இதழ் 55

பழிக்குப் பழி

சென்னையின் பரபரப்பான கடல்மீன் சந்தை காசிமேடு. காசிமேட்டில் மீன் வெட்டுவதில் கைதேர்ந்தவள் ஒருத்தியைக் கண்டேன். பூங்கொடி அவள் பெயர். பூங்கொடிக்கு நான்கு வயதேயான கண்மணி என்றொரு பெண்குழந்தை மட்டுந்தான் குடும்பம். கண்மணி- தொட்டால் ஒட்டிவிடும் கறுப்பு- குண்டு குண்டான கண்கள் . பார்த்தால் யாருக்கும் பிடிக்காமல் போகாது. அதிலும் அவள் கரிய சிறிய காதுகளில் தெரியும் வெள்ளை முத்துத் தோடு வேறு ஒரு தனி அழகு.

பள்ளிவிடுமுறை என்றால் கண்மணியும் பூங்கொடியுடன் காசிமேட்டிற்கு வரவேண்டியதுதான். வீட்டில் தனியாக இருக்க முடியாது. இருப்பதற்கு தனியாக ஒரு வீடும் அவர்களிற்கு கிடையாது.

அன்றும் அப்படித்தான். சதுர்த்தி விடுமுறை பள்ளிக்கு. ஆனால் கண்மணியை வைத்துக் கொண்டு மீன் வெட்டுவதுதான் பூங்கொடிக்கு இரட்டிப்பு வேலை. எதையும் சொன்னபடி கேட்கமாட்டாள்.
ஓரிடத்தில் இருக்கச் சொன்னாலும் மாட்டாள். கண்மணியின் குறும்பு அங்கிருந்த எல்லோருக்கும்
வேடிக்கையாய் தெரிகையில் பூங்கொடிக்கு மட்டும் அது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது எல்லை மீற கையில் கிடைத்த எதுவோ ஒன்றால் கண்மணிக்கு முறையாக விழுந்தது. கண்மணியின் கண்ணிலிருந்து கண்ணீர் ஊற்றியது. பார்க்க எமக்கே பாவமாகத் தான் இருந்தது. ஆனால் பூங்கொடிக்கு கோபம் அடங்கவில்லை.

கொஞ்ச நேரத்தில் பூங்கொடி எங்கோ எழுந்து செல்ல அவளுடைய இடத்தில் இருந்த அண்டாவை கவனமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கண்மணிக்கு கொடுத்திருந்தாள். கண்மணி அண்டாக்கு காவல் . அண்டா கண்மணிக்குக் காவல். என்ன செய்வது ஆக்களை தேடிப் போய் பிடிச்சாதானே பூங்கொடிக்கும் அன்றைக்கு வருமானம்.

பூங்கொடியின் அண்டாவை அவசரமாக எடுக்க வந்து கண்மணியை கண்டதும் பார்த்து நெளி்ந்து கொண்டு நின்றாள் இன்னொரு மீன்வெட்டும் பெண் லட்சுமி. லட்சிமியை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.
‘என்ன லெட்சுமி.. அண்டா வேணுமா… இந்தா பிடி… கொண்டுபோ… பிடி… பூங்கொடிக்கு தேவையில்லை… சும்மா தான் கிடக்கு… நீ எடுத்திட்டுப்போ… இந்தா பிடி… .’
அந்த மழலையை இரசித்தபடி சிரித்துக்கொண்டே அண்டாவை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள் லட்சுமி.

பூங்கொடியிடம் வாங்கிய அடியின்
வலி இப்போதுதான் கண்மணிக்கு கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.

பழி தீர்த்த திருப்தி அவளுக்குள் இருக்கையில் இனி விழப்போற அடியை பற்றியும் கண்மணிக்கு கவலையில்லை.

Related posts

காலம் போல நாமும் புதுப்பித்துக் கொள்வோம்

Thumi202121

இறுதிநாள்

Thumi202121

சித்திராங்கதா

Thumi202121

1 comment

Leave a Comment