***ஆய்வு அரசர்கள் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ஆய்வு***
2004 ஆம் ஆண்டில் சுனாமியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிய பகுதியாக கள்ளப்பாடு பிரதேசம் காணப்படுகின்றது. சுனாமி ஏற்பட்ட போது அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதை இல்லாதது அதிகளவான உயிர்களை காவு கொள்ள காரணமாக அமைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு எனும் பிரதேசத்தில் அதிகளவான மீனவ சமூகத்தினர் வாழ்ந்து வருவதுடன் இப்பிரதேசமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக காணப்படுகின்றது. இங்கு தெற்கு பகுதியில் 530 குடும்பங்களும் வடக்கில் 180 குடும்பங்களும் உள்ளன. மொத்தமாக அண்ணளவாக 700 மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவற்றில் அதிகம் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டதால் மக்கள் உடைமைகளையும், உயிர்களையும் இழந்தமையே காரணமாகும்.
இங்கு இறால் குளம் காணப்படுவதினால் சுற்றுச்சூழல் பெறுமதி வாய்ந்த பிரதேசமாக காணப்படுகின்றது . இறால் குளமானது எதிரே இந்து சமுத்திரத்தையும் முல்லைத்தீவு நகரத்தில் சிலாவத்தை வரை கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் வரையும் வாய்க்காலுடன் காணப்படுகின்றது.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெளியேற்றுகை பாதை பாவனைக்கு உரிய முறையில் அமைக்கப்படவில்லை இதனால் பொதுச்சேவைகளை (பாடசாலை வைத்தியச்சேவை ) மக்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுவதனால் அதிகமான இறப்புக்களும் ஏற்படுகின்றது. இதற்கு காரணம் இறால் குளத்தின் ஊடாக ஒரு பாதுகாப்பான பாலம் இல்லாமையே ஆகும்.
கள்ளபாடப் பிரதேசத்தில் காணப்பட்ட பாடசாலை சுனாமி ஏற்பட்டதன் பின்னர் உன்னாப்பிலாவிற்கு மாற்றப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் பாடசாலை செல்லமுடியாத நிலை காணப்படுகின்றமை பாடசாலை மாணவர்கள் அண்ணலவாக மூன்று கிலோமீட்டர் பயணம் செய்தே பாடசாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனர் அதிகமான மாணவர்கள் பாடசாலை இடை விலகளிலும் காணப்படுகின்றனர். இதனால் மாணவர்களுடைய எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
இப்பிரதேசத்திற்கான சுனாமி வெளியேற்ற பாதை 180 மீட்டர் மாத்திரம் அமைக்கப்படுமாக இருந்தால் மூன்று கிலோமீட்டர் சுற்றி பயணிக்க வேண்டிய தேவை இருக்காது. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் எதுவித சிரமமும் காணப்படாது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுனாமி வெளியேற்ற பாதையை அமைத்துத் தருமாறு கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை தற்போது தற்காலிகமாக போடப்பட்ட அணையில் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு விபத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன.
மேலும் இக்குளப் பகுதியினை சுற்றுலாத்தலமாக மாற்றுவதன் மூலம் இங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் உயர்வையும். அத்துடன் இக்குளம் சார்ந்த பகுதியினை முறையாக பராமரிப்பதன் மூலம் இயற்கை சூழலில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சேவைகளை அதிக அளவில் நுகரக்கூடிய வாய்ப்பு காணப்படும்.
இறால் குளம் ஆனது நன்னீர் மீன் பிடி மேற்கொள்ளப்படும் வளம்மிக்க பகுதியாக காணப்படுகின்றது. நன்னீர் மீன் பிடிக்கும் குளம் காணப்படுகின்றதால் அதிகளவான மீனவர்கள் அவர்களது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வறுமை நிலையிலிருந்து விடுபடவும் முடியும். இப்பிரதேசத்தில் குளம் சார்ந்த நீரேந்து பிரதேசம் பராமரிக்கப் படாமையால் அங்கு நன்னீர் சூழல் தொகுதி பாதிக்கப்படுகின்றது.குளத்திற்கு குறுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மண் பாலத்தினால் நந்திக்கடல் பகுதிக்கு செல்லும் நீரோட்டம் தடைப்படுவதால் அச்சுழல் தொகுதியில் காணப்படும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சுனாமி வெளியேற்ற பாதை அமைப்பதற்கு அது தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.