இதழ் 58

இலங்கையில் இணையக்கல்வி

விஞ்ஞானத்தின் வருகையினால் உலகமே ஒரு குக்கிராமமாக சுருங்கிவிட்டது. விஞ்ஞானம் வானலாவிய ரீதியில் வளர்ந்து விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே விந்தைகள் பல செய்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் மருத்துவம், போக்குவரத்து, வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட சகல துறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதுடன் கல்வித்துறையிலும் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆரம்ப காலச் சூழலில் குருகுலக் கல்வியே காணப்பட்டது. இங்கு ஒழுக்கங்கள் கல்வியாக போதிக்கப் பட்டன. இம்முறை படிப்படியாக மாற்றமடைந்து மனனம் செய்யும் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழிற் கல்வி, தொழிநுட்பக் கல்வி வரை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆரம்ப காலக் கல்வி ஏட்டையும் எழுத்தாணியையும் மையப்படுத்தி அமைந்ததுடன் தற்காலக் கல்வி கணணியையும் தொடுதிரையையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது. இன்றைய கல்வி வளர்ச்சியில் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு அளப்பரியன. அதாவது தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை மட்டுமன்றி கணணி இணையத்தின் பயன்பாடு கல்வி வளர்ச்சிக்கு படிக்கற்களாக அமைகின்றன.

கல்வித்துறையில் நவீன ஆய்வுகூட உபகரணங்கள், கற்பித்தல் முறைகள்;, டிஜிட்டல் முறையிலான கல்வியாவும் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகளேயாகும். சர்வதேச நாடுகளில் இணையக் கல்வியின் பயன்பாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இலங்கையிலும் இதன் தாக்கம் அண்மைக் காலமாக வேகமாக பரவி வந்தன. அதாவது கடந்த காலங்களில் பரவி வந்த கோவிட் 19 தொற்று பரவலானது இலங்கையின் அனைத்து துறைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த பேரிடரினால் கல்வித்துறை படிப்படியாக பாதிக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகம், கல்வி நிலையங்களுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க முடியாத நிலை தோன்றியிருந்தது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வியாண்டு காலம் வீணாகின்ற சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளைப் போன்று இலங்கையிலும் இணைய வழிக்கல்வி ஏற்படத் தொடங்கியது. கல்வி நடவடிக்கைகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே தொடரும் வகையில் இணைய வழிக்கல்வி முறையினை பின்பற்றி வருகின்றனர். இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் இது ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகின்றது.
இன்றைய காலத்தில் அறிதிறன்பேசி (Smartphone) மடிக்கணணி, கணணி, முதலான தொழிநுட்பக் கருவிகள் கல்வி கற்க துணை செய்கின்றன. பாடசாலை, கல்வியற் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல வசதிகளோடு இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு Webinar, Google meet, Zoom, Team link முதலான செயலிகள் அறிமுகமாயின. பாடசாலை மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று இணையவழிக் கல்வி புதுவரவாக அமைகின்றது எனலாம்.

இணையவழிக் கல்வியினால் ஏற்படும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் வெளியில் செல்லாமல் பாதுகாப்பான முறையில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர இணையவழிக் கல்வி முறை உதவுகின்றது. உணவு செலவு, பயணச் செலவு, தங்குமிட செலவு எதுவுமின்றி வீட்டில் இருந்தவாறே தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடிகின்றது. உலகின் எப்பாகங்களில் இருந்தும் தலைசிறந்த ஆசிரியர்களை இனங்கண்டு தாம் கற்கும் பாடங்களின் அறிவை மேம்படுத்த ஓர் அறிய வாய்ப்பாக அமைகின்றது. மாணவர்கள் E- Learning, E – Thakshalava போன்றவற்றின் மூலம் தாம் விரும்பிய பாடங்களின் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளல், தரவிறக்கம் செய்து கொள்ள முடிகின்றது.

மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டும் என்ற நிலைமாறி தற்போது அவரவர் இருக்கும் இடத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிகழ்நிலையில் வகுப்புக்களில் பங்குபெறும் அளவிற்கு கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. Google, You tube போன்ற வலைத்தளங்களில் தமக்குத்; தேவையான கற்றல் விடய்ஙகளை எந்நேரத்திலும் இலகுவாக பார்வையிட முடியும். இம்முறை மாணவர்களின் தேடல் ஆற்றலினை விருத்தியடையச் செய்கிறது. இணைய வழி கற்பித்தல் முறையில் நூலக வசதியை கொண்டு காணப்படுவது மாணவர்களுக்கு மாபெரும் சாதகமான ஓர் விடயமாகும். கற்பித்தல் முறையில் திரும்பத் திரும்ப கற்ற பாடங்களை பார்வையிடலாம்.

எனவே தற்போது இணையவழிக் கற்பித்தல் முறை வெறும் வகுப்பறைக் கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவன் மட்டும் கற்கும் ஒருவழிப் பாதையாக மட்டும் அமையாமல் பல்வழிப் பாதை கொண்ட முழுநிறைவு கொண்டதாக விளங்குகின்றது. மேலும் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட Smart class room நூறு கோடி ரூபா செலவில் ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கள் போன்ற இலங்கை அரசினால் முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

எனினும் இணையவழி கற்றல், கற்பித்தல் முறையில் சில சிக்கல் தன்மைகள் காணப்படுவதனை நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும். எது எவ்வாறாக இருப்பினும் இந்த இணைய வழிக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற நேரடியான கல்வி முறை போன்று இருக்காது. பல குறைபாடுகளையும் கொண்டு காணப்பட்டது. நேரடியாக கற்பது போன்று தெளிவாகவும் சந்தேகம் இன்றியும் கற்கின்ற வாய்ப்பை மாணவர்கள் இழக்கின்றனர். இணைய வழியில் நடக்கும் நீண்ட நேர வகுப்புக்களால் மாணவர்களுக்கு உடலியல் சார் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கண் பாதிப்பு, தலைவழி போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

மேலும் அறிதிறன்பேசியை (Smartphone) பயன்படுத்தும் வசதி எல்லா மாணவர்களிடம் இருக்காது. அறிதிறன்பேசி இருந்தாலும் இணைய இணைப்பு எல்லா நேரமும் கிடைக்காது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களால் இணைய வழியில் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதேபோல் உளவியல் ரீதியாக அதிக நேரம் கணணி மற்றும் கைபேசி பயன்படுத்துவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சித் திறன் பாதிப்படையும். இதன் மூலம் அவர்களுக்கு கவனச்சிதறல், தூக்கமின்மை, கற்பனைத்திறன் குறைவு மற்றும் பதற்றம், பயம், மனஅழுத்தம் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் கைபேசியில் வரும் விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி தற்கொலை வரை நிகழ்ந்துள்ளதை நாம் யாவரும் அறிந்ததே. இணையத் தளத்தினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் சில சமயம் மாணவர்கள் தவறான வழிகளில் செல்லும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

எது எவ்வாறாக இருப்பினும் ஒரு தொழிநுட்பம் என்றால் அதில் நன்மை, தீமை என்ற இரு பக்கங்களும் இருக்கவே செய்கின்றன. எனவே ‘பாலில் கலந்துள்ள நீரை விடுத்து பாலை மட்டும் குடிக்கும் அன்னப்பறவை;; போல அதனை பயன்படுத்தும் மாணவர்கள் சரியான முறையில் பாவித்து அதில் இருந்து நல்ல பயனை பெற்றுக் கொள்ள வேண்டும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்; என்பதற்கிணங்க கல்வி முறையில் பல புதுமைகளைத் புகுத்தி நம் தலைமுறையினருக்கும் பயனுள்ள வகையில் கற்றல் நிகழ்வுகளை அளித்திட வேண்டும்.

எனவே இணையவழிக் கல்வி எல்லா வசதிகளோடு இருந்த இடத்தில் இருந்தவாறு கல்வி கற்கவும் மாணவர்களின் கற்றல் திறனையும் அறிவுத் திறனையும் வளர்த்தெடுக்கவும் உதவுகின்றது. கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். இன்றைய சூழலில் இணையவழிக் கல்வி மிகமிகத் தேவையாகின்றது. ஆதலால் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்பறைக் கல்விக்கு இணையாகக் கொள்ளாவிட்டாலும் தற்காலிக தீர்வாகக் கொள்ளலாம். பொதுமுடக்க காலத்தில் எளிமையாக கல்வி கற்றிட ஏற்றவழி ஒரேவழி இணையவழி தான். எனவே இணையவழிக் கல்வி இன்றைய சூழலில் மிகத்தேவை. அதுவே காலத்தின் கட்டாயமாகும்.

Related posts

வினோத உலகம் – 23

Thumi202121

உலகமயமாக்கலில் கொவிட்-19 இன் தாக்கம்

Thumi202121

நெல்லைக் காய வைக்க தளம் வேண்டும்…!

Thumi202121

Leave a Comment