மண் பாதுகாப்பு சட்டங்களில் அதிக கவனம் செலுத்தல்
குறிப்பிடத்தக்களவான சரிவு நிலங்களில் அவற்றின் இயற்கையான தாவர மூடுபடைகள் அழிக்கப்பட்டு, விவசாய நடவடிககைகள் மேற்கொள்ளப்படுகின்றன.சில தேயிலைத் தோட்டங்கள் வினைத்திறனான மண்காப்பு நடவடிக்கைகளுடன் மிகச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்ட போதிலும், ஏனைய நிலங்களில் அதிகளவான விஸ்தீரணம் மண்ணரிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
மேலும், அறுவடை செய்யும் போது மண்ணைக் குழப்பும் உருளைக்கிழங்கு, லீக்ஸ், கரட் போன்ற ஆண்டுப் பயிர்கள் மலைப்பிரதேசங்களில் குறைவான மண்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிரிடப்படுகின்றன. நிலங்களை மண்ணரிப்பிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்யும் 1951ம் ஆண்டின் 25ம் இலக்க மண்காப்பு சட்டம் அரிதாகவே அமுல் செய்யப்படுகின்றது. அப்போது, மண்காப்பு நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கான மனித வளங்களோ அல்லது ஏனைய வளங்களோ மத்திய அல்லது மாகாண திணைக்களங்களிடமோ இல்லை. காலணித்துவ ஆட்சி காலத்தின் போது மட்காப்பில் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயம் நாடெங்கிலும் தகுதி வாய்ந்த அதகளவான ஆளணியினர் நாடெங்கிலும் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். 1960 களிற்குப் பின்னர் விரல் விட்டு எண்ணக் கூடியளவிற்கு அலுவலர்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டது. மேல் மண் இழக்கப்படல், உற்பத்தித்திறன் குறைதல், நீர்நிலைகள் உட்பட சுற்றாடலிற்கு ஏற்படும் பாதிப்புகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு மட்காப்பில் அதிகளவான கவனம் செலுத்த வேண்டும்.
நீர்நிலைகளின் பாதுகாவலர்களாக குடிமக்கள்
இலங்கை தனது நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு சட்டத்திலும்,அதனை அமுல்செய்வதிலும் மாத்திரம் தங்கியிருக்கக் கூடாது. பெரும் எண்ணிக்கையான பாராளுமன்ற சட்டங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், விதிகள் என்பன ஐம்பது வருடங்களிற்கும் மேலாக அமுலில் உள்ள போதிலும், நீர்மாசடைதல் எவ்வித தடையுமில்லாது தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். குடிமக்கள் தமது வசிப்பிடங்களிற்கருகே உள்ள நீர்நிலைகளின் பாதுகாவலர்களாக செயற்படுவதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீரை சுத்தமாக வைத்திருப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது புத்திசாலித்தனமானதொரு நடவடிக்கையாகும். இது பெரும் எண்ணிக்கையான சிறு நீர்நிலைகளிற்கு மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் இங்குள்ள நீரின் தரத்தை எந்தவொரு அரசாங்க நிறுவனமும், எவ்விதத்திலேனும் கண்காணிப்பதில்லை. பொலித்தீன் பைகள், யோகட் கோப்பைகள், வெற்றுப் போத்தல்கள்,மரக்கறி, பழங்களின் கழிவுகள் என்பன பெரும்பாலான நீர்நிலைகளில் மிதப்பதை நாம் காணலாம். இதிலிருந்து இலங்கை மக்கள் சுற்றாடல் மீது தமது அக்கறையை செலுத்துவதில்லை என்பதை எடுத்தக் காட்டுகின்றது. இதற்கு மறுதலையாக குடிமக்கள் குழுக்கள் விழிப்புணர்வுடனிருந்து தமது ஏரிகள்,நீர்த்தேக்கங்கள் என்பனவற்றை மாசடையாது பாதுகாப்பதை பல உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டக் கூடியதாய் உள்ளது. டெக்சாஸ் இல் ரென்சம் கெனியோன் ஏரி மலைகளும் வனங்களும் சூழ்ந்துள்ள இரம்மியமானதொன்றாகும். அவ் ஏரியை சுத்தமாக வைத்திருப்பதில் உள்ளுர்வாசிகள் பெரும் பங்கினை வகிக்கின்றனர். இதேவேளை ஏரியையும், அதனைச் சூழுவுள்ள இயற்கை அழகையும் இரசித்து, சுத்தமான காற்றைச் சுவாசிக்க விருந்தினர்கள் வரவேற்கப்படுகினறனர்.இந்த ஏரி எவ்வகையிலேனும் மாசடையக் கூடாது என்பற்காக வருகை தரும் விருந்தினர்கள் தமது வாகனங்களை விட்டு இறங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
தமது சுற்றாடலில் உள்ள நீர்நிலைகளை பாடசாலைப்பிள்ளைகளும், வீட்டுப் பெண்மணிகளும் மிகவும் அக்கறையுடன் காத்து வருவதோடு, நீர்மாசடையாதிருப்பதை உறுதி செய்வதற்கு மாசுக்களை உருவாக்குவோர், சட்டங்களை இயற்றுவோர், சட்டங்களை அமுல் செய்வோர் ஆகியோர் மீது அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றனர். உள்ளுராட்சி நிறுவனங்கள், சமூக குழுக்கள். பாடசாலைப் பிள்ளைகள், தனிப்பட்ட குடிமக்கள் ஆகியோர் தாம் வசிக்கும் சுற்றாடலில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பது தமது கடமையென கருத வேண்டும். இது விடயத்தில் அவர்கள் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையுடன் ஒப்பிடும் போது புவியிலுள்ள ஏறத்தாழ அனைத்து நீர்நிலைகளும் நூற்றாண்டுகளிற்கு முன்னர் மிகக் குறைந்தளவிலேயே மாசடைந்திருந்தன. இதற்கான பிரதான காரணம் அன்று குறைந்தளவான சனத்தொகையினர் மத்திய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்ததோடு, சுய சுத்திகரிப்பும் இடம்பெற்றது.சூரிய வெளிச்சம், நுண்ணுயிர்கள், வனங்கள், மண்ணினூடாக வடிகட்டப்படல், ஏனைய இயற்கையான பொறிமுறைகள் என்பன நீரைச் சுத்தம் செய்தன. தற்போதைய நிலை முற்றிலும் வேறுபட்டதாகும். சனத்தொகை மிக அதிகமாக உள்ளதோடு, தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது, நடப்படும் எண்ணிக்கையை விட அதிகளவான மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன. மண்ணரிப்பு அதிகரித்துள்ளது,.
அதிகளவான எண்ணிக்கைகள் எரிக்கப்படுவதனால் வளி மண்டலத்தில் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகரித்துச் செல்கின்றது. இலகுவில் படியிறக்கமடையாது உயிரினங்களிற்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடிய புதிய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மாசடைவை ஏற்படுத்தக் கூடிய பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நீரிலுள்ள குரோமியம் சிறுநீரக, ஈரல் நோய்களை ஏற்படுத்தும் என்பதை அறியாமலே சப்பாத்திற்கு பொலிவான தோற்றத்தினை வழங்குவதற்காக சப்பாத்து கைத்தொழிலில் குரோமியம் பயன்படுத்தப்படுகின்றது. சப்பாத்து கவர்ச்சிகரமாக தோற்ற வேண்டும் என்பதற்காக சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான பொருட்களைப் பயன்படுத்துவது மனித முன்னேற்றமா? அல்லது மனித குலத்தின் வீழ்ச்சியா?. பனியை விட வெண்ணிறமான ஆடைகளை அணிவது மனித குலத்தின் முன்னேற்றமா? அல்லது இவ்வெண்மையைப் பெறுவதற்கு சுற்றாடலிற்கு ஆபத்தை எற்படுத்தக் கூடிய தூய்மைப்படுத்திகளைப் பயன்படுத்தவது ஏற்கக் கூடியதா ? உலகநாடுகள், அரசாங்கங்கள், தனிப்பட்டோர் ஆகியோரின் நடவடிக்கைகள் யாவும் சுற்றாடல் மீது அக்கறை கொண்டதாக மாறுவது மிக அவசரமான தேவையாகும். காலம் எம்மீது பெரியதொரு கூட்டுப்பொறுப்பை தருவித்திருக்கிறது, அதனை தவிர்ப்போமாக இருந்தால் நிச்சயமாக தவிர்க்க முடியாத பேரிழப்புக்கு உலகம் தயாராகவேண்டி ஏற்படும். இதற்கு ஈழமும் ஈழச்சூழலியலும் விதிவிலக்கல்ல.
ஆராய்தல் முற்றும்.