இதழ் 55

காலம் போல நாமும் புதுப்பித்துக் கொள்வோம்

“புத்தம் புது பூமி வேண்டும்

நித்தம் ஒரு வானம் வேண்டும்

தங்க மழை பெய்ய வேண்டும்

தமிழில் குயில் பாட வேண்டும்”

புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இலக்குகளும் கூடவே பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பூமி தன்னைப் புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. எல்லையற்ற காலத்தோடு இவ்வுலகு அழியாமல் போராடிக் கொண்டிருப்பதை தினமும் நாம் கண்கூடே காண்கிறோம்.

இந்த மாறும் உலகோடு தொடர்ந்து போராடி வென்று வந்திருக்கும் இன்னொரு ஆச்சரியம் எம் அனைவரினதும் தாய்மொழியாகும். தன்னை மாறும் யுகங்களிற்கு ஏற்றபடி எல்லாகாலத்திலும் புதுப்பித்த வண்ணமே இருக்கின்றது தமிழ். அங்ஙனம் புதுப்பிக்கப்பட்ட புதுமைகளின் வடிவங்களில் ஒன்றுதான் இதோ இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த மின்னிதழும். இன்று உலகின் எங்கெங்கோ மூலைகளில் இருக்கும் உங்களையும் எங்களையும் இணைத்து இன்பத்தில் திளைக்க வைத்திருக்கிறது எம் தாய்மொழி தமிழ்.

எல்லையற்றது தான் காலம்.
ஆயினும் பூமியைப்போல் காலத்தோடு போராடி வெல்லும் திறமை மானிடர்க்கு இல்லையே. ஏதேனும் ஒரு கால எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் மனிதன் வாழவேண்டியுள்ளது. அதன் காரணமாகவே காலக்கணக்கீடுகளும் அவனால் உருவாக்கப்பட்டன.

அந்தக் கணக்கீட்டில் இது வரையிலான வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஒரு நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்தி மனிதனை புத்துணர்வு கொள்ளச் செய்கிறது புத்தாண்டு. வெற்றி நோக்கி விடாது ஓடிக் கொண்டிருப்போர்க்கு ஒரு நிழற்குடையாய் நிம்மதி அளிக்கின்றன புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்.. ஒரு சிற்றிலக்கை எட்டி விட்ட சின்னத்திருப்தியை அது அளிக்கின்றது.

அந்தக் கொண்டாட்டத்திலே எம்மையும் நாம் உட்புகுத்திக் கொள்கிறோம். கம்பனைக் காக்க கலைமகள் சாட்சியம் சொன்ன ‘துமி’ எனும் சொல்லை தூணாய் பற்றி தொடர்ந்த எம் பயணம் இன்று ஆண்டுகள் கடந்து புத்தாண்டில் பெருவெள்ளமாய் பாய்ந்து பெருமை சேர்க்கிறது நம் தமிழன்னைக்கு. துமியாய் தொடங்கையில் நாம் கொண்ட துணிவிற்கு துணைநின்றவர் ஒரு சிலரே. இன்று எம் பெருவெள்ளப் பயணத்தில் களிப்போடு பயணிக்கும் வாசக நெஞ்சங்கள் அனைவரினதும் உள்ளக் கிளர்ச்சியை துள்ளிக் குதிக்கும் சின்னஞ் சிறார்களாய் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எம் உள்ளத்து மகிழ்வை அட்டையில் அடக்கி துமியின் புத்தாண்டு இதழை பெருமகிழ்வோடு வெளியிடுகிறோம்.

இன்பப் பெரு வெள்ளத்தில் துள்ளிக் குதித்தோடும் சிறார்களைப் போன்று நாமும் நீங்களுமாய் துமியோடு ஆண்டுகள் பல பயணிக்க ஆவலோடு அழைக்கிறோம்.

மார்கழி மாதத்து வைகறைப்‌ போதில்‌ தன்‌ தோழியர்‌ களையெல்லாம்‌ துயில்‌ எழுப்பி,
“நீராடப்‌ போதுவீர்‌! போதுமினோ, நேரிழையீர்‌”! என்று ஆண்டாள்‌ அழைக்கிறாள் என்கிறது திருப்‌பாவை.
நாமும்‌, இன்தமிழின்‌ இனிய‌ காதலர்களை அங்ஙனமே அன்போடு அழைக்கிறோம்.
நீராட வாருங்கள்‌…. இதோ துமியின் பெரு வெள்ளத்தை நோக்கிய பயணம் இன்னும் வேகமாய் கரைபுரண்டு ஓட தயாராகிக் கொண்டிருக்கிறது.

கனவுகளைப்‌ பிடித்து எழுதும்‌ புதுப் படைப்பாளர்களே! கனவுகளில் திளைத்து காதற்‌ கவிதைகள்‌ எழுதும்‌ நவயுக இளைஞர்களே! எல்லோரும் வாருங்கள்… பேனா எடுங்கள்… காதல்‌ கவிதைகளிலேயே நின்றுவிடாமல்‌ நம் ஈழத் தழிழ்ச்சமூகம்‌ சார்ந்த சிந்தனைகளையும்‌ தமிழ்ப்‌ பற்றையும்‌‌ வளர்த்துக்‌ கொள்ளுங்கள்‌.
தமிழ்‌ மண் வீறு கொண்டு வெற்றி தொட்டு நிற்க வேண்டிய நேரம் ‌இது. ஈழத் தமிழ்க்கலை தன்னை தூசிதட்டிக் கொள்ள வேண்டிய தருணம் இது. புதைந்து போன மண்ணில் மறந்து போன கதைகள் ஆயிரம் உள்ளன. நீங்கள் அறிந்தவையை உங்களால் மட்டுமே சொல்ல முடியும். பேனா முனையை காகிதத்தில் குத்தி தீயென பற்றும் நம் திமிரான தமிழை தட்டி எழுப்புங்கள்..எழுந்து நில்லுங்கள்‌. எழுச்சி கொள்ளுங்கள்‌. எழுத்தில் ஒரு புரட்சி செய்யுங்கள்‌.

தாயக வாசம் மணக்க மணக்க எழுதுங்கள். ஈழ மேடையில் உங்கள் எழுத்து துலங்க தளமிடுகிறோம் நாம். வெளியில் வாருங்கள். வெளிச்சத்தை பரப்புங்கள்.

போதும்‌. தேனின் இனிமை காண இருதுளிகள்‌ போதும்‌. நம் ஒருமை சொல்ல ஒரு துமி போதும்.

நினைவில் கொள்ள ஒன்று.
நம் வெள்ளம்‌ கங்கைப்‌ பெருக்கல்ல. காவிரி வெள்ளமல்ல. பூவிரி பொருநையின்‌ புதுப்‌ புனல்‌ நீருமல்ல. இது ஈழத்தில் ஓடும் இன்தமிழ் வெள்ளம். பல்கிப் பெருகிவரும் எமக்கான வெள்ளம். துள்ளிக் குதித்துத் திளைக்க வாருங்கள். புதிய ஆண்டின் புன்னகை மறக்கமுன் புதிதாய் பிறக்க வாருங்கள்…

Related posts

இறுதிநாள்

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 04

Thumi202121

முதல் மூன்றும் தமிழர்

Thumi202121

Leave a Comment