தாயைப் போல
நல்லை வான் பரப்பில் போர்க்கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. பூநகரியிலிருந்து உடனடியாக பின்வாங்க வேண்டும் என்ற யாழ் அரச ஆணையை மீறி முன்னேறிக் கொண்டிருந்த பறங்கியினத்தை வண்ணார்பண்ணையில் பாசறையிட்டு எதிர்த்துக் கொண்டிருக்கிறது வருணகுலத்தான் படை.
தஞ்சையிலிருந்து வந்த வீரர்களின் படைவீரம் அங்கு வென்றுகொண்டிருந்தது. வகுந்திருந்த வியூகப்படி நல்லைபடையினரின் ஒரு பிரிவு பறங்கியனை சாய்க்க களமிறங்கியிருக்கிறது. மிகுதி படையினர் சேனாதிபதி மகிழாந்தகன் தலைமையில் நல்லைக் கோட்டைக்கு பெருங்காவல் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
வருணகுலத்தான் வேண்டிக் கேட்டுக் கொண்டதை ஏற்று சங்கிலியனும் களத்திற்கு முதல் செல்லாமல் காத்திருந்தான். அதேவேளை போர்க்களத்து ஒற்றர்படையினரின் செயலும் மிகுந்த வினைத்திறனாய் திட்டமிடப்பட்டிருந்தது.
களத்தில் ஏதும் எதிர்பாரா ஆபத்து ஆகுமாயின் உடன் களமிறங்க தயார் நிலையில் இருந்தான் மகிழாந்தகன். அச்சமயம் ஆபத்தேதும் நிகழாதவண்ணம் கோட்டையின் காவலிற்காய் புத்தளத்து ராஜவன்னியர்களது படையணியும் வந்து கோட்டைக் காவல் பணிக்காய் காத்து நின்றனர்.
எல்லாம் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சங்கிலியனிற்கு ஒரே ஒரு விடயம்தான் உறுத்திக் கொண்டே இருந்தது. வருணகுலத்தானிற்கு துணை என்று நம்பி மிக்கபிள்ளையை மட்டும் அனுப்பியது சரியா? மிக்கபிள்ளையின் போக்கில் இப்போது பெரும் மாற்றத்தை சங்கிலியன் கண்டிருந்தாலும் ஏதோ ஒரு சங்கடம் சங்கிலியனால் அவனை முழுதாய் நம்பமுடியவில்லை. ‘மிக்க பிள்ளை திடந்தோள் வீரனாக இருந்தாலும் சொல்புத்திக்காரனல்லவா? யாராலும் அவன் மனதை இலகுவில் கலைத்துவிடமுடியும் என்ற அச்சத்தினால்தானே வன்னியத்தேவனும், அந்த பறங்கிப்பாதிரியாரும் மிக்கபிள்ளையை விடுவிக்க வேண்டி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இப்போது அவன் உண்மையிலே மனந்திருந்தி் விட்டான் என்றாலும் இதுவும் எத்தனை காலம்? அவன் மனதை மேலும் யாரும் குழப்பாமல் இருக்கும் வரை தானே. அவனை துணை என்று நம்பி வருணகுலத்தானுடன் போரிற்கு அனுப்பியது சரியாகுமா?
போரில் எதிர்பாராத காரியம் ஏதும் அவனால் நேர்ந்து விடுமா?’ என்ற குழப்பத்தில் சங்கிலியன் மூழ்கி இருந்தான்.
அந்நியப்படைகளை எதிர்த்து நிற்க எமக்கு அதிக தைரியம் தேவையில்லை. ஆனால் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கும் சுதேசிகளை நினைக்கையில் தான் அவன் மனம் வேதனையில் வேகியது. தெற்கில் எத்தனை வேந்தர்களை காக்க , பறங்கியனை எதிர்க்க தமிழ்ப்படை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இன்று நல்லை இராட்சியத்தை எதிர்க்க பறங்கியோடு சிங்களப்படைவீரர்கள் இணைந்து வருகின்றனராம் என்பதை சங்கிலியன் நம்பமுடியாதவனாய் நினைத்துப் பார்த்துக் கொண்டான்.
ஆனால் தஞ்சைவீரர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் உருக்குலையாமல் அப்படியே இருந்தது. தஞ்சை வீரரோடு தான் களம்புகும் கணத்திற்காய் பேராவலோடு சங்கிலியன் காத்துக் கொண்டிருக்கிறான்.
கோட்டையின் மேற்கு வாசல் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நெடுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மகாராணி மஞ்சரி தேவியர் பூஜையை முடித்துக் கொண்டு மந்திரி மனை நோக்கி வந்தார்.
எதற்காக? இதுவரை மந்திரி மகளாய் பார்த்த மாருதவல்லியை இப்போதுதானே தன் மகள் என்று பார்க்க போகிறார் மஞ்சரிதேவி. நாட்டின் இளவரசியை பார்க்கும் பேரார்வத்தோடே மந்திரிமனைக்கு வந்தார் தேவியர்.
‘வாருங்கள்… அரசி.. என்ன மந்திரிமனைக்கே வந்துவிட்டீர்கள்.. தகவல் தந்திருந்தால் நானே வந்திருப்பேனல்லவா…’ அவசரமாக வரவேற்றாள் மாருதவல்லி.
‘ஏன் மகாராணியை பார்க்க நான் வரக்கூடாதா?…’
என்று புன்னகையோடு கேட்டார் மஞ்சரிதேவி.
‘நான் மகாராணியா? தாங்களன்றோ மகாராணி… மகாராணியை பார்க்க தங்கள் மாளிகைக்கு நான்தானே வரவேண்டும்..’
‘ஆனால் மந்திரி மனையின் மகாராணி மாருதவல்லி என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியென்றால் மந்திரிமனையின் மகாராணியை பார்க்க வேண்டுமானால் நான்தானே மந்திரி மனைக்கு வரவேண்டும்’
‘ஓகோ.. அப்படிச் சொல்கிறீர்களா? அப்படியென்றால் சரி… இந்த மந்திரிமனையின் மகாராணியை பார்க்கவந்த நல்லைப்பெருமகாராணியே வருக வருக… ‘ என்று கூறி விடாது சிரித்தாள் மாருதவல்லி.
அந்த சிரிப்பை கூர்ந்து நோக்கி இரசித்துக் கொண்டிருந்தார் மஞ்சரிதேவி. அந்த சிரிப்பு மஞ்சரிதேவிக்கு இன்று நிரம்பிய ஆனந்தத்தை அளித்தது.
‘மாருதவல்லி நீ எப்படி இருக்கிறாய்?’
அந்தக்கேள்வி மாருதவல்லியின் சிரிப்பை திடீரென மறைய வைத்தது. அப்படியொரு கேள்வியை அரசி எதற்காக தனைப்பார்த்து இப்போது கேட்கிறார் என்பது புரியாமல் விழித்தாள் மாருதவல்லி.
‘மகாராணி.. இது என்ன கேள்வி… என்றுமில்லாதது போல் நல்லைக் கோட்டைக்குள் இராஜவாழ்வு வாழ்கின்ற இந்த மந்திரி மகளின் நலத்திற்கு என்ன கேடு இருக்கிறது… சங்கிலிய மகாராஜா ஆள்கின்ற தேசத்து மங்கையை பார்த்து மகாராணி இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா?’
‘தெரியாமல் கேட்டுவிட்டேன் மாருதவல்லி. மன்னித்து விடு… ஏதோ இன்று உன்னைப் பார்த்ததும் இப்படிக் கேட்கவேண்டும் போல் தோன்றியது.’
‘அப்படியா? ஏனோ… எனக்கும் இப்போது தோன்றுகிறது. கேட்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் மகாராணி?’
என்று மாருதவல்லி கேட்டதும் மஞ்சரிதேவியினால் சிரிப்பை ஒளிக்கமுடியவில்லை. இருவரும் தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தனர்.
‘மாருதவல்லி.. உன் உலகம் வேடிக்கைகளாலும் இன்பங்களாலும் நிறைந்திருக்கிறது’ என்று சிந்தனையில் ஆழ்ந்தவாறே கூறினார் மஞ்சரிதேவி.
மஞ்சரிதேவியின் அருகில் வந்து அவர் கைகளைபற்றிக் கொண்டு ‘ அரசி… என் உலகம் மட்டுமல்ல எம் இராச்சியத்தில் எல்லோர் உலகமும் இன்பமயமானதுதான்’ என்று சொன்னாள் மாருதவல்லி.
‘ஆனால் என்னால் முடியவில்லை மாருதவல்லி. நாட்டில் நடப்பவைகள் எதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இல்லையே. கொடும் பறங்கியர் அத்துமீறி கருமமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு கைகோர்த்து களமிறங்கியுள்ள நம் நாட்டவரை பற்றி எண்ணுகையில் எனக்கு எதுவுமே புரியவில்லை. இப்படிக் குழப்பங்கள் சூழ்ந்த என் உலகில் இன்பத்திற்கு இடம் ஏது மாருதவல்லி..’
‘ராணி.. தாங்களா இப்படிப் பேசுவது? நம் மன்னரது முதற்பலமே மகாராணி என்றல்லவா நான் இதுவரை கேள்வியுற்றேன்’
‘மாருதவல்லி.. மாமன்னர் சங்கிலியமகாராஜா எல்லாப் பகைகளையும் வென்று வெற்றி காண்பார் என்பது சத்தியமே. ஆனால் வெவ்வேறு விதமாக வளர்கின்ற சூழ்ச்சிகளை எண்ணுகையில் ஆபத்துக்கள் என்ன வடிவில் வரும் என்பதை இன்னும் புரிந்து கொள்ளமுடியவில்லையே. அது தான் என் சிந்தனையில் ஒரே குழப்பமாய் நிலவிக்கொண்டிருக்கிறது’.
‘அரசி… அற்பப் பறங்கியனை எண்ணி நாம் அதிகபயம் கொள்ளத் தேவையில்லை. சிங்களப் படைகளை அவர்கள் வென்றுவிட்டால் நம் தமிழ்ப்படையினையும் இலகுவில் வென்றுவிடலாம் என்று தவறாய் கணக்குப் போட்டது அவர்கள் அறியாமையாகும். அவர்களிற்கு நாம் யார் என்று புரியவைக்க வேண்டிய தருணமே இப்போது வந்திருக்கிறது. அதுவும் எம்முடன் தஞ்சைப்படைகள் தூண் போல் நிற்கையில் நாம் ஏன் கலங்க வேண்டும் ….’
மாருதவல்லியின் வார்த்தைகள் மஞ்சரி தேவிக்கு அவள் யார் என்பதை நினைவுபடுத்தியது. மாமன்னர் சங்கிலிய மகாராஜாவின் புத்திரியல்லவா? கல்யாணிதேவியை மஞ்சரிதேவி பார்த்ததில்லை. ஆனால் கல்யாணிதேவியைப் பற்றி கேட்டறிந்த எல்லா இயல்போடும் ஒத்து நிற்கின்ற மாருதவல்லியை மஞ்சரிதேவி கண்டு வியந்தாள்.
சிந்தனையில் மூழ்கி நின்றவளை நிகழ்கணத்திற்கு கொண்டு வந்தாள் மாருதவல்லி
‘ராணி .. அப்படி என்ன என் விழிகளில் தெரிகிறது? இப்படி உற்று நோக்கிய வண்ணமே இருக்கிறீர்கள்..’
‘நம்பிக்கை மாருதவல்லி… உன் விழிகளில் தெரிகின்ற நம்பிக்கை என்னுள்ளும் பரவட்டுமே’
‘நிச்சயம் அரசி.. ஆனால் என் நம்பிக்கையின் விதை கூட அன்று தஞ்சைவீரரால் இடப்பட்டதுதான். தஞ்சைவீரர் எம்முடன் இருக்கும் வரை இந்த நல்லைக் கோட்டைக்குள் எவரும் நுழைய முடியாது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை ராணி’
‘மன்னரும் அதைத்தான் கூறுகிறார் மாருதவல்லி. தஞ்சைவீரர் மீது கொண்ட நம்பிக்கை கலப்படமற்றதுதான். ஆனால் அவரையும் தன் பக்கம் சாய்க்க எதிரிகள் பல சூழ்ச்சிகள் செய்துள்ளனராம். எல்லாவற்றிற்கும் அந்த ஆடலரசி சித்திராங்கதா உடந்தையாய் இருப்பதாய் வேறு அறிகிறேன். அவளது மாயவலைக்குள் மாவீரர் விழுந்து விட்டால் எம் நம்பிக்கைகளிற்கு எல்லாம் அவள் முற்றுப்புள்ளி வைத்துவிடுவாளோ என்று தோன்றுகிறது மாருதவல்லி’
‘இல்லை ராணி … ஒருபோதும் இல்லை. தஞ்சைவீரரைப் பற்றி நான் அறிவேன். சித்திராங்கதாவை பற்றியும் அறிவேன். அவர்களின் தூய காதலைப் பற்றியும் அறிவேன். அரங்கேற்ற விடயத்தில் சித்திரங்கதா அடைந்த ஏமாற்றம் அவளை வெகுவாய் உருக்குலைத்திருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன். அவள் குழப்பத்தை போக்க வழியறியாமல் தவித்த தஞ்சைவீரருக்கு அன்று வழிகாட்டியவளும் நான் தான். தஞ்சைவீரர் மீது எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. தாங்கள் எண்ணும்படி ஓர் அபாயம் அவ்வழியில் வர சாத்தியமேயில்லை அரசி..’
‘கோட்டையில் அனைவரினதும் நம்பிக்கை அதுதான் மாருதவல்லி.. ஆனால் இப்படி ஒரு சூழல் நேரும் என்கிற சிறு அபாயம் இருக்கையில் கூட நீ வருணகுலத்தான் காதலிற்கு துணைநின்றது சரி என்று நினைக்கிறாயா மாருதவல்லி?’
‘அரசி… நான் தங்களைப்போல சாணக்கியம் கொண்டவளல்ல. ஆனால் மந்திரி மகளாய் என் மூலம் இந்த நாட்டிற்கு கேடு சூழ்வதை ஒரு காலும் அனுமதியேன். இன்று இதோ இந்த மந்திரிமனையில் புனிதம் குறையாத மங்கையாய் நான் இன்றும் உயிர் கொண்டு நிற்பதற்கு ஒரே காரணம் தஞ்சைவீரர் என்பதை என் உள்ளம் ஒரு போதும் மறக்காது ராணி… அத்தகையவர் வாடி நின்ற கணத்தில் உதவுகிற மார்க்கம் நானறிந்தும் உதவாமலிருக்க என் மனம் அன்று ஒப்பவில்லை. நான் அன்று ஆற்றியது தவறென்று தாங்கள் கருதினால் என்னை மன்னித்து விடுங்கள் ராணி. ஆனால் அதனால் ஆபத்து சூழ்ந்துவிடும் என்று அச்சம் கொள்வதை என் சிறுபுத்தி இன்னும் ஏற்க மறுக்கிறது ராணி.’
‘உன்னில் நான் குற்றம் சொல்லவில்லை மாருதவல்லி. நீ சதாரணமானவள் கிடையாது என்பதை நன்கறிவேன். உன் மீது எந்தக் கேடும் பழியும் எப்போதும் சூழாது. ஆனாலும் எனக்கு இந்த இராச்சியத்தின் மீதுள்ள அக்கறை சித்திராங்கதா விடயத்தில் ஒரு சிறு அச்சத்தை எனக்குள் புகுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணால் எதையும் சாதித்து விட முடியுமல்லவா?’
‘அது உண்மைதான் ராணி. தாங்களைப் போன்ற பெண் உடனிருக்கையில் எம் மகாராஜாவிற்கு என்ன ஆபத்து நெருங்கிவிடப்போகிறது. தாம் எதையும் சாதிக்க வல்ல பெண்ணல்லவா? தாங்கள் சித்திராங்கதா குறித்து அப்படி எண்ணுவதில் எந்த அர்த்தமும் இல்லை ராணி. அவளிடத்தில் இராச்சியத்தின் மீது பெருங்கோபம் நிலைகொண்டிருந்தது உண்மைதான். அந்தக் கோபத்திற்கு பின்னால் நியாயமான ஒரு காரணம் இருப்பதும் உண்மைதானே.. திட்டமிட்டு அக்காரியம் நாம் ஆற்றவில்லையாயினும் அவளது அரங்கேற்றம் நிகழாத வருத்தம் அவளிற்கு சதாரணமாய் கடந்து போகக்கூடிய ஒரு விடயமல்லவே.. அவள் விடயத்தில் நாம் அச்சம் தவிர்த்து பொறுமை காப்பதே சிறந்தது என்பது என் அபிப்பிரயமாகும் அரசி’
‘நீ கூறியது போல் அரசரும் இத்தனை காலம் அவள் விடயத்தில் பொறுமை காத்தே வந்தார் மாருதவல்லி. ஆனால் இப்போது போர் தொடங்கி விட்ட பிறகு எதையும் அலட்சியப்போக்கில் விட மன்னருக்கு ஏற்பில்லை. அது சரி என்றும் அரசர் கருதவில்லை. ஆதலினால் தான் அவளை சிறைபிடிக்க அரசர் ஆள் அனுப்பியிருக்கிறார்.’
‘என்ன கூறிகிறீர்கள் ராணி?.. சித்திராங்கதாவை சிறைபிடிக்கவா? ‘
‘ஆம்.. மாருதவல்லி…எச்சதத்தரும் அவளுடன் இல்லாத இச்சமயத்தில் அவள் தனியாக இருப்பது தேவையற்க ஆபத்து என்று அரசர் கருதுகிறார். அதனால் தான் அன்று எச்சதத்தர் கூறியது போலவே அவளை சிறையில் வைக்க அரசர் ஆணையிட்டுள்ளார்’
மாருதவல்லியால் அதனை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.
‘இது அபத்தமாக தெரிகிறது ராணி.. ஈழ ஆட்சி மங்கையரை சிறைபிடிப்பதில்லை என்கிற கொள்கையையே மீறி ஒரு அபலை சித்திராங்கதாவிற்கு இப்படி மேலும் மேலும் துன்பமளிப்பது எனக்கு எவ்விதத்திலும் சரி என்று தோன்றவில்லை அரசி’
‘மாருதவல்லி.. எச்சதத்தர் கூட இச்சமயம் உடல் நலம் குன்றி நாயன்மார்க்கட்டு வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளார். தனியாக சித்திராங்கதா கோப்பாயில் இருப்பதைக் காட்டிலும் சிறையில் அவள் இருப்பதே அவளிற்கும் நம் அரசிற்கும் பாதுகாப்பு என்பது மந்திரியாரது ஆலோசனைதான் மாருதவல்லி. என் அபிப்பிராயத்தையும் அரசர் கேட்டார். எனக்கும் அதுவே சரி என்று பட்டது.’
‘பாதுகாப்பு வழங்க சிறைபிடிப்பது தான் வழியா அரசி.. ஏன் நம் அந்தப்புரத்தில் அவளை தங்கவைக்கக் கூடாதா?’
‘அவளை நம் அந்தப்புரத்திற்கு அழைத்து வர உன்னால் முடியுமா மாருதவல்லி.. ?’
அமைதியாக நின்றாள் மாருதவல்லி.
‘ஆனால் அரசர் அதற்கான ஆயத்தங்களையும் செய்தார். அரச ஆணையையும் அவள் ஏற்ப மறுத்துவிட்டாள். அதனால்த்தான் இதைத்தவிர வேறுவழியில்லை என்ற இறுதிமுடிவிற்கு அவர் வந்தார். கொடுமைகள் எல்லைமீறாதிருக்க சில கொள்கைகளை மீறுவது தவறல்ல மாருதவல்லி. சிறையில் அவளிற்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்வதாய் அரசர்க்கு வாக்களித்துள்ளேன். நீ வருத்தம் கொள்ளாதே மாருதவல்லி’
‘அரசி.. எனக்கு ஏனோ சரியாகப்படவில்லை. நம் இராச்சியத்தின் பெருக்குற்றமாய் இது மாறிவிடுமோ என்று இப்போது அச்சம் கொள்கிறேன்…’
கலங்கி நின்ற மாருதவல்லியை அணைத்துக் கொண்டார் மஞ்சரி தேவி.
அவள் தலையை தடவியபடி
‘உன் அன்பு களங்கமற்றது என்பதை அறிவேன் மாருதவல்லி. நீ வருந்தாதே..எல்லாம் நம்- உன் நன்மைக்காகவே…’
அரசியின் அரவணைப்பில் மாருதவல்லியின் கண்கள் ஏனோ நனைந்துவிட்டன