நாம் கேட்டதெல்லாம் கிடைத்து விடுகின்ற இந்த உலகம் எல்லாநாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எம் ஆசைகள்- கனவுகள்- இலக்குகள் இவை யாவும் வாழ்நாள் முழுதும் நிரந்தரமானவையும் அல்ல. இன்று ஏதோ ஒன்றின் மீது பேராசை கொண்டு அலைகிறோம். நாளை வேறொன்றின் மீது அந்த ஆசை அலைபாய்கிறது. மனிதமனம் எதன் மீதும் ஒரு நிரந்தரமான ஆசை கொள்ளும் ஆற்றலற்றது என்பதை நாம் அனைவரும் அறிகிறோம். அடிக்கடி மறக்கிறோம். பிஞ்சுக்குழந்தையின் வண்ண வண்ணக் கனவுகள், விடலைப் பருவத்தின் பருவக் கனவுகள், இளமைத்துடிப்பில் வேகக் கனவுகள், உழைத்துக் களைக்கையில் ஊழியக் கனவுகள், தட்டுத் தடுமாறி நிமிர்ந்து நிற்கையில் பறக்க நினைக்கும் கனவுகள், குடும்பம் பெருகையில் பொறுப்பாய் கனவுகள், முதுமை நெருங்கையில் வாழும் நாட்களே கனவுகளாய்…
இப்படி வீடு, பணம், பட்டம், பதவி என மனிதனின் வேகமான பயணத்தில் அவனை முந்திச் செல்கின்றன அவனது கனவுகள்..
கனவுகள் அழிந்த காலம் என்ற ஒன்று எப்போது வரும்? அப்படி வரும் காலத்தில்தான் நமக்கு வாழ்வதுதான் கனவு என்று புரிய ஆரம்பிக்கும். சிறிது நேரத்திற்கு நாம்- நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் கனவுகளை எல்லாம் ஒருபுறம் தள்ளி வைப்போமா? கொஞ்சம் வாழ்வதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போமா?
வாழ்தல் என்பது பொறுப்பு அல்ல.. கனவு அல்ல.. ஆசை அல்ல.. இவை யாவும் அடங்கிய பின்னும் .. ஓய்ந்த பின்னும் இன்னும் நாம் வாழவேண்டும் என்பதற்கு ஒரு பிடிமானம் இருக்கிறதே.. அந்தப்பிடிதான் வாழ்தல் என்பது.. அந்தப் பிடிமானம் எப்போது உங்கள் கைகளை விட்டிச் செல்கிறதோ அப்போதுதான் உங்கள் வாழ்க்கை முடிவடைகிறது.
இம்மின்னிதழின் அட்டைப்படத்தை பாருங்கள். அப்படியொரு பிடிமானத்தையே காட்டுகிறோம். வாழ்தல் என்பது என்னவென்று புரிய இந்தக் காட்சியை உற்றுப் பாருங்கள். வாழ்வின் ஓசைகள் யாவும் ஓய்ந்த பின் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நிசப்தத்தை உங்களால் உணரமுடிகிறதா? அந்த அமைதியான வாழ்வின் பிடிமானம் எது என்று புரிகிறதா?
விடலைப்பருவத்தில் எதிர்பாலினத்தாரின் கவர்ச்சிக்கு ஈர்க்கப்பட்டு கவிதை, காமம், கலவி என்று இன்ன பிற இச்சைகளுக்கு ஆளாகி சமூகத்தின் மோசமான அவலமாய் மாறிப்போன ‘காதல்’ என்ற தகாத வார்த்தையை பற்றி நிச்சயம் நாம் பேசவில்லை. இளையோரால் களங்கமாகிப்போன காதல் எனும் சொல்லை இந்த மூத்த குடிகளின் பேரன்பிற்கு பயன்படுத்த ஏனோ எமக்கொரு தயக்கம். இந்த அன்பு களங்கமற்றது. .. இருவர் வாழ்வினதும் ஒரே பிடிமானம் இந்த அன்புதான். இந்த அன்பிற்கு வார்த்தைகள் தேவையில்லை. அமைதி போதும். இச்சைகள் தேவையில்லை. இயல்பே போதும். நிபந்தனைகள் ஏதுமில்லை . ஆனாலும்
நிம்மதி அளிக்கும். எல்லாவற்றையும் விட எந்த நிரூபனமும் இந்த அன்பிற்குத் தேவையில்லை.
இந்தத் தூய அன்பு கொண்டாடப்பட வேண்டியது. தூய அன்பைக் கொண்டாடும் தினமான பெப்ரவரி 14 இல் இவர்களது பேரன்பை கொண்டாட வேண்டும் என்று துமி மின்னிதழ் பேரவா கொள்கிறது.
இளமைக்காதலில் வெறுமனே எதிர்பார்ப்புகள் தான் அதிகம். முதுமையின் பேரன்புற்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எதுவும் இல்லை. அத்தகைய பேரன்பின் பேரழகை பற்றி எண்ணுகையில் ஒரு முந்தைய பாவலரின் கவித்துவக்காட்சி எம் நினைவை வந்து நனைக்கிறது. பாவேந்தர் பாரதிதாசன் படைத்தவை அந்தக் காட்சிகள் .
மூத்த கணவன்- மனைவி இருவர். மகன் வீட்டு தலைக்கடை அறைக்குள் சுருங்கிப் போய்விட்ட உலகம் அவர்களது. ஒரு காலத்தில் ஆடிய பம்பரங்கள்தான். அன்றிருந்த தோளின் வன்மை மூத்தவரிடத்தில் இன்றில்லை. விழியும் ஒளி குறைந்து கண்ணாடி துணை வேண்டுகிறது. வாயிலும் பல்லில்லை. மயிரும் வெண்பட்டு. உணவு என்பது பாலின் கஞ்சிதான். உலவுதல் என்பதும் அரிதிலும் அரிது.
அம்மையாரின் நிலையும் அதுவே. நன்னிலாக் கதிர் போல் நரைத்த கூந்தல். முன்னிலவை முகில் உண்டது போல் குறைந்துள்ள முகத்தொளி. வானவில் போல் கூனிவிட்ட ஆயிரம் பிறை கண்ட மூதாட்டி. அந்த அறைக்குள் தான் அவர்கள் முழு உலகமும். பேரன் பேர்த்தி இடையிடையே வருவார்கள்… அளவளாவி முடிந்து மணி வந்ததும் விடை பெறுவார்கள்.
அங்கணமே ஒருமுறை பேரன் ஒருவன் அறைக்கு வந்தான். சிறிய மலை வாழைப்பழங்கள் பாட்டிக்கு பிடிக்கும் என்று எடுத்து வந்திருந்தான்.
பழங்களை வாங்கி ஆசையோடு பார்த்தாள் மூதாட்டி.
‘தம்பி.. இந்தா.. முதல்ல தாத்தாவுக்குக் கொண்டுபோய்க் கொடு”
கொடுக்கிறேன். பிறகு.. இது உனக்கு கொண்டுவந்தது அம்மாயி.. உனக்குத்தானே பிடிக்கும். நீ சாப்பிடு’
‘முதலில் இதை தாத்தாவிற்கு கொடு’ என்று பேரன் கொண்டு வந்து பழங்களை பெரியவரை நோக்கி உருட்டி விட்டபடி கீழே வைத்தாள் பாட்டி. சிரித்துக் கொண்டே பேரன் பழத்தை எடுத்து தாத்தாவிடம் கொடுத்தான். அவன் கொடுப்பதை கூர்ந்து நோக்கி மகிழ்ந்தாள் அம்மாயி. சத்தங்கள் இல்லாத அந்த மூத்தோரின் அன்பில் பேரனிற்கு ஆச்சரியம் அதிகம் . பாட்டனிடம் வேடிக்கையாக கேட்டான்..
‘அம்மாயியிடம் உனக்கு இப்போதும் இன்பம் தருவது அப்படி என்ன தாத்தா?’
மூத்த விழிகள் சிரித்தன. தன் தலைமுறைப் பேரனை நோக்கிப் பதில் சொன்னார் மூத்தவர்
‘பேரா… அவள் இன்று அன்று போல் புதுமலர் பூ அல்ல. நன்றாய் காய்ந்து போன புற்கட்டு தான் அவள் உடம்பு. சதிராடும் நடையும் அல்ல அவளது நடை. தள்ளாடி விழுகிற மூதாட்டி தான். முகம் கூட முழுமதி என்றில்லை. வரண்டுவிட்ட நிலம் போல்த்தான். கண்களோ குழி விழுந்த கண்கள். அவளிடத்தில் எது எனக்கு இன்னும் இன்பம் நல்கும் என்கிறாயா?‘ என்று கூறி மூதாட்டியின் கண்களை நோக்கினார் பெரியவர்.
பேரனைப் பார்த்து அவர் சொன்ன பதிலை பாவலர் சொல்கிறார் கேளுங்கள்.
‘புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
“இருக்கின்றாள்” என்ப தொன்றே!
ஆம். அவள் இருக்கின்றாள் என்பது ஒன்று மட்டுமே எனக்கு இன்பம் நல்கிறது என்கிறார் பெரியவர்.
மேலும் சொல்கிறார். கேளுங்கள்.
“செம்மாதுளை பிளந்து சிதறுவது போல் சிரிப்பாள் அன்று. அந்த சிரிப்பில் களிப்பேன் நானும். இந்நாளில் அம்மணியின் சிரிப்பு சத்தம் அடியோடு கேட்பதில்லை. ஆனாலும் என் பேரர் அவளை ‘ அம்மாயி’ என்றழைப்பர். கேட்பேன். அமிழ்தினில் விழுந்துவிடும் என் நெஞ்சம்.
உயிர்ப்பினை நிலைநி றுத்தும்
நன்மழை;
உலக நூலைச் செயிர்ப்பற நீத்தார் செய்வார்;
செவ்வேஅவ் வறநூல் தன்னை
முயற்சியிற் காப்பார் மன்னர்.
எனக்கென்ன இனி?அம் மூதாட்டி
உயிர்வாழ்வாள் ஆத லற்றான்
உவப்பூட்டும்
எனக்கிவ் வையம்”
அவள் என்னுடன் உயிர் வாழ்வதனால் மட்டுமே எனக்கு இந்த உலகம் இன்பமயமாய் தெரிகிறது என்று சொல்லும் அந்த அன்பின் ஆழத்தை எம்மால் எப்படி அளக்க முடியும் சொல்லுங்கள்.
மூத்தவர் சொன்னவை கேட்டு மணியை மறந்து மூழ்கிப்போனான் பேரனும்.
மூதாட்டி பெரியவருக்கு மலைவாழை கொடுத்த கதை இதுவென்றால் பெரியவர் ஒருமுறை மூதாட்டிக்கு பொரிமா கொடுத்த கதை வேற கதை. அந்தக் கதையையும் பாவலர் தேனினிய மொழியில் கூறுகிறார் கேளுங்கள்!
வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும்,
உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும்
மணவழ கர்தம்
மனையாள் நினைவாய்க்
கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல்
துணையொடு தம்,
தலை யணைக்கீழ் வைத்த
பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி
எழுந்தார்.
விழிப்புடன் விழுந்து விடாமே
நடந்து,தம் துணைவியை நண்ணினார்.
அப்போது
மருமகள் நகைமுத்து வந்து, “மாமா
என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்?
என்னிடம் கூறினால் யான்செய் யேனா?”
என்றாள். பொரிமா இடையில் மறைத்தும்
தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும்
ஒன்று மில்லை ஒன்று மில்லை
என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்!
மருகி போனாள். கிழவர் துணைவியின்
அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி
உண்ணென்று வேண்டி நின்றார்!
உண்டாள்; நாணிப்
பிரிந்தார் உவந்தே
மூத்த அன்பின் தூய்மையை தரிசித்தீர்களா?
இந்த தரிசனங்களை நீங்கள் இதுவரை கண்டும் இருக்கலாம். கவனித்தீர்களா என்பதே கேள்விக்குறி.
பேரன்பை கொண்டாடும் பெருநாளை இவர்களுக்காய் அர்ப்பணிப்பதில் நாம் கொள்கிற பெருமை இப்போது எல்லையற்று நிற்கிறது.
கையிலே வலுவில்லை காலில்வலுவில்லை;
கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய வில்லை;
மெய்யூறும் இல்லை ஒலி காதறிய வில்லை;
விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர்
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?
தெரிவிப்பீர்”
வாசகர் சார்பில் அந்த மூத்தோரிடத்தில் ஒரு கேள்வி எழுப்பினார் பாவலர்.
மூத்தவர் வாக்காய் பதிலும் வந்தது.
“வாய்மூக்குக் கண்காது மெய் வாடினாலும்
மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர்
தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்
துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை.
ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்
ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச்
சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையொன்று பற்றிச்
சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை”
மனதிற்கு மட்டுமே அன்பு சொந்தம். உடலிற்கு அங்கு தேவை என்ன? இரண்டு மனப்பறவைகள் சிறகடித்து பறக்கும் அன்பு வானை உங்களோடு பகிர்ந்ததில் மேலும் மகிழ்ச்சி எமக்கு. துவக்கத்துக்கும் முன்பே துவங்கி, முடிவுக்குப் பிறகும் தொடரும் இந்த அன்பு தரும் ஆச்சரியங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்கள் அன்பின் விதை எப்போது வேண்டுமென்றாலும் முளை விட்டிருக்கலாம், ஆனால் அந்த அன்பு முதுமையின் கடைசிப் படிக்கட்டுவரை பூக்கள் மலர்விப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்தின் உன்னத வாழ்க்கையை வரமாய் பெற்றவராவீர்கள்.
மூத்தோர் வாக்கின் முதுநெல்லிச் சுவையோடு முடிக்கிறோம். அன்பின் பெரிநாளிற்காய் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
2 comments