மனைவி பரமுவுக்கு பரியாரியார் சொன்னதைப் போல ஆச்சிக்கு மருத்துவம் பார்க்க மட்டும் மகன் பரதனை பரியாரியார் அனுப்பி வைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக பரதனைப் பிடித்திருக்கும் தீராத ஒரு வருத்தத்திற்கும் மருந்து அய்யர் வீட்டில்தான் இருந்தது. பரதன் தனக்கான மருத்துவத்தையும் பார்க்கட்டும் என்றுதான் அனுப்பி வைத்திருந்தார்.
விழுந்திருந்த மகிழமர கொப்பைத் தாண்டி, வீட்டுப் படலையைத் தாண்டி வந்து கொண்டிருந்த பரதனின் தலை தொங்கப் போடப்பட்டபடியே இருந்தது. நேராக தண்ணீர் பைப் அடிக்கு போன பரதன் முகத்தை நன்றாக தண்ணீரில் அடித்துக் கழுவினான். இல்லை! இல்லை! கண்ணீரால் கழுவப்பட்டிருந்த முகத்தை தண்ணீரால் கலப்படம் செய்தான். வாங்கில் கிடந்த பரியாரியாரையோ, குசினிக்குள் நின்ற தாயையோ அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.நேராக குனிந்த தலையுடனேயே தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
பரதன் போன கையோடு பரியாரியாரிடம் வந்தாள் பரமு. அவள் கண்களும் நனைந்திருந்தன. இதை கவனித்த பரியாரியார்,
“மருந்து என்டா கசக்கத்தான் செய்யும். கஷ்டமாகத்தான் இருக்கும். நீ கூட யோசிச்சு உனக்கு வருத்தத்த தேடாத பிள்ளை.”
“கௌசல்யா வந்திருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பரமுவின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாத பரியாரியார், செம்பில் கிடந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு செருமிக் கொண்டே பதில் சொன்னார்.
“ஆச்சிக்கு கடுமை என்டா பேத்தியை கூப்பிடாம இருப்பாங்களா? எல்லாம் ஒரு மனக் கணக்குத்தான்”
“கௌசல்யா பரதனோட கதைச்சிருப்பாளோ? என்ன நடந்திருக்குமோ என்டு பயமா இருக்கு.” பரமு பதறினாள்.
“நீ ஒன்னும் அவனிட்ட போய் இதப்பற்றி கேட்டுக் கொண்டு நிக்காத. தேவையென்டா அவனே சொல்லுவான்.”
“பிள்ளை அழுதிட்டே வந்து அறைக்குள்ள போயிருக்கு. எனக்கு பயமா இருக்குங்கோ.”
“கூட யோசிக்காத. எல்லாம் சரியாயிடும். இந்த நேரத்தில அவனைத் தனிய விடாத. இடைக்கிட போய் ஏதாவது கதைச்சிட்டு இரு.”
“சரிங்கோ. என்ன நடந்துதோ தெரியா?. பாவம் தம்பி. நான் போய் ஒரு தேத்தண்ணி போட்டு கொடுத்திட்டு வாறன்.”
பரமு திருப்ப குசினுக்குள் போனாள். பரியாரியார் அந்த விழுந்து கிடந்த மகிழமரக் கொப்பையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கொப்பு அவரோடு நிறையக் கதைகளை கதைத்துக் கொண்டிருக்க வேண்டும். நீண்ட நேரமாக பாரியார் அந்தப் பார்வையை மாற்றவில்லை. கண்கள் நனைந்து கொண்டேயிருந்தது.
நீங்கள் ஊகித்தது சரிதான். இந்தக் கண்ணீரின் பின்னால் காதல்க் கதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்றைத்தான் உங்களால் இப்போது ஊகித்திருக்க முடியும். ஆம்! பரியாரியார் மகன் பரதனுக்கும் அய்யரின் தங்கை மகள் கௌசல்யாவுக்குமான காதல் கதை! ஊரில் பலருக்கும் தெரியாத கதையை சொல்லப்போகிறேன். ஆகையால் இயன்றவரை என்றென்ன கட்டாயம் இரகசியமாக வைத்திருங்கள். ஏனென்றால் காதல் கத்தரிக்காய்கள் முற்ற முதல் சந்தைக்கு வந்தால் யாருக்குமே பயன் இல்லாமல் போய்விடும். காதல் பூத்து நிறைய நாட்கள்தான். ஆனால் இன்னும் கனியவில்லை இந்தக் காதல்.
சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாதவை காதல் கதைகள். எப்படி உருவானது? யாருக்கு முதலில் ஏற்பட்டது? தன்னில் உருவான காதலை எவ்வாறு தான் விரும்பும் துணைக்கு தெரிவித்து அந்தத்தரப்பு விருப்பத்தையும் அறிவது? அப்படி விரும்பாவிட்டால் எப்படி விரும்ப வைப்பது? என்ன செய்தும் விரும்பாவிட்டால் என்ன செய்வது? விரும்பி சில காலங்களில் சண்டைகள் வந்து பிரிந்தால் என்ன செய்வது? பிரிவே இல்லாத காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது? திருமணத்தில் முடிந்தாலும் காதல் தொடராவிட்டால் என்ன செய்வது? இப்படி ஆளுக்கு ஆளுக்கு காதல் தரும் அனுபவங்கள் வேறுபட்டவை. இன்று கண்ணீரில் வந்து நிற்கும் பரதனின் காதல் கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போது ஒரு கதையை மட்டும் சொல்கிறேன். கதைக்கு பின்னால் உள்ள கதையை காலம் வரும் போது சொல்கிறேன்.
கதை வரும்…
1 comment