ஒரு வரண்டு போன சந்தை வெளி. சுற்றிலும் அமைதி ஆட்சி செய்கிறது. திறந்த கிடந்த கடைகளின் கதவுகளும் ஜன்னல்களும் காய்ந்து கிடக்கும் பசித்த வாய்கள் போல் வெறுச்சோடிக் கிடந்தன. மக்கள் கூட்டமென்று சொல்வதற்கும் யாருமில்லை. ஏன் ஒரு பிச்சைக்காரர் கூட அவ்விடத்தில் இல்லை.
அந்த அமைதியான சந்தைக் கடை வழியே ஒரு உத்தியோகபூர்வ போலீஸ் அதிகாரி தனது புத்தம் புதிய மேலங்கியை அணிந்து கொண்டு நடந்து வருகிறார். ‘ஓச்சுமிலோப்’ என்பது அவரது பெயர். ஓச்சுமிலோஃபை பின்தொடர்ந்து அவரது உதவி அதிகாரி ஒருவர் கைநிறைய அந்த சந்தைக்கடைகளில் பறிமுதல் செய்ய பழங்களை ஏந்திக் கொண்டு நடந்து வந்தார்.
நிலவிக் கொண்டிருந்த அந்த அமைதியினை குலைத்து திடீரென்று யாரோ அங்கு கூக்குரலிடும் ஓசை ஓச்சுமிலோஃப்க்கு கேட்டது.
‘என்னையே நீ கடித்துவிட்டாயா? கேடு கெட்ட மிருகமே! இப்போதெல்லாம் நாய்கள் யாருக்கும் கடிக்க அனுமதி இல்லை. உன்னை என்ன செய்கிறேன் பார்!’
அந்த சத்தத்தோடு ஒரு நாய் குரைப்பதும் கூடவே கேட்டது. ஓச்சுமிலோஃப் சத்தம் வந்த திசைக்கு விரைந்தார். ஒரு நாய் மூன்று கால்களில் நொண்டி நொண்டி ஒரு மரத் தொழிற்சாலையிலிருந்து வெளியே ஓடுவதைக் கண்டார்.
பொத்தான்கள் ஒழுங்காக பூட்டாத வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவன் அந்த நாயைத் துரத்திக் கொண்டிருந்தான். வேகமாக ஓடிய அந்த மனிதன் நாயின் கால்களை நெருங்கியதும் திடீரென்று தடுமாறி கீழே விழுந்தான். ஆனாலும் அவன் விழுந்த விதத்திலேயே முன்னோக்கிச் சென்று நாயின் பின்னங்கால்களை பிடித்து விட்டான். மீண்டும் நாயின் அலறல் சத்தம் கேட்டது.
கடைகளின் ஜன்னல்களில் தூங்கிக் கொண்டிருந்த முகங்கள் அந்த மரத்தொழிற்சாலை வாசலை நோக்கி விரைந்தன. சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் தரையில் இருந்து துளிர்விட்டது போல் அந்த மரத் தொழிற்சாலை முற்றத்தைச் சுற்றி திரண்டது.
‘யாரோ சிலர் சண்டை போடுற மாதிரி இருக்கு சார்’ என்றார் அந்த போலீஸ் உதவி அதிகாரி.
ஓச்சுமிலோஃப் அந்தக் கூட்டத்தை நோக்கி நகர்ந்தார். மரத்தொழிற்சாலையின் வாயிலுக்கு அருகில் அந்தப் பொத்தான்களை ஒழுங்காக பூட்டாத மனிதன் தனது வலது கையை உயர்த்தி, இரத்தம் வடியும் விரலைக் காட்டிக் கொண்டிருந்தான். அரைகுறையாகக் குடித்த போதைக்காரன் போலிருந்தது அவனது முகம். அந்த முகத்தோடு நாயை பார்த்து ‘பொறு. பொறு.. இதற்கு நான் உன்னைப் என்ன செய்கிறேன் பார்.. உன்னிடமிருந்து எதுவும் அறவிடாமல் விடமாட்டேன், முரட்டு நாயே!’
ஒச்சுமிலோஃப் அந்த மனிதனை அடையாளம் கண்டுகொண்டார். அவன் ஹிரியுகின். பொற்கொல்லன்.
கூட்டத்தின் மையத்தில் அதன் முன்னங்கால்களை விரித்து தலை முதல் கால் வரை நடுங்கிக் கொண்டு முழுப் பிரச்சனையின் குற்றவாளியாகக் கிடந்தது ஒரு வெள்ளை நாய்க்குட்டி – ஒரு கூர்மையான மூக்கு மற்றும் முதுகில் மஞ்சள் புள்ளியுடன். அதன் கண்ணீர்க் கண்களில் அவலமும் பயமும் தெரிந்தது.
‘இங்கு என்ன நடக்கிறது? ’ என்று ஓச்சுமிலோஃப் கூட்டத்தினூடாக நுழைந்து உரத்துக் கேட்டார். ‘நீ ஏன் இங்கிருக்கிறாய் ஹிரியுகின்? உன் விரலுக்கு என்ன நடந்தது? யார் இப்படிச் செய்தது?’
‘’சார், நான் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல மிக சாதுவாகதான் நடந்து வந்து கொண்டிருந்தேன்’ என்றான் ஹரியுகின். ‘சார், நான் யாரையும் எதையும் இங்கு தொடவில்லை, திடீரென்று இந்த சபிக்கப்பட்ட மிருகம் என் விரலைக் கடித்து விட்டது . மன்னிக்கவும் சார். நான் வேலை செய்பவன்; எனக்கு என் விரலினால் செய்யவேண்டிய மிகவும் நுட்பமான வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த விரலை ஒரு வாரத்திற்கு இனி என்னால் பயன்படுத்த முடியாது! அதனால் யாராவது எனக்கு இதற்காக நட்டஈட்டுப்பணம் கொடுக்க வேண்டும். கடிக்கும் நாய்களை பொறுக்க வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் இல்லை சார். இப்படி இவற்றை கடிக்க அனுமதித்தால் என்னைப் போன்றோரின் வாழ்க்கையே வாழத் தகுதியற்றதாகி விடும்’.
‘ஹ்ம்ம். புரிகிறது,’ என்று ஓச்சுமிலோஃப் கடுமையாகச் சொன்னார்.
புருவங்களை மேலும் கீழும் அசைத்தார். ‘இப்போது, இது யாருடைய நாய் என்று எனக்கு தெரிந்தாக வேண்டும்? இந்த விடயத்தை நான் சும்மா விடமாட்டேன். உங்கள் நாய்களை நீங்கள் இனிமேல் இப்படி அவிழ்த்து ஓட விடாதபடி நான் உங்களுக்கு பாடம் கற்பிக்கப் போகிறேன்! விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியாத நபர்களிற்கு ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. உரிமையாளரை நிச்சயம் தண்டிக்க வேண்டும். நான் யார் என்பதை அவருக்குக் காட்டுவேன்! யெல்டிரின்…’
என்று உதவி அதிகாரியின் பக்கம் திரும்பினார். அந்த உதவி அதிகாரியின் பெயர் தான் யெல்டிரின்.
‘அது யாருடைய நாய் என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை எழுது. இல்லாவிட்டால் நாய் தாமதமின்றி கொல்லப்படும். எப்படியிருந்தாலும், இது ஒரு பைத்தியக்கார நாய். இதனால் ஆபத்தே அதிகம். இது யாருடைய நாய் என்று இங்கு யாருக்காவது தெரியுமா?’
‘ஜெனரலின் நாய் போல் இருக்கிறதே’ என்றான் கூட்டத்தில் ஒருவன்.
‘ஜெனரலுடையதா? ம்! …
யெல்டிரின், என் மேலங்கியைக் கழற்று. பயங்கர சூடாக இருக்கிறது! அநேகமாக இன்று மழை பெய்யும் போல…’ பொற்கொல்லனிடம் திரும்பி ஒச்சுமிலோஃப் தொடர்ந்தார்.
‘எனக்கு புரியாத ஒன்று இருக்கிறது, ஹிரியுகின் ???? அந்த நாய் உன்னை எப்படி கடிக்க முடியும்? அதற்கு உன் விரல்கள் எப்படி எட்டியிருக்கும். அது ஒரு சின்னஞ்சிறிய நாய். நீ ஒரு பெரிய வளர்ந்த மனிதன். அது உன் விரல்களை கடித்திருக்க வாய்ப்பேயில்லையே. ஒருவேளை உன் விரல் தெரியாமல் ஒரு ஆணியில் குத்தி காயப்பட்டிருக்கலாம். பிறகு இந்த நாயைக் கண்டதும் உனக்கு இப்படியொரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதை வைத்து நீ கொஞ்சம் பணம் பெற முயற்சிக்கிறாய். அப்படித்தானே! உன்னைப்போன்றோரை பற்றி நான் நன்கு அறிவேன். நீ ஒரு ஊரை ஏமாற்றுகிற அயோக்கியன்!’
‘அவன் நாயின் முகத்தில் ஒரு சிகரெட்டைக் குத்தினான். அதனால தான் அந்த நாய் திமிறி அவனை கடிச்சுது சார்.’ கூட்டத்தில் இன்னொருத்தன் சொன்னான்.
‘இல்லை பொய்! நான் அப்படிச் செய்ததை நீ பார்த்தாயா? ஏன் பொய் சொல்கிறாய்? நீ சொல்வதை எல்லாம் இவர் நம்பிவிடுவார் என்று நினைக்கிறாயா? அவர் அதிசிறந்த புத்திசாலி. யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்பது அவருக்கு நல்லாவே தெரியும். நான் பொய் சொன்னால் அதை நீதிமன்றமே முடிவு செய்யட்டும். இன்று நாம் அனைவரும் சமம் என்று சட்டம் சொல்கிறது. எனக்கு போலீசில் ஒரு சகோதரர் கூட இருக்கிறார். என்ன நடந்தென்று நானே சொல்கிறேன்.. என்னவென்றால்..’
‘சரி. சரி.. உன் வாக்குவாதத்தை நிறுத்து’
உரத்து கத்தினார் ஓச்சுமிலோஃப்.
‘இல்லை சார், இது ஜெனரலின் நாய் அல்ல’ என்று அந்த உதவி அதிகாரி சிந்தனையுடன் கூறினார். ‘ஜெனரலிடம் இப்படி நாய்கள் கிடையாது. அவருடைய நாய்கள் வேறு.’
‘உண்மையாகவா யெல்டிரின்?’
‘ஆம் சார்.. நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.’
‘எனக்கும் அது தெரியும் யெல்டிரின்… ஜெனரலிடம் விலையுயர்ந்த இன நாய்களே உள்ளன, ஆனால் இந்த நாய்! இதற்கு முடியும் இல்லை. ஒரு வடிவம் கூட இல்லை. மக்கள் ஏன் நாய்களை இப்படி கேவலமாக வளர்க்கிறார்கள்? இப்படியொரு நாய் நம் தலைநகரில் மட்டும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு சட்டத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். உடனே இந்த நாயின் கழுத்தை நெரித்து கொன்றிருப்பார்கள்! ஹிரியுகின், நீ தான் இங்கு பாதிக்கப்பட்டவன். அதுவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு நிற்கிறாய். இந்த விடயத்தை நிச்சயம் ஓய விடமாட்டேன். உரிமையாளருக்கு உகந்த பாடம் கற்பிக்க போகிறேன் பார்..!’
“ஆனால் ஒருவேளை அது ஜெனரலின் நாய்…… “
என்று உதவி அதிகாரி சத்தமாக யோசித்தார். ‘ஒரு நாள் ஜெனரல் வீட்டு முற்றத்தில் இப்படி ஒரு நாயைப் பார்த்த ஞாபகம்’
‘நிச்சயமாக அது ஜெனரலுடையதுதான்’ என்று கூட்டத்தில் அந்தக் குரல் மீண்டும் கேட்டது.
‘யெல்டிரின், என் கோட்டை தயவு செய்து எனக்கு அணிவித்து விடு. குளிராக இருக்கிறது. காற்று எழுந்து வருகிறது. எனக்கு நடுங்குகிறது. நாயை ஜெனரலிடம் அழைத்துச் சென்று அங்கேயே கேளுங்கள். நான் கண்டுபிடித்து அனுப்பினேன் என்று நிச்சயம் ஜெனரலிடம் சொல்லுங்கள். மேலும் நாயை தெருவில் விட வேண்டாம் என்றும் சொல்லுங்கள். இது ஒரு விலையுயர்ந்த நாயாக இருக்கலாம். தெருவில் சில பன்றிகள் ஒரு சிகரெட்டைக் இதன் மீது குத்தினால், இது விரைவில் இறந்துவிடும். நாய் ஒரு மென்மையான உயிரினம். ஏய், முட்டாளே, உன் கையை கீழே போடு! உன்னுடைய அந்த முட்டாள்தனமான விரலை மீண்டும் என்னிடம் காட்டாதே. இது நீயே உனக்கு தேடிக்கொண்ட தண்டனை’.
‘இதோ ஜெனரலின் சமையல்காரர் வருகிறார். அவரிடமே கேட்போம். வணக்கம், புரோகோர், ஒரு நிமிடம் இங்கே வா! பார், அந்த நாய் உங்களுடையதா?’ கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.
‘எந்த நாய்? … இப்படி ஒரு நாய் என் வாழ்நாளிலே நான் கண்டதில்லை!’
என்றான் அந்த சமையல்காரன் புரோகோர்.
‘சுற்றிச் சுற்றிக் கேட்டு நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை,’ என்று ஓச்சுமிலோஃப் உரத்துச் சொன்னார். ‘இது ஒரு தெரு நாய். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தெருநாய் என்று நான் சொன்னால் இது ஒரு தெருநாயே தான்! இதை இப்போதே கொன்றாக வேண்டும்!’
‘இது எங்கள் நாய் அல்ல தான்’
சமையல்காரன் புரோகோர் தொடர்ந்தான். ஆனால் இது ஒரு வேளை தலைநகரிலிருந்து வந்த ஜெனரலின் சகோதரருக்கு சொந்தமானதாக இருக்கலாம். என் எஜமானருக்கு இந்த மாதிரி நாய் எல்லாம் பிடிக்காது, ஆனால் அவருடைய சகோதரருக்கு பிடிக்கும்.’
‘அண்ணன் வந்து விட்டாரா?’ என்று ஓச்சுமிலோஃப் கேட்டதும், அவர் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை பரவியது. ‘அடடே! எனக்கு அது தெரியாதே! அவர் மீண்டும் இங்கு வந்துவிட்டாரா?’
‘ஆமாம் சார், ஒரு சில நாட்கள் இங்கு தங்குவாராம்.’
‘நல்லது..நல்லது.. நல்லது.. எனக்கு தெரியாமல் போய்விட்டதே… அப்படியானால் இது நம் ஜெனரலின் அண்ணனுடைய நாய் என்கிறாயா? மிகவும் நல்லது, மிக்க மகிழ்ச்சி! இந்த குட்டி நாயை அழைத்துச் செல்லுங்கள்! என்ன ஒரு கலகலப்பான குட்டி நாய். துடிதுடிப்பான குட்டி நாய்.. இந்த பெரிய மனிதனின் விரலையே ஒடிக்கிறதே! ஹஹஹா. …. செல்லக் குட்டி நாயே ஏன் இப்படி நடுங்குகிறாய்? ர்ர்ர் … ர்ர்ர்ர் … இந்த மனிதன்.. ஹீரியுகின் ஒரு வில்லன். நீ பயப்படாதே’ என்று நாயுடன் செல்லமாக பேசி அனுப்பி வைத்தார் ஓச்சுமிலோஃப்.
புரோகோர் நாயை அழைத்துக் கொண்டு நடந்து சென்றான். கூட்டம் ஹீரியுகினைப் பார்த்து சிரித்தது.
‘உன்னை ஒரு நாள் நிச்சயம் பிடிப்பேன்!’ என்று ஓச்சுமிலோஃப் ஹீரியுனை மிரட்டிவிட்டு, தன் மேலங்கியைப் போர்த்திக்கொண்டு, சந்தைப் பகுதியைத் தாண்டிச் சென்றார்.
அன்றைய ரஷ்ய சமுதாயத்தைப் பற்றிய நையாண்டியாக அன்டன் சொகோவ் எழுதிய, “பச்சோந்தி” (The chameleon) என்கிற கதையையே இதுவரை வாசித்துக் கொண்டிருந்தீர்கள். இது அன்றைய காலம் மட்டுமல்ல; இன்றும் என்றும் மனித நடத்தைகள் பற்றிய கடுமையான உணர்வையே இந்தக் கதை புலப்படுத்துகிறது. பொதுவாக, நமது நடத்தை சரியானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப எல்லோரும் மாறுகிறோம். ஒச்சுமிலோப் கதாபாத்திரத்தை வெளியில் மட்டும் தேடாதீர்கள். உங்களுக்குள்ளும் தேடிப்பாருங்கள்.
எவ்வாறாயினும், உண்மையில், நாம் ஒரு அதிகாரமிக்க சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். முடிவெடுப்பதில் சக்தி எம்மிடையே ஒப்பீட்டளவில் போதுமானதாக இல்லை. ஒச்சுமிலோப் தன் எண்ணப்படி
கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவரை பலிகடா ஆக்கியிருக்கலாம். பச்சோந்தியாக இருப்பது தந்திரமல்ல. பிழைக்கும் ஒரு வழி்யாக மாறிவிட்டது.
பச்சோந்திகள் இடத்துக்கு தகுந்த மாதிரி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்றுதான் பெரும்பான்மையனவர்கள் நினைக்கிறார்கள். அது அத்தனை உண்மையில்லை. இடத்தைவிட பச்சோந்தி தனது எண்ணத்துக்கு ஏற்றபடிதான் தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது என்பதுதான் உண்மை. அது அப்படி நிறம் மாறினால் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ ஒரு செய்தி சொல்கிறது என்று அர்த்தம். நிறம் செய்தியை சொல்கிறது.
உங்கள் நிறமும் உலகிற்கு நல்ல செய்தியை சொல்லட்டும். மற்றோர் நிறமும் சொல்லும் செய்தி தெளிவாய் புரிந்து போகட்டும்.
துமி அரசியல் பேசுவதில்லை. இப்போதும் பேசவில்லை.