தெய்வத்தமிழ் எனப்படுகின்ற பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகின்ற திருமந்திரம் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்ற தலைமைச் சித்தராக விளங்கும் திருமூலரால் இயற்றப்பட்ட தெய்வ சக்தி நிறைந்த மந்திர நூல். இறைவன் உறையும் கற்பக்கிரகங்கள்தான் கருங்கல்லில் அமைக்கப்படுவது வழமை. திருமந்திரத்திலுள்ள மூவாயிரம் பாடல்களையும் கருங்கல்லில் பதிக்கும் போது அதன் தெய்வீகம் பலமடங்காக அதிகரிக்கிறது. தமிழ் மொழியினதும் சைவ சமயத்தினதும் ஒப்பற்ற நூலாகிய திருமந்திரங்கள் மூவாயிரத்தையும் கருங்கல்லில் பதிப்பித்து கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீச்சரர் ஆலய முன்றலில் திருமந்திர அரண்மனை எழுப்பியிருக்கிறார்கள் சிவபூமி அறக்கட்டளையினர்.
அங்கே நடுநாயகமாக வீற்றிருக்கும் முகலிங்கப் பெருமானுக்கான கருங்கற் கோயிலின் கும்பாபிஷேகமும் சிவபூமி அறக்கட்டளை தாம் நிர்மாணித்த திருமந்திர அரண்மனையை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வும் கடந்த மாதம் 24.03.2023 அன்று நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து அடியவர்கள் ஆயிரக்கணக்கில் எண்ணெய்க்காப்பு சாத்தியமையும், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து குடமுழுக்கு நிகழ்வுகளில் பக்தர்கள் பங்குகொண்டமையும் திருமந்திரத்திற்கு ஈழத்து தமிழ் மக்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்தியம்பின.
ஈழத்தை சிவபூமி என்று அழைத்த திருமூல நாயனாரின் மூவாயிரம் பாடல்களை சிவபூமியே சிவபூமியில் பதிப்பித்துள்ளமை இறை செயல் என்றுதான் சொல்ல வேண்டும். “உலகத்தின் மிகப்பெரிய சொல் செயல்” என வாழும் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு தமிழ்ச் சமுகம் என்றென்றும் தலைவணங்குகிறது.
திருவாசகம் போன்று திருமந்திரத்தையும் காலம் உள்ளவரை நிலைபெறச் செய்யும் உயரிய நோக்கோடு செஞ்சொற்செல்வர் அவர்கள் அத்தனை பாடல்களையும் கருங்கல்லில் பதிப்பித்துள்ளார்கள். இதே போல முன்னைய காலத்திலும் திருமந்திரத்தின் மேன்மையை உணர்ந்த மன்னர்கள் ஓலைகளில் இருந்தால் அழிந்துவிடுமென அஞ்சி, அவற்றை செப்பேடுகளில் பதிப்பித்தார்கள். தமிழ் மொழியில் மந்திரங்களா? அர்ச்சனைக்குரிய அந்தஸ்து தமிழ் மொழிக்கு உண்டா? என்ற சந்தேகம் கொண்ட சிலர் திருவாவடுதுறை ஆலய பலிபீடத்தின் கீழ் அவற்றை மறைத்து வைத்தார்கள். ஞான சம்பந்தக் குழந்தை அங்கே தமிழ் மணம் கமழ்வதை குறிப்பால் உணர்ந்து, அந்த செப்பேடுகளை மீட்டதாக வரலாறு.
சைவசித்தாந்த நூலாக மட்டுமல்ல, கீதையைப் போல ஒரு யோக நூலாகவும், இறை துதிபாடும் பக்தி நூலாகவும், வைத்திய உண்மைகள் கூறும் மருத்துவ நூலாகவும் கூட காணப்படுகின்றமை திருமந்திரத்தின் தனிச்சிறப்பாகும். இதனால்த்தான் “தோத்திரத்திற்கு திருவாசகம், சாத்திரத்திற்கு திருமந்திரம்” என்று எம்முன்னோர் வகுத்துள்ளார்கள். இந்த இரண்டிற்குமே ஈழமணித்திரு நாட்டில் தனித்தனி அரண்மனைகள் எழுப்பப்பட்டுள்ளன என்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.
வேதமும் ஆகமும் சைவசமயத்தின் அடிப்படையாக இருந்திருப்பினும் அவற்றுக்கு தமிழ் வடிவம் அதுவரை இருக்கவில்லை. சமஸ்கிருத மொழியில் இருந்தமையால் தமிழர்கள் அதனை பொருள் உணர்ந்து சொல்ல முடியாமல் தவித்தனர். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து தான் சொல்ல வேண்டும். அதே நேரம் பக்திக்கு ஒரு மொழி தடையாக இருக்கக் கூடாது. இதனால் சமஸ்கிருத மொழியில் இருந்த வேதாகமங்களை தமிழில் மொழி பெயர்த்து ஒன்பது தந்திரங்களாக அவற்றை பிரித்து மூவாயிரம் பாடல்களில் அழகு தமிழில் தந்தவர் திருமூலர். காரணம், காமிகம், வீரம், சிந்திய, வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் எனும் ஒன்பது ஆகமங்களின் சாரமாக திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களும் அமைந்துள்ளன.
வையத்துள் வாழ்வாங்கு வாழும் ஒழுக்க நெறிகளையும், அறநெறி சார்ந்த ஆன்மீக சிந்தனைகளையும் மக்களுக்கு போதிக்கும் ஒரு உன்னத நூல் என்பதால் ஆங்கிலத்தில் கூட திருமந்திரம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிக்க வாசிக்க பல்வேறு உள்ளார்ந்த அர்த்தங்களை நித்தமும் தரவல்லது என்பதால் பல சிவநேயச் செல்வர்கள் இன்றளவும் தாம் இந்நூலில் வியந்தவற்றை விளக்கவுரையாக்கி எழுதிவருகின்றனர்.
சுந்தர மூர்த்தி நாயனாரால் நம்பிரான் என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் திருமூலர். பிரான் என்றால் தலைவன் என்று பொருள். திருமூலரை எப்படி தலைவராகிறார்?
தான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற்றுய்ய வழி ஏற்படுத்தி பொதுநலக் காரியம் ஆற்றுவது தலைவனுக்குரிய முக்கிய கடமை. அதை செவ்வனே செய்தவர் திருமூலர். பின்வரும் திருமந்திரப்பாடல் இதனை சான்று பகிர்கிறது.
‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்ற தலைப்படும் தானே”
இணையில்லாத இந்த திருமந்திரப் பாடல்கள் யாவும் காலம் உள்ளவரை கருங்கல்லில் இருக்குமாறு செய்வித்த இந்த புண்ணியச் செயலுக்கு தமிழ் சமூகமும், சைவ மக்களும் என்றென்றும் நன்றிக்கடன் மிக்கவர்களாக தம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு இவ்வரிய பொக்கிஷத்தை கடத்துபவர்களாக இருக்கவேண்டும் என்பதே பெரும் பிரார்த்தனை ஆகும்.