யாழின் கல்வி பண்பாட்டின் இன்றைய நிலை பெரும் விமர்சனத்தளங்களுக்கும் பயணிக்கதே அண்மைய நிலவரமாக காணப்படுகிறது. குறிப்பாக பெப்ரவரி(2023) இறுதியில், மாணவர்கள் இல்லாத காரணத்தால் நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவப்பட்டதை தொடர்ந்து அதுதொடர்பான உரையாடல் முதன்மை பெறலாயிற்று. மறுதளத்தில் மாணவர்களின் கல்வி இடைவிலகல்களின் எண்ணிக்கையும் அண்மைய ஆண்டு தரவுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ‘2022ஆம் ஆண்டில் 519மாணவர்கள் இடைவிலகியுள்ளதோடு, 2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும் இருந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் சமூகப்பிரச்சினைகள் நீர்க்குமிழிகளின் உருவாக்கங்கள் போலவே திடீரென பெரிதாகி உடனடியாக நீர்த்து போய்விடுகின்றது. எனினும் கல்விசார் பிரச்சினைக்கான தொடர்பான விளைவுகளை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் புலமைசார் உரையாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அச்சமூகத்தின் கல்வியின் தாக்கத்திலேயே தங்கியுள்ளது. ஆரம்ப இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையினரை தாண்டி யாழ்ப்பாண மக்கள் உயர் கல்வி கற்றவர்களாக உயர் அதிகாரங்களை அலங்கரித்தவர்களான வரலாற்றை கூறி மார்தட்டும் மரபு இன்றும் காணப்படுகின்றது. அம்மார்தட்டல்களில் காலணித்துவ அரசுகள் மதமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கல்விசாலைகளும் உயரளவில் தாக்கம் செலுத்துகின்றது என்பதே யதார்த்தபூர்மான உண்மையாகும். ஆரம்பங்களில் காலணித்துவ அரசுகளின் கல்விசாலைகளை மக்கள் புறக்கணித்து கல்விசாலை வெறுமையாக காணப்பட்டாலும் பின்னாட்களில் மாணவர்கள் அக்கல்விசாலைகளை நிரப்ப தொடங்கியதே அரச வேலைகளிலும் தமிழ்க்குடி ஆதிக்கம் செலுத்திய பெருமைகளை பெற்றது. பல சமூக மாறுதல்களும் புரட்சிக்கான விதைகளும் கல்விகாலைகளை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டதே நிதர்சனமாகும்.
சர்வதேச அரசியலில் இன்று தனித்துவமாய் உலகாளும் யூதர் மரபு கல்வி சாலைகளின் உன்னத வரலாற்றை சுமந்து உள்ளது. குறிப்பாக வரலாற்றில் யூதர்கள் நாடற்ற அகதிகளாக தொடர்ச்சியாக விரட்டி அடிக்கப்படுகையில் ஓர் கட்டத்தில் தம் இருப்பிற்கு தேவையானது கல்வி என்பதை உணர்ந்து துரத்தப்பட்டு தங்கும் இடமெல்லாம் கல்விகாலைகளை உருவாக்கி கற்றலை மையப்படுத்தி வளர்ந்ததாலேயே இன்று தமக்கான எதிர்காலத்தை தனித்துவமாய் எழுதி வருகின்றார்கள்.
ஒருபுறம் நகர்ப்புற பாடசாலைகளில் ஒரு வகுப்பில் பத்துப்பிரிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் ஐம்பது மாணவர்கள் என்று கற்கக்கூடிய சூழல் இல்லாத நெருக்கமான நிலை காணப்படும் அதேவேளை கிராமப்புற பாடசாலைகளில் மாணவர்களே இல்லாத நிலை காணப்படுவது மிகவும் வேதனைக்குரியது. நகர்ப்புறம் நோக்கிய எமது சமூகத்தின் ஓட்டத்தின் அங்கங்களாகவே இவற்றை பார்க்க முடிகிறது.
நகர்ப்புற பாடசாலைகளுக்கு சரிநிகராக கிராமப்புற பாடசாலைகளும் இருந்த காலங்கள் உண்டு. பல்வேறு காரணங்களால் இந்த நகர்ப்புற, கிராமப்புற கற்றல்ச் சமநிலை குழப்பமடையச் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணங்கள் கண்டறியப்பட்டு மீண்டும் ஆரோக்கியமான கற்றல்ச்சூழல் கிராமப்புறங்களிலும் உருவாக வேண்டும்.
பலபேருக்கு கற்பித்த கல்விக்கூடத்தை மூடுவதென்பது எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு கிராமத்தின் வரலாற்று இருப்போடு சம்பந்தப்பட்டவை கல்விச் சாலைகள். வாய்ப்புக்களும் வளங்களும் எல்லா பாடசாலைகளிலும் சமமாக கிடைக்க அந்தந்த கிராமத்தவர்கள் வழிகளைக் கண்டறிந்து முயலுங்கள்.
“பள்ளிக்கூடங்கள் கருவறை போன்றவை! காப்பாற்றுங்கள்!”