இதழ் 55

நன்மைகள் சூழ… எல்லோரும் வாழ்க…

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்குதல்களால் மிகப்பெரிய சங்கடங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் புதுவருடம் பிறக்கிறது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கூட தமது பெரும்பாலான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் பல வருடங்களாக வேலை செய்தவர்களைக் கூட இடைநிறுத்தி வருகின்றன. அரச நிறுவனங்களும் தனியார் மயமாகத் தயாராகி வருகின்றன.

பொறியியலாளர் தொடக்கம் கூலித்தொழிலாளி வரை வேலையில்லாத் திண்டாட்டம் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. பிறந்த மண்ணில் வாழ்வதையே பெரும் பேறாக நினைத்திருந்தவர்கள் எல்லாம் கனத்த இதயத்தோடு இலங்கையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டு தன்னிறைவுப் பொருளாதாரத்தை மன்னர் காலம் தொட்டே கொண்டிருந்த ஒரு தேசம் கடன் மேல் கடன் வாங்கும் தேசமாக, போதைப்பொருள் வலைக்குள் சிக்குண்ட தேசமாக மாறி ஒருவன் வாழத் தகுதியற்ற தேசமாகியிருக்கிறது. இங்கே பிறக்கும் குழந்தைகள் எல்லாம் எங்களைத்தானே சபிக்கப்போகிறது. எம் கண் முன்னே நடந்த இந்த அவலத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பாளிகள்.

நான் நான் நல்லாயிருப்பதைப் பற்றி யோசித்ததால்த்தான் நாடு நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நாடு நல்லாயிருப்பதைப்பற்றி இனியாவது யோசிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நல்ல வழிகள் பிறக்கட்டும்.

புலம்பெயர் உறவுகள் பணமாகவும் பொருளாகவும் இங்குள்ளவருக்கு உதவுவதை நிறுத்துங்கள். தொழில்வாய்ப்புகளாக உதவுங்கள். ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து உங்கள் உதவிகளை திரட்டி இங்குள்ளவர்களை சொந்தக்காலில் நிற்க வையுங்கள். எல்லோரும் தான் உழைத்த பணத்தில் பொங்கல் பொங்கும் நிலை வர வேண்டும்… வரும்…

அப்போது சொல்வோம்…
பொங்கலோ… பொங்கல்…

Related posts

இறுதிநாள்

Thumi202121

சித்திராங்கதா

Thumi202121

வினோத உலகம் – 20

Thumi202121

Leave a Comment