இதழ் 57

பரியாரியார் Vs அய்யர் – 06

இருமனமும் ஒத்துவிட்ட போதும் அதனை ஒப்புவிக்கும் சுகம்தான் காதலில் ஆதீதமானது. அது தரும் பதற்றத்திற்கும் படபடப்பிற்கும் நிகரான ஒரு அனுபவம் உலகினில் இல்லை. ஏற்றுக்கொண்டால் அடுத்த நொடி உலகத்தின் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் அவர்கள் தான். ஏற்றுக்கொள்ளாவிட்டால்….? அந்த பயம் தான் இருவரையுமே அதை ஒப்புவிக்க தடுத்துக் கொண்டிருந்தது. மனம், குணம் என் எல்லாம் பிடித்தும் பிறப்பால் வந்த சாதீயம் தடையாகிப்போனால் குடும்பத்தை எதிர்த்து நிற்க இருவருக்குமே விருப்பமில்லை. ஆனால் தடைகளை உடைப்பது தானே காதலின் வேலை. பரதன் துணிந்தான் ஒருநாள்.

“நாளை பங்குனி உத்தரம். கோயிலுக்கு வருவாயா?” பரதன் கேட்கிறான்.

“ஓம் வரத்தானே வேணும்.”

“உன்ட அப்பா வர முதலா? அப்பாவோடயா?”

“நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?”

“அப்பா வர முதல்..”

“ஏன்?”

” முக்கியமான ஒரு விசயம் சொல்ல வேணும்”

“அப்படியா.. பங்குனி உத்தரம் நல்ல நாள்த்தான்.” சொல்லிவிட்டு சிரிக்கிறாள் கௌசல்யா.

“கோயிலும் நல்ல இடம் தானே!” சிரித்துக்கொண்டே பரதனும் சொல்கிறான்.

இதைவிடவா தம் காதலை அவர்கள் ஒப்புவிக்க வேண்டும். சொல்லாமல்ச் சொல்லும் சுகத்தை பலதடவை அனுபவித்துவிட்ட அவர்களுக்கு சொல்லும் சுகத்தை அனுபவிக்க ஆசை வந்தது. பங்குனி உத்தரமும் வந்தது.

வீட்டில் ஏதேதோ காரணங்களைச் சொல்லிவிட்டு இருவருமே ஆட்கள் வரும் நேரத்திற்கு முன்பே கோயில் வந்துவிட்டார்கள். ஆட்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றம் இருவரிடமுமே இருந்தது. பொக்கட்டுக்குள் மடித்து வைத்திருந்த ஒற்றையை எடுத்து கட கடவென வாசிக்கத்தொடங்கினான் பரதன்.

“வேட்டையிடு – இன்றேல்
விட்டுவிடு – எந்தன்
விதியினில் ஊஞ்சலேன் ஆடுகின்றாய்?- முகம்
காட்டி விடு- இன்றேல்
கரைந்து விடு – வெறும்
கண்தூண்டில் முள்ளுக்கு மீனல்ல நான் – மன

வீட்டைத் திற – இன்றேல்
பூட்டிவிடு – இந்த
வெளிவாசற் கோலங்கள் போதுமடி – தீர்ப்புத்

தீட்டிவிடு – இன்றேல்
தீர்த்து விடு – இந்த
திரிசங்கு சொர்க்கங்கள் தேவையில்லை!

காமன் கணை – ஒரு
கண்பார்வையில் – கொடுங்
காலனின் பாசமோர் கண்பார்வையில் – ஆமாம்

பூமன்றமா – இல்லை
புதைகுழியா – என்றன்
புகலிடம் என்ன விளக்கிவிடு – இன்று

ஆமென்றுரை – இல்லை
அன்றென்று சொல் – என்றன்
ஆவிக்கோர் தீர்ப்பினைத் தந்துவிடு – ஒன்று

நாமேன்றுரை – இன்றேல்
நானென்று சொல் – இந்த
நாடகம் இன்றே முடித்துவிடு!

கவிக்கோவின் கனல் கக்கும் வார்த்தைகளை அப்படியே அவனும் கக்கிவிட்டான்.

பன்னிரண்டு நாட்களாக படாத பாடு பட்டு பாடமாக்கிய கவிதையை ஒரே மூச்சில் ஒப்புவித்து முடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அடிக்கடி முச்சு விட்டுக் கொண்டான் பரதன். நந்தவனத்து ஆண்டியாக பானையை போட்டுடைத்துவிட்டோமோ என்கிற பதட்டத்தில் நின்றான்.

காதலை சொல்லிவிட்டு அதன் பதிலுக்காக காத்திருக்கும் நொடிகள் சுகமா? சுமையா? இன்னும் சில நிமிடங்களில் இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமான மனிதனாகவோ, மிகவும் மனப்பாரம் மிக்க மனிதனாகவோ பரதன் இருப்பான். எல்லாம் அந்த பெண்ணரசியின் நா அசைவில்தான் இருக்கிறது. மனிதர்கள் வாழ்வில் காதல் செய்யும் ஆச்சரியங்களுக்குத்தான் அளவேது?

அவள் எதிர்பார்த்ததைத்தான் பரதன் சொல்லியிருக்கிறான். ஆனால் அவளால் அந்த நொடியை நம்ப முடியவில்லை. கனவில் இந்த காட்சி எப்படி நடக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இது வித்தியாசமாக நடந்தேறிவிட்டது. ஓவியம் வரையும் தூரிகை கவிக்கோவின் காதல் வரிகளை துணைக்கு அழைக்குமென அவள் எதிர்பார்க்கவில்லை. அதிகம் பேசாதவனாகத்தான் அதுவரை பரதனை கௌசல்யாவிற்கு தெரியும். அவன் இவ்வளவு தைரியமாக தன் காதலை ஒப்புவிப்பான் என்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. உள்ளங்கள் இரண்டும் ஏற்கனவே உணர்ந்துவிட்ட போதும், வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாத காதலின் அந்த சுகத்தை அவள் இன்னும் கொஞ்சக் காலம் அனுபவிக்க இப்போது ஆசைப்பட்டாள். தானும் காதலிக்கிறேனா இல்லையா என்ற பயம் நிறைந்த பரிதவிப்போடு அவன் அவள் முன்னால் ஆடும் கூத்துக்களை நினைத்து நினைத்து நள்ளிரவில் கூட கௌசல்யா சத்தம் போட்டு சிரித்திருக்கிறாள். நான் காதலிக்கிறேன் என்பதை விட காதலிக்கப்படுகிறேன் என்பதையே அவள் பெருமையாக பார்த்தாள். அதுவும் தன் நண்பிகள் பலபேருக்கு மையல் உள்ள ஒருவன் தன் பின்னால் பூனைக் குட்டியாய் சுற்றிவருவதை அவள் அதிகம் எதிர்பார்த்தாள்.

ஆனால்… இதற்கு மேல் அவனைக் காக்க வைக்க முடியாதென்பதை அவள் உணர்ந்து கொண்டாள். தன் முன்னால் முழி பிதுங்கி தன் தலையசைவிற்காக தவம் கிடப்பவனுக்கு வரம் கொடுக்க முடிவெடுத்துவிட்டாள். ஏனென்றால் அவனது தவத்திற்கு சாபம் கொடுத்தால் அது தன் வாழ்க்கைக்கும் சாபமாகிவிடுமென்பதை அவள் உணராமல் இல்லை. இப்பொழுது அவனுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்? எப்படித்தெரிவிப்பது? தலை அசைவிலா? கண்ணசைவிலா? ஏதும் அவன் தவறாகப் புரிந்து கொண்டால் பரதன் தவித்துவிடுவானே? வேண்டவே வேண்டாம்! நாவை அசைத்து சொல்லிவிடுவோமென்று முடிவெடுத்தாள். ஆனால் முடியவில்லை! அதுவரை பரதனோடு கதைத்துப் பழகிய அவள் நாவை இப்போது அசைக்க முடியவில்லை! காதல் ஓமோன் சுரந்துவிட்டால் மற்ற நரம்புகள் நம் பேச்சைக்கேட்காது. அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை!

அதோ! அவளை மீறி வந்த சிரிப்பை மறைத்து கௌசல்யா தலை குனிந்தாள்! அவள் பாதத்தின் முன் விரல்கள் மணலில் காதல் கடிதங்களை வரையத்தொடங்கின. அதன் பெயர்தான் நாணம்! பரதனுக்கு முன்பாக முதன் முதலாக வெட்கப்பட்டாள் கௌசல்யா. அவளில் ஏற்பட்ட மாற்றங்கள் பரதனின் பதட்டத்தை தணித்து, சந்தோசம் தருவதற்கான அறிகுறிகளாகத்தான் இருந்தன. மனம் எங்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால்… அவனுக்கு அது போதுமானதாக இல்லை. கௌசல்யா வெளிப்படையாக தன் வாய் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். அதுவரை அங்கேயே அவளையே பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவெடுத்தான்.

ஒரு நீண்ட மௌனம் கௌசல்யாவால் கலைக்கப்பட்டது.

“இப்ப என்ன வேணும் உமக்கு?”

ஞாபகம் தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை நீங்கள் வாங்க போங்க என்று கதைத்தவள் முதன் முறையாக “உமக்கு” என்றிருக்கிறாள். இருவருமே சிரிக்காமல் சிரித்துக் கொண்டார்கள்.

“உமக்கா?”

“ஏன் அதிலென்ன உமக்கு?”

” ஓ.. உரிமையில கதைக்கிறியாடிடிடி…?”

“டி…யா?”

“ஏன் வேணாமாடி?”

“பருவாயில்லை இருக்கட்டும்டாடாடா…”

” என்ன டா…வா?”

“ஏன் வேணாமாடா?”

“யார் சொன்னது? வேணும் வேணும்டி”

“என்ன வேணும்டா?”

“அதுதான் சொல்லீட்டனே! நீ தான் சொல்றாயில்லைடி!”

“எல்லாம் சொல்லீட்டனே! இன்னும் என்ன உனக்கு சொல்லணும்?”

அதுதானே இதை விடவா சொல்ல வேண்டும்? ஆனால் பரதன் எதிர்பார்த்தான்.

அப்போது கோயில் மணி அடித்தது.

“பார்த்தியாடி… மணி வேற அடிக்குது.. நல்ல சகுனம்! இப்பவே சொல்லு.. சொல்லு கௌசல்யா..”

“டேய்… லூசு… கத்தாதடா…”

“என்னது லூசா..??”

” அத விடுடா.. யார்டா மணி அடிச்சது?”

“அட ஓமென்ன.. உன்ட அப்பா வந்திட்டாரோ..?”

கோயில் உட்பிரகார பின் வீதியில் நின்று கதைத்துக் கொண்டு நின்ற இருவருமே பதறி விட்டார்கள்!

யார் அடித்தது ?

அறிவோம் அடுத்த மாதம்..!

Related posts

வினோத உலகம் – 22

Thumi202121

நிறங்கள் சொல்லட்டும் நல்ல செய்தி

Thumi202121

பள்ளிக்கூடங்களை மூடாதீர்கள்..!

Thumi202121

Leave a Comment