் நீதான். இன்றும் என் எல்லா நம்பிக்கைகளுக்கும் காரணமானவள் நீதான்….’
‘அன்று மாருதவல்லி கடத்தப்பட்டபோது தங்களின் வேதனையை நான் நன்கு பார்த்தேன் பிரபு. மாருதவல்லி மீது தாங்கள் கொண்ட அன்பின் மிகுதி என்றுதான் அன்று எண்ணினேன். ஆனால் புதல்வியை காணாது தாங்கள் கொண்ட வேதனையின் அளவை என்னால் இன்றுதான் உணரமுடிகிறது வேந்தே…’
‘ஆம் மஞ்சரி… இந்த நாடாளும் சங்கிலியன் அன்று தவித்த தவிப்பை என்றும் மறக்கமுடியாது. தஞ்சை வீரர் என் புதல்வியை மீட்டுக் கொண்டுவந்த நொடி இருக்கின்றதே அந்த நொடிதான் என் கல்யாணிதேவியே மீண்டும் உயிர் பெற்று வந்ததைப் போல் உணர்ந்தேன்.
அதேசமயம் அன்று – மிக்கபிள்ளை சிறைபிடிக்கப்பட்டு வந்த அரசவையில் தான் எனக்கு அந்த சந்தேகமும் தோன்றியது. மிக்கபிள்ளை எதற்காக மாருதவல்லியை கடத்திச் செல்ல வேண்டும்? மருதவல்லி மீது அவனிற்கு என்ன பகை? ஒருவேளை மாருதவல்லி பற்றிய இரகசியம் அவனிற்குத் தெரிந்திருக்குமோ? என்று கேள்விகள் என்னைக் குடைந்தன அன்று’
‘ அது எப்படி சாத்தியமாகும் பிரபு… தங்களிற்கும், இராஜமந்திரியாரிற்கும், திருமலை வன்னியருக்கும் என மூவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் எப்படி நம் எதிரிகளிற்குத் தெரிந்திருக்கும்… அதற்கு சாத்தியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது வேந்தே..’
‘இல்லை மஞ்சரி … நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால் என் உள்ளத்தின் குடைச்சல் கொஞ்சமும் அடங்கவில்லை. அதனால்த்தான் இரகசிய சிறைக்கு நானே சென்று மிக்கபிள்ளையை சந்தித்தேன். அவனிடமிருந்து இந்த உண்மையை அறிய வேண்டும் என்பதற்காகவே ஈழநாட்டில் மங்கையை கவர்ந்த குற்றத்திற்கு அவனை கழுவில் ஏற்ற வேண்டும் அன்று அரசவையில் அனைவரும் சொன்னபோதுங் கூட என் கோபத்தை அடக்கி பொறுமை காத்தேன். வருணகுலத்தான் மிக்கபிள்ளையை தற்சமயம் இரகசியசிறையில் அடைப்பதே சிறந்தது எனக் கூறியதை சாதகமாக்கி மிக்கபிள்ளையை சிறையிலடைக்க உத்தரவிட்டேன்.
சிறையில் அவனை தனியாக சந்தித்துப் பேசியபோதுதான் அவன் மாருதவல்லி பற்றிய உண்மையை அறிவான் என்பதை தெரிந்து கொண்டேன்’.
‘பிரபு… அது எப்படி? நல்லைக் கோட்டைக்குள்ளே நான் கூட இதுவரை அறிந்திருக்காத இரகசியம் எப்படி எம் எதிரிகளிற்குத் தெரிய வந்திருக்கும்?’
‘வேறு எப்படி…. நல்லை இராச்சியத்தில் முன்னை ஓர் அரக்கி இருந்தாளே… அவள் மூலம் தான்’
‘யாரைச் சொல்கிறீர்கள் பிரபு… தேவி இராஜகாமினியையா?’
‘அவளைத்தான்… அவள் தான் எப்படியோ கோட்டைக்குள் இந்த இரகசியத்தை அறிந்திருக்கிறாள். விடுதலை உணர்ச்சி மிகுந்திருந்த வீரனான மிக்க பிள்ளையை கூட மனம்மாற்றி காத்தோலிக்க டொம்லூயிஸ் ஆக்கியவளும் அவளேதான். தன் மாயவலையில் மிக்கபிள்ளையை சிக்கவைத்து மாருதவல்லி பற்றிய இரகசியத்தை அவனிடம் கூறி மாருதவல்லியை கவர்ந்து செல்ல வியூகம் வகுத்தவள் எல்லாமே அந்த அரக்கிதான். அவளது வஞ்சப்பார்வையில் சிக்கி அறிவிழந்து கருமமாற்றிய கைப்பாவையே மிக்கபிள்ளை என்று அவனிடம் பேசியதி்ல் இருந்து தெரிந்து கொண்டேன்.
விடுதலை வேட்கை கொண்டிருந்த ஒரு வீரனை எப்படி தன் மாயவலையில் வீழ்த்தி காரியம் ஆற்றி இருக்கிறாள் அந்த மாயக்காரி… அவளை நினைக்கையில்… அவளை உயிரோடு … அந்த வன்னிமாளிகையில் விட்டுவைத்திருப்பதே பெருங்குற்றம் என்று சிலகணம் தோன்றுகிறது.
நல்லவேளை வருணகுலத்தானிடம் அவள் மாயலீலைகள் வெல்லவில்லை. வென்றிருந்தால் எத்தனை விபரீதங்களை அது உண்டாக்கியிருக்கும்.’
‘யார் தஞ்சை வீரரா?…’
‘ஆம் தஞ்சை வீரர் வருணகுலத்தான் தான். வருணகுலத்தானை கூட சந்தித்திருக்கிறாள் அந்த மாயக்காரி. தன் வசீகரப் பேச்சால் என்னைப் பற்றிய அவதூறைகளை பரப்பியிருக்கிறாள். ஆனால் தஞ்சைவீரர் என்னிடம் தெளிவுற வினவி உண்மைகளை அறிந்து கொண்டார்.. ‘
‘நல்லவேளை .. ஆய்ந்தறியும் அறிவாற்றல் கொண்டவர் தஞ்சைவீரர் என்பதால் இராஜகாமினியின் காந்தப்பார்வை அவரிடத்தில் சக்தியிழந்து போய்விட்டது. இதுவே வேறு யாராக இருந்திருந்தால் அது எம் இராச்சியத்திற்கே பேரழிவை அல்லவா அழைத்து வந்திருக்கும். தேவி இராஜகாமினி மாயப்பார்வை கொண்டவர் என்பதை நானும் அறிவேன். ஆனால் இங்ஙனம் அபத்தமான காரியங்கள் ஆற்றவும் துணிகிற பெண்ணாய் அவள் ஆகுவாள் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. நல்லை வேந்தரான தங்களை தன் மாயக்கண்களால் வீழ்த்தமுடியாமல் போய்விட்டதற்காக இப்படி எதுவும் செய்ய இராஜகாமினி துடிந்துவிட்டாள் என்று என்னால் நிச்சயமாக நம்ப முடியவில்லை பிரபு.. இருக்கட்டும்.. அவளின் விசமுயற்சிகளால் அவளால் எந்த வெற்றியையும் கண்டுகொள்ள முடியாது. மேலும் பரிதாபத்திற்குரியவளாகவே ஆகப் போகின்றாள் . ஆனால்… அது எப்படி பிரபு? நம் தஞ்சைவீரரால் வன்னிமாளிகையில் இருக்கும் இராஜகாமினியை எப்படி சந்திக்க முடிந்தது? ‘
‘சித்திராங்கதா!’
திரும்பி அழுத்தமாக மஞ்சரிதேவியை நோக்கி கூறினார் சங்கிலியமகாராஜா.
‘ஆடலரசியா? ‘ வியந்து கேட்டார் மஞ்சரி தேவி.
‘ஆம் அவளேதான்’
மண்டப வாசலில் ஒரு காவல்வீரன் அவசரமாக வந்து தன் அனுமதிக்காக காத்து நிற்பதை சங்கிலியன் கண்டான்.
‘யாரங்கே??’ ஆணையிட்டான்.
‘மன்னா… ஒலிவேராவின் படை பூநகரியிலிருந்து பின்வாங்க மறுத்து போரை எதிர்பார்த்து புறப்படுகின்றனவாம் என செய்தி கிடைத்தது. திட்டமிட்டபடி தஞ்சைவீரர் உடன் களமிறங்குகிறார் என்று தெரியப்படுத்தினார். வண்ணார் பண்ணையில் பாசறையிட்டு நாளை போரைத்துவக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம். தீட்டப்பட்ட வியூகப்படி எல்லாம் நிறைவேறும் என தங்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார்’ பணிந்து வணங்கி விடைபெற்றான் காவல்வீரன்.
‘கேட்டாயா மஞ்சரி… நல்லை மண்ணில் போர் மேகம் சூழ்ந்து விட்டது. பறங்கியனிற்கு நல்லைக் கோட்டையில் ஒரு முடிவு வரப்போகிறது. முடிவு எதுவாகினும் நினைவில் கொள் தேவி… போரில் வெற்றி காணும் வரை மாருதவல்லிக்கு இந்த உண்மை தெரிந்துவிடக் கூடாது. நான் விரைகிறேன்’
விரைந்து புறப்பட்டார் சங்கிலியமகாராஜா.
1 comment