இதழ் 58

உலகமயமாக்கலில் கொவிட்-19 இன் தாக்கம்

உலகமயமாக்கல் என்பது தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒன்றாக இணைந்திருத்தலாகும். இவ் உலகமயமாதல் என்னும் பதமானது பேராசிரியர் டேவிட் என்பவர் மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக நாடுகளின் பணிகள், பண்டங்கள், மூலதனம், உழைப்பு, தொழில்நுட்பம், மனித மூலதனம் போன்றவற்றின் மீது எவ்வித தடையும் ஏற்படாது உலகின் பல்வேறு ஆதாரங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு செயன்முறை உலகமயமாக்கலாகும். உலகமயமாக்கலின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குரிய சர்வதேச சந்தைகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.

அதாவது உலகமயமாதல் என்பது புறக்காரணிகளால் தூண்டப்பட்டு ஒரு நாட்டில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கின்றது. இம் மாற்றங்கள் கடந்த காலங்களிலிருந்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வகையில் நாடுகளிடையே தொடர்பாடல், வர்த்தகம், முதலீடு என்பன குறித்து கூடிய தொடர்புகளையும் ஒருங்கிணைப்புக்களையும் ஏற்படுத்துதல் உலகமயமாக்கலாகக் காணப்படுகின்றது. அடிப்படையில் சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயன்முறையை உலகமயமாக்கலானது குறித்து நிற்பதோடு தற்போது பொருளாதார, சமூக, கலாசார, அரசியல், சார்ந்த உலகமயமாதலாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்கல் மூலமாக அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் எதிர்கொள்கின்றன. உலகமயமாக்கலின் விளைவால் தோன்றிய கொவிட் – 19 வைரசானது உலகளாவிய ரீதியில் எதிர்பாராத பாரியளவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ் கொவிட் – 19 வைரசானது 2019 டிசம்பரில் சீன நாட்டின் வூபோய் மாகாணத்தின் தலைநகராக விளங்கும் வூகானில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டு பின்னர் படிப்படியாக உலக நாடுகளையும் பற்றிக் கொண்டது. இதன்படி ஜனவரி 30 அன்று கொவிட் – 19 தொற்றை உலகளாவிய ரீதியிலான பொது சுகாதார அவசர நிலையாகவும் மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 31 2020 இன் நிலவரப்படி 216 நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் காரணமாக 24,854,140 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 838,924 பேர் உயிரிழந்திருந்தனர். இலங்கையை பொறுத்தவரையில் 31.08.2020 இன் அரச தரவின்படி 2,995 பேர் கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு அதில் 2,860 மக்கள் குணமடைந்திருந்தனர்.

உலகளாவிய ரீதியில் அமெரிக்காவில் 5,855,521 பேர் கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 838,924 பேர் உயிரிழந்திருந்தனர். உலகில் கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில் காணப்பட்டது. உலகையே ஆக்கிரமித்து காணப்படும் கொவிட் – 19 வைரசானது உலக நாடுகளுக்கு இன்றைய நிலையில் மிகப் பெரியதொரு சவாலாகக் காணப்பட்டது. குறிப்பாக உலகமயமாக்கலில் பாரியளவான தாக்கத்தை கொவிட் – 19 வைரசானது ஏற்படுத்தியிருந்தது. உலகமயமாக்கலால் நன்மை மட்டுமல்ல மாறாக ஆபத்துக்கள் மற்றும் பாதிப்புக்களும் ஏற்பட்டன. இக் கொவிட் – 19 இன் வைரசினால் உலகமயமாக்கலில் ஏற்படும் தாக்கத்தை சமூக மற்றும் சூழலியல் ரீதியான தாக்கம் என வகைப்படுத்தி நோக்க முடியும்.

கொவிட் – 19 மற்றும் சூழல் தாக்கம்

பயணத் தடை, தொழில் துறைகள் மூடப்பட்டமை காரணமாக வளி மாசுபாடானது குறைவடைந்திருந்தது. அதேவேளை பயணத்தடைகள் மூலமாக சீனாவில் 25% கார்பன் வெளியேற்றம் குறைவடைந்திருந்தது. இதன்படி சீனா 2019ம் ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்த கார்பன் டை ஆக்சைட் சுமார் 200 மில்லியனுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்திருந்தது. அதேபோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நைட்ரஐன் ஆக்சைடு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க சரிவானது ஏற்பட்டிருந்தது. இவ்வாறு வளிமாசடைவுக்கு காரணமான வாயு வெளியேற்றங்கள் (Lockdown) தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக குறைந்தது.. அதேபோல் கடல்வழி போக்குவரத்து, மீன்பிடித்தல் என்பன குறைவடைந்தமையினாலும் தொழிற்சாலை கழிவுகள் குறைவடைந்தமையினாலும் நீரின் தூய்மையும் பேணப்பட்டிருந்தது.

நீர் மாசடையும் தன்மை கொவிட் – 19 இனால் குறைவடைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் நீர் வாழ், நிலவாழ் உயிரினங்கள் மனிதர்களின் நடமாட்டம் குறைவடைந்தமையினால் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையும் காணப்பட்டது. அத்தோடு மிருகங்களை வேட்டையாடுதல் குறைவடைந்திருந்தது. மேலும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் குறைவடைந்திருந்தன. இதன் விளைவாக மரங்கள் வளர்ந்து இயற்கை எழுச்சியோடு காணப்பட்டன. இதன் மூலமாக வளிமாசுபடுதல், நீர் மாசுபடுகள் குறைவடைந்து இயற்கை சூழலில் தூய்மை பேணப்படும் நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கவொன்றாகும்.

மேலும் கொவிட் – 19 இனால் தொழிற்சாலைகள் கழிவுகள் குறைவடைந்து வீட்டுக்கழிவுகள் அதிகரித்து காணப்பட்டன. அதேபோல் வைத்தியசாலை கழிவுகளான முகமூடி, ரிசு போன்ற கழிவுகள் அதிகமாக வெளியேற்ப்பட்டமை கொவிட் – 19 இனால் ஏற்பட்ட சூழல் ரீதியான தாக்கமாகும். எடுத்துக்காட்டாக சீனாவின் வுகாவினில் வைத்தியசாலை கழிவுகள் 200 டொன்னுக்கும் அதிகமாகும். மேலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக் கொண்டு செல்லும் போக்கு கொவிட் – 19 இனால் சூழலியல் ரீதியான உலகமயமாக்கலில் ஏற்பட்டிருந்தது.

கொவிட்-19 மற்றும் சமூகத்தாக்கம்

கொவிட் – 19 இனால் சமூக ரீதியாக ஏற்படும் பாதிப்புக்களாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை தோன்றியிருந்தது. அதாவது கொவிட் – 19 காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்விசார் நிறுவனங்களும் மூடப்பட்;டதனால் சிறுபிள்ளைகள் தொடக்கம் முதுமானிப்பட்டம் முடித்தவர்கள் வரை அனைவரும் கொவிட் – 19 பாதிக்கப்பட்டிருந்தனர். உலகளாவிய ரீதியில் சுமார் இரண்டு பில்லியன் கல்வியியலாளர்கள் கொவிட் – 19 இனால் தமது கற்கை நெறிகளில் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தனர். மேலும் கொவிட் – 19 இனால் சமூக உலகமயமாக்கலில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு தாக்கம் தகவல் தொடர்பாடல் பாவனை அதிகரித்தமையாகும். கொரோனா காரணமாக ஏற்டும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக, அதாவது கொவிட் – 19 இனால் ஏற்பட்ட இடையூறுகளை தவிர்க்கவும் அன்றாட வாழ்கையை கொண்டு செல்வதில் காணப்படும் தடைகளை தவிர்க்கவும் இணையத்தளமானது அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. ITU மதிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 53 வீதமானோர் இணையத்தை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தளத்தினூடாக தமது கல்வி, தொழில் மற்றும் அத்தியாவசிய செயற்பாடுகளை மேற்கொள்ளல் நன்மை பயக்கவில்லை. இணையத்தில் விளையாடல் மற்றும் அநாவசியமான இணையத்தளங்களை பாவித்தல் இணையத்திற்கு அடிமையாதலின் மூலமாக உடல், உள ரீதியான பல பாதிப்புக்கள் அதிகமாகவே ஏற்பட்டிருந்தன. மேலும் கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக பலர் வீட்டினுள்ளேயே இருத்தல் மன உளைச்சலுக்கு ஆளாகுவதற்கு வாய்ப்பை அதிகளவில் ஏற்படுத்தியதோடு கொவிட் – 19 காலத்தில் தற்கொலைகளும் இடம்பெற்றிருந்தன..


கொவிட்-19 மற்றும் சுற்றுலாத்துறை

கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட முக்கிய துறையாக சுற்றுலாத்துறை காணப்பட்டது. அதாவது கொவிட் – 19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உலக நாடுகள் நாட்டினை முடக்குதல் (Lockdown), சர்வதேச ரீதியான விமான பயணங்களை இரத்து செய்தல், விமான நிலையங்களை மூடுதல், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், எல்லைகளை மூடுதல், கடல்வழி, வான்வழி போக்குவரத்துக்களை தவிர்த்தல் போன்ற பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன் நேரடி விளைவாக பாதிக்கப்பட்ட முதல் தர துறையாக சுற்றுலாத்துறை காணப்பட்டது. சுற்றலாத் துறையானது அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளின் சமூக பொருளாதாரத்துக்கான அடிப்படை அம்சமாக காணப்படும் அதேவேளை பல நாடுகளில் 30% – 80% வரையிலான ஏற்றுமதியில் சுற்றுலாத்துறையின் பங்கு காணப்பட்டது. ஆனால் 2020 ஐனவரி – ஏப்ரல் மாதங்களிலே சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 47% இனால் குறைவடைந்திருந்ததோடு வேலையிழப்பு, அந்நிய செலாவணி மற்றும் வரி வருமானங்களை இழக்கும் நிலை பல நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தன.

உலகளாவிய ரீதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது பெப்ரவரியில் 12% ஆகவும் மார்ச்சில் 55% ஆகவும் ஏப்ரலில் 97 வீதமாகவும் குறைவடைந்து சென்றிருந்து. குறிப்பாக சுற்றுலாப்பயணிகள் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்வதன் மூலம் பொருளாதார உலகமயமாக்கலானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருந்தது. எடுத்துக்காட்டாக இலங்கையை நோக்கினால் இலங்கை வரலாற்றில் 2020 ஏப்ரல் பூச்சிய உல்லாச பயணிகள் வருகை தந்த வருடமாக காணப்படுவதோடு இவ் வீழ்ச்சி பல்வேறு வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை பாதித்திருந்தது.

அந்தவகையில் சுற்றுலாத்துறை என்பது ஒரு நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற ஒரு துறையாகும். அவ்வருமானமானது கொவிட்-19 இனால் குறைவடை ந்திருந்தது. அதாவது இலங்கைக்கு மொத்த வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் 2018 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமானது கிடைக்கப்பெற்றிருந்தது. அதே ஆண்டில் இறக்குமதியினளவானது ஏறத்தாழ 22.5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இறக்குமதிக்கு செலவு செய்யப்பட்ட 11.5 பில்லியன் அமெரிக்க டொலர்களும் உல்லாசப் பயணத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற வருமானத்தின் மூலமாகவே ஈடுசெய்யப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கின் பற்றாக் குறையானது மென்மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்பட்டன.

இந்த இழப்பை ஈடுசெய்வதற்கு நாட்டில் சாதாரண நிலை தோன்ற வேண்டியிருந்தது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமையானது மறை முகமாக வேலைவாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார உலகமயமாக்கலுக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தியிருந்தது. அதாவது உல்லாசப் பயணத்துறையால் உலகளாவிய ரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலைவாய்ப்பினை பெற்றிருந்தனர். குறிப்பாக இலங்கையில் ஏறத்தாழ நான்கு இலட்சம் மக்கள் சுற்றுலாத்துறை மூலமாக வேலைவாய்ப்பினை பெற்றிருந்தனர். கொவிட்-19 இனால் நான்கு இலட்சம் இலங்கையர்கள் முற்றாக வேலையிழந்திருந்தனர். இதனால் தனிநபர் வருமானம் குறைவடைந்திருந்தது.

மேலும், சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்கு நிலுவையில் பாரிய பற்றாக்குறையை உருவாக்கி இறுதியாக மூலதனக் கணக்கூடாக சென்மதிநிலுவையில் மூலதனப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உலக நாடுகளிலும், உலக நிதி நிறுவனங்களிலும் கடன்பெற வேண்டிய நிலையை தோற்றுவித்திருந்தது. ஏற்கனவே இலங்கை உட்பட பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கடன் சுமையால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் கொவிட் – 19 இனால் நாடுகளில் மென்மேலும் கடன்சுமை அதிகரித்திருந்தது.

இவ்வாறு கொவிட் – 19 இன் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி, கடன் சுமை என்பன அதிகரித்து அதன் விளைவாக நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு இலங்கையை நிதி நெருக்கடிக்குள் இட்டுச்சென்றிருந்தது. அதேபோல் இலங்கையில் கொவிட் – 19 இனால் ஒப்பீட்டு ரீதியில் ஏற்றுமதிகள், உல்லாசப்பயணிகளின் வருகை வெளிநாட்டு பண அனுப்புதல்களின் அதிகரிப்பு, வெளிநாட்டு நேரடி முதலீடு என்பன அதிகரிக்கும் போது அந்நியச் செலாவணிகள் உட்பாய்ச்சல்கள் அதிகரித்து ரூபாவின் புற பெறுமதி அதிகரிக்கும். மாறாக கொவிட் – 19 இனால் இது பாதிக்கப்பட்டதால் இவையனைத்தும் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இலங்கையின் ரூபா பெறுமதி வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. ஆக, கொவிட்-19 பல வழிகளில் உலக இயக்கத்தை திசை திருப்பியிருக்கிறது.

ஆகவே, கொவிட் – 19 உலகளாவிய தொற்றுநோயின் தன்மையானது இலங்கையின் பொருளாதாரத்தின் செயலாற்றம் பல்வேறு நிச்சயமற்ற காரணிகள் மீது தொங்கி நிற்கின்ற நிலையினை ஏற்படுத்தியிருந்தது. இவை, உலகளாவிய தொற்றுநோய் மேலும் வியாபித்தல், தணிப்பு வழிமுறைகளின் தீவிரம் மற்றும் வினைத்திறன், நிரம்பல் சார்ந்த குழப்பங்களின் அளவு மற்றும் நடத்தைசார் மாற்றங்கள் மற்றும் ஏனைய பொருளாதார படிவங்களின் நிலைத்திருக்கும் தன்மை என்பவை யாவினதும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரங்கள் இரண்டுக்கும் தொடர்புடையனவாக இருந்தன. உலகளாவிய பொருளாதார நடவடிக்கையின் மீட்சி மெதுவானவொரு வழிமுறையாக இருக்கும் சாத்தியம் இருந்தபோதிலும், இலங்கையின் திரண்ட கேள்வியில் கணிசமான பகுதிக்கு உள்நாட்டுக் கேள்வி வகிபாகம் கொண்டிருப்பதனால் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் முகமான வழிமுறைகள் என்பன இலங்கையின் விரைவான மீட்சியை இயலச்செய்யும்.

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 07

Thumi202121

இலங்கையில் இணையக்கல்வி

Thumi202121

ஆய்வு அரசர்கள்-2022

Thumi202121

Leave a Comment