இதழ் 58

பரியாரியார் Vs அய்யர் – 07

நல்ல இடம்!
நல்ல நாள்!
ஆனால் நன்றாக அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள்… பூசைக்கு நேரம் இருக்கிறதே? யார் அடித்தது மணி?

கௌசல்யா மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தாள். ஆனால் யாருமே மணிக் கோபுரத்தில் இல்லை. இன்னும் பயம் அதிகரித்தது. யாரோ தங்களைக் கண்டுவிட்டார்கள் என்பது இருவருக்குமே உறுதியானது. ஆனால் யார்?

பரதனை பின் வீதியிலேயே நிற்குமாறு சைகை காட்டி விட்டு, கௌசல்யா முன் வீதிக்கு சென்றாள். காதலில் விழுந்தவுடன் வரும் தைரியங்களுக்கு அவள் மட்டும் விதிவிலக்கா என்ன? அதோடு கோயிலில் பரதனை விட கௌசல்யா தானே உரிமைக்காரி. வேறு யாரும் எளிதில் கேள்வி கேட்க முடியாத அய்யர் வீட்டு குலவிளக்கு ஆச்சே! ஆனால் அய்யரே வந்திருந்தால்த்தான் ஆபத்து. ஆனால் மாமா வந்திருந்தால் பூசை நேரத்திற்கு முன்பே மணி அடிக்க மாட்டார். தங்களைக் கண்டிருந்தால் அவர் அடிப்பது மணியாய் இருக்காது. இவை தெரிந்ததால்த்தான் கௌசல்யா தைரியமாக முன் வீதிக்கு சென்றாள்.

அங்கே யாருமே இல்லை! மணிக் கோபுரத்திற்குள்ளும் பார்த்தாள். ஒருவரும் இல்லை! ஆனால் மணிக்கயிறு மட்டும் மேலே கீழே போய் வந்து கொண்டிருந்தது. அப்படியென்றால் யார் அடித்தது? கோயில் வாசலிலுக்குச் சென்று வெளி வீதியைப் பார்த்தாள்.

அய்யய்யோ… அய்யர் கோயிலை நோக்கி தன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சோளகக்காத்து வீசிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் வேர்த்துக் கொட்டியது கௌசல்யாவுக்கு. அப்பா வரும் போது வாசலிலேயே நின்றால் இன்னும் ஆபத்து என்று உள்ளே செல்லத் திரும்பினாள். திரும்பியவளுக்கு மேலும் அதிர்ச்சி. அங்கே அம்மா சரோஜா கையில் அரைவாசியாக கட்டி முடிக்கப்பட்டிருந்த மாலையுடன் நின்றுகொண்டிருந்தாள். ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் எழுந்தாலும் அத்தனையையும் தாண்டி வசமாக மாட்டிக் கொண்டோம் என்கிற பயமே அவளை ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் சரோஜா முகத்தில் எந்தவித கோபமோ பதட்டமோ இல்லை. பாதி கட்டப்பட்ட மாலையை மகள் கௌசல்யாவிடம் கொடுத்து கட்டி முடிக்கச் சொன்னாள் சரோஜா.

நடப்பது எதுவுமே கௌசல்யாவுக்கு புரியவில்லை. அம்மா எப்படி கோயிலுக்கு உள்ளே? அம்மாவுக்கு எல்லாம் தெரியுமா? தெரியாதா? மணி அடித்தது அம்மாவா? மாலையை ஏன் என்னிடம் தருகிறார்? பரதன் நிலை என்ன? இப்படி ஆயிரம் கேள்விகளோடு தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.
அதற்குள் அய்யர் வந்துவிட்டார்.

‘இதென்ன ஒருநாளும் இல்லாத திருநாளா தாயும் மகளும் முதலே கோயிலுக்கு வந்திட்டீங்க?”

‘திருநாள் தானே இன்றைக்கு” சொல்லிவிட்டு கடைக்கண்ணால் கௌசல்யாவை பார்த்தாள் சரோஜா.

‘பங்குனித் திங்களுக்கு வராத என்ட தங்கச்சி, மகளையும் கூட்டிக்கொண்டு பங்குனி உத்திரத்திற்கு வந்ததை நினைக்கத் தான் ஆச்சரியமா இருக்கு.” சரோஜா கோயிலுக்கு வருவதை குறைத்துக் கொண்டதை சொல்லாமல் சொல்லிவிட்டார் அய்யர்.

‘அண்ணா, இப்ப நான் கோயிலுக்கு வரக்கூடாது என்றீங்களா?” அய்யருக்கு பதில் சொல்லப்போனால் சிக்கல் என்பதால் கேள்விகளாக திருப்பிவிட்டாள் சரோஜா.

‘மூக்கு மேல கோபம் மட்டும் வந்திடும். அது இருக்கட்டும். பூசைக்கு நேரம் இருக்கேக்க யார் மணி அடிச்சது?” கௌசல்யாவுக்கு இருந்த அதே கேள்வியை அய்யரும் கேட்டார்.

‘இவ்வளவு நாளா கோயிலுக்கு வாற அண்ணாக்கு, மணிக்கூண்டுக் கோபுரத்தில இருக்கிற தூசி ஒட்டடை கண்ணுக்குத் தெரியல போல. அப்பப்பா எவ்வளவு தூசி. அத துடைக்கப்போனா தவறுதலா மணி அடிபட்டுடுது.”

‘சரி சரி பூசைக்கு நேரமாகுது… பிறகு கதைப்பம். பிள்ளை கௌசல்யா! கெதியா மாலையை கட்டிட்டு வா.” சொல்லிவிட்டு உள்ளே போன அய்யர் பின் வீதியிலிருந்து மண்வெட்டியோடு வந்து கொண்டிருந்த பரதனைக் கண்டுவிட்டார்.

‘அட.. நம்ம பரியாரியாரின்ட பெடியனா! என்ன தம்பி இந்தப் பக்கம்?”

கௌசல்யாவுக்கு தலையே சுற்றத் தொடங்கிவிட்டது. பரதனும் முழிக்கத் தொடங்கினான்.

குறுக்கிட்ட சரோஜா,
‘உங்களுக்கு ஒருத்தருமே கோயிலுக்கு வரக்கூடாதா அண்ணா? வாற எல்லாரையும் ஏன் வந்தாய் என்பது போலயே கேக்கிறீங்க?”

“நீ என்ன தங்கச்சி! தொட்டதுக் கெல்லாம் கோவப்படுறாய்?”

‘பின்னை என்ன அண்ணா! அந்த தம்பி பாவம்! வெள்ளனவே வந்து கோயில் வீதியில இருந்த புல் எல்லாம் செதுக்கிப் போட்டு நிக்கிறார். அவனைப் பாராட்டாமல் கேள்வி கேட்கிறீங்க.”

“அட அப்படியா.. நல்ல விசயம் தம்பி.. நீ மட்டும் கஷ்டப்படாம உங்க சங்கத்துப் பெடியளையும் கூட்டிட்டு வந்து சிரமதானம் போல செய்தா நல்லா இருக்கும்.” என்று சொல்லிக் கொண்டே அய்யர் கோயிலுக்குள் சென்றார்.

பரதனுக்கும் கௌசல்யாவுக்கும் நடப்பவை எல்லாமே புதிராகவே இருந்தது. பின் வீதியில் தான் ஒளித்துவிட்டு வந்த பரதன் கைகளில் மண்வெட்டியை கொடுத்ததும் அம்மாவாகத்தான் இருக்க வேண்டுமென கௌசல்யா எண்ணி சரோஜாவைத் திரும்பி பார்த்தாள்.

‘மாலையைக் கட்டிட்டு கெதியா வா.. நான் போய் அபிசேகத்துக்கு பஞ்சாமிர்தம் செய்யப்போறன்” என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றால் சரோஜா. எல்லாம் தெரிந்திருந்தும் எதையும் வெளிக்காட்டவில்லை.

வசமாக மாட்டிக் கொண்டோமோ என்று பயந்து கொண்டிருந்த கௌசல்யாவையும் பரதனையும் அய்யர் நம்பும் படியாக பொய்க்கதை சொல்லி சரோஜா ஏன் காப்பாற்ற வேண்டும்? இந்தக் கேள்வி தான் இப்போது அந்தக் காதல் ஜோடிகள் மனதில் மட்டுமல்ல, வாசகர்களான உங்கள் மனதிலும் இருக்கும்.

காத்திருங்கள்…

Related posts

உலகமயமாக்கலில் கொவிட்-19 இன் தாக்கம்

Thumi202121

இலங்கையில் இணையக்கல்வி

Thumi202121

ஐபிஎல் 2023க்கான புதிய விதிகள்

Thumi202121

1 comment

Leave a Comment